ராணி இலியேஸர் நினைவுகள் - முருகபூபதி

.
எனது குரலை முதல் முதலில் அவுஸ்திரேலியா வான் அலைகளில் பரவச்செய்தவர்
                                                                   

அவுஸ்திரேலியா, மெல்பனில்   தமிழ் மக்கள் மத்தியில்  முக்கிய அடையாளமாகவும் ஆளுமைப்பண்பு கொண்டவர்களாகவும்  வாழ்ந்து,  சமூகப்பணிகளை முன்னெடுத்த இரண்டுபேர்  அடுத்தடுத்து மறைந்திருக்கிறார்கள்.
முதலில் மருத்துவர் பொன். சத்தியநாதனும் பின்னர் திருமதி ராணி இலியேஸரும் எம்மிடமிருந்து விடைபெற்றுவிட்டார்கள்.  பிறப்பும்  -  இறப்பும்  இயல்பானதே.  இவை இரண்டுக்கும் இடைப்பட்ட வாழ்க்கையில் ஒருவர் என்ன செய்தார் ? எதற்காக வாழ்ந்தார் ? என்பதைத்தான் காலம் பதிவுசெய்கிறது.
ஏற்கனவே சத்தியநாதன் பற்றி  பிரத்தியேகமாக விரிவாக எழுதிவிட்டேன். அத்துடன் ராணி இலியேஸரின் கணவர் பேராசிரியர் இலியேஸர் குறித்தும் பதிவுசெய்திருக்கின்றேன். ஆனால், அதனை வாசித்துப்பார்க்காமலேயே கண்களை மூடிக்கொண்ட திருமதி ராணி இலியேஸருக்கு 2007 ஆம் ஆண்டு 85 வயது பிறந்தவேளையில் அவரது இல்லத்திற்குச்சென்று சந்தித்து, அவர் பற்றிய விரிவான ஒரு பதிவினை வீரகேசரி வார வெளியீட்டில் எழுதியிருக்கின்றேன். அதன் பிரதியை தனக்கு தபாலில் அனுப்புமாறும் கேட்டிருந்தார். அவ்வாறே அனுப்பியிருக்கின்றேன்.

அவருக்கு 85 வயது பிறந்துவிட்டது என்ற தகவலை எனது நண்பர் நடேசன்தான் முதலில்  சொன்னார். அக்காலப்பகுதியில் நடேசனின் வண்ணாத்திக்குளம் நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு கொழும்பு விஜித்த யாப்பா  பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டு, மெல்பனிலும் அதற்கு வெளியீட்டு விழா நடந்திருந்தது. இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் மெல்பனில் வதியும் நல்லைக்குமரன் குமாரசாமி. இவர் மல்லிகை ஆசிரியர்  டொமினிக்ஜீவாவின் வாழ்க்கை சரிதையை ஆங்கிலத்திலும்  உலகப்புகழ்பெற்ற ஜோர்ஜ் ஓர்வலின்  விலங்குப்பண்ணை நாவலை தமிழிலும் மொழிபெயர்த்தவர்.
நடேசனின் வண்ணாத்திக்குளம் நாவல் மதவாச்சியா பிரதேசத்தில் பதவியா என்னுமிடத்தை பின்னணியாகக்கொண்டு எழுதப்பட்ட நவீனம். இதில் அரசியலும் காதலும் கலந்திருந்தது.இந்த நாவலைப்பெற்று படித்திருந்தார் திருமதி ராணி இலியேஸர். படித்ததுடன் தனக்கு குறிப்பிட்ட நாவலில் மேலும் நூறு பிரதிகள் வேண்டும் என்றும்  கேட்டிருந்தார். அவரது வேண்டுகோளை நடேசன் நிறைவேற்றினார்.
அக்காலப்பகுதியில் ராணி இலியேஸர் அவர்கள் தமது அருமைக்கணவர் பற்றிய நூல் ஒன்றை தொகுத்து எழுதும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்.
அவர் சிறந்த வாசகர். அத்துடன் Activist.  அயராமல் இயங்கும் இயல்பைக்கொண்டிருந்தவர். இலங்கை தமிழ்ச்சங்கம், தமிழ் மூத்த பிரஜைகள் சங்கம் உட்பட பல அமைப்புகளில் அவரது பங்கும் பணிகளும் முன்னுதாரணமானவை.   பேராசிரியரும் அவரும் மெல்பனில்  Eaglemont  என்னுமிடத்தில் வாழ்ந்த இல்லம் எப்பொழுதும் விருந்தினர் வருகையுடன்தான் காட்சிதரும். 1987 இல்  மொனாஷ் பல்கலைக்கழகத்தில்  நடந்த  நடனக்கலைஞர் சந்திரபானு அவர்களின்  நடன அரங்காற்றுகையன்றுதான்  திருமதி ராணி இலியேசர்  எனக்கு அறிமுகமானார். அதன்பின்னர் சுமார் முப்பது வருடங்களின் பின்னர் கடந்த ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதியன்று அன்னாரின் பூதவுடலுக்கு சந்திரபானு அவர்கள் அஞ்சலி உரை நிகழ்த்தும்போது கடந்த காலங்கள் யாவும் நினைவுக்கு வந்தன.
தெற்கு மெல்பனில் அமைந்திருந்த 3EA வானொலி கலையகத்தில் அவரை பலதடவைகள் சந்தித்திருந்தாலும் அவரது இல்லத்திற்கு முதல் முதலில்  செல்லவேண்டிய சந்தர்ப்பம் இங்கு வருகைதந்திருந்த தமிழ் அகதிகளுக்காகத்தான் அமைந்தது.


1987- 1988 - 1989 காலப்பகுதிகள் அவுஸ்திரேலியாவில் எனது வாழ்வில் தொடக்க காலங்கள். இக்காலப்பகுதியில்தான் நாம் தமிழ் அகதிகள் கழகம், இலங்கை மாணவர் கல்வி நிதியம் முதலானவற்றை உருவாக்கினோம். அகதிகள் கழகம் முதலில் ஒரு Lobby Group  போன்றுதான் இயங்கியது.  அதன் தொடர்பாளராக நானும், மற்றும் கொர்ணேலியஸ், முருகேசு, நல்லையா சூரியகுமாரன், திலகராஜன் ஆகியோரும்  அங்கம் வகித்த உபகுழுவாக ஆரம்பத்தில் இயங்கினோம்.
தமிழ் அகதிகளுக்காக ஒரு அமைப்பின் தேவை குறித்து, ஏற்கனவே சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் அவர்களுடனும் ஆலோசித்திருந்தோம்.
மெல்பனுக்கு  முதலில்  வருகை தந்த  தமிழ் மூத்த குடிமக்கள் என்ற பெருமைக்குரியவர்களாக பேராசிரியர் இலியேஸரும் திருமதி ராணி இலியேஸரும் கருதப்பட்டவர்கள். அவர்களின் ஆலோசனைகளும் எமக்குத்தேவைப்பட்டன.
எமது சந்திப்பிற்கு  அச்சமயம் இலங்கை தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்த சோமா அண்ணர் என எம்மால் அழைக்கப்படும் சோமசுந்தரமும் வந்திருந்தார். இலங்கை தமிழ்ச்சங்கத்திற்கு மாற்றாக மற்றுமொரு சங்கம் உருவாகப்போகிறது என்ற வதந்தியை சிலர் பரப்பியிருந்தார்கள். நாம் எமது தமிழ் அகதிகளின் நிலைப்பாட்டை  அவர்களிடம்  விளக்கநேர்ந்தது.
நான் பத்திரிகையாளனாகவும் படைப்பிலக்கியவாதியாகவும் இருந்தமையால் என்மீது ராணி இலியேஸர்  விழிப்புடனேயே இருந்தார் என்பதை அவரது உரையாடல் புலப்படுத்தியது.  அவரது சகோதரி ரஞ்சி அவர்கள் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய தலைவரும் நீர்ப்பாசன நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சரும் பல சந்தர்ப்பங்களில் பதில் பிரதமராகவும் இருந்த மைத்திரிபால சேனா நாயக்காவைத்தான் மணம் முடித்திருந்தார்.  ரஞ்சி இலங்கையின் முன்னணி தினசரிகளை வெளியிடும் ஏரிக்கரை (Lake House)  பத்திரிகை நிறுவனத்தில் சிரேஷ்ட பத்திரிகையாளர். மைத்திரிபால சேனநாயக்கா, மதவாச்சி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.
நடேசனின் வண்ணாத்திக்குளம் நாவல் ராணி இலியேஸரை கவர்ந்தமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
எனது இரண்டாவது சிறுகதைத்தொகுதி சமாந்தரங்கள் 1989 இல் தமிழ்நாட்டில் தமிழ்ப்புத்தகாலயத்தின் வெளியீடாக வந்தது. அதன் வெளியீட்டு விழாவை மெல்பனில் 25 - 06 - 1989 ஆம் திகதி வை. டபிள்யூ. சீ. ஏ.மண்டபத்தில் ஒழுங்குசெய்துவிட்டு, நூலின் ஒரு பிரதியுடனும் அழைப்பிதழுடனும் பேராசிரியர் இல்லத்திற்கு ஒரு மாலைவேளையில் சென்றேன். திருமதி ராணி இலியேஸர்தான் வாசலுக்கு வந்து வரவேற்றார். எமது கல்வி நிதியத்தின் வளர்ச்சி நிதிக்காகத்தான் எனது நூலின் வெளியீட்டு விழாவை நடத்துகின்றேன் எனச்சொல்லி,  பேராசிரியர் தம்பதியரை  பிரதம விருந்தினர்களாக  வருமாறு அழைத்தேன்.
நூலின் உள்ளடக்கம் பற்றி இருவரும் கேட்டனர். அதில் இடம்பெற்றிருந்த இரண்டு சிறுகதைகள் ஏற்கனவே அவர்கள் நடத்திய 3EA  வானொலியில் ஒலிபரப்பாகியிருக்கும் தகவலையும் சொன்னேன். ஆண்மை, புதர்க்காடுகள் ஆகியன அச்சிறுகதைகள்.
எனது குரலை முதல் முதலில் அவுஸ்திரேலியா வான் அலைகளில் பரவச்செய்தவர்தான் ராணி இலியேஸர் அவர்கள்.
இரண்டும் எமது தாயகம் எதிர்நோக்கிய இனப்பிரச்சினை மற்றும் இனவிடுதலைப்போராட்டத்தையும் சித்திரித்திருந்தன. இதில் ஆண்மை இலங்கை - இந்திய இதழ்கள் பிரசுரிக்கத்தயங்கிய கதை. இந்திய அமைதிப்படையை (?) இச்சிறுகதை விமர்சித்திருந்தது. அக்கதையை நானே வானொலியில் வாசித்தேன். இரண்டு கதைகளும் ராணி இலியேஸருக்கு நன்கு பிடித்திருந்தன. அவற்றை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கச்சொன்னார்.
புதர்க்காடுகள் கதையை மெல்பனில் வதியும் எழுத்தாளர் திருமதி ரேணுகா தனஸ்கந்தா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இலங்கையில் The Island பத்திரிகையில் வெளியானது. அதன் பிரதியையும் அவருக்கு பின்னர் சேர்ப்பித்தேன்.

மெல்பனில் நடந்த சமாந்தரங்கள் நூல் வெளியீட்டு விழாவுக்கு பேராதனைப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் கலாநிதி காசிநாதன் தலைமை தாங்கினார். பேராசிரியர் இலியேஸர் தம்பதியர் பிரதம விருந்தினர்கள். சிட்னியிலிருந்து எமது மூத்த படைப்பாளி எஸ். பொன்னுத்துரை வருகை தந்து உரையாற்றினார். அதுதான் அவர் அவுஸ்திரேலியாவில் தோன்றிய முதல் மேடை. எழுத்தாளர் அருண். விஜயராணி, மற்றும் சட்டத்தரணி ரவீந்திரன், அவ்வேளையில் இலங்கை தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்த டாக்டர் இராஜன் இராசையா, இந்து சங்கத்தலைவர் டாக்டர் செல்வேந்திரா, சட்டத்தரணி அம்பிகை பாலன், மற்றும் திருவாளர்கள் சோமா. சோமசுந்தரம், தணிகாசலம், எஸ்.ஏ. குணரத்தினம் ஆகியோரும் உரையாற்றினர்.
நண்பர் சிவநாதனின் பெற்றோர் ராஜரட்ணம் தம்பதியர் மகாகவி பாரதி படத்திற்கு மங்கல விளக்கேற்றி விழாவை தொடக்கிவைத்தனர். இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஊடாக முதல் கட்டமாக உதவ முன்வந்த அன்பர்களின் குழந்தைகள் குறிப்பிட்ட மாணவர்களின் விபரங்கள் அடங்கிய கோவைகளை பேராசிரியர் இலியேஸரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
ஈழப்போரில் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களுக்கான  நிவாரண உதவிப்பணியை அவ்வாறு  ஒரு கல்விமானின் கரத்திலிருந்து தொடக்கியதையிட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் என்னிடத்தில் பாராட்டுத்தெரிவித்தனர். குறிப்பிட்ட தன்னார்வத்தொண்டு அமைப்பை 1988 ஆம் ஆண்டு ஒரு விஜயதசமி தினத்தன்று எனது ஒரு படுக்கை அறை வீட்டில் சட்டத்தரணி ரவீந்திரன் அவர்கள் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்துவைத்தார். அப்பொழுது ஆறு மாணவர்களுக்கு உதவும் அன்பர்கள்தான் கிடைத்திருந்தனர். மேலும் சில அன்பர்கள் தெரிவானதும் சமாந்தரங்கள் நூல் வெளியீட்டு அரங்கில் கல்வி நிதியத்தையும் அரங்கேற்றினேன். இன்று இந்த அமைப்பு ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உதவியிருப்பதுடன், 29 ஆண்டுகளையும் பூர்த்திசெய்து தொடர்ந்து இயங்குகிறது.
எனது சமாந்தரங்கள் வெளிவந்த காலத்தில்தான் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகத்தின் ஸ்தாபகர் சட்டத்தரணி கே. கந்தசாமியும் யாழ்ப்பாணத்தில் காணமலாக்கப்பட்டார். அவரது அமைப்பு பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளின் வாழ்வாதாரம் மற்றும் கல்வி முதலான நலன்கள் சார்ந்தும் இயங்கியமையால்,  அன்னாரின் உருவப்படத்தையும் அன்றைய நிகழ்வில் திரைநீக்கம் செய்து அஞ்சலி செலுத்தினோம்.
அன்று முதல் நான் மற்றும் ஒரு  இயக்கத்தையும் அறிமுகப்படுத்தினேன். போரைத்தணிப்பதாயின் முதலில் விடுதலைக்காக களம் புகுந்திருக்கும் இயக்கங்களிடையே புரிந்துணர்வு வேண்டும். அவர்களின் ஒற்றுமைதான் பொது எதிரியை பலவீனப்படுத்தும். அதனால் ஈழப்போரில் ஈடுபட்ட அனைத்து இயக்கங்களையும் ஒன்றுபடக்கோரும் அறிக்கையை தயாரித்து தமிழ் அன்பர்களிடம் கையொப்பங்கள் திரட்டினேன். குறிப்பிட்ட அறிக்கை இலங்கையில் வீரகேசரியிலும் வெளியானது. இயக்கங்களுக்கும் அனுப்பப்பட்டது. அகில இந்திய வானொலியிலும் ஒலிபரப்பானது. அந்த அறிக்கையில் பேராசிரியர் இலியேஸரும் திருமதி ராணி இலியேஸரும் ஒப்பமிட்டார்கள்.
இவர்களும் போரை விரும்பவில்லை. நீடிக்கும் போரின் விளைவை இவர்களும் உணர்ந்திருந்தார்கள்.  இயக்கங்களின் ஐக்கியத்தையும் ஆதரித்தார்கள்.  ஆனால், உணரவேண்டியவர்கள் உணரத்தவறியதனால் அதன் அறுவடையை  அனுபவிக்கின்றோம்.
பத்தாண்டுகளுக்கு முன்னர் ( 2007 இல்)  ராணி இலியேஸரை சந்தித்தவேளையிலும் அவர் எமது கல்வி நிதியம் தொடர்பாக அக்கறையுடன் கேட்டறிந்தார்.
அவர் தனது மலேசியா வாழ்க்கை பற்றி கூறும்போது,  இரண்டாம் உலக மகா யுத்தகாலத்தில் ஒரு கப்பல் பயணத்தில் பெற்ற திகில் அனுபவங்களை சுவாரஸ்யமாகச்சொன்னார். ஜப்பானியர்களின் குண்டுவீச்சிலிருந்து அந்தக்கப்பல் தெய்வாதீனமாகத்தப்பியது என்றார். " அம்மா, உங்கள் அனுபவங்களை ஒரு நாவலாக எழுதுங்கள்" எனச்சொன்னேன். முதலில் தமது கணவர் பற்றிய நூலைத்தான் முடிக்கவேண்டும் என்றார் அவர்.
அவர் சொல்லச்சொல்ல நானே எழுதியிருக்கலாம். ஆனால், அதற்கான நேரத்தை கண்டுபிடிப்பதுதான் இயலாதிருந்தது.
அவருக்கு 85 வயது பிறந்துவிட்டது என அறிந்ததும் அவரது வீட்டுக்குச்சென்று வாழ்த்துவதற்கு ஆறுபேர் தயாரானோம். அவர்கள் சட்டத்தரணி ரவீந்திரன் அவரது மனைவி ஜெஸி ரவீந்திரன், நடேசன், அவரது மனைவி சியாமளா, மற்றும் நானும் எனது மனைவி மாலதியும் சிற்றுண்டிகளும் கேக்கும் எடுத்துச்சென்று அவருடைய பிறந்த நாளை மிகவும் எளிமையாக கொண்டாடினோம்.
எனக்கு பொன்னாடை குறித்து  ஒவ்வாமை  இருக்கிறது. பொருத்தமற்றவர்களுக்கெல்லாம் தற்காலத்தில் பொன்னாடையும் பூமாலையும் வெற்றுப்புகழாரங்களும் கிடைக்கின்றன. அதனால் பொன்னாடைக்குரிய மகிமையே போய்விட்டது. எனினும் அதற்கு முற்றிலும் பொருத்தமானவர் திருமதி ராணி இலியேஸர் என்பதனால் அன்றைய தினம் அவருக்கென ஒரு பொன்னாடையும் எடுத்துச்சென்றேன். திருமதிகள் ஜெஸி, சியாமளா, மாலதி ஆகியோர் அவருக்கு பொன்னாடை போர்த்தினார்கள்.
கடந்த ஒக்டோபர் 16 ஆம் திகதி  அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தும்போது கடந்த கால நினைவுகள் மலர்ந்தன. நினைவுகளுக்கு மரணமே இல்லை.


No comments: