24/11/2016 மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் அடாவடித்தனங்களைக் கண்டித்து இன்று இடம்பெற்ற வட மாகாண சபையின் 66 வது அமர்வில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானத்தால் இந்தப் பிக்குவின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் பிரேரணை முன்வைக்கப்பட்டு அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி, நாட்டின் நல்லிணக்கத்தையும் இன ஐக்கியத்தையும் சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்தத் தீர்மானம் வலியுறுத்தி நிற்கின்றது.
மட்டக்களப்பில் இருந்து செயற்படும் சுமணரத்ன தேரர் சிறுபான்மை இனமக்களுக்கு எதிரான அடாவடித் தனங்களையும், நீதிமன்ற உத்தரவையும், மற்றும் மனித ஒழுக்கங்களையும் மீறும் வண்ணம் தொடர்ந்தேர்ச்சையாக செயற்பட்டு வருவதை இந்தத் தீர்மானம் கண்டிப்பதோடு குறித்த தேரருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றது.
மேலும், அண்மைக் காலமாக வட மாகாணத்தில் பௌத்த விஹாரைகள் அமைக்கப்பட்டு வரும் அதே பேரினவாத நடவடிக்கை கிழக்கிலும் இடம்பெறுவதற்கு குறித்த பிக்கு தூபமிட்டுள்ளார்.
இனவாத மதவாத தேரர்களுக்கு ஊக்கமளிப்பதாக சுமணரத்னவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளதால் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அந்தத் தீர்மானத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு பிக்கு விடயத்தில் பொலிஸார் பார்வையாளராக செயற்பட்டமை கண்டிக்கத்தக்கதெனவும் வட மாகாண சபை நிறைவேற்றிய அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி