ஏங்கிநின்று அழுகுதையா ! -.எம். ஜெயராமசர்மா… அவுஸ்திரேலியா

.

கந்தர்வக் குரலோனே காலனுனைக் கவர்ந்தானோ
சிந்தையிலாக் காலனவன் நொந்துவிடச் செய்துவிட்டான்
உந்தனது இசைகேட்க உலகமே துடிக்குதையா
உனைக்கவர்ந்த காலனுக்கு உள்ளமே இல்லையையா !
இசையுலகம் அழுகிறது
எழுகடலும் அழுகிறது 
இசைச்சுரமும் அழுகிறது 
எல்லோரும் அழுகின்றோம் 
அசையாமல் இசையுலகில் 
அரசாட்சி புரிந்தவரே
ஆர்வருவார் உனைப்போல
அருமையிசை தருவதற்கு !
இளவயதில் இசைக்குள்ளே
எப்படித்தான் இணைந்தாயோ
வசையில்லா இசைபாடி
வைரமென ஜொலித்தாயே
புதுராகம் புதுத்தாளம்
புறப்பட்டு வரச்செய்தாய்
புன்சிரிப்பு முகம்காணா
புலம்புகிறோம் நாங்களெல்லாம் !

பொட்டிட்ட உந்தன்முகம் புன்சிரிப்பு பூத்தமுகம்
அர்த்தமுடன் பலமொழியில் ஆற்றல்நிறை பெற்றவுளம்
சொர்கமதை வரவழைக்கும் சுந்தரமாம் காந்தக்குரல்
அத்தனையும் இனிநாங்கள் ஆரிடத்துக் காண்போமோ !
இசையால் வசமாக்கி எமையெல்லாம் இசையாக்கி
இசைகேட்க எழுந்தோடி வருகவென எமையழைத்து
ஏழிசையாய் இசைப்பயனாய் என்னாளும் வாழ்ந்திருந்த
இசையரசே இசைவழங்க இனிநீயும் வருவாயா!
பாராட்டுப் பலபெற்றாய் பரிசெல்லாம் குவித்துவைத்தாய்
பண்புடனே நீயிருந்து பாடிநின்றாய் பலகாலம் 
தாலாட்டும் உன்னிசையால் தவிப்பெல்லாம் மறந்திருந்தோம்
தவித்தழுது நிற்கின்றோம் தாலாட்டை யார்தருவார் !
இந்தியத் திருநாட்டின் இணையில்லா இசையரசே
இசையாலே எல்லோரின் இதயத்துள் அமர்ந்துவிட்டாய்
இசையுலகில் நீயில்லை எனும்சேதி கேட்டவுடன்
இசையுலக இதயமெல்லாம் ஏங்கிநின்று அழுகுதையா !

No comments: