அரை நிர்வாண கோலத்தில் தண்டனை அனுபவிக்கும் துருக்கி இராணுவ வீரர்கள் ; அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியானது
துருக்கியில் இராணுவ புரட்சிக்கு உதவிய 44 நீதிபதிகள் மற்றும் 34 இராணுவ தளபதிகள் கைது
கஜகஸ்தானின் அடுத்தடுத்து தாக்குதல்: 4 பேர் பலி (வீடியோ இணைப்பு)
ஜேர்மனி புகையிரதத்தில் கோடரி வெட்டு சம்பவம் ;ஜ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பு
சோதனைச் சாவடி மீது தற்கொலைப்படை தாக்குதல் - 10 பேர் பலி
குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படை வான்தாக்குதல் ; பொது மக்கள் 56 பேர் பலி
உக்ரைனில் கார் குண்டு தாக்குதல்
துருக்கியில் 3 மாதங்களுக்கு அவசரகாலநிலை பிரகடனம்
ஜெர்மனி துப்பாக்கிச் சூடு : 10 பேர் பலி, மர்ம நபர் தற்கொலை, 21 பேர் காயம் , ஐ.எஸ். கொண்டாட்டம்
அரை நிர்வாண கோலத்தில் தண்டனை அனுபவிக்கும் துருக்கி இராணுவ வீரர்கள் ; அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியானது
18/07/2016 துருக்கியில் ஜனாதிபதி தய்யீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க இராணுவத்தின் ஒரு பிரிவினர் புரட்சியில் ஈடுபட்டனர்.இந்த இராணுவ புரட்சியை பொதுமக்கள் வெற்றிகரமாக முறியடித்தனர்.
அப்போது ஏற்பட்ட மோதலில் 290 பேர் உயிரிழந்தனர். 1,500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இராணுவ புரட்சியில் ஈடுபட்ட 6,000 போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், பொலிஸாருக்கும், இராணுவீரர்களுக்கும் நடைபெற்ற சண்டையில் தோற்கடிக்கப்பட்ட இராணுவீரர்களை, துருக்கி குடிமகன்கள் அடித்து உதைக்கும் புகைப்படங்கள் மற்றும் இராணுவவீரர்களின் ஆடைகள் களையப்பட்டு, அவர்களின் கைகள் கட்டப்பட்டு சிர்னெகில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் படுக்கவைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இந்த புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு மரணதண்டனை வழங்குவது குறித்து பாராளுமன்றத்தில் பரிசீலிக்கப்படும் என ஜனாதிபதி தய்யீப் எர்டோகன் கூறியுள்ளார். இதில் உயிரிழந்த மக்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டபோது, அவரும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
மேலும், துருக்கி நாடு ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என தான் ஆசைப்படுவதாகவும், இந்த இராணுவ புரட்சிக்கு பின்னணியில் நிச்சயம் பெதுல்லாவே காரணமாக இருக்கிறார் என்பது எனக்கு தெளிவாக தெரியும் என கூறியுள்ளார்.
நன்றி வீரகேசரி
துருக்கியில் இராணுவ புரட்சிக்கு உதவிய 44 நீதிபதிகள் மற்றும் 34 இராணுவ தளபதிகள் கைது
18/07/2016 துருக்கியில் ஜனாதிபதி தய்யீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க இரவு இராணுவ புரட்சி நடத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள் உதவியுடன் அப்புரட்சி முறியடிக்கப்பட்டது.
குறித்த சம்பவத்தில் நடந்த துப்பாக்கி சண்டை மற்றும் மோதலில் 265 பேர் உயிரி ழந்தனர். 1500 இற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதை தொடர்ந்து இராணுவ புரட்சிக்கு உதவியவர்கள் மற்றும் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இராணுவ புரட்சியில் ஈடுபட்டதாக இதுவரை 8000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 103 இராணுவ தளபதிகள் அடங்குவர். இவர்கள் தவிர புரட்சிக்கு உதவியதாக துருக்கி நீதி துறையை சேர்ந்த பல்வேறு மூத்த நீதிபதிகள் உள்பட 2745 நீதிபதிகளுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.அவர்களில் 44 நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இராணுவ புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
கஜகஸ்தானின் அடுத்தடுத்து தாக்குதல்: 4 பேர் பலி (வீடியோ இணைப்பு)
18/07/2016 கஜகஸ்தானின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டியில் இன்று ஆயுதங்களுடன் காரில்வந்த 2 நபர்கள் திடீரென பொலிஸ் நிலையம் மற்றும் பாதுகாப்புத்துறை அலுவலகம்மீது தாக்குதல் நடத்தினர்.
பொலிஸ் நிலையத்தில் உள்ள பொலிஸ் அதிகாரி ஒருவரை சுட்டுக்கொன்றுவிட்டுஅவரிடம் இருந்த துப்பாக்கியை பறித்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து அவர்களை விரட்டிச் சென்ற பொலிஸார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் 2 பொலிஸார் உயிரிழந்தனர். பின்னர் அந்த காரை மடக்கிய பொலிஸார்,காருக்குள் இருந்த ஒருவனை கைது செய்யும் வேளையில் மற்றொருவன் தப்பிஓடிவிட்டான்.
இதுபற்றி பொலிஸார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் ஏற்கனவே குற்றவழக்கில் தண்டிக்கப்பட்ட 27 வயதுடையவர் என்பது தெரியவந்தது. முன்னதாக கார்கடத்தலின்போது ஒருவரை கொன்றதும் தெரியவந்தது.
இந்த சம்பவங்களால் நகர் முழுவதும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. மக்கள் கூடும்இடங்களில் பொலிஸார் குவிக்கப்பட்டனர். பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் எனஅறிவுறுத்தப்பட்டது.
கஜகஸ்தானில் கடந்த சில மாதங்களாக இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள்அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜேர்மனி புகையிரதத்தில் கோடரி வெட்டு சம்பவம் ;ஜ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பு
19/07/2016 ஜேர்மனி நாட்டில் ஓடும் புகையிரதத்தில் 17 வயது இளைஞன் மேற்கொண்ட கோடரி வெட்டு சம்பவத்திற்கு ஜ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளது.
ஜேர்மனியின் தெற்கு நகரான வூர்ஸ்பர்கில் பயணிகள் புகையிரதத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 17 வயது அகதி சிறுவன் கோடாரி மற்றும் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளான்.
தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓட முயன்ற அகதி சிறுவனை பொலிஸார் சுட்டுக் கொன்றனர். தாக்குதலில் பலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 4 பேரின் நிலை மிகவும் மோசமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவன் ஜேர்மனிக்கு ஆதரவற்ற நிலையிலே வந்துஉள்ளான் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புகையிரத்தில் தாக்குதல் நடத்திய அச்சிறுவன் ”அல்லா அக்பர்,” என்று சத்தம் எழுப்பியதாக பவாரியா மாகாண உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பிரான்ஸில் நடந்ததைப் போல தாக்குதல்கள் ஜேர்மனியிலும் நடக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் பொலிஸார் சிறுவன் தங்கியிருந்த அறையில் சோதனையில் ஈடுபட்ட வேளையில்,கையால் தீட்டப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத கொடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
சோதனைச் சாவடி மீது தற்கொலைப்படை தாக்குதல் - 10 பேர் பலி
19/07/2016 யெமன் நாட்டின் ஏடென் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஹட்ரமவுட் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான முகல்லாவில் அல்-புரும் மற்றும் அல்-கபர் நகரங்களில் வாகன போக்குவரத்தை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள இராணுவ சோதனைச் சாவடிகள் மீது மேற்கொண்ட கார்குண்டு தாக்குதலில் 10 பேரிற்கும் அதிகமானோர் பலியானதாகவும் பலர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலுக்கு யெமனில் இயங்கிவரும் அல்-கொய்தா தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
20/07/2016 அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்பை அக்கட்சி அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஜனாதிபதியான ஒபாமாவின் பதவிக்காலம், இந்த ஆண்டுடன் முடிவடைவதையடுத்து புதிய ஜனாதிபதியினை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் 8 ஆம் திகதி நடைபெறுகிறது.
இதில், ஆளும் கட்சியாகிய ஜனநாயக கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் சார்பில், ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்காக வாக்கெடுப்பு நடைபெற்று முடிந்துள்ளது.
குடியரசு கட்சியில், ஜனாதிபதி வேட்பாளராக ஆக வேண்டும் என்றால், 1237 பிரதிநிதிகளின் வாக்குகள் பெற வேண்டும். இதில் சில வாக்குகளை மட்டுமே டிரம்ப் பெற வேண்டிய சூழ்நிலை நிலவி வந்தது.
இந்நிலையில், அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்பை அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தன்னுடன் களமிறங்கிய குடியரசுக் கட்சி வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளியதன் மூலம், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதேபோன்று, ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை அறிவிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளமையினால்,டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகிய இருவருக்கும் இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது. நன்றி வீரகேசரி
சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படை வான்தாக்குதல் ; பொது மக்கள் 56 பேர் பலி
20/07/2016 சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் ஐ.எஸ். இயக்கத்தினர் பிடியில் உள்ள கிராமத்தில் அமெரிக்க கூட்டுப்படை வான் தாக்குதலை நடத்தியது.
அப்போது போர் விமானங்கள் ஐ.எஸ். இயக்கத்தினரின் நிலைகள் மீது குண்டுகளை வீசியவேளையில் தவறுதலாக மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளில் குண்டுகளை வீசி விட்டன.
இந்த தாக்குதலில் சிறுவர்கள் 11 பேர் உள்பட பொது மக்கள் 56 பேர் பலியாகினர்.
மக்கள் அந்த கிராமத்தை விட்டு வெளியேற முற்பட்டபோது குண்டு வீச்சில் சிக்கி உயிரிழந்து விட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது.
உக்ரைனில் கார் குண்டு தாக்குதல்
21/07/2016 உக்ரைன் நாட்டின் தலைநகரில் மேற்கொள்ளப்பட்ட கார்குண்டு தாக்குதலில் அந்நாட்டின் பிரபல ஊடகவியலாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த தாக்குதலில் பாவ்லோ சிறிமெடா என்ற ஊடகவியலாளரே பலியாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
துருக்கியில் 3 மாதங்களுக்கு அவசரகாலநிலை பிரகடனம்
21/07/2016 துருக்கியில் ஏற்பட்ட இராணுவ புரட்சியினையத்து, ஜனாதிபதி எர்டோகன் துருக்கியில் 3 மாதங்களுக்கு அவசரகாலநிலையினை பிரகடனம் படுத்தியுள்ளார்.
ஜெர்மனி துப்பாக்கிச் சூடு : 10 பேர் பலி, மர்ம நபர் தற்கொலை, 21 பேர் காயம் , ஐ.எஸ். கொண்டாட்டம்
23/07/2016 ஜெர்மனியின் முனிச் நகரில் நேற்றிரவு மர்ம நபரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளதோடு 21 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ள நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸ் உயரதிகாரி ஹ_பர்டஸ் ஹென்டிரே விளக்கமளிக்கையில்,
வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் தாக்குதல் நடத்தியவனும் ஒருவன். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் 18 வயதான ஜெர்மன்-ஈரானை சேர்ந்தவர். இந்த தாக்குதலுக்கான நோக்கம் என்னவென்று சரியாக தெரியவில்லை.
வணிக வளாகத்திற்குள் நுழைவதற்கு முன் மெக்டனோல்ட் உணவு விடுதியில் அவர் தாக்குதல் நடத்தி உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலை அடுத்து அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
தற்கொலை
ஜெர்மனி நாட்டில், முனிச் நகரில் அமைந்துள்ள ஒலிம்பியா வணிக வளாகத்தில் புகுந்த துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள், அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். இச்சம்பவத்தில் 9 பேர் பலியானதாகவும், துப்பாக்கிசூட்டில் ஈடுபட்டவன் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் ஜேர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னதாக இத்தாக்குதலில் குறைந்தபட்சம் மூன்று பயங்கரவாதிகள் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்டவர், ஜெர்மனில் முனிச் நகரில் வசித்த இரான் வம்சாவளியை சேர்ந்தவர் என்றும், 18 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஐ.எஸ். அமைப்பு மகிழ்ச்சி
முனிச் தாக்குதல் சம்பவத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ள நிலையில், ஐஎ.ஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் மகிழச்சி தெரிவித்து வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் கருத்துக்களையும், வாசகங்களையும் சமூக வலைதளங்களில் ஐஎஸ் அமைப்பினர் பதிவிட்டு வருகின்றனர்.
அதில் ஒரு டுவிட்டர் பதிவில், கடவுளுக்கு நன்றி. ஐஎஸ் அமைப்பிற்கு வளம் சேர்த்ததற்காக கடவுளுக்கு நன்றி என குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொரு பதிவில், ஐரோப்பாவிலும் ஐஎஸ் இயக்கம் விரிவடைந்து வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அரபு மொழியில் பதிவிடப்பட்டுள்ளன.
இதற்கு முன் சமீபத்தில் நடந்த பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் தாக்குதல்களின் போதும் அவற்றை கொண்டாடும் விதமாக இது போன்ற கருத்துக்களை ஐஎஸ் அமைப்பினர் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment