இலங்கைச் செய்திகள்


'வாய்த்தர்க்கம் போராட்டமாக முற்றியமை வருந்தத்தக்கது'

பசில் ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

 தமிழரின் பிரச்சினைகளை தீர்ப்பதன் மூலமே சிங்களவர்கள் நிம்மதியாக வாழ முடியும் : யாழில் ஜனாதிபதி

சுவிஸ் குமாரின் தாயார் சிறைச்சாலையில் மரணம்

நாமல் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை

யாழ். பல்கலைக்கழகம் மீண்டும் இன்று திறப்பு

யாழ். பல்கலைக்கழக மோதல் : திசிதரன் பிணையில் விடுதலை

 பல்வேறு துன்புறுத்தலுக்கு உள்ளாகிய 15 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்.!

 யாழில் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு 971 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

பிள்ளையானுக்கு பிணை மறுப்பு.!

 ரவிராஜ் படுகொலை : கடற்படை அதிகாரிகள் மூவர் உள்ளிட்ட அறுவருக்கு  எதிராக  மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்










'வாய்த்தர்க்கம் போராட்டமாக முற்றியமை வருந்தத்தக்கது'

18/07/2016 யாழ்ப்பாண  பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை வரவேற்பதற்கான நடன நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் போராட்டமாக முற்றியமை  தொடர்பில்  நாம் வருந்துகின்றோம். எனினும் இந்த விவகாரத்துக்காக  மாணவர்கள் இவ்வாறு மோதலில் ஈடுபடுவதை எம்மால் அனுமதிக்க முடியாதென இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
யாழப்பாண பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் அச்சங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழ் சிங்கள மக்கள் தொடர்ந்தும் முகம்கொடுத்து வந்த பிரச்சனைகளே பல உள்ளன. அவற்றுக்கே இன்னும் தீர்வு காணப்படவில்லை. இவ்வாறான நிலையில் சாதாரணமான நடன விடயத்தை இவ்வாறு மோதல் சம்பவமாக முற்றுச் செய்தமை வேறு சில தரப்புக்களின் இனவாதத்தை தூண்டும் செயல் என்றே நாம் கருதுகின்றோம்.
இதற்கு முன்னரும் பேராதனை பல்கலைக்கழகத்தில் இது போன்றதொரு சம்பவம் இடம்பெற்றது.  ஆனால் அதற்கு கிடைத்த பலன் யாழ்ப்பாணத்தில் கிடைத்தற்கும் பார்க்க முற்றிலும் வேறுபட்டது.
யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர்களிடையே ஏற்பட்ட இந்த விவகாரத்தினை சில தமிழ் ஊடகங்கள் சிங்கள் மாணவர்களின் தாக்குதல் முயற்சி என சுட்டிக்காட்டியுள்ளது.  மறுபுறம் சிங்கள ஊடகங்கள் சில இவற்றை தமிழ் மாணவர்களின் தாக்குதல் முயற்சியென சுட்டிக்காட்டியுள்ளது.
சில ஊடகங்கள் அதற்கு அப்பால் சென்று செய்திகளை வெளியிட்டிருந்தன. எவ்வாறாயினும் இந்த மோதல் சம்பவத்திற்கு தீர்வு காணும் போது அந்த விடயத்தில் இனவாத போக்கு கடைபிடிக்கப்பட கூடாது.
யுத்தத்தின் பேரில் சில தமிழ்,சிங்கள மொழி ஊடகவியலாளர்களையும் சமூக சேவையாளர்களையும் கொலை செய்த காலகட்டத்தை நாம் மறந்துவிடவில்லை. அதேநேரம் வடக்கிலும் தெற்கிலும் ஊடக நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையும் நாம் மறந்துவிடவில்லை. இந்த விடயங்கள் குறித்து அறிந்துள்ள மாணவர்கள் எதிர்காலத்திலும் இனவாதிகளுக்கு இடமளிக்க கூடாது.
அரசாங்கம் முன்னெடுக்கும் நல்லிணக்கச் செயற்திட்டம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை சிந்தித்து பார்க்க இதுவே தருணம். அதேநேரம் ஊடகவியலாளர்களை ரயில் ஊடாக யாழப்பாணம் அழைத்துச் சென்றால் மாத்திரம் நல்லிணக்கம் உருவாகிவிடாது என்பதை அரசாங்கம் உணர்ந்துக்கொள்ள வேண்டும்.   நன்றி வீரகேசரி 













பசில் ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

18/07/2016 முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை அடுத்த மாதம் முதலாம் ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரச சொத்துக்களை தனது தனிப்பட்ட தேவைக்காக தவறாக பயன்படுத்தியமை, கம நெகும திட்டத்தின் நிதியை மோசடி செய்தமை, உள்நாட்டு பயணங்களின் விமானச் சேவைக்காக 150 மில்லியன் ரூபாவை மோசடி செய்தமை தொடர்பிலான குற்றங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை நிதி மோசடி பிரிவுக்கு சென்றிருந்த பசில் ராஜபக்ஷவை நிதி மோசடி பிரிவினர் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 













தமிழரின் பிரச்சினைகளை தீர்ப்பதன் மூலமே சிங்களவர்கள் நிம்மதியாக வாழ முடியும் : யாழில் ஜனாதிபதி

18/07/2016  நாட்டில் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதன் மூலமே சிங்களவர்கள் நிம்மதியாக வாழ முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் ஜேர்மன் அரசின் நிதியுதவியுடன் 8 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை, ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தை இன்று காலை திறந்து வதை;து உரையாற்றும் போதே  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் கவலையளிக்கின்றது.  இவ்வாறான மோதல்கள் மீண்டும் ஏற்படாத வகையில் அனைத்து கல்வி நிறுவனங்களும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். 
பல்கலைக்கழகங்களும் கல்வி நிறுவனங்களும் நாட்டின் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் மத்திய நிலையங்களாக இயங்க வேண்டும்.  அதேவேளை பாடசாலை கல்வித் திட்டத்தில் தேசிய நல்லிணக்கமும் ஒரு பாடமாக உள்ளடக்கப்பட வேண்டும். 
நாட்டில் வாழும் அனைத்து இன, மத மக்களினதும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் சிங்கள பௌத்த மக்கள் இந் நாட்டில் சந்தோஷமாக வாழ முடியும். வடபகுதி மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. அவற்றை ஏற்றுக் கொள்கிறேன். அவ்வாறு ஏற்றுக் கொள்வதே பிரச்சினையை தீர்ப்பதற்கான முதல் வழியாகும். 
ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய உறுதிமொழிகளையும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் ஒருபோதும் பின்னிற்க மாட்டேன் என்றார்.    நன்றி வீரகேசரி 












சுவிஸ் குமாரின் தாயார் சிறைச்சாலையில் மரணம்

18/07/2016 புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர் சுவிஸ்குமாரின் தாயார் நேற்று (17) இரவு யாழ் சிறைச்சாலையில் வைத்து உயிரிழந்துள்ளார்.
வித்தியாவின் வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, யாழ் சிறைச்சாலை அத்தியட்சகர் நீதிமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய விடயம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு யாழ் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி 













நாமல் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை

18/07/2016 

நிதிமோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்ஷ எம்.பி. சற்றுமுன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
70 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்ஷ இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.    நன்றி வீரகேசரி 













யாழ். பல்கலைக்கழகம் மீண்டும் இன்று திறப்பு

20/07/2016 மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மூடப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.
அமைச்சர்களான அனுரபிரியதர்ஷன யாப்பா, கருணாரட்ன பரணவிதான மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு இடையில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னரே இடைநிறுத்தப்பட்டிருந்த பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை இன்று ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானபீட புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில், அட்டவனைப்படுத்தப்படாத கண்டிய நடனத்தை அரங்கேற்றியதால்  தமிழ்- சிங்கள மாணவர்களுக்கிடையில்  மோதல் இடம்பெற்றது.
இதனையடுத்து யாழ்.பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்விச் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 












யாழ். பல்கலைக்கழக மோதல் : திசிதரன் பிணையில் விடுதலை

20/07/2016 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக நீதிமன்றில் ஆஜரான யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் திசிதரனை தலா 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் செல்ல நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், இன்று புதன்கிழமை (20) அனுமதியளித்தார்.
மாணவ ஒன்றிய தலைவரால் தாக்குதலுக்கு இலக்கான மாணவன் தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருதால் மாணவ ஒன்றிய தலைவர் திசிதரனுக்கு நீதிமன்றம் பிணை வழங்க கூடாது என பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் திசிதரன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, மாணவ ஒன்றியத் தலைவர் திசிதரன் எவ்வித தாக்குதல் சம்பவத்திலும் ஈடுபடவில்லை என மன்றில் தெரிவித்ததை தொடர்ந்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். 
இதேவேளை மாணவ குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதல் பாரதூரமான விடயம் என்பதால் தற்போதைய நிலையில் மாணவ ஒன்றியத் தலைவரை கைது செய்தால் அதன் பிரதிபலன் பாரதூரமாக அமையும் என்பதால் அவரை பிணையில் விடுதலை செய்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது  நன்றி வீரகேசரி 










பல்வேறு துன்புறுத்தலுக்கு உள்ளாகிய 15 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்.!

20/07/2016 குவைட் நாட்டுக்கு பணிப்பெண்ணாக வேலைவாய்ப்பு பெற்றுச்சென்று அங்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த 15 பெண்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளனர்.  
தாம் பணிபுரிந்த வீடுகளில் பல்வேறு துன்புறுத்தலுக்கு முகங்கொடுத்த இந்த பெண்கள் குவைத் தூதரகத்தில் தஞ்சமடைந்த நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொண்ட நடவடிக்கையையடுத்து அவர்கள் நாட்டுக்கு மீண்டும் அழைத்துவரப்பட்டுள்ளனர். 
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பிய இந்த பெண்கள் தமது வீடுகளுக்குச் செல்ல தேவையான வசதிகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கியுள்ளது.  நன்றி வீரகேசரி 













யாழில் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு 971 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

21/07/2016 வடக்கில் இடம்பெயர்ந்த நிலையில் 31 முகாம்களில் தஞ்சமடைந்துள்ள 971 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்காக 971 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் சுவாமிநாதன் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இணை அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக இந்த தகவலை வெளியிட்டார்.
 அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளாகி நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களை விரைவாக மீள்குடியேற்ற வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். அதன்படி நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள  குடும்பங்களுக்கு விரைவாக வீடுகளை வழங்கவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
வடக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 31 நலன்புரி முகாம்களில் 971 குடும்பங்கள் தங்கியுள்ளன. அவர்களில் 641 குடும்பங்கள் காணிகளை இழந்தவர்கள். எவ்வாறெனினும் அங்கு வாழ்கின்ற 971 குடும்பங்களுக்கும் வீடுகளை அமைத்துக் கொடுக்க 971 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பாக சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.    நன்றி வீரகேசரி 











பிள்ளையானுக்கு பிணை மறுப்பு.!

21/07/2016 முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை கோரிய மனு தொடர்பான வழக்கு எதிர்வரும் 02.09.2016 ஆம் திகதிக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டது. 
கடந்த 25.12.2015 அன்று மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக பிள்ளையான் உட்பட மேலும் நால்வர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்கான விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி 










 ரவிராஜ் படுகொலை : கடற்படை அதிகாரிகள் மூவர் உள்ளிட்ட அறுவருக்கு  எதிராக  மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்

21/07/2016 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது மெய்பாதுகாப்பாளராக இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் லக்ஷ்மன் ஆகியோரை  படு கொலை செய்த விவகாரம் தொடர்பில் கடற்படை அதிகாரிகள் மூவர் உள்ளிட்ட  6 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபர் இன்று  கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தார். 
பழனிச் சாமி சுரேஷ், ஹெட்டி ஆரச்சிகே பிரசாத் சந்தன குமார, காமினி செனவிரத்ன, பிரதீப் சமிந்த, சரன் எனப்படும் சிவகாந்தன் விவேகானந்தன், பெபியன் வொய்ஸ்டன் டூசைன் ஆகியோருக்கு எதிராகவே சட்ட மா அதிபரால் பயங்கரவாத தடை சட்டம் மற்றும் தண்டனை சட்டக் கோவையின் விதிவிதானங்களுக்கு அமைவாக இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 
சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய சார்பில் இன்று  கொழும்பு மேல் நீதிமன்றின் முதலாம் இலக்க விசாரணை அறையின் நீதிபதி மணி லால் வைத்தியதிலக முன்னிலையில் பிரதி சொலிசிற்றர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய இந்த குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தார்.   நன்றி வீரகேசரி 

















No comments: