அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர் அரங்கேற்றிய நாநலம் நிகழ்வு

அண்மையில் (16.07.16) சிறப்பாக அரங்கேறிய நாநலம் நிகழ்வு பற்றியதம் கண்ணோட்டத்தை தஞ்சைப் பல்கலைக் கழக தமிழ்ப் பேராசிரியர் திருமதி ஞானா குலேந்திரன் அம்மையார் அவர்களும் சிந்தனையாளர் திரு. ம. தனபாலசிங்கம் அவர்களும் அளித்திருந்தார்கள். உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கின்றோம்.


இளைஞர் நாநலத்தை வியந்து வாழ்த்துகின்றேன்! - பேராசிரியர் திருமதி ஞானா குலேந்திரன். 

அவுஸ்திரேலிய மண்ணில் பிறந்தும், வாழ்ந்தும் வருகின்ற எம் இளைய தலைமுறையினர்க்கு, தாய்த்தமிழ் வழி தன்னம்பிக்கையை ஊட்டி வளர்க்கப் பரித்துவமான மேடை ஒன்றை அமைத்துக் கொடுத்த அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தார்க்கு முதலில் என் மனம்நிறைந்த பாராட்டுக்கள்.

அருமையான விழாத்தலைப்பு “நாநலம்"! ஒரு சொற்ப விநாடிகளில் எதேச்சையாகக் கொடுத்த ஒரு தலைப்பை ஆழமாகச் சிந்தித்து தெளிந்ததைத் தெள்ளுதமிழில் கேட்போர் உள்ளத்தைப் பிடிக்கும்படி பேசிய வெல்லும் சொல் இரு அணியினரையும் மண்டபம் நிறைந்த சபையோர் பலத்த கரகோஷத்தோடு ஊக்குவித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்நிகழ்ச்சியைப் பக்குவமாக நடாத்திய கழகச் செயலர் திருமதி ஷிவானி தீரஜ் அவர்களுடைய ஆளுமை போற்றத்தக்கது. 

இளைஞர் ஆய்வரங்கில் கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் பேசிய பஞ்ச காரிகையரை வியந்து வாழ்த்துகின்றேன். செல்வி ப்ரணீதா பாலசுப்பிரமணியன் ஒரு காண்டத்தை விளக்க, செல்வி ஆருதி குமணன் ஒரு படலத்தை நயந்துரைக்க, திருமதி சுகன்யா பாலசுப்பிரமணியன் ஒரு பாடலின் திறனாய, திருமதி மைத்திரேஜி சிவசுப்பிரமணியம் ஒரு வரியை விவாதிக்க, திருமதி ஷிவானி தீரஜ் ஒரு சொல்லை வைத்து வாதம் செய்தது, macro research to micro research; அதாவது, கம்பனில் அகலமான ஆய்விலிருந்து படிப்படியாக நுட்பமான ஆய்விற்கு இட்டுச்செல்லும் ஒரு இனிய ஆய்வு உத்தியை துணிந்து இவ்விளைஞர்களுக்கு அறிமுகப்படுத்திய திரு. ஜெய்ராம் அவர்களின் மனத்திட்பத்தை வெகுவாக மெச்சுகின்றேன். நகைச்சுவை கலந்த பேச்சுத்திறனால் திரு. திருநந்தகுமார் அவர்கள் வெகு கலகலப்பாக ஆய்வரங்கத்திற்குத் தலைமையேற்று நடாத்திய பாங்கினை நான் சுவைத்து இரசித்தேன். 

ஒன்று சொல்கிறேன், நம் இளைய தலைமுறையினர் நம் தாய்த்தமிழ் மொழியை மங்காப் புகழோடு வாழ வைப்பார்கள் என்ற நம்பிக்கையைக் கம்பன் கழகத்து நாநல விழா எனக்குத் தந்தது, இது உண்மை! மேடையலங்காரமும், விழா அமைப்பும், நிகழ்த்திய பாங்கும் கம்பன் கழகத்திற்கே உரிய நேர்த்தியுடன் கண்ணுக்கும் காதிற்கும் கருத்திற்கும் இனிமை தரும் வகையில் அருமையாக அமைத்திருந்தார்கள் - கழகத்தார்க்கு என் பாராட்டுக்கள்!.

“நாநலம்" - சிந்தனையாளர் திரு ம. தனபாலசிங்கம் அவர்களது பார்வையில்...!

அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தால் சனிக்கிழமை 16.07.16அன்று புதுமையான முயற்சி ஒன்று அரங்கேற்றப்பட்டது. ‘நாநலம்' என்ற பெயரில், மங்கியதோர் மாலைப்பொழுதில் இடம்பெற்ற இந்நிகழ்வு பொங்கிவரும் பெருநிலாவாக பிரவாகித்தது. கம்பன் கழகத்திற்கே உரிய சடங்குகள் சம்பிரதாயங்களுடன் மங்களகரமாக ஆரம்பித்த இந்நிகழ்வின் முதற்பகுதியில் 'வெல்லும் சொல்' என்ற நிகழ்வு இடம்பெற்றது. சிட்னியில் கம்பராமாயணத்துடன் தம்மை இணைத்துக்கொண்டவர்களும் அல்லாதவர்களுமான இளவல்கள் இதில் பங்கு கொண்டனர். 'வெல்லும் சொல் திறனாளர் தேர்வுப் பேச்சுப்போட்டியில் பொதுவான சொற்களும், கம்பராமாயணச் சொற்றொடர்களும் பகிரப்பட்டிருந்தன. பொதுவான தலைப்புகளை எடுத்துப் பேசியவர்களுக்கு, அவர்களுக்கான சொற் தலைப்புக்கள் மேடையில் சீட்டெடுப்பின் மூலம் எடுக்கப்பட்டது. கம்பராமாயணச் சொற்றொடர்களை எடுத்துப் பேசியவர்களுக்கு முன்கூட்டியே 28 சொற்றொடர்கள் கொடுக்கப்பட்டிருந்தது. மேடையில் மொத்தமாக வழங்கப்பட்ட 28 சீட்டுக்களிலிருந்து எழுந்தமானமாக எடுத்துப் பேசினர். அனைவரும் முப்பது வினாடிகளில் தாம் பேச எடுத்துக்கொண்ட தலைப்பை உள்வாங்கி, கிரகித்து, கணீர் என்ற குரலில் அப்பழுக்கற்ற உச்சரிப்புடன் அவர்கள் பேசி சபையை ஆச்சரியப்படுத்தினர். 

நிகழ்வின் முத்தாரமாக அமைந்த நிகழ்ச்சி, திரு. திருநந்தகுமார் தலைமையிலமைந்த இளைஞர் ஆய்வரங்கமாகும். கம்பனின் அமுதத் தமிழாறில் ஒரு காண்டத்தைப்பற்றி ஒருவரும், ஒரு படலத்தைப்பற்றி ஒருவரும், ஒரு பாடல், ஒரு வரி, ஒரு சொல் பற்றிப் பிற பேச்சாளரும் என நீச்சல் அடித்தனர். சபையே அதிர்ந்து போனது. ஒரு காண்டம் என்ற தலைப்பில் செல்வி ப்ரணீதா பாலசுப்பிரமணியன் பாலகாண்டத்தைத் தெரிவு செய்து அதில் வரும் தாடகை வதம், அகலிகையின் சாபம் போன்ற இடங்களைத் தொட்டுக்காட்டி மிதிலைவரை எம்மை அழகாய் அழைத்துச் சென்றார்.

ஒரு படலம் என்ற தலைப்பில் செல்வி ஆருதி குமணன் அவர்கள் யுத்த காண்டத்திலிருந்து இராமன் தேரேறு படலத்தைத் தேர்ந்தெடுத்து தன் தேர்விற்கான காரணங்களை அடுக்கிக்கூறி, இராமன் முன்பு ஏறிய தேர்களையும் அப்போதிருந்த மானோநிலைகளையும் இழுத்துக் காட்டினார். ஒரு பாடல் என்ற தலைப்பில் பேசிய திருமதி சுகன்யா பாலசுப்பிரமணியன் பாலகாண்டத்தில் நாட்டுப்படலத்தில் இருந்து 'சேல் உண்ட ஒண்கணாரின் திரிகின்ற செங்கால் அன்னம்...' என்ற பாடலை எடுத்து, ஒரு பதம் பார்த்துக் காட்டினார். தாமரை மலரில் வீற்றிருக்கும் அன்னக்குஞ்சுக்கு எருமை பாலூட்டிய காட்சியை வர்ணித்து, கம்பனின் சித்து விளையாட்டினை விளையாடிக் காட்டினார். 

ஒரு வரி என்ற தலைப்பில் பேசிய திருமதி மைத்திரேஜி சிவசுப்பிரமணியம், அசோக வனத்தில் சிறையிருந்த கற்பின் கனலி, அனுமன் மூலம் இராமனுக்கு நினைவூட்டுவதாகக் கூறிய 'இந்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன்' என்ற வரிக்கு ஒளியூட்டி நின்றார். ஒரு சொல் என்ற தலைப்பில் பேசிய திருமதி ஷிவானி தீரஜ் அவர்கள் இராமனும் சீதையும் இலக்குவனும் காட்டினில் நடக்கின்றபோது, சூரியன் உதயமாகின்றான். சூரிய ஒளி நீலக் கார்முகில் வண்ணன்மேல்பட்டு மறைகின்றது. காகுத்தனின் ஓவியத்தில் எழுத ஒண்ணா உருவத்தில் இருந்து ஒளிப்பிழம்புகள் பிறக்கின்றது. நடக்கின்றான் இராமன். இராம சௌந்தர்யத்தில் திளைக்கின்றான் கம்பன். ‘மையோ, மரகதமோ, மரிகடலோ, மழைமுகிலோ’ என்றெல்லாம் அதிசயித்தவன் 'ஐயோ' என்று கதறுகின்றான். மந்திரச் சொல் இன்பமாக்கிய வித்தையை விதந்து விதந்து நின்றார் ஷிவானி. சிட்னியிலே கம்பனிலே திளைத்த இவர்கள் கம்பராமாயணத்தை திறக்கும்போது அதிலிருந்து புறப்படும் ஒளிப்பிளம்புகளாக இருள் அகற்றி நின்ற காட்சியும் அவர்தம் பேச்சும் அற்புதம்.

பகையும் பயமும் சூழ்ந்த இவ்வுலகில் கம்ப கீதம் ஒலிக்கட்டும். இந்த நிகழ்வை ஒழுங்குசெய்த அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தார் பாராட்டப்பட வேண்டியவர்கள். சுபம்.
படங்கள்: திரு ப. இராஜேந்திரன்

நாநலம் பற்றிய தம் பார்வைகளை வடித்துத் தந்த இரு பெரியவர்களுக்கும் உங்களுக்கும்  இவற்றைத் தாங்கிவந்த தமிழ்முரசிற்கும், கழகத்தார் சார்பிலும் பேசிய இளவல்கள் சார்பிலும் நன்றிகூறி அமைகின்றோம்.



















-அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர்-

No comments: