உலகச் செய்திகள்


டில்லியில் பாலியல் வன்செயல் 

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள உலக அழகிப் பட்டம்..! 

ரஷ்யா வான்வழி தாக்குதல் :சிரியாவில் 200 பொதுமக்கள் பலி

டில்லியில் பாலியல் வன்செயல் 

21/12/2015 இந்தியத் தலைநகர் டில்லியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஓடும் பேருந்தில் ஐவர் கொண்ட குழு பெண் ஒருவரை  பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியதில் ஒருவரின் விடுதலைக்கு எதிராக இந்திய உச்சநீதி மன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை நிராகரித்துவிட்டது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் குற்றச்செயல் இடம் பெற்ற போது, அந்த நபருக்கு 17 வயது என்பதால், இந்திய சிறார் தண்டனைச் சட்டத்தின் அடிப்படையில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனைக் காலம் முடிவடைந்து அவர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக பெண்கள் அமைப்பு ஒன்று மேல்முறையீடு செய்தது.





மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வில்விடுவிக்கப்பட்ட நபரை தொடர்ந்து தடுத்துவைக்க சட்டத்தில் இடமில்லை என்று கூறி நிராகரித்தது.
அவர் இந்த மாதத்தின் முற்பகுதியில் விடுவிக்கப்பட்டு, அறக்கட்டளை ஒன்றின் பரமாரிப்பில் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த பாலியல் வன்செயலில் ஈடுபட்ட இதர நான்கு ஆடவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது நபர் சிறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நன்றி வீரகேசரி















சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள உலக அழகிப் பட்டம்..! 

21/12/2015 அமெரிக்காவின் லாஸ் வேகஸ் பகுதியில் நேற்று 65-வது உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் 2015-ம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டத்தை 24 வயதான, பிலிப்பைன்ஸ் நாட்டின் அழகி பியா அலோன்ஜோ உர்ட்ஸ்பட்ச் தட்டிச் சென்றார்.



முன்னதாக, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஸ்டீவ் ஹார்வே கொலம்பியாவின் அரியட்னா குடியர்ரெஸ் இந்த ஆண்டிற்கான உலக அழகி என்று தவறுதலாக அறிவித்தார். 


உலக அழகி பட்டம் வென்ற மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டார் அரியட்னா குடியர்ரெஸ். அவருக்கு 2014ஆம் ஆண்டிற்கான உலக அழகியான பவுலினா வேகா உலக அழகி கீரிடத்தையும் பட்டத்தையும் அணிவித்தார்.


ஆனால் அரியட்னா குடியர்ரெஸின் மகிழ்ச்சி சில நிமிடங்கள் கூட நிலைக்கவில்லை. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஸ்டீவ் ஹார்வே ”என்னை மன்னித்துவிடுங்கள். நான் உலக அழகி பெயரை தவறுதலாக அறிவித்து விட்டேன்,  பிலிப்பைன்சை சேர்ந்த அழகி பியா அலோன்ஜோ உர்ட்ஸ்பட்ச் தான் 2015ஆம் ஆண்டின் உலக அழகி” என்று அறிவித்தார். 
இதை கேட்ட பியா அலோன்ஜோ உர்ட்ஸ்பட்ச் இன்ப அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து கொலம்பியாவின் அரியட்னா குடியர்ரெஸ் அணிந்திருந்த உலக அழகி கீரிடம்  பிலிப்பைன்ஸ் அழகி பியா அலோன்ஜோவின் தலைக்கு மாறியது. 

உலக அழகி போட்டியில் நடைபெற்ற இந்த குளறுபடி சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.    நன்றி வீரகேசரி 















ரஷ்யா வான்வழி தாக்குதல் :சிரியாவில் 200 பொதுமக்கள் பலி

23/12/2015  சிரியாவில் ரஷியா நடத்திய வான்வழி தாக்குதலில் ’200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவின் வான்வழி தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆர்வலர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலை அடிப்படையாக கொண்டு, ’200 பொதுமக்கள் உயிரிழந்தனர்’ என்று சர்வதேச மன்னிப்புச்சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 29ஆம் திகதி வரையில் 5 இடங்களில் ரஷ்யா 25 க்கும் மேற்பட்ட தாக்குதலை நடத்தி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். 
மற்றுமொரு பக்கத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்யா ஆக்ரோஷமாக தாக்குதல் நடத்தி வருகிறது. 
இருப்பினும் சிரியா அதிபருக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்களை ரஷ்யா குறிவைக்கிறது என்று மேற்கத்திய நாடுகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. 
பாரீஸ் தாக்குதலை அடுத்து சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

ரஷ்யாவின் வான்வழி தாக்குதலில் 200 பொதுமக்கள் உயிரிழந்து உள்ளனர் என்று கூறிஉள்ள மன்னிப்பு சபை “சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு மதிப்பு அளிப்பதில் ரஷ்யா தோல்வி அடைந்துவிட்டது,” என்று கூறியுள்ளது.
 இருப்பினும் ரஷியா தொடர்ந்து இதனை மறுத்து வருகிறது, தகவல் போரின் ஒருபகுதியாக இத்தகைய கூற்றுக்கள் உள்ளது. 
சிரியா அதிபர் அல் ஆசாத் கோரிக்கையை ஏற்று, அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் பிற குழுக்களுக்கு எதிரான தாக்குதலை தொடங்குவதாக ரஷ்யா செப்டம்பர் 31ஆம் திகதி அறிவித்தது.  
சிரியாவில் ஹோம்ஸ், ஹமா, இட்லிப், லதாகியா மற்றும் அலிப்போ பகுதிகளில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதல்களை ஆய்வு செய்து உள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கையில் தெரிவித்து உள்ளது. 
தாக்குதல் தொடர்பாக அப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்களிடம் தொலைபேசி மூலம் விசாரித்ததாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. 
நவம்பர் 29ஆம் திகதி இட்லிப் மாகாணத்தில் ரஷியா வீசிய ஏவுகணையானது வியாபார கடை தொகுதியை தாக்கியது. இதில் பொதுமக்கள் 49 பேர் பலியாகினர் மற்றும் பலர் காயம் அடைந்தனர் என்று மன்னிப்பு சபை கூறியுள்ளது. மேலும் ரஷியாவின் தாக்குதல்களை பட்டியலிட்டுள்ளது.
நன்றி வீரகேசரி