சிறப்புடனே வந்திடுவாய் ! ( எம். ஜெயராமசர்மா .மெல்பேண் )

.

   புத்தாண்டே  நீவருக
      புதுச்சேதியுடன் வருக
      சொத்தாக நினைக்கின்றோம்
      சுமையகற்ற நீவருக
      மொத்தமுள்ள முடைநாற்றம்
      அத்தனையும் களைந்துவிட்டு
      சுத்தநிறை சுகமனைத்தும்
      சுமந்துவர வேண்டுகின்றோம் !

      எங்களது வாழ்வினிலே
     இடர்கள்வந்து மோதாமல்
      சங்கடங்கள் தீர்த்துவிட
      சந்தோஷத்துடன் வருக
      மங்களங்கள் கொண்டுவந்து
      மனமகிழச் செய்துவிட
      செங்கதிரேன் போலநீயும்
      சிறப்புடனே வந்திடுவாய் !

       ஏழையொடு பணக்காரர்
       இயைந்துமே இருப்பதற்கு
       வேளைவரும் எனவெண்ணி
        விடியலையே வேண்டுகிறோம்
        நாளைவரும் புத்தாண்டே
        நற்சேதியுடன் வந்து
        நல்லவொரு ஆண்டாக
        யாவர்க்கும்  அமைந்துவிடு !

        உலகமெல்லாம் நல்லாட்சி
        ஓங்கிவர வேண்டுகின்றோம்
        நிலவுலகில் சமதர்மம்
        நிலைத்துவிட நினைக்கின்றோம்
        விளைநிலங்கள்  வீணாகப்
        போவதையும் வெறுக்கின்றோம்
         நலமுடனே வளம்பெருக
         நல்லாண்டே வந்திடுவாய் !

        அரசியலார் மனட்சாட்சி
        அறிந்துணர வேண்டுகின்றோம்
        ஆதீனம் அத்தனையும்
        ஆண்டவனை நினைந்திடட்டும்
        நீதித்துறை அத்தனையும்
        நிமிர்ந்துநிற்க வேண்டிடுவோம்
        நிம்மதியைத் தருவதற்கு
        நீவருவாய் புத்தாண்டே !

        உளம்மகிழ வந்திடுவாய்
        உன்வரவு சிறந்திடட்டும்
        மனதிலுறை அத்தனையும்
        வண்ணமுறத் தந்துவிடு
        எண்னமெலாம் இனித்துவிட
        இனியமுகம் கொண்டுநீயும்
        எழிலுடனே வந்திடுவாய்
        எங்களக்கு புத்தாண்டாய் !