தமிழ் சினிமா


தங்கமகன் 
தனுஷிற்கு கண்டிப்பாக ஒரு வெற்றி தேவை என்ற நேரத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் வேலையில்லா பட்டதாரி. தற்போது மீண்டும் இதே கூட்டணி இணைய ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டியது.
தனுஷ், எமி, சமந்தா, கே,எஸ்.ரவிக்குமார், ராதிகா, சதீஸ் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைய வேல்ராஜ் இயக்கியுள்ளார்.
கதைக்களம்
படத்தின் ஆரம்பத்திலேயே கணவன், மனைவியான தனுஷ்சமந்தாமற்றும் தனுஷின் அம்மாவான ராதிகா மிகவும் கஷ்டப்படுவது போல் காட்டப்படுகின்றது. அங்கிருந்து படம் ப்ளாஸ் பேக் செல்கிறது.
அன்பான குடும்பம் அழகான அப்பா, அம்மா, நல்ல நண்பர்கள் என தனுஷின் வாழ்க்கை சந்தோஷமாக செல்கின்றது. இவரின் வாழ்க்கையை மேலும் சந்தோஷப்படுத்த எமி ஜாக்ஸன் வருகிறார். தனுஷிற்கு பார்த்தவுடன் காதல்.
பின் என்ன வழக்கம் போல் எமி செல்லும் இடமெல்லாம் சென்று அவர் மனதில் எப்படியோ இடம்பிடிக்கிறார். எல்லா விஷயத்தையும் தன் அப்பா, நண்பர்களிடம் சொல்லும் தனுஷ் இதை மட்டும் மறைக்கின்றார். இவர்கள் காதலிப்பது சதீஸுக்கு மட்டும் தெரிய மற்றொரு நண்பருக்கு சொல்ல மறுக்கின்றார்.
இதனால் நண்பர்களுக்குள் சண்டை வந்து பிரிய, அதே நேரத்தில் எமி, நமக்கு திருமணமானால், தனியாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் அப்பா, அம்மாவை விட்டு உன்னுடன் தனியாக வர முடியாது என்று தனுஷ் சொல்ல வாக்குவாதம் பெரிதாகி இருவரும் பிரிய நேரிடுகிறது.
இதை தொடர்ந்து அனைத்தையும் மறந்து தனுஷ், சமந்தாவை திருமணம் செய்துக்கொண்டு வாழ்க்கையை புதிதாக ஆரம்பிக்கின்றார். இந்நிலையில் கே.எஸ்.ரவிக்குமாரிடம் அவருடைய உயர் அதிகாரி ரூ 5 கோடி கொடுத்து வைக்கின்றார்.
அவருக்கு மறதி அதிகம் என்பதால் பணத்தை எங்கு வைத்தோம் என்று தெரியாமல் ஒரு கட்டத்தில் நெருக்கடி தாங்காமல் தற்கொலை செய்துக்கொள்கிறார். இதன் பிறகு தனுஷ் பொறுப்புணர்ந்து அந்த பணம் எங்கு சென்றது, தன் அப்பா நல்லவர் அவர் அந்த பணத்தை திருடியிருக்க மாட்டார் என நிரூபிக்க போராடுவதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
தனுஷ் இனியும் தான் ஒரு சிறந்த நடிகர் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஒவ்வொரு அம்மாவும் இப்படி ஒரு பையன் வேண்டும் என்கின்ற அளவிற்கு திரையில் வாழ்கின்றார். அவர் சிரித்தால் ஆடியன்ஸ் அனைவரும் சிரிக்கிறார்கள், அழுதால் அனைவரும் அழுகிறார்கள் அந்த அளவிற்கு தன் திரை ஆளுமையை வளர்த்துள்ளார்.
எமி காதலியாக முதல் பகுதியில் வருகிறார். படத்தின் முதல் பாதி முழுவதும் 3 படத்தையே தூக்கி சாப்பிடும் ரொமான்ஸ் காட்சிகள், அதிலும் அவர் நிறத்திற்கு கூட ஒரு விளக்கம் கொடுத்து, ஆண்ட்ரியா டப்பிங் கொடுத்திருப்பது சூப்பர். இரண்டாம் பாதியில் கதையின் திருப்பத்திற்கு உதவுகிறார்.
சமந்தா, தனுஷின் மனைவியாக கதாபாத்திர பொருத்தம். தன் கணவரின் பெயர் கெடக்கூடாது என்பதற்காக அம்மா வீட்டில் இருந்து வெளியேறும் காட்சியில் இருந்து, தனுஷிற்கு முதல் காதலி இருப்பது தெரிந்தும் ஜாலியாக அரட்டை அடிப்பது என நீ தானே என் பொன் வசந்தம் படத்திற்கு பிறகு ஒரு நல்ல கேரக்டர்.
கே.எஸ்.ரவிக்குமார் இத்தனை அப்பாவியாக அவர் நடித்த எந்த படத்திலும் பார்த்திருக்க மாட்டோம். காமெடி, வில்லன் கலந்து தான் அவர் நடித்த ஒரு சில படங்களிலும் தான் பார்த்திருப்போம். இதில் செம்ம ஸ்கோர் செய்கிறார். ராதிகாவும் அப்பாவி அம்மாவாக தன் கதாபாத்திரத்தை நிறைவாக செய்துள்ளார்.
சதீஸ் கவுண்டர் கொடுப்பதும், கலாய் வாங்குவதும் என லிட்டில் சந்தானமாக வளர்ந்து வருகிறார். இத்தனை சிறப்பு இருந்தும் படத்தின் மிகப்பெரிய மைனஸ் வில்லன் கதாபாத்திரம் தான்.
ஒரு படத்தில் ஹீரோ வெற்றி பெற்றால் அதை நாம் ரசித்து கைத்தட்ட வேண்டும், ஏனெனில் அந்த அளவிற்கு அவருடைய போராட்டம் இருக்க வேண்டும். ஆனால், இதில் வில்லன் மிகவும் அமுல்பேபியாக இருப்பதால், தனுஷ் வெற்றிபெறும் போது ரசிகன் கூட கைத்தட்டவில்லை.
க்ளாப்ஸ்
தனுஷ்-எமி காதல் காட்சிகள், இன்றைய ட்ரண்ட் இளைஞர்களுக்கு செம்ம விருந்து. அதே போல் தனுஷ்-சமந்தா திருமண உறவுகள் நிஜ தம்பதியினர்களே அசந்து போகும் யதார்த்தம். குடும்ப உறவுகள் பற்றி பேசும் காட்சிகள்.
அனிருத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அதிலும் அறிமுக ஒளிப்பதிவாளர் குமரன் செம்ம கலர்புல்லாக காட்டியுள்ளார்.
படத்தின் முதல் பாதி. வில்லன் கதாபாத்திரம் டுவிஸ்ட் அவிழும் காட்சி.
பல்ப்ஸ்
வில்லன் கதாபாத்திரம் வலுவாக இல்லாமல் இரண்டாம் பாதி மிகவும் தடுமாறுகிறது.
தனுஷ் படத்திற்கு இசை என்றாலே அனிருத் புகுந்து விளையாடுவார், ஆனால், இதில் என்னவோ பின்னணி இசையில் சொதப்பியுள்ளார். அதற்காக வேலையில்லா பட்டதாரி இசையை அப்படியேவா போடுவது. சுவாரசியம் இல்லாமல், மெதுவாக நகரும் இரண்டாம் பாதி.
மொத்தத்தில் குடும்ப ரசிகர்கள் மத்தியில் இந்த தங்கமகன் மின்னுவான்.

ரேட்டிங்- 2.5/5    நன்றி cineulagam