.
தென்னிந்திய சினிமாவை கண்டு சில காலங்களாக வட இந்திய சினிமா கொஞ்சம் அஞ்சித் தான் உள்ளது. எந்திரன் படத்தின் மூலம் ஷங்கர் போட்ட விதை, ராஜமௌலியால் மரமாக தற்போது வளர்ந்து நிற்கின்றது. இந்த வரிசையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் அனுஷ்காவின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தான் ருத்ரமாதேவி.
ஏற்கனவே அருந்ததி, பஞ்சமுகி என சோலோ ஹீரோயினாக வெற்றிக்கொடுத்த அனுஷ்கா, இதில் கொஞ்சம் அல்லு அர்ஜுன், ராணா என முன்னணி நடிகர்களுடன் களம் இறங்கியுள்ளார்.
கதைக்களம்
காகத்திய ஆட்சி பல சிற்றரசர்களை அடக்கியது, வயதான அரசனுக்கு குழந்தை பிறக்கின்றது, அந்த குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண்டும், அந்த குழந்தை தான் நம்மை பக்கத்து நாட்டு பகையாளியான தேவகிரி அரசனிடம் இருந்து காப்பாற்றும் என மக்கள் நம்புகின்றனர்.
இதை அரசனின் தம்பிகளான சுமன் மற்றும் ஆதித்யாவும்விரும்பவில்லை. (பெண் குழந்தை பிறந்தால் அதை காரணம் காட்டி நாட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வர துடிக்கும் நய வஞ்சகர்கள்). அவர்கள் நினைத்தது போல், பெண் குழந்தையாக அனுஷ்கா பிறக்கின்றார். இந்த செய்தி கேட்டால், எதிரி நாட்டுக்கு பலம் வந்துவிடும், மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என, ராஜகுருவானபிரகாஷ் ராஜ் பேச்சை கேட்டு பிறந்தது ஆண் என்று பொய் கூறுகிறார்கள்.
அனுஷ்காவை ஒரு ஆணாகவே வளர்க்க, அவரும் வாள் சண்டை, கத்தி சண்டை என ஒரு ஆணுக்கு நிகராக வளர்கிறார், ஒரு கட்டத்தில் தன் பெண்மையை அவர் உணர்ந்தாலும், நாட்டு மக்களின் நலனுக்காக ஆண் என்றே பொய் கூறி வாழ்கிறார்.
ஆனால், ஒரு கட்டத்தில் இந்த உண்மை சொல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் வெளிப்பட, நாட்டு மக்கள் அனுஷ்காவின் ஆட்சியை விரும்பாமல் அவரை நாட்டை விட்டு துரத்துகின்றனர். பகையாளி மன்னனுடன் சுமன், ஆதித்யா மற்றும் சிற்றரசர்கள் சேர்ந்து கொள்கின்றனர். இதன் பின் தேவகிரி நாட்டினர் சிற்றரசர்கள் உதவியுடன் படையெடுக்க, மீண்டும் அனுஷ்கா ருத்ரதாண்டவம் எடுத்து எப்படி நாட்டை மீட்கிறார் என்பதை மிக பிரமாண்டமாக கூறியிருக்கிறது இந்த ருத்ரமாதேவி.
படத்தை பற்றிய அலசல்
தென்னிந்தியா மட்டுமில்லை நாம் முன்பே கூறியது போல் இந்திய சினிமாவிற்கே லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அனுஷ்கா தான், அதிலும் அவர் ஆணாக நடிக்கும் போது உயரம், தோற்றம் என அனைத்திலும் நிஜ ஆண்களுக்கு உண்டாக கம்பீரம், யானை அடக்குதல், வாள் சண்டை என ஹீரோக்களுக்கே சவால் விடும் பாத்திரம்.
படத்தில் மொத்தமே அல்லு அர்ஜுன் 25 நிமிடம் தான் வருகிறார், ஆனால், அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் விசில் சத்தம் பறக்கின்றது. கடைசி வரை அனுஷ்காவை தோற்கடிக்க போராடி கிளைமேக்ஸில் கொடுக்கும் டுவிஸ்ட் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்கின்றது.
படத்தின் பல காட்சிகள் மோஷன் கேப்சர் டெக்னாலஜியில் தான் எடுத்துள்ளனர், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் கோலிவுட்டில் வெளிவந்த கோச்சடையான் போன்று, பல கதைகளை ஜவ்வாக இழுக்காமல் இந்த டெக்னாலஜி உதவியுடன் மிக அழகாக காட்டியுள்ளனர். ஆனால், ஒரு கட்டத்தில் பொம்மை படம் போல் தெரிகிறது.
ராணாவிற்கு அனுஷ்கா நண்பன், காதலன் என தன் கதாபாத்திரத்தை நிறைவாக செய்தாலும், பாகுபலியில் மிரட்டிவிட்டு இதில் ஓரத்தில் நிற்பது வருத்தம் தான். அஜயன் வின்சென்ட் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கின்றது. ராஜா காலத்திற்கு சென்று வந்த அனுபவம். இவர்களை எல்லாம் விட படத்தை தாங்கி நிற்பது அனுஷ்காவை தாண்டி நம்ம ஊர்இளையராஜாவின் இசை தான். பின்னணியின் தான் முன்னணி என்று நிரூபித்து விட்டார்.
க்ளாப்ஸ்
தொடர்ந்து ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் அனுஷ்கா, பெண் என்றாலே திட்டி தீர்க்கும் இன்றைய சினிமா ட்ரண்டிற்கு பெண்களை போற்றும் வசனத்தை தந்த பா.விஜய்க்கு ஒரு சல்யூட்.
எடுத்துக்கொண்ட கதைக்களம், படத்தின் முதல் பாதி, அடுத்தடுத்து சாகச காட்சிகள் நிரம்பி வழிகின்றது.
பல்ப்ஸ்
இரண்டாம் பாதி கொஞ்சம் நீளம், அதிலும் போர்க்காட்சி ஒரே நேர்க்கோட்டில் செல்லாமல் அங்கொன்று, இங்கொன்று என கொஞ்சம் சோதிக்கின்றது.
மொத்தத்தில் இந்த ருத்ரமாதேவி படத்தில் மட்டுமில்லை ரசிகர்களின் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார்.
ரேட்டிங்-3/5
No comments:
Post a Comment