.
பெண்கள் எப்பொழுதும் வீட்டுக்குள் இருந்து குடும்பக் கடமைகளைப்பார்த்தால் போதும் என்றும் - அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்றும் சொல்லப்பட்டு, அவர்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையும் மறுக்கப்பட்ட ஒரு காலம் முன்பிருந்தது.
இயற்கை
எழில் கொஞ்சிய கிழக்கிலங்கை கிராமத்திலிருந்து வல்லரசு இங்கிலாந்து வரையில் பயணித்த பெண்ணிய ஆளுமை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
படைப்பு இலக்கியத்திலும் , பெண்ணிய மனிதஉரிமை செயற்பாட்டிலும் ஆவணப்படத்துறையிலும் மனித நேயப்பணிகளிலும் பங்காற்றிய மருத்துவ தாதியின் வாழ்வும் பணிகளும். முருகபூபதி
சமையல்கட்டு வேலை , பிள்ளைப்பராமரிப்புடன் கணவனின் தேவைகளை
பூர்த்திசெய்யும் இயந்திரமாகவும் பெண்ணின் வாழ்வு முடக்கப்பட்டிருந்த காலம் மலையேறிவிட்டது என்று இன்னமும் சொல்ல முடியாதிருக்கிறது.
இத்தகைய பின்புலத்தில் எமது இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் இயற்கை எழில் கொஞ்சிய அழகிய கிராமத்திலிருந்து - அதேவேளை கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியிருந்தாலும், கூத்துக்கலைகளில் முன்னிலை வகித்த தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரு தாய் மக்களாக வாழ்ந்த அக்கரைப்பற்று கோளாவில் கிராமத்திலிருந்து - பல நாடுகளை தனது ஆளுகைக்குள் கட்டிவைத்திருந்த முடிக்குரிய அரசாட்சி நீடித்த வல்லரசுக்கு புலம்பெயர்ந்து சென்ற சகோதரி இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்களைப்பற்றி நினைக்கும்தோறும் எனக்கு வியப்பு மேலிடுகிறது.
புலம்பெயர் இலக்கியத்தின் முன்னோடியான அவரது எழுத்துக்களை இலங்கையில் 1980 களில் படிக்கநேர்ந்தபொழுது, அவர் பற்றிய எந்த அறிமுகமும் எனக்கு இருக்கவில்லை. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இராஜேஸ்வரி எழுதி, அலை வெளியீடாக வந்திருந்த ஒரு கோடை விடுமுறை நாவல் வெளியீட்டு விமர்சன அரங்கிற்கு சென்றிருந்தேன்.
பெண்ணியவாதி
நிர்மலா, மூத்த எழுத்தாளர் செ.கணேசலிங்கன் உட்பட
சிலர் அங்கு உரையாற்றினார்கள்.
ஆனால், அவர்களின் கருத்துக்களுக்கு ஏற்புரை சொல்ல அந்த மண்டபத்தில் இராஜேஸ்வரி இருக்கவில்லை.
எனினும் அந்நாவல் வெளியீட்டிற்கு பக்கபலமாக இருந்து பதிப்பித்தவரும் தற்பொழுது லண்டனில் வதிபவருமான இலக்கிய ஆர்வலர் பத்மநாப அய்யர் கலந்துகொண்டதாக நினைவிருக்கிறது.
அன்று அந்த நாவலை வாங்கிச்சென்று உடனடியாகவே படித்து முடித்து
நண்பர்களுக்கும் கொடுத்திருந்தேன். தற்பொழுது என்வசம் அந்த நாவல் இல்லை. அதுவும் என்னைப்போன்று எங்கெங்கோ இடம்பெயர்ந்திருக்கலாம். ஆனால், இன்றும் கோடை விடுமுறை லண்டன், அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளுக்கும் வருடாந்தம் வந்துகொண்டிருக்கிறது.
ஓர் ஈழத்தமிழனின் புகலிட வாழ்வுக்கோலத்தை முதன் முதலில் இலக்கியத்தில் பதிவுசெய்த முன்னோடி நாவல் ஒரு கோடை
விடுமுறை. இறுதியில் அந்நாவலின் நாயகன் தனது காரில் சென்று விபத்துக்குள்ளாகி மடிகின்றான். அது தற்கொலையா... விபத்தா .... என்பது
மறைபொருளாகியிருந்தது.
வாழ்வில் மன அழுத்தம் என்பது என்ன என்பதையும் அந்த நாவல் பூடகமாக சித்திரித்திருந்தது. அந்நிலைக்கு இன்று இலங்கையிலும் புகலிட நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கானோர் இலக்காகியிருக்கின்றனர்.
இராஜேஸ்வரியின் வாழ்வையும் பணிகளையும் கவனித்தால் அவர் நான்கு தளங்களில் ஒரேசமயத்தில் இயங்கியிருப்பதை அவதானிக்கலாம்.
படைப்பிலக்கியம், பெண்ணிய மனித உரிமைச்செயற்பாடு,
ஆவணத்திரைப்படம், இவற்றுக்கு மத்தியில் தொழில்முறையில் தேர்ச்சிபெற்ற மருத்துவதாதி. ஒரு பெண் இவ்வாறு நான்கு தளங்களில் இயங்கியவாறு தனது பிள்ளைகளின் பெறுமதியான தாயாகவும் பேரக்குழந்தைகளின் பாசமுள்ள பாட்டியாகவும் தமது வாழ்வைத் தொடர்ந்து வருகிறார்.
இவைகள் மட்டுமல்ல இன்னும் பல விடயங்களும் அவர்குறித்த வியப்பினை என்னுள் வளர்த்திருக்கிறது.
கோளவில் கிராமத்து தமிழ்ப்பாடசாலையில் எட்டாம் வகுப்புவரையும்தான்
தொடக்க காலத்திலிருந்திருக்கிறது. இவரைப்போன்ற பெண்களும், ஊர் மக்களில் 90 சதவீதமானவர்களும் அருகிலிருந்த மீன்பாடும் தோனாட்டை அக்காலப்பகுதியில் சுமார் 18 வருடகாலமாக தரிசிக்காமலே வாழ்ந்திருக்கிறார்கள் என்பது அதிசயம்தான்.
இவருடைய தந்தையார் குழந்தைவேல்தான் இவரது ஆதர்சம். அவர் வைத்தியராகவும் கூத்துக்கட்டும் கலைஞராகவும் பல தலைவர்களின்
வாழ்க்கை வரலாறுகளைப் படித்தவராகவும் விளங்கியவர். அத்துடன் வேளாண்மை வயல்களை பராமரிக்கும் வட்டைவிதானையாராகவும் வாழ்ந்தவர்.
அவரிடமிருந்த கலை ஆர்வம், ஆளுமைப்பண்பு, வாசிப்பு அனுபவம் என்பன சிறுமி இராஜேஸ்வரிக்கு அன்றே இடப்பட்ட பலமான அத்திவாரமாக இருந்திருக்கவேண்டும்.
அவரது கிராம வாழ்க்கை, யாழ்ப்பாணத்தில் பெற்ற தாதியர் பயிற்சி, எழுதத் தொடங்கிய பருவம் - முதல் கவிதை வெளியான வீரகேசரி பத்திரிகையில் தாயார் யாருக்கோ வீட்டுத்தோட்டத்தில்
வளர்ந்த
கீரையை பறித்து சுற்றிக்கொடுத்ததினால் அந்தக்கன்னிப்படைப்பை தொலைத்துவிட்ட சோகம், யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்பு முறையையும் அதன்கொடுமையையும் நேரில் பார்த்து கொதித்தெழுந்த தர்மாவேசம், இடதுசாரி சிந்தனையுள்ள கணவருடன் அவரது நண்பர்கள் மார்க்ஸ், லெனின், ஏங்கல்ஸ் பற்றி உரையாடும்பொழுது , அவர்கள் கொழும்பில் வசிக்கும் கணவரின் நல்ல நண்பர்கள் போலும் என்று நம்பிக்கொண்டிருந்த
அப்பாவித்தனம் - இலண்டனுக்கு புலம்பெயர்ந்த பின்னர் ஈடுபட்ட பெண்ணிய மற்றும் மனித உரிமைச்செயற்பாடுகள், திரைப்படத்துறையில்
முன்னேற எடுத்துக்கொண்ட முயற்சிகள், அரசியல் செயற்பாட்டாளராக மாறியதும் பலரதும் அவதூறுகளை எதிர்கொண்டு அவற்றை வெற்றிகொண்ட ஆளுமை முதலான பல்வேறு விடயங்களையும் அவர் மனம் திறந்து பகிர்ந்துகொண்ட விரிவான நேர்காணலை நண்பர் ஷோபா சக்தி தமது தோழர்களுடன் இணைந்து பதிப்பித்த கனதியான இலக்கியத்தொகுப்பு குவர்னிகாவில் படித்திருக்கின்றேன்.
யாழ்ப்பாணத்தில் நடந்த 41 ஆவது இலக்கியச்சந்திப்பில் இத்தொகுப்பு வெளியிடப்பட்டது பலரும் அறிந்த செய்தியே. ஆனால், இதில் இடம்பெற்றுள்ள ஷோபா சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு இராஜேஸ்வரி வழங்கியிருக்கும் பதில்களில் பல தகவல்கள் எனக்கும் மாற்றவர்களுக்கும் புதியனவே.
நான் அறிந்தவரையில் எமது சமூகம் மட்டுமல்ல, கீழைத்தேய மற்றும்
மத்திய கிழக்கு நாடுகளின் சமூகங்களும் பெண்களை அடக்கியாள்வதில்தான் பெருமை பெற்றன. பெண்கள் பிள்ளை பெறும்
இயந்திரங்களாகவும் சமையல்கட்டுக்குரியவளாகவும் ஆண்களின் தேவைக்கு ஏற்ப போகப்பொருளாகவும் இருந்தால் மாத்திரம் அதுவே பெண்மைக்கு இலக்கணம் என்று கருதிய ஆணாதிக்க சமுதாயத்தில் - ஒரு பெண் துணிந்து கற்று ஆசிரியராக, மருத்துவ தாதியாக, மருத்துவராக வந்துவிட்டால் ஓரளவு
பொறுத்துக்கொள்கிறது. தப்பித்தவறி நாட்டியத்தாரகையாக
மிளிர்ந்தாலும் ஏற்றுக்கொள்கிறது.
ஆனால் - அறிவுஜீவியாக பெண்ணியவாதியாக அதற்கும் மேல் ஆளுமையுள்ள படைப்பாளியாகவோ ஊடாகவியலாளராகவோ மாறிவிட்டால் அவளது பெண்மைக்கே களங்கம் விளைவிக்கும் அளவுக்கு தயங்காமல் அவதூறுகளை அள்ளிச்சொரியும். உயிருக்கும் உலை வைத்துவிடும்.
நானறிந்த பல பெண் படைப்பாளிகள் எதிர்கொண்ட இன்னல்கள் அறிவேன்.
ஸர்மிலா ஸய்யத், தஸ்லீமா நஸ்ரின், அருந்ததி ராய், கமலா தாஸ், வாசந்தி, திலகவதி, தாமரை, மாலதி மைத்ரி, கருக்கு பாமா, லீனா மணிமேகலை.... இவர்களின் வரிசையில் இராஜேஸ்வரி.
அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அவர்கள் படைப்பு இலக்கியத்துறையில் தாக்குப்பிடித்தார்கள்.
பெண்
ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டார்கள். செல்வி (செல்வநிதி) , ரஜினி
திரணகம, இசைப்பிரியா ஆகியோர் கொல்லப்பட்டார்கள்.
இராஜேஸ்வரி தமது கதைகளில் பெண்களின் உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கிய பெண்ணியவாதி. அத்துடன் எழுத்துப்போராளி. எழுதுவதுடன் தமது பணி ஓய்ந்துவிட்டதாக கருதாமல் ஒரு செயற்பாட்டாளராகவே (Activist) மாறியவர்.
இந்த Activist களினால் இவர்களுக்கும் கஷ்டம், மற்றவர்களுக்கும் கஷ்டம்தான் என்று ஒரு தடவை எழுத்தாளர் அசோகமித்திரன் குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கனவே நிம்மதியாகவிருந்த அக்கரைப்பற்று இனமோதல்களினால் உருக்குலைந்த அவலம் நன்கறிந்தவர் இராஜேஸ்வரி. தமது ஒரு உடன்பிறப்பை ஆயுதப்படைகளிடம் பறிகொடுத்தவர். அந்தத்துயரத்தால் சடுதியாக மரணித்த தாயாரின் இழப்பை சந்தித்தவர். மற்றும் ஒரு தம்பியான விமல் குழந்தைவேலை ஆயுதப் படை கைதுசெய்து பின்னர் விட்டது.
(விமலும் படைப்பிலக்கியாவதி. நான்கு சிறுகதைத்தொகுதிகளையும் வெள்ளாவி, கசகறணம் முதலான நாவல்களும் எழுதியிருப்பவர்.)
இராஜேஸ்வரி, இலண்டன் வாழ்க்கையில் சுகபோகம் அனுபவிக்காமல் எமது மக்களின் குரலாக இயங்கினார். இலங்கையில்
நிகழ்ந்த இனவாத வன்செயல்களை அம்பலப்படுத்தி - மூவின மக்களின் ஒற்றுமையையும் வலியுறுத்தி இங்கிலாந்து அரசியல் தலைவர்கள் முதல் மனித உரிமைச்
செயற்பாட்டாளர் வரையில் தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகித்தவர். இலங்கையில் மனித அவலங்களை சித்திரிக்கும் ஆவணப்படங்கள் இயக்கினார். தமிழகத்தில் தஞ்சமடைந்த ஈழத்து அகதிகளின் முகாம்களுக்குச்சென்று படங்களுடன் திரும்பி லண்டனில் கண்காட்சி வைத்தார்.
கருத்தரங்குகள், கண்டன ஊர்வலங்களில் பங்கேற்றார்.
இலங்கையில் நீடித்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இவர் இயக்கிய ஆவணப்படத்தை, இன்று முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தப்பேரழிவை அம்பலப்படுத்திய செனல் 4 தொலைக்காட்சி அன்று இவரது அந்த ஆவணப்படத்தை நிராகரித்திருக்கிறது.
இலங்கையில் நீடித்த போர் எமது தமிழ் மக்களையும் தாயகத்தையும்
இறுதியில் எங்குகொண்டுசென்று நிறுத்தும் என்பதை அறிந்துவைத்திருந்த தீர்க்கதரிசி அவர். அதனால் அன்டன் பாலசிங்கம் முதல் இலங்கை அரசுத்தலைவர்கள் வரையில் அவர் தனித்தும் பலருடனும் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தார்.
இராஜேஸ்வரி, தமது இலக்கியப்படைப்புகள் திரைப்படத்துறை முதலானவற்றில் மாத்திரம் முழுமையாக கவனம் செலுத்தியிருந்தால் எமது தமிழ் சமுதாயத்திற்கு ஒரு அபர்ணா சென்னோ, ஒரு மீரா நாயரோ, ஒரு தீபா மேத்தாவோ கிடைத்திருப்பார்.
ஆனால் , அவர் தமது பணிகளை எமது தேசத்து பாதிக்கப்பட்ட மக்கள்
பக்கம், குறிப்பாக பெண்கள் பக்கம் தொடர்ந்தார். உண்மையான படைப்பாளி - பத்திரிகையாளர் எப்பொழுதும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம்தான் நிற்பார். அதற்கு சிறந்த முன்னுதாரணம் இராஜேஸ்வரி.
தமிழ்நாட்டில் மூத்த இலக்கிய விமர்சகர் கோவை ஞானி, ராஜம்கிருஷ்ணன், பாலுமகேந்திரா, சுஜாதா உட்பட பலருடன் ஆரோக்கியமான நட்புறவைப்பேணியவர்.
ஜெயகாந்தனுடன் கருத்து ரீதியாக மோதியிருப்பவர்.
திரைப்படத்துறையில் இவருக்கிருந்த ஆர்வத்தை அறிந்து இயக்குநர்
ராஜீவ் மேனனிடம் இவரை அனுப்பினார் சுஜாதா. ராஜீவ் மேனன், சங்கர் முதலான பல இயக்குநர்களின் படங்களுக்கு வசனம் எழுதியவர் சுஜாதா.
ஆயினும் இராஜேஸ்வரியின் வாழ்வில் திரைப்படத்துறையைவிட பாதிக்கப்பட்ட மக்களின் துயரமே அதிகம் தாக்கத்தை செலுத்தியது. அதனால்
தமது எழுத்தையும் குரலையும் செயற்பாடுகளையும் இம்மக்கள்
பக்கமே திசை திருப்பினார்.
அமைதியாக இயற்கை எழில் கொஞ்சும் தோற்றத்துடன் துலங்கிய ஒரு கிராமத்தின் சராசரிப் பெண்ணின் கனவுகள், பனியில் மூழ்கும் தேசம்சென்ற பின்னரும் தொடர்ந்தன. அவற்றுள் எத்தனை
நனவாகின...? எத்தனை நிராசையாகின...? என்பதை அவரது மனச்சாட்சியிடம்தான் கேட்க முடியும்.
இராஜேஸ்வரி ஒரு கலகக்குரல். துணிவுடன் எதனையும் எதிர்கொள்ளும்
திராணியுள்ள ஆளுமை. ஆனால், அவருடன் பழகினால்
இந்தக்குழந்தையிடமா இவ்வளவு தர்மாவேசம் என்பது ஆச்சரியமாக இருக்கும். அவரது எளிமை, தன்னம்பிக்கை, தளராத முயற்சி
என்பன முன்மாதிரியானவை.
70 வயதை கடந்துவிட்ட வெங்கட்சாமிநாதன், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், தெணியான், நுஃமான், மௌனகுரு, கதிர் பாலசுந்தரம், உட்பட பலர் தொடர்ந்தும் எழுதிவருகிறார்கள்.
அவர்களின் வரிசையில் இராஜேஸ்வரியும் தன் பணி தொடருகின்றார்.
---0--
letchumananm@gmail.com
No comments:
Post a Comment