டேவிட் ஐயா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

.

டேவிட் ஐயா மறைந்து விட்டார் என்ற செய்தி மனதில் ஊசிமுனைகளால் கீறி விட்டது போன்ற உணர்வை தந்தது . இயக்கங்களின் ஊற்றுவாயாக இருந்து ஈழ விடுதலை இயக்கங்கள் உருவாக அறிந்தோஅறியாமலோ உதவிய மனிதர். வளர்த்தகடா மார்பில் பாய்ந்த கதையாக இயக்கங்களே அவரின்உயிருக்கு கெடு வைத்தபோதும் உறுதியாக நின்று எதிர்க்குரலை வைத்த நல்ல மனம்படைத்தவர். அவரோடு வாழ்ந்த பழகிய காலங்கள் இன்றும் பசுமரத்தாணிபோல் நெஞ்சில் நிறைந்து நிற்கிறது. தனது உழைப்பையும் பணத்தையும் மக்களுக்காக செலவு செய்துவிட்டு கடைசிக் காலத்தில் தனது வாழ்க்கைக்காக சிரமபட்டார். நினைத்திருந்தால் எப்படிஎல்லாமோ வாழ்ந்திருக்கலாம் அவர் அதை விரும்பாமலேயே வாழ்ந்துமுடித்துவிட்டார். அந்தமனிதனுக்கு தமிழ்முரசின் கண்ணீர் அஞ்சலிகள் .


ஈழத்தமிழினம் மறந்து போகக் கூடாத இன்னொரு நாட்டுப்பற்றாளர் டேவிட் ஐயா அவர்களை நேற்றைய தினம் இழந்து விட்டோம். தன்னுடைய வாழ்வின் கடைசிப் புள்ளியை ஆரம்பித்த இடத்திலேயே நிறுத்தி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்.
டேவிட் ஐயாவைச் சந்தித்தது குறித்து நண்பர் சயந்தன் சில ஆண்டுகளுக்கு முன்னர் பதிவொன்றை எழுதியபோதும்,  ஆனந்த விகடனில் அவரை நண்பர் அருள் எழிலன் பேட்டி எடுத்த போதுமே இன்னும் விரிவாக அவரைப் பற்றி அறிந்து கொண்டேன். என்றாவது ஒரு நாள் அவரைச் சந்திக்கும் வாய்ப்பும் இருக்கும் என்று நினைத்திருந்தேன். 
டேவிட் ஐயாவுக்கான சம்பிரதாய பூர்வமான பதிவாக அன்றி, ஆவண நோக்கில் அவர் முன்னர் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியை நினைவுப்பகிர்வாக்குகிறேன்.


888888888888888888888888888888888888888888888888888888888888888

டுங்கும் விரல்களால் ஒரு இட்லி யைக்கூட அவரால் பிய்த்து உண்ண முடியவில்லை. அதிகபட்சம் ஓர் இட்லி அல்லது பாதி தோசைதான் அவருடைய உணவு.
ஒழுங்கு செய்யப்படாமல் கலைந்துகிடக்கும் நூல்கள், ஒரு தண்ணீர் கேன், பழைய கட்டில் - இவைதான் 90 வயது டேவிட் ஐயாவின் வசிப்பிடத்தை அலங்கரிக்கும் பொருட்கள்.
யார் இந்த டேவிட்?
''என்னை எல்லோரும் 'டேவிட் ஐயா’ என்றுதான் சொல்வார்கள். என் பெயர் சாலமோன் அருளானந்தம் டேவிட். இலங்கை அரசின் பயங்கரவாதப் பிரிவு போலீஸிலும், இந்தியாவிலும் இந்த 90 வயதுக் கிழவனின் பெயரை இப்படித்தானப்பா பதிந்திருக்கிறேன்!''  என்று மெலிதாகச் சிரிக்கும் டேவிட் ஐயா, தன் அந்திமக் காலத்தை யாருமற்ற தனிமையோடு சென்னையில் கழிக்கிறார்.
''இலங்கையின் கரம்பனில் 1924-ம் ஆண்டு பிறந்தேன். ஆணும் பெண்ணுமாக நாங்கள் ஆறு பேர். சிறு வயதிலிருந்தே ஓவியங்கள் கீறுவதில் ஆர்வம். மிட்டாய் டப்பாவில் இருக்கும் படங்களை, பெரிய கட்டடங்களை எல்லாம் கீறுவேன். அந்தப் பிரியமோ என்னவோ, ஒருவழியாக டிராஃப்ட்ஸ்மேன்ஷிப் (கட்டட வரைவியலாளர்) படிப்பை முடித்து  'ஆர்க்கிடெக்ட்’ ஆனேன். அழகான பூக்களையும் பறவைகளையும் வரைவதுதான் எனது விருப்பமாக இருந்தது!'' என்று  குழந்தையைப்போலப் பேசும் டேவிட் ஐயா, இலங்கைப் பொதுப் பணித் துறையில் கட்டடக் கலைஞராகப் பணி செய்தவர். மேற்படிப்புக்காக 50-களில் ஆஸ்திரேலியா சென்று, நைஜீரியா, கென்யா உள்ளிட்ட நாடுகளில் நகர வடிவமைப்பாளராகப் பணியாற்றியவர். 


''மாதம் ஒன்றுக்கு சுமாராக 50,000 ரூபாய் வரை ஊதியம் கிடைத்தது. 60-களில் இது பெரிய பணம். கென்யாவின் மும்பாஸாவில் ஒரு வாசகச் சாலை இருந்தது. அங்குதான் எனக்கு காந்தியடிகளின் அறிமுகம் கிடைத்தது. எனது சொந்த தேசத்தின் இனவெறியைப் புரிந்துகொள்ள, காந்தியின் எழுத்துக்கள் எனக்கு உதவின. ஒரு பக்கம் தாயகத்தில் மக்களின் துயரமும், காந்தியை வாசித்த உத்வேகமும் என்னை வேலையைத் துறந்துவிட்டு ஈழத்துக்குச் செல்லத் தூண்டியது. 70-களின் தொடக்கத்தில் நான் ஈழத்துக்கு வந்தேன். கல்வியும் விவசாய உற்பத்தியுமே சுயமான பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் என்பதால், நானும் லண்டனில் இருந்த புகழ்பெற்ற மருத்துவர் ராஜசுந்தரமும் 'காந்தியம்’ என்ற அமைப்பைத் தொடங்கினோம். அவரும் லண்டனைவிட்டு வவுனியாவுக்கு வந்தார்.
மலையக மக்களின் கல்வியில் பெரும்பங்காற்றியது 'காந்தியம்’ அமைப்பு. தொடங்கிய மிகக் குறுகிய காலத்திலேயே 'காந்தியம்’ அமைப்பு வளர வளர, அரசியல் சூழலில் ஆயுதப் போராட்டத்தின் வீச்சும் இளைஞர்களிடம் வேகம் பெற, எங்களின் கல்விப் பண்ணைக்கு பல போராளிகள் வந்து செல்லத் தொடங்கினர். இலங்கை அரசின் பார்வை, எங்கள் மீது விழுந்தது.
இலங்கையில் ஆயுதப் போராட்டம் வேர்விட்டபோது, தந்தை செல்வாவின் அஹிம்சைப் போராட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கையும் ஆர்வமும் இருந்தது. அப்போது 'சந்ததியார்’ என்றொருவர் எங்கள் பண்ணைக்கு வருவார். அவர் 'பிளாட்’ அமைப்பின் முக்கியப் பிரமுகராக இருந்தார். சில கட்டுரைகளைக் கொடுத்து மொழியாக்கம் செய்யச் சொல்வார். நானும் செய்து கொடுப்பேன். அவருடன் ஆயுதப் போராட்டம் பற்றி விவாதிப்பேன். 
போராளிக் குழுக்கள் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது எங்களின் 'காந்தியம்’ அமைப்பை, பயங்கரவாத அமைப்பு என்று இலங்கை அரசு தடைசெய்தது. 1983 ஏப்ரலில் நானும் ராஜசுந்தரமும் கைதாகி 'நான்காவது மாடி’ என்ற சித்ரவதை முகாமுக்குக்  கொண்டு செல்லப்பட்டு, பின்னர் வெலிக்கடை சிறையில் அடைபட்டோம். அங்கே ஏராளமான போராளி கள் ஏற்கெனவே அடைபட்டு இருந்தார்கள். முக்கியமான பல பிரமுகர்கள், மேல் மாடியில் வைக்கப்பட்டு இருந்தனர். அப்போதுதான் அந்தப் பயங்கரம் நடந்தது. ஒரு ஜூலை 25-ம் தேதி அங்கு அடைக்கப்பட்டிருந்த 35 தமிழ் கைதிகள் சிங்களக் கைதிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்.
உயிர் தப்பியிருந்த நாங்கள், எங்களை வேறு சிறைக்கு மாற்றக் கேட்டோம். ஆனால், இலங்கை அரசு காது கொடுக்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்து சிறைக்கதவுகள் திறந்துவிடப்பட்டு மீண்டும் தாக்கப்பட்டோம். அதில் 18 பேர் வரை கொல்லப்பட்டார்கள். டாக்டர் ராஜசுந்தரம் நன்றாக சிங்களம் பேசுவார். அவர் தாக்க வந்தவர்களிடம், 'எங்களை ஏனப்பா தாக்குகின்றீர்கள்... நமக்குள் என்ன பிரச்னை?’ என்றுதான் கேட்டார். அவரது தலை பிளக்கப்பட்டு தரையில் விழுந்து இறந்தார். ஒரு கம்பிக்குள் அடைபட்டிருந்த நாங்கள் இதை வேடிக்கை பார்த்தோம். ஜெகன், குட்டிமணி, தங்கதுரை உட்பட முக்கியப் பிரமுகர்கள் 53 பேர் அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு, மிச்சம் இருந்தவர்களை மட்டக்களப்பு சிறைக்கு மாற்றினார்கள். அங்கே சில மாதங்கள் இருந்தோம்.
அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. 'பிளாட்’ அமைப்பு மட்டக்களப்பு சிறையை உடைத்து எங்களை விடுவித்தார்கள். நாங்கள் காட்டையும் கடலையும் கடந்து, உடுத்திய உடையோடு இந்தியாவுக்கு வந்தோம்.
தமிழகம் வந்த புதிதில் நல்ல மரியாதை இருந்தது. என்னை மீட்டவர்கள் 'பிளாட்’ அமைப்பினர் என்பதால், நான் அவர்களுடன் வேலை செய்தேன். சந்ததியாரும் சென்னையில்தான் இருந்தார். நான் தங்கியிருந்த இடத்துக்கு அடிக்கடி வந்து போவார். ஒரு கட்டத்தில் 'பிளாட்’ தலைவர் உமா மகேஸ்வரனோடு சந்ததியாரும் நானும் முரண்பட்டோம். அமைப்பிலிருந்து விலகி சுதந்திரமாக இருக்க விரும்புவதாகக் கூறி வெளியேறினேன். திடீரென்று ஒருநாள் சந்ததியார் காணாமல் போனார். அவருக்கு என்ன நடந்தது என்று இன்று வரை எனக்குத் தெரியாது. ஆனால், ஊகிக்க முடிந்தது!
தாயக விடுதலைக்காக எந்த அமைப்பை நம்பி இளைஞர்கள் வந்தார்களோ, அந்த அமைப்புகளின் தலைமைகளாலேயே இளைஞர்கள் வேட்டையாடப்பட்டார்கள். இதில் அருவருப்படைந்து அன்றைக்கு ஒதுங்கியவன்தான் நான். அதன் பின்னர் எந்த ஓர் அமைப்பையும் நான் ஆதரிக்கவில்லை. அதேநேரம் சிங்களப் பேரினவாதிகளுக்கு எதிராகவும், ஈழ மக்களின் விடுதலைக்காகவும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தேன்!'' எனும் டேவிட், Tamil Eelam Freedom Struggle’  உள்ளிட்ட சில நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார்.
''இதோ தமிழகம் வந்து 30 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஓர் ஆற்றில் நீந்துவதைப்போல நீந்தித்தான் மறுகரை சேர்ந்தேன். ஆரம்பத்தில் ஆங்கில வகுப்பு எடுத்து அதில் வரும் வருவாயைக்கொண்டு வாழ்ந்தேன். ஆனால், இப்போதைய இளைய தலைமுறையுடன் எனக்கு சரிவரலை. அதான் தனியா வந்துட்டேன். இப்போ வெறுமை மட்டும்தான் எஞ்சியிருக்கு. இப்போது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை போலீஸிடம் பதிய வேண்டும். எங்கு தங்குகிறேன் என்ற விவரத்தை போலீஸுக்குக் கொடுக்க வேண்டும்.
90 வயதைத் தொட்டாலும், என்னால் நடக்க முடியாவிட்டாலும் நானும் ஒரு பயங்கரவாதியாகவே இங்கே பார்க்கப்படுகிறேன்.'' எனும் டேவிட் ஐயாவின் ஒரே கவலை, தனது 1,500 நூல்களை தனக்குப் பிறகும் பத்திரப்படுத்த வேண்டும் என்பதுதான்!


பேட்டி: டி.அருள் எழிலன், ஓவியம்: ஸ்யாம், படம்: கே.ராஜசேகரன்

No comments: