.
திருவிழா ஆரம்பமாகிவிட்டது.
இனி உற்சவமூர்த்திகள்
உற்சாகமாக வலம் வருவார்கள்.
பக்தர்களும் 'அடியார்' களும் உற்சவமூர்த்திகளைத் தேடி ஓடிவருவார்கள்.
கலகலப்புக்கும், பரபரப்புக்கும், பதட்டத்திற்கும் இனி குறைவிருக்காது.
கொடிகள் , கோபுரங்களில், கட்டிடங்களில், மரங்களில், மின்கம்பங்களில், வீடுகளில், வாகனங்களில் வண்ணம் வண்ணமாக
ஏறி காற்றில் அசைந்து இனம்காண்பிக்கும்.
பச்சை, நீலம், சிவப்பு. இப்படி வர்ணங்களில் அவை பட்டொளி
வீசும்.
ஆனால், கறுப்பு,
வெள்ளைக் கொடிகள் வடக்கிலும் கிழக்கிலும் யுத்தம்புரியச்சென்று மரணித்து பரலோகம் சென்றவர்களின் இல்லங்களில் மாத்திரம் சோகத்தை பறைசாற்றிக்கொண்டு காற்றில் அசையும்.
உற்சவமூர்த்திகள் வண்ணப்படங்களில் சுவர்களில் அலங்கரிப்பர். வானொலிகளில் குரல் எழுப்புவர். தொலைக்
காட்சிகளில் தரிசனம் தருவர். பத்திரிகைகளில் கைகூப்பியும்,
கையசைத்தும் காட்சியளிப்பர்.
புல்லடிகளுக்குப் பக்கத்திலிருக்கும் உருவங்களுக்கு மரியாதை பிறக்கும்.
'ஸ்ரீ
ஜயவர்தனபுர '
பக்கம் சென்று வராதவர்கள் - மக்கள்
பக்கம் செல்லாமலேயே 'ஆசனங்களில்
' அமர்வதற்கு ஆசைப்படுவர்.
திருவிழா களைகட்டத் தொடங்கியிருப்பதனால், ' தேங்காய்கள் ' உடைக்கப்பட்டு எறிந்து சிதறப்படும்.
கற்பூரம் கொளுத்தப்பட்டு, தீபாராதணைகள்
காண்பிக்கப்படும்.
யாககுண்டம்
வளர்க்கப்பட்டு, நெய்யிலும்
தேங்காய் எண்ணெய்யிலும் அவை ஓங்காரமாக
சுவாலை எழுப்பும்.
தேங்காய், கற்பூரம்,
யாககுண்டம், நெய், தேங்காய்
எண்ணெய்.
முதியான்சலாகே லீலானந்தாவின் இந்தச்சிறிய ஓலைக்குடிலின் வாசலில் படிக்கல்லாக அமர்ந்துகொண்டு நான் குறிப்பிடும்
பெயர்களுக்கு வேறு விதமாக அர்த்தம் கற்பித்துக்கொள்ளுங்கள்.
தேங்காய் - வெடிகுண்டு
கற்பூரம் - நெருப்பு
யாககுண்டம் - தீ வைப்பு
நெய் - பெற்றோல்
தேங்காய் எண்ணெய் - அசிட்
திருவிழா கலகலப்புடனும் பரபரப்புடனும்,
பதட்டத்துடனும் நடந்து முடிந்து உற்சவமூர்த்திகள்
வலம் முடித்து, ஆசனங்களில் அமரவேண்டுமாயின், ஏற்கனவே
அமர்ந்திருப்பவர்கள் தூக்கி எறியப்படவேண்டுமாயின் மேற் சொன்ன ஐந்தும் தேவை. இன்றைய வெற்றிக்கு இதுதான் தேவையா...?
அன்று ' பஞ்சமா பலவேகய ' கோஷத்தை அவர் பிரகடனப்படுத்தியதும் நானிருந்த மைதானத்தில்தான்.
பஞ்சமா பலவேகய பிரகடனம் அவருக்கு வெற்றியைக் குவித்தது. அன்று இதன் அர்த்தமே
வேறு.
தொழிலாளர்கள்,
விவசாயிகள், ஆசிரியர்கள்,
வைத்தியர்கள், பிக்குகள்.
இந்த ஐந்திலும்
ஐந்தாவது பலவேகயவின் பிரதிநிதி ஒருவரால் அவர் - அமரத்துவம் எய்தியதும், அஞ்சலி உரைகள் இந்த
மைதானத்தில் ஒலித்தபோதும் நான் மௌனமாக
கேட்டுக்கொண்டிருந்தேன்.
'
அய்யா' போனார்,
'அம்மா' வந்தார்கள், அம்மாவால் முடியாத கலத்தில் 'மகளும்' வந்தார்கள்.
இடைப்பட்ட காலத்தில் மற்றவர்களும் வந்து போனார்கள்.
அமரத்துவம் அடைந்தவர்கள் ' அமரர்' உலகில் அமர்ந்து
- விட்ட குறை தொட்டகுறை அலசுவார்களா...?
இப்போது
நான் லீலானந்தா என்ற கூலித்தொழிலாளியின்
சிறு குடிலில் வாசல் படிக்கல்லாக அமர்ந்து கடந்த காலத்தை
அசைபோடுகின்றேன்.
அந்த மைதானத்தில்
மரங்களோ, பூங்கன்றுகளோ, பூக்களோ இல்லாது போனாலும் அதனை ' பார்க் ' என்றுதான் எல்லோரும் அழைத்தார்கள்.
மைதானத்தின்
தென் திசை மூலையில்
அமையப்பெற்ற கற்களினாலும் மண், சீமெந்தினாலும்
கட்டப்பட்ட மேடையில், பேச்சாளர்கள், பக்தர்கள், 'அடியார்' கள், காவலர்கள், தலைவர்களின்
மெய்ப்பாதுகாவலர்கள் அனைவரும் தம் பாதம்
பதித்து ஏறிக்செல்லும் படிக்கல்லாக
கொங்கிறீட் கலவையினால் ஆக்கப்பட்டு நெடுங்காலமாக அங்கு குடியிருந்தேன்.
உள்ளுர் நகரசபையின் பொறுப்பில் - கண்காணிப்பிலிருந்த அந்த மேடைக்கு
அவர்கள் அனைவரும் ஏறி இறங்க
துணை உறுப்பாக தரையில் வாழ்ந்தேன்.
காலத்துக்கு காலம் என்னைச்சுற்றி
மக்கள் அலை அலையாகத் திரளுவார்கள். பலர் தத்தம்
தலைகளில் தொப்பிகள் அணிந்திருப்பார்கள்.
பச்சை, நீலம், சிவப்பு
இந்த நிறத்தொப்பிகளையே
அங்கு அடிக்கடி நான் பார்த்திருக்கிறேன்.
தொப்பிகள் அணிந்த தலைகளும் சில சமயங்களில்
மாறியிருக்கும். ஆனால் தொப்பிகளின்
நிறங்கள் மாத்திரம் மாறியிருக்காது.
'ஜயவேவா
'
கோஷம் விண்ணை முட்டும்.
தலைவர்கள் வழக்கமாகப் பிந்தித்தான்
வருவார்கள்.
பட்டாஸ் வெடியோசை, ஜயவேவா கோஷத்துடன்
போட்டி போட்டுக்கொண்டு மேலே எழும்.
உற்சவ காலங்கள்
தொடங்கும்போது என்னைச்சுற்றி வளர்ந்து எனக்கு குளிர்மையூட்டிய பசும் புற்கள்
வெட்டி எறியப்படும். லீலானந்தாவும் இதர கூலித்தொழிலாளருடன்
சேர்ந்து நகர சபையின் பணிப்பின்பேரில்
மைதானத்தை சுத்தமாக்குவான்.
உற்வகால கூட்டங்களை வந்து ரசிப்பான். சிரிப்பான்,
ஆத்திரப்படுவான்.
இரவிலே மனைவி பொடிமெனிக்கேயிடம்,
தான் மைதானக் கூட்டத்தில் கண்டதைக் கேட்டதைக் கதைகதையாகச் சொல்வான்.
பச்சைக்கொடிகள் பறந்த மேடையில்
நடமாடியவர்களும் பேசியவர்களும் மற்றுமொரு உற்சவ காலத்தில்
நீலக்கொடிகள் கட்டப்பட்ட மேடையில் தோன்றியதையும் மனைவியிடம் சிரித்துச் சிரித்து சொல்லியிருக்கிறான்.
அதேபோன்று ஒரு காலத்தில், நீலக்கொடிகளின்
மேடையில் பேசியவர்கள், பிறதொரு காலத்தில்
சிவப்புக்கொடிகளின் கீழே அமர்ந்திருந்ததையும் வேடிக்கையோடு பார்த்து ரசித்து, பொடிமெனிக்கேயிடம், " ஆட்கள் மாறுகிறார்கள். கொள்கைகள் மாறுகின்றனவா என்பது தெரியவில்லை. ஆனால் அவர்கள் கம்பீரமாக ஏறிநின்று பேசும் அந்த மேடை மட்டும்
மாறவே இல்லை." என்பான்.
அன்றாடங்காய்ச்சியான அவனுடைய சிறிய குடும்பத்திற்கு
மாத வருமானம் போதவில்லை. நகரசபை வழங்கும் மாத ஊதியம்
அவனது குடும்பத்தை வாழவைக்க போதுமானதாய் இருக்கவில்லை.
அரிசிக்கூப்பனையும் உணவு முத்திரைகளையும்
பார்த்தவன் அவன். மாறி
மாறி பதவிக்கு வந்த அரசுகளையும்
பார்த்திருக்கிறான்.
ஆனால், அவனுடைய
வாழ்க்கைத்தரம் மாத்திரம் மாறவே இல்லை.
பொடிமெனிக்கே அப்பம் சுட்டு
விற்பாள். அவளுடைய
அப்பம் அந்தச்சிறிய ஊரில் மிகவும்
பிரசித்தம்.
ஒரு காலத்தில் அந்தக்குடிலில் அப்பம் வாங்கிச்சாப்பிட்டவர்கள்கூட
இன்று பிரகாசிக்கத்தொடங்கிவிட்டார்கள். தேர்தல்களில்
ஆசனங்களை பிடித்திருக்கிறார்கள். இழந்திருக்கிறார்கள்.
" எங்கள்
வீட்டில் அப்பம் வாங்கிச்
சாப்பிட்டவர் " - என்ற பெருமையைத் தவிர வேறு ஒன்றும்
லீலானந்தாவுக்கும் பொடிமெனிக்கேயுக்கும் கிடைக்கவில்லை.
மாதிரிக்கிராம வீடமைப்புத்திட்டத்திலும் அவன் குடும்பத்திற்கு
ஒரு வீடு
கிடைக்கவில்லை. பிள்ளைகள் ஆரம்பப் பாடசாலையோடு கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள்.
ஒருவன் பஸ் நிலையத்தில்
சுவீப் டிக்கட் விற்கிறான். இன்னுமொருவன் சந்தையில்
செவ்விளநீர், தேங்காய்
விற்கிறான். மகள் இன்றும் தாய்க்கு அப்பம் சுடுவதில்
ஒத்தாசையாக இருக்கிறாள்.
தாய் ஓய்வு எடுத்தால்
அந்தப்பணியை மகள் தொடர்வாள்.
அரசியல் பரம்பரைத் தொழிலாகியிருக்கும்போது அப்பம் சுடுவது
மாத்திரம் பரம்பரைத் தொழிலாகக்கூடாது என்று சட்டம்
ஏதும் உண்டா...?
இன்று நான்
மிகுந்த பெருமிதத்துடன் இந்தச் சிறிய குடிலின் வாசலில் படிக்கல்லாக அமர்ந்திருக்கிறேன்.
லீலானந்தாவும் பொடிமெனிக்கேயும் இவர்களின் பிள்ளைகளும் அப்பம் வாங்க வருபவர்களும்தான் தற்பொழுது என்னை மிதித்து
உள்ளே சென்று வருகிறார்கள்.
இது எனக்கு
மிகவும் பெருமிதமாக இருக்கிறது.
மக்களின் வரிப்பணத்தில் சொகுசு வாழ்க்கை
வாழ்ந்தவர்கள்தான் முன்னர் என்னை மிதித்து
மேடையேறினார்கள். வாக்குறுதிகள்
தந்தார்கள். பின்னர் அவற்றை காற்றிலே பறக்கவிட்டார்கள்.
அவ்வாறு பாவங்களை சுமந்தவர்களின் பாதங்களை நான் ஒரு
காலத்தில் அந்த மேடையருகே அமர்ந்து சுமந்திருக்கிறேன். அதற்காக வெட்கப்பட்டிருக்கிறேன்.
அந்த மைதானத்தில்
எதிர்பாராதவிதமாக ஒரு கடைத்
தொகுதி நிர்மாணிக்கப்படவிருந்தவேளையில் மேடை தகர்க்கப்பட்டது.
கற்கள் குவியலாக ஒரு மூலையில்
அப்புறப்படுத்தப்பட்டது.
அங்கு வேலை
செய்துகொண்டிருந்த லீலானந்தாவின் கண்களில் நான் தென்பட்டேன்.
மழைபெய்து சிறு வெள்ளம்
வரும் காலங்களில் லீலானந்தாவின் சிறு குடிலின் முற்றத்தில் ஓடவழியின்றி தங்கிவிடும் தண்ணீர் உள்ளே புகுந்து தஞ்சமடைந்து அடைக்கலம் கேட்கும்.
குடிலின் மண்தரை சகதியாகிவிடும்.
அவனுக்கு ஒரு யோசனை
தோன்றியிருக்கவேண்டும்.
வாசலில் என்னைக் கொண்டுபோய் போட்டால் சிறு வெள்ளத்திற்கு
அணை அமைத்ததாகியும் விடும்.
மழைக் காலங்களில் மண்தரையில் சகதி பிறக்காமல் தடுத்துவிடும் என்று அவன்
நம்பினான்.
இன்று நான்
அவன் குடிலின் காவல் அரண்.
"
தனக்கு நாடும் வேண்டாம்,
அரச பதவியும் வேண்டாம், ஆடம்பர அரண்மனையும் வேண்டாம்,
காட்டிலே தவம் இருந்து
மக்களுக்கு அன்பு மார்க்கத்தைப் போதிக்கப்போகிறேன் " என்று முற்றும்
துறந்த முனிவனாக காவி அணிந்து
துறவறம் பூண்டு போதி மரத்தடியில் நிர்வாணம் எய்தியவர் - லீலானந்தாவின் இக்குடிலின் தென்னோலைச் சுவரில் வர்ணப்படமாக காட்சியளித்து கண்களை மூடி தியானத்தில்
ஆழ்ந்திருக்கிறார்.
அவரைப்பின்பற்றி - அவர்
வழியில் அன்பு மார்க்கம்
போதிக்க வேண்டியவர்கள், புனித சந்நிதானத்திலே அமர்ந்து தானம் பெற்று
தவ வாழ்வு வாழ வேண்டியவர்கள்கூட - முன்னர்
என்னை தமது பாதங்களினால் முத்தமிட்டு அந்த மேடையில்
ஏறி முழங்கினார்கள்.
இவர்களும் பராபட்சமின்றி செயற்பட்டார்கள்.
நீலம்,
பச்சை, சிவப்பு என்று நிறபேதம்
பார்க்கவில்லை. மஞ்சள்
அங்கி அணிந்திருந்தாலும் நிலம், பச்சை, சிவப்பு
நிறங்களில் இவர்களுக்கும் மோகம்
இருந்தது.
நண்பகல் பன்னிரண்டு மணிக்கு மேல் விழுங்கி
உண்ணும் ஆகாரம் எதனையும் அண்டாமல் "
விக்கா பதங் சாமதி
ஹாமி" என்று பிரார்த்தித்து புலன் அடக்கம்
செய்தவர்கள், மேடைகளில்
தோன்றிய வேளைகளில் ஐம்புலன் அடக்காமல் மக்களின் கரகோஷத்திற்காகப் பேசினார்கள்.
படித்தவர்கள்
என்பதனால் இரட்டை அர்த்தத்தில் பேசும் வல்லமையும் பெற்றிருந்தார்கள். அவர்களின்
பேச்சுக்களையெல்லாம் நிதானமாக செவிமடுத்திருக்கிறேன்.
ஆனால், நான்
செவிமடுத்தவற்றில் சில பகுதிகள்
மாத்திரமே பத்திரிகைகளில் வரும்.
யாவும் வராது. தணிக்கை
ஓடிவந்து தடுத்தாட்கொள்ளும்.
திருவிழா மீண்டும் ஆரம்பமாகிவிட்டது.
நல்லவேளை - இப்பொழுது நான் அந்த
மைதானத்தில் இல்லை.
இருந்திருப்பின் அந்தப்பாவங்களை நானும் சுமந்துகொண்டிருப்பேன்.
எனக்கு இன்று
விமோசனம் கிடைத்திருக்கிறது.
அகலிகைக்கு இராமனின் கால் பட்டு
பாவ விமோசனம் கிடைத்தது.
என்மீது லீலானந்தாவின்
கரம் பட்டதனால் எனக்கும் பாவ விமோசனம் கிடைத்திருக்கிறது.
எத்தர்களின் பாதம் பட்ட
நான், இன்று உழைத்துவாழும்
ஒரு தொழிலாளர் குடும்பத்தின் வீட்டு வாசலில்
படிக்கல்லாக வாழ்கின்றேன்.
இது எனக்கு
மிகவும் பெருமிதம் அளிக்கிறது.
லீலானந்தாவும் பொடிமெனிக்கேயும் இவர்களின் பிள்ளைகளும் இங்கு அப்பம் வாங்கிச்சாப்பிட வருபவர்களும் தமது பாதங்களினால் என்னைத்
தொட்டுச்செல்கின்றனர்.
எனக்கு இப்போது சுகமாக இருக்கிறது.
---0---
(
நன்றி : ஆதவன் இதழ் - இலங்கை
- 2002 இல் வெளியான இச்சிறுகதை ' கல் படியே கதாவ ' என்ற தலைப்பில்
சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது)
No comments:
Post a Comment