மஹிந்த புலிகளுக்கு 2200 மில்லியன் பணம் வழங்கியுள்ளார்: ரணில் புதிய தகவல்
சுனாமியின்போது காணாமல் போன சிறுவன் 11 வருடங்களின் பின் பெற்றோரிடம் ஒப்படைப்பு
அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக டுவிட்டரில் நாமல்
பிரதமர் பதவி வேறொருவருக்கே : மைத்திரி மஹிந்தவுக்கு கடிதம்
வித்தியா படுகொலை வழக்கு நால்வருக்கு நேரடித் தொடர்பு
மஹிந்த புலிகளுக்கு 2200 மில்லியன் பணம் வழங்கியுள்ளார்: ரணில் புதிய தகவல்
12/08/2015 விடுதலைப் புலிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு தடவவைகள் பல மில்லியன்கள் கணக்கான பணத்தை வழங்கியுள்ளார். முதல் தடவை 200 மில்லியன் ரூபா பணத்தையும், 2005 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் நிறுவனம் ஒன்றின் ஊடாக 2000 மில்லியன் ரூபா பணத்தை வழங்கியிருந்தார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ராஜபக்ஷ குடும்பத்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஒப்பந்த அடிப்படையில் இந்த பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலையடுத்து குறித்த ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
2005ம் ஆண்டு விடுதலைப் புலிகள் பலவீனமடைந்திருந்ததாகவும், அதன் தலைவர்கள் பிளவுபட்டிருந்ததாகவும் அப்போது புலிகளை அழித்திருந்தால் இரண்டு பக்கமும் பாதிப்பு குறைவாக இருந்திருக்கும்.
எனினும் இந்தக் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் பணத்தைப் பெற்றுக் கொண்டு விடுதலைப் புலிகள் தம்மை பலப்படுத்திக் கொண்டதாக அவர் கூறியுள்ளார். தற்போதும் விடுதலைப் புலிகளிடம் இருந்த தங்கம், கப்பல் போன்றன கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் கண்டுபிடிக்கப்பட்டது கேபி மட்டுமே எனவும் அவர் குறிப்பிட்டார். கேபி தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குழு ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் மறுபுறம் இந்திய அரசும் அவரைக் கோரி வருவதாகவும் அவர் கூறினார்.
இதன்போது எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரணில், ஐக்கிய தேசியக் கட்சி தனது சொத்து அல்ல எனவும், தனக்கு பின்னால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் யார் என்பதை கட்சியினாலேயே தீர்மானிக்கப்படும்.
இதேவேளை வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டு குறித்து வினவியபோது, நீக்கப்பட்டது சம்பூர் முகாம் மட்டுமே எனவும் அவற்றையும் நீக்க வேண்டி ஏற்பட்டது மஹிந்த தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதியினாலேயே எனவும் குறிப்பிட்டார். மேலும் சம்பூரின் வேறு பகுதிகளில் இவற்றை நிர்மாணிக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நன்றி வீரகேசரி
சுனாமியின்போது காணாமல் போன சிறுவன் 11 வருடங்களின் பின் பெற்றோரிடம் ஒப்படைப்பு
12/08/2015 கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமியின் போது காணாமல் போன 9 வயது சிறுவன் இன்று 21 வயது இளைஞராக பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சம்பவமொன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத் தின் குமாரபுரத்தை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட ஜெகநாதன் குருதேவன் என்பவரே 9 வயதில் காணாமல் போயுள்ளார். இவர் காணாமல் போன போது தரம் 4இல் கல்வி கற்று வந்துள்ளார்.
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் பலர் உயிரிழந்துள்ளதுடன், இன்னும் சிலர் காணாமலும் போயுள்ளனர். அந்த நாளில் காணாமல் போனவர் பட்டியலில் ஜெகநாதன் குருதேவனும் இடம்பிடித்துவிட்டார்.
இவ்வாறு அனர்த்தத்தின் பின்னர் தனது மகனைக் காணவில்லை என இவரது பெற்றோர்கள் அனைத்து பதிவுகளையும் மேற்கொண்டிருந்தனர்.தனது மகனை காணாமல் இவர்கள் எல்லா இடங்களிலும் முறைப்பாடு செய்துள்ளதுடன், மகன் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்துள்ளனர்.எனினும் சகல சந்தர்ப்பங்களிலும் மகன் பற்றிய முயற்சியை எடுத்துள்ளதாக இவர்கள் குறிப்பிட்டனர்.
11 வருடங்கள் சிங்கள பிரதேசத்தில் வாழ்ந்து வந்த குறித்த இளைஞர் தற்போது தனது சொந்த மொழியான தமிழ் மொழியை மறந்து சிங்கள மொழியிலேயே பேசிக் கொண்டிருக்கிறார்.
இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், சுனாமி ஏற்பட்ட போது அப்போது எனக்கு வயது ஒன்பது. முல்லைத்தீவிலிருந்து வவுனியா வரை தனியாக சென்று பின்னர், வவுனியாவிலிருந்து புகையிரதத்தில் ஏறி நண்பர்களுடன் சென்றேன்.
இவ்வாறு புகையிரதத்தில் சென்ற நான் ஒரு ரயில் நிலையத்தில் இறங்கி நின்றுகொண்டிருந்தேன். அப்போதுதான் நான் நிற்கும் இடம் மாகோ புகையிரத நிலையம் என தெரிய வந்தது. அப்போது அங்கு மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது.இடம், மொழி, என எதுவுமே தெரியாமல் தனியாக நின்று கொண்டிருந்த என்னை ஒருவர் அழைத்துச் சென்று உண்பதற்கு உணவு வாங்கிக் தந்தார். உணவு உண்ட பின்னர் அவர் என்னை மாகோ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் .
இவ்வாறு பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட நான் பின்னர், தம்புள்ளையில் அளவ்வ என்ற இடத்தில் பிக்கு ஒருவரினால் நிர்வகிக்கப்படும் சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.
நான் இங்கிருந்து சென்ற போது நான்காம் தரத்தில் கல்வி கற்றேன். பின்னர் அங்கு சென்றதும் தரம் – 9 வரை கற்றுள்ளேன். கல்வி கற்பதை பாதியிலேயே நிறுத்திவிட்டு அச்சகமொன்றில் கடமையாற்றி வந்தேன். அவர்கள் எனக்கு உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தந்தனர். ஆனால், மாதாந்தம் கொடுப்பனவுகள் எதனையும் கொடுக்கவில்லை. எனக்கு வழங்கப்படும் சம்பளப்பணத்தை வங்கியொன்றில் கணக்கு ஆரம்பித்து அந்த வங்கிப் புத்தகத்தில் சேமிப்பு செய்து வந்தனர்.
அத்துடன், நான் இந்துவாக இருந்தாலும், பௌத்த ஆலயத்திற்கே வணக்க வழிபாடுகளுக்காக சென்றிருக்கிறேன். 11 வருடங்கள் எனக்கு சந்தோஷமாக இருந்தாலும், இப்போது எனது பெற்றோருடன் வாழும் நாட்களை யோசிக்கும் போது 11 வருடங்கள் பெரிதாக தெரியவில்லை என்றார்.
தம்புள்ளை பிரதேசத்தில் முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இருப்பதாக வெளியான தகவல்களை அடுத்து சிறுவர் நன்னடத்தைப் பிரிவினர் அங்கு சென்று குறித்த இளைஞரை விசாரணை செய்த போது தான் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் படித்ததாகவும், அது தண்ணீரூற்றில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இதுபற்றிய தகவல்கள் உரிய முறையில் பரிமாறப்பட்டுள்ளதுடன், மாங்குளத்தில் உள்ள சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகள் குறித்த இளைஞனின் பெற்றோர்களை அழைத்து தம்புள்ளைக்கு செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
பின்னர் திட்டமிட்டபடி சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் அங்கு சென்ற போது நீதிமன்றத்தினூடாக குறித்த இளைஞர் 11 வருடங்களின் பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் தனது குடும்பத்துடன் மீள் இணைப்புச் செய்த போது இவரின் வங்கி வைப்புப் புத்தகம் ஒப்படைக்கப்பட வில்லை. அடையாள அட்டை இல்லாத குறித்த இளைஞரை அடையாள அட்டையை பெற் றுக் கொண்டு தந்தை யையும் அழைத்து வந்து வங்கிப் புத்தகத்தை பெற்றுக்கொள்ளுமாறு இளைஞரை வளர்த்த பௌத்த மதகுரு குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக டுவிட்டரில் நாமல்
12/08/2015 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 12 ஆம் திகதி நிதி மோசடி பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் பதவி வேறொருவருக்கே : மைத்திரி மஹிந்தவுக்கு கடிதம்
13/08/2015 எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 113 ஆசனங்களை பெற்று வெற்றி பெறுமாயின் முன்னணியில் நீண்டகாலமாக அங்கம் வகிக்கும் சிரேஷ்ட நபர் ஒருவருக்கே பிரதமர் பதவியை வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.
இதேவேளை கட்சியின் தலைவர் என்ற வகையில் பிரதமர் பதவியை வழங்குவதில் தனக்கு அதிகாரம் உள்ளது எனவும் அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
வித்தியா படுகொலை வழக்கு நால்வருக்கு நேரடித் தொடர்பு
13/08/2015 புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களில் நால்வருக்கு நேரடி தொடர்புள்ளதாகவும் ஏனையோர் அந்த கொடூரத்துக்கு உதவி ஒத்தாசை புரிந்தவர்கள் எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று நீதிமன்றுக்கு அறிக்கை சமர்பித்துள்ளது.
வித்தியா படுகொலை வழக்கு நேற்று ஊர்காவற்றுரை நீதிவான் நீதிமன்றில் நீதிபதி எஸ்.லெனின் குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போதே இரு வேறு அனுமதிகளின் பேரில் இரு மாதங்கள் சந்தேக நபர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்தமை தொடர்பிலான அறிக்கையை நீதிமன்றுக்கு சமர்ப்பித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபர்கள் தொடர்பிலான மேற்படி விடயத்தை நீதிவானுக்கு அறிவித்தனர்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களான பூபாலசிங்கம் இந்திரகுமார் (வயது 40),பூபாலசிங்கம் ஜெயகுமார் (வயது 34), பூபாலசிங்கம் தவகுமார் (வயது 32) , மகாலிங்கம் சஷீந்திரன், தில்லைநாதன் சந்திரஹாஷன், சிவதேவன் குஷாந்தன், பழனி ரூபசிங்கம் குகநாதன், ஜெயதரன் கோகிலன் அல்லது கண்ணன் சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் ஆகியோரை விசாரணை செய்ததில், இந்த கொடூரம் திட்டமிட்ட வகையிலேயே இடம்பெற்றுள்ளதை உறுதிப் படுத்தியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் இதன் போது மன்றில் சுட்டிக்காட்டினர்.
அத்துடன் வித்தியாவின் மூக்குக் கண்ணாடியையும் இந்த விசாரணைகளின் இடையே தாம் மீட்டுள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவினர் மன்றுக்கு தெரிவித்திருந்தனர்.
அரச இரசாயண பகுப்பாய்வுகளுக்கும், டி.என்.ஏ. பரிசோதனைகளுக்கும் அனுப்பட்ட தடயங்கள் தொடர்பிலான ஆய்வு அறிக்கை இன்னும் தமக்கு கிடைக்கவில்லை என தெரிவித்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரி, அவை கிடைத்ததும் மேலும் பல விடயங்களை உறுதிப் படுத்தக் கூடியதாய் இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
மாணவி வித்தியா படுகொலை வழக்கு நேற்று ஊர்காவற்றுரை நீதிவான் எஸ். லெனின் குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது கடந்த தவணை வழக்கின் போது பதுகாப்பு பிரச்சினையையை மேற்கோள் காட்டி கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர்கள் ஒன்பது பேரும் நேற்று புலனாய்வுப் பிரிவின் விஷேட பஸ் வண்டி ஊடாக ஊர்காவற்றுரைக்கு எடுத்துவரப்பட்டு நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன் போது நீதிமன்றில் படு கொலை செய்யப்பட்ட வித்தியாவின் தாய் உள்ளிட்ட உறவினர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
எனினும் கடந்த தவணையின் போதும் அதற்கு முன்னரும் பாதிக்கப்பட்ட தரப்பு என்ற ரீதியில் வித்தியாவின் குடும்பத்தவர் சார்பில் ஆஜரான எந்த சட்டத்தரணியும் நேற்று நீதிமன்றில் பிரசன்னமாகியிருக்கவில்லை.
கடந்த தவணை சிரேஷ்ட சட்டத்தரணி தமக்குரிய அச்சுறுத்தலை மேற்கோள் காட்டி இந்த வழக்கில் இருந்து விலகியிருந்ததுடன் கடந்த தவணை முதல் தலை நகரில் இருந்து சென்ற சகோதர இன சட்டத்தரணிகள் மூவர் வித்தியாவின் குடும்பத்தவர் சார்பில் ஆஜராகியிருந்தனர். எனினும் அவர்களையும் நேற்று மன்றில் அவதானிக்க முடியவில்லை.
இந் நிலையில் சந்தேக நபர்களை கூண்டில் ஏற்றியதும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியிருந்த கூட்டுக் கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் செய்த விசாரணையின் அறிக்கையை நீதிவானிடம் கையளித்தார்.
சுவிஸ் குமார் அல்லது பிரகாஸ் என அழைக்கப்படும் மகாலிங்கம் சிவகுமார், நிசாந்தன், சந்திரகாசன், ஜெயக்குமார், தவக்குமார் ஆகியோரின் ஆலோசனையின்படி இந்த படு பாதக செயல் இடம்பெற்றுள்ளது. இந்த பாதக செயலுடன் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நால்வருக்கு நேரடி தொடர்பு உள்ளது. ஏனையோர் அதற்கு உதவி ஒத்தாசை செய்துள்ளனர்.
கைதாகியுள்ள சந்தேக நபர்கள் எமது விசாரணைகளின் போது இதனை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்கள் மிகத் திட்டமிட்டு இந்த குற்றத்தை அரங்கேற்றியுள்ளனர்.
இந் நிலையில் இவர்களை விசாரணை செய்யும் போது பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான குஷாந்தனின் வீட்டிலிருந்து மாணவி வித்தியாவின் மூக்குக் கண்ணாடியை நாம் கைப்பற்றியுள்ளோம். இது இந்த வழக்கின் பிரதான தடையப் பொருட்களில் ஒன்றாகவே நாம் பார்க்கின்றோம்.
சந்தேக நபர்கள் தொடர்பிலும் தடயங்கள் தொடர்பிலும் டி.என்.ஏ. மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பட்ட மாதிரிகள் மற்றும் தடயங்கள் தொடர்பிலான அறிக்கை எமக்கு இன்னும் கிடைக்கவில்லை. எனவே சந்தேக நபர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கோருகின்றோம். என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ,நீதி மன்றில் கோரிக்கை முன்வைத்தனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை சுருக்கத்தை நீதிமன்றத்தில் முன்வைத்ததைத் தொடர்ந்து கூண்டில் இருந்த சந்தேக நபர்களை நீதிவான் நோக்கினார். இதன் போது சந்தேக நபர்கள் ஒன்பதுபேரும், குற்றப் புலனய்வுப் பிரிவு பொலிஸார் தம்மிடம் சிங்களத்திலேயே கதைத்து தங்களை வற்புறுத்தியே வாக்குமூலமும், கையெழுத்தும் பெற்றுக்கொன்டதாக குறிப்பிட்டனர்.
இதன் போது இடைமறித்த பொலிஸார் மேற்படி ஒன்பது சந்தேகநபர்களுக்கும் சிங்களம் ஓரளவு நன்றாகவே தெரியும் எனவும், இவர்களிடம் ஒழுங்கான முறையிலேயே விசாரணை இடம்பெற்றதாகவும் அதன் பிரகாரமே வாக்குமூலங்கள் பெறப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இந் நிலையில் ஆறாவது சந்தேகநபர் டீ.என்.ஏ பரிசோதனையை மீண்டும் மேற்கொள்ள வேண்டுமென்று நீதிவானிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
அதேநேரம் மற்றுமொரு சந்தேகநபரான குஷாந்தன் என்பவர் வித்தியாவின் கண்ணாடி தனது வீட்டிலிருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுவது அப்பட்டமான பொய் எனவும் எனவும், தன்னைப் பொலிஸார் அழைத்துச் சென்று ஒரு கடையில் வைத்தே அந்த கண்ணாடியை வாங்கி வந்து தனக்கு முன்னாலேயே தனது வீட்டில் வைத்து விட்டு எடுத்ததாகவும் நீதிவானுக்கு தெரிவித்தார்.
இந்த குற்றச் சாட்டுக்களை சுமத்திய சந்தேக நபர்கள் தம்மை பிணையில் விடுதலை செய்ய கோரினர். எனினும் நீதிபதி எஸ். லெனின்குமார் , தமக்குள்ள அதிகாரத்துக்கு அமைய குற்றத்தின் பாரதூரத்தை கருத்தில் கொண்டும் பிணை வழங்க முடியாதெனவும், இந்த வழக்கு மேல்நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் போது அங்கு பிணை பெறுவதற்கு முயற்சி செய்யலாமெனவும் கூறினார்.
அதேவேளை சந்தேகநபர்கள் ஒன்பதுபேரும் தமக்காக எந்த ஒரு சட்டத்தரணியும் ஆஜராவதற்கு தயங்குவதோடு, பயப்படுகின்றார்கள் என நீதிமன்றில் ஒருமித்த குரலில் தெரிவித்தனர். இதனைச் செவிமடுத்த நீதவான், உங்களுக்காக சட்டத்தரணிகளை ஆஜராகும் விடயத்தில் தன்னால் எதுவும் செய்ய முடியாதென்றும் ஆயினும் ஆஜராகும் சட்டத்தரணிகளுக்கு யாராவது அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தலை மேற்கொண்டால் அது குறித்து தான் நடவடிக்கை எடுக்க முடியுமென்றும் தெரிவித்தார்.
இந் நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ள வித்தியாவின் மூக்குக் கண்ணாடியை எதிர்வரும் 26.08.2015 அன்று நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதிவான் எஸ்.லெனின் குமார் அதுவரை சந்தேக நபர்கள் ஒன்பது பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறும் 26ஆம் திகதிக்கு வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுப்பதாகவும் கூறி ஒத்தி வைத்தார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment