சிங்கப்பூரின் 50 ஆவது சுதந்திர தினம்
சொலமன் தீவுகளை உலுக்கிய 6.9 ரிச்டர் பூமியதிர்ச்சி
கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழர் நியமனம்
நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த குண்டுகள் மீது மண்டியிட்டு அமர்ந்திருக்கச் செய்து 10 கைதிகளுக்கு மரணதண்டனை
நைஜீரிய சந்தையில் குண்டுத் தாக்குதல் 47 பேர் உயிரிழப்பு
சீனாவில் மண்சரிவு; 40 பேரைக் காணவில்லை
சீன துறைமுகத்தில் களஞ்சியசாலையில் வெடிப்பு
எகிப்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய பணயக்கைதி படுகொலை
54 பயணிகளுடன் இந்தோனேஷிய விமானம் மாயம்
இந்தியாவின் 69 ஆவது சுதந்திர தின விழா
சிங்கப்பூரின் 50 ஆவது சுதந்திர தினம்
10/08/2015 சிங்கப்பூரின் 50 ஆவது ஆண்டு சுதந்திர தினம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அந்நாடெங்கும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இதன்போது இராணுவ மரியாதை அணிவகுப்பும் வாணவேடிக்கை நிகழ்வும் இடம்பெற்றதுடன் அந்நாட்டின் ஸ்தாபகத் தலைவர் லீ குவான் யெவ்விற்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வுகளில் சுமார் 250,000 பார்வையாளர்கள் வரை கலந்து கொண்டனர்.
இராணுவ அணிவகுப்பில் 50 இராணுவ விமானங்களும் 177 பீரங்கிகளும் ஏனைய பாதுகாப்பு கனரக வாகனங்களும் பங்கேற்றன.
அந்நாடு 1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி குடியரசானது. இந்நிலையில் சுதந்திர தின நிகழ்வில் சிங்கப்பூர் பிரதமர் லீ ஹஸியன் லூங்குடன் மலேசியா மற்றும் தாய்லாந்து பிரதமர்கள், புருனே சுல்தான் ஹஸனல் போல்கியபஹ், இந்தோனேசிய பிரதி ஜனாதிபதி ஜூஸுப் கல்லா, சீனா, அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
நன்றி வீரகேசரி
சொலமன் தீவுகளை உலுக்கிய 6.9 ரிச்டர் பூமியதிர்ச்சி
11/08/2015 வட ஆப்கானிஸ்தானை 5.9 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சி திங்கட்கிழமை தாக்கியுள்ளது. இந்த பூமியதிர்ச்சி இந்திய காஷ்மீர் பிராந்தியம் வரை உணரப்பட்டுள்ளது.
இந்து குஷ்மலைப் பிராந்தியத்தில் 224 கிலோமீற்றர் ஆழத்தில் தாக்கிய இந்தப் பூமியதிர்ச்சியால் ஏற்பட்ட சேத விபரங்கள் அறிக்கையிடப்படவில்லை.
சொலமன் தீவுகளுக்கு அப்பால் 6.9 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சி திங்கட்கிழமை தாக்கியுள்ளது.
ஹொனியரா பிராந்தியத்துக்கு மேற்கே 214 கிலோமீற்றர் தொலைவில் கடலின் கீழ் மையங்கொண்டிருந்த பூமியதிர்ச்சியால் கட்டடங்கள் நடுங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும் மேற்படி பூமியதிர்ச்சியால் சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக அறிக்கையிடப்படவில்லை. நன்றி வீரகேசரி
கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழர் நியமனம்
11/08/2015 கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயற்பாட்டு அதிகாரியாக தமிழரான சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.
43 வயதான சுந்தர் பிச்சை சென்னையைச் சேர்ந்தவர். சுந்தர்ராஜன் பிச்சை தான் இவரது முழுப் பெயர். சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பாடசாலையில் படித்த இவர், பின்னர் ஐ.ஐ.டி. கரக்பூரில் பொறியியல் பட்டமும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டமும் பென்சில்வேனியாவில் உள்ள வோர்டன் கல்லூரியில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர்.
கூகுள் நிறுவனத்தில் இணைவதற்கு முன்னர் மெக்கென்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்தார். தற்போது தலைமை துணைத்தலைவராக இருக்கும் இவர், அன்ட்ரொய்ட் கூகுள் குரோம், கூகுள் என்ஜினியரிங் அப்ஸ், ஜிமெயில், கூகுள் டக்ஸ் உள்ளிட்ட பிரிவுகளைக் கவனித்து வந்தவர்.
2008 ஆம் ஆண்டு பிச்சை தலைமையிலான குழு தான் குரோம் பிரவுசரை உருவாக்கியது. இந் நிலையிலேயே இவர் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுந்தர் பிச்சையின் தந்தை ரகுநாத பிச்சை ஜி. சி நிறுவனத்தில் எலெக்ட்ரிகல் என்ஜினியராக பணியாற்றியவர். தாயார் ஸ்டெனோகிராபராக இருந்தவர்.
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பிச்சை தனது புத்திசாலித்தனத்தாலும் கடும் உழைப்பாலும் இந்த நிலையை அடைந்துள்ளார்.
2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி இவர் கூகுள் நிறுவனத்தில் இணைந்தார். இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பொக்ஸ் ஆகிய பிரவுசர்களில் கூகுள் தேடுதளத்தை எளிமையாக்க உதவும் டூல்பார் உருவாக்கும் ஒரு சிறிய அணியில் தான் பிச்சைக்கு பணி கிடைத்தது.
ஆனால், நாம் ஏன் மற்ற பிரவுசர்கள் பின்னால் அலைய வேண்டும் நாமே ஒரு பிரவுசரை உருவாக்கலாமே என தனது அதிகாரிகளிடம் பிச்சை தெரிவித்தார். முதலில் இது தேவையில்லாத வேலை என கூகுள் நினைத்தது. ஆனால் அதன் பலன்களை எடுத்துச் சொல்லி பிரவுசரை உருவாக்கும் திட்டத்துக்கு வலு சேர்த்தார். அடுத்த ஓராண்டில் கூகுள் குரோமை வெளியிட்டது பிச்சையின் குழு. இப்போது உலகில் 32 சதவீதம் பயன்படுத்தப்படும் பிரவுசர் குரோம் தான்.
இவரது மனைவி அஞ்சலி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். உலகின் முன்னணி நிறுவனங்களான மைக்ரோசொப்ட், கூகுள் ஆகியவற்றின் தலைமை செயல்பாட்டு அதிகாரிகளாக இரு இந்தியர்கள் உள்ளனர்.
ஒருவர் சுந்தர் பிச்சை மற்றையவர் மைக்ரோசொப்ட் தலைமை செயல்பாட்டு அதிகாரியான ஆந்திராவைச் சேர்ந்த சத்யா நடெல்லா என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த குண்டுகள் மீது மண்டியிட்டு அமர்ந்திருக்கச் செய்து 10 கைதிகளுக்கு மரணதண்டனை
12/08/2015 ஐ.எஸ். தீவிரவாதிகள், தம்மால் கைதிகளாக பிடிக்கப்பட்ட 10 பேருக்கு நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த குண்டுகள் மீது மண்டியிட்டு அமர்ந்திருக்க நிர்ப்பந்தித்த பின் அந்தக் குண்டுகளை வெடிக்க வைத்து மரணதண்டனை நிறைவேற்றுவதை வெளிப்படுத்தும் புதிய வீடியோ காட்சியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி வீடியோ காட்சியானது ஆப்கானிஸ்தானில் படமாக்கப்பட்டுள்ளது.இந்த மரணதண்டனை நிறைவேற்றத்துக்கு முன்னர் குறிப்பிட்ட மலைப் பிராந்திய பகுதிக்கு குதிரைகளில் வரும் தீவிரவாதிகள், தரையில் வரிசையாக குழிகளைத் தோண்டி அவற்றுக்குள் வெடிபொருட்களை புதைத்து அவற்றை மண்ணால் மூடுகின்றனர்.
தொடர்ந்து அந்தப் பிராந்தியத்துக்கு தீவிரவாதிகளால் கண்கள் கட்டப்பட்ட நிலையில் இழுத்து வரப்படும் கைதிகள் குண்டுகள் புதைத்து வைக்கப்பட்டிருந்த தரைப் பகுதியின் மீது மண்டியிட்டு அமர்ந்திருக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
மேற்படி கைதிகள் அனைவரும் வயதானவர்களாகவும் அவர்களை அழைத்து வரும் தீவிரவாதிகள் இளைஞர்களாகவும் தோற்றமளிக்கின்றனர். அந்தத் தீவிரவாதிகள் தமது கைகளில் கனரக துப்பாக்கிகளை ஏந்தியிருக்கின்றனர்.
கைதிகள் தொடர்ந்து மண்டியிட்டு அமர்ந்திருக்க அங்கிருந்து நகரும் தீவிரவாதிகள் தூர இருந்து இயக்கும் முறைமை மூலம் நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்த குண்டுகளை வெடிக்க வைத்து கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றுகின்றனர்.இதன் போது கைதிகள் உடல் துண்டு துண்டாக சிதறி உயிரிழக்கின்றனர்.
ஷின்வாரி இனத்துவ குழுவைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் அந்தக் கைதிகள் ஆப்கானின் நங்கர்ஹார் பிராந்தியத்திலுள்ள தலிபான்களுக்கு உதவி வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. அந்தப் பிராந்தியத்திலிருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் அண்மையிலேயே வெளியேற்றப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் மரணதண்டனை நிறைவேற்ற ப்பட்ட மேற்படி கைதிகளை மத எதிர்ப்பாளர்கள் என தீவிரவாதிகள் தம்மால் வெளியிடப்பட்ட வீடியோ காட்சியில் குறிப்பிட்டுள்ளனர். நன்றி வீரகேசரி
நைஜீரிய சந்தையில் குண்டுத் தாக்குதல் 47 பேர் உயிரிழப்பு
13/08/2015 நைஜீரியாவின் வட கிழக்கு மாநிலமான பொர்னோவில் சனசந்தடிமிக்க சந்தையொன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 47 பேர் உயிரிழந்துள்ளதுடன் 52 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
வபொன் காரி நகரிலுள்ள ஜெபோ கால்நடைச் சந்தையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் ஏற்கனவே பொருத்தி வைக்கப்பட்டிருந்த குண்டைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதா அல்லது தற்கொலைக் குண்டுதாரியொருவரால் நடத்தப்பட்டதா என்பது அறியப்படவில்லை.
மேற்படி தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு குழுவும் உரிமை கோராத போதும் போகோ ஹராம் போராளிகளே காரணம் என நம்பப்படுகிறது.
அந்நாட்டின் புதிய ஜனாதிபதி முஹமது புஹாரி, மேற்படி போராளிக் குழுவை நசுக்கப் போவதாக சூளுரைத்திருந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
சீனாவில் மண்சரிவு; 40 பேரைக் காணவில்லை
13/08/2015 சீனாவின் வட மேற்கு ஷாங்ஸி மாகாணத்தில் புதன்கிழமை இடம்பெற்ற பாரிய மண்சரிவொன்றையடுத்து குறைந்தது 40 பேர் காணாமல்போயுள்ளனர்.
இந்த மண்சரிவில் ஷாங்யங் நகரிலுள்ள ஷாங்ஸி வுஸொயு சுரங்கக் கம்பனிக்குச் சொந்தமான விடுதிகளும் வீடுகளும் புதையுண்டுள்ளன.
மேற்படி மண்சரிவில் புதையுண்ட 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தென் சீனாவை கடந்த வார இறுதியில் தாக்கிய சூறாவளியொன்று காரணமாக அந்நாட்டின் பல பிரதேசங்களில் அடை மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
சீன துறைமுகத்தில் களஞ்சியசாலையில் வெடிப்பு
14/08/2015 சீனாவின் வட துறைமுக நகரான தியன்ஜின்னில் புதன்கிழமை நள்ளிரவை அண்மித்த வேளையில் இடம்பெற்ற இரு பிரதான வெடிப்புச் சம்பவங்களில் சிக்கி குறைந்தது 44 பேர் பலியானதுடன் 500 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
பலியானவர்களில் 12 தீயணைப்புப் படைவீரர்களும் உள்ளடங்குகின்றனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த நகரின் துறைமுகப் பிரதேசத்தில் அபாயகரமான இரசாயனப் பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த களஞ்சியசாலையிலேயெ இந்த இரு வெடிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த வெடிப்புகள் காரணமாக ஏற்பட்ட பாரிய தீயை நெடுந் தூரத்திற்கு அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்படி வெடிப்புகளால் அவை இடம்பெற்ற இடத்திலிருந்து 2 கிலோமீற்றர் தூர சுற்று வட்டப் பகுதியிலிருந்த கட்டடங்களின் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதுடன் அலுவலக மாடிக் கட்டடங்களும் நூற்றுக்கணக்கான கார்களும் தீக்கிரையாகியுள்ளன.
முதலாவது வெடிப்பு இடம்பெற்று ஒரு சில செக்கன்களில் இரண்டாவது வெடிப்பு இடம்பெற்றுள்ளது. முதலாவது வெடிப்பின் போது 3 தொன் ரி.என்.ரி வெடிபொருட்கள் வெடித்ததையொத்த சக்தி வெளிப்பட்டுள்ளது. அதேசமயம் இரண்டாவது வெடிப்பில் 21 தொன் ரி.என்.ரி வெடிபொருட்கள் வெடித்ததையொத்த சக்தி வெளிப்பட்டுள்ளது.
மேற்படி வெடிபொருள் இரசாயனத்தை கப்பலில் ஏற்றிய போதே இந்த வெடிப்புகள் இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து வெடிப்புகள் இடம்பெற்ற களஞ்சியசாலையின் உரிமை நிறுவனமான றுயிஹாய் லொஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர்களை அதிகாரிகள் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். நன்றி வீரகேசரி
எகிப்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய பணயக்கைதி படுகொலை
14/08/2015 எகிப்திய கெய்ரோ நகரிலிருந்து கடத்தப்பட்ட குரோஷிய பணயக்கைதியொருவரை தாம் தலையைத் துண்டித்து படுகொலை செய்துள்ளதாக அந்நாட்டிலுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய குழுவினர் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.
மேற்படி குரோஷிய பணயக்கைதியான தொமிஸ்லாவ் சலோபெக்கின் (30 வயது) சடலத்தைக் காண்பிக்கும் புகைப்படமொன்றையும் எகிப்திய சினாய் பிராந்தியத்திலுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் குரோஷிய பிரதமர் ஸொரான் மிலனோவிக் தெரிக்கையில், தீவிரவாதிகளால் தொமிஸ்லாவ் படுகொலை செய்யப்பட்டதை 100 சதவீதம் உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக கூறினார்.
தொமிஸ்லாவ் கடந்த ஜூலை மாதம் தலைநகர் கெய்ரோவிலிருந்து கடத்தப்பட்ட பின்னர் மேற்படி தீவிரவாதிகளால் பணயக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவரைக் கொன்றுள்ளதாக உரிமை கோரியுள்ள அந்தக் குழுவினர், அவரது முதுகில் அவரது துண்டிக்கப்பட்ட தலை வைக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளனர். நன்றி வீரகேசரி
54 பயணிகளுடன் இந்தோனேஷிய விமானம் மாயம்
16/08/2015 இந்தோனேஷியாவில் இருந்து 54 பயணிகளுடன் பயணித்த விமானம் ஒன்று பப்புவா நியுகினி பகுதியில் வைத்து தனது காட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட 54 பேர் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் விமானத்தின் நிலை குறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நன்றி வீரகேசரி
இந்தியாவின் 69 ஆவது சுதந்திர தின விழா
16/08/2015 இந்தியாவின் 69 ஆவது சுதந்திரதின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் டில்லியில் பிரதமர் மோடி கொடி ஏற்றி வைத்தார். இதையொட்டி டில்லியில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தேசிய கொடியேற்றி வைத்துள்ளார். டில்லியில், ஒவ்வொரு 40 மீற்றருக்கும் துப்பாக்கி ஏந்திய பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, பாதுகாப்பு மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இம்முறை பா.ஜ.க. அலுவலகங்களை ஐ.எஸ். அமைப்பினர் குறிவைத்து தாக்கலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கை காரணமாக, இந்தியா முழுவதும் பொலிஸார் உசார்ப்படுத்தப்பட்டுள்ளனர்.
சுதந்திர தின விழா நடைபெறும் இடத்தை சுற்றிலும் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். டில்லி பொலிஸார், துணை இராணுவ படையினர், உளவுத்துறையினர் என பல்வேறு பாதுகாப்பு படையினரும் ஒருங்கிணைந்து, 7 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கான கொமாண்டோ படை பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆள் இல்லா விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர் மூலமாகவும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திரதின விழா நடைபெறும் இடத்தில் சுமார் 1,400 கெமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment