அவுஸ்திரேலியா மரபு இதழில் எழுத்துச்சித்தர் - விமல் அரவிந்தன்.

.
அவுஸ்திரேலியா  மரபு  இதழில்  எழுத்துச்சித்தர்  எஸ்.பொ.வின்  நனவிடை தோய்தல்
           மரபு   ஆசிரியர்   விமல்   அரவிந்தன்.


(அவுஸ்திரேலியா  மெல்பனில்  நடைபெற்ற   நினைவரங்கில்  சமர்ப்பிக்கப்பட்ட  உரை)
எஸ்.பொ.  என  அழைக்கப்பட்ட  எஸ்.பொன்னுத்துரை   அவர்கள் இலங்கையிலிருந்து  அவுஸ்திரேலியா  சிட்னிக்கு   வந்து  இறுதியில் சிட்னியிலேயே  மறைந்துவிட்டவர்.
ஆனால் - அவர்   என்றைக்கும்  மறையாத  சொத்தை  எமக்கு விட்டுச்சென்றுவிட்டார்.
இங்கு   அவருக்கும்  எனக்கும்  இடையே  தோன்றிய  நட்பையும் அதற்கும்  அப்பால்  நீடித்த  உறவையும்  சாட்சியமாகக்கூறும்  ஒரு படைப்பு   இலக்கியத்தையே   தந்துவிட்டுத்தான்  அவர் விடைபெற்றுள்ளார்.
ஆம்.  1990   ஆம்   ஆண்டளவில்  மெல்பனில்  ஒரு  இலக்கியச்சிற்றேடு  நடத்தவேண்டும்  என்ற   எண்ணம்  எனது மனதில்   துளிர்விட்டது.  அக்காலப்பகுதியில்  எஸ்.பொ.  சிட்னிக்கு வந்து  அங்கே  தனது  மகனுடன்  வசிக்கிறார்  என  அறிந்தேன். அவரை   ஒரு  எழுத்தாளராக  கேள்விப்பட்டதைத்தவிர  வேறு  எதுவும்  எனக்கு  அப்பொழுது  தெரியாது.
சிட்னிக்கு  நான்   சென்றிருந்தபொழுதுதான்  அவரை  நேரில் சந்தித்தேன்.   அவர்  இலங்கையில்  நீண்ட  காலம் இலக்கியத்துறையில்  ஈடுபாடுகொண்டிருந்தவர்.
அத்துடன்   இலக்கிய  இதழ்களில்  ஈடுபட்ட  அனுபவமும்  அவருக்கு இருப்பது   தெரியும்  என்பதனால்  மெல்பனில்  ஒரு  இலக்கிய சிற்றேட்டை  நடத்தவிருக்கும்  எனது  விருப்பத்தை   அவரிடம் தெரிவித்தேன்.     அவருடன்  உரையாடிக்கொண்டிருப்பதே  சுகமான அனுபவம்.    பல  சுவாரஸ்யமான  விடயங்களை   நகைச்சுவையுடனும்   அங்கதச்சுவையுடனும்  சொல்லி  உரையாடலை   கலகலப்பாக்குவார்.



இலக்கிய   இதழ்   ஆரம்பிக்கவிருக்கும்  எனது  எண்ணம்  அறிந்து  சில ஆலோசனைகளையும்   சொல்லத்தொடங்கினார்.  அக்காலப்பகுதியில் ஈழத்தவர்கள்    உலகில்  பல  நாடுகளிலும்   புகலிடம்பெற்று வாழ்ந்துகொண்டிருந்தனர்.    நானும்  லண்டன்  சென்று அங்கிருந்துதான்   அவுஸ்திரேலியாவுக்கு    வந்தேன்.
அவருடனான    அன்றைய  உரையாடலில்  புலம்பெயர்ந்தவர்களின் புகலிட    இலக்கியம்  பற்றி  அவர்  நிறையவே   பேசினார்.  அவருக்கு புலம்பெயர்ந்தவர்களின்    இலக்கியம்  எதிர்காலத்தில்  தமிழில் உயர்ந்த   இடத்தை   வகிக்கும்  என்ற  நம்பிக்கையும்  தோன்றியிருந்தது.
நான்    ஒரு  இலக்கிய  இதழை   தொடங்கவிருக்கும்  எண்ணத்தை எஸ்.பொ.விடம்    சொன்னதும்,    புதிய   விடயங்களுக்கும்  அதே சமயம்    பழைய   தமிழ்ப்பண்பாட்டின்  மரபார்ந்த  விடயங்களை இன்றைய    தலைமுறைக்கும்  தெரியப்படுத்தவேண்டும்  என்ற எண்ணத்தையும்    வெளிப்படுத்தி - எனது  இலக்கிய  இதழ்  முயற்சிக்கு   ஊக்கமளித்தார்.
இலக்கிய    இதழ்   நடத்துவது    என்பது  பொருளாதார  ரீதியில்  கையை    சுட்டுக்கொள்ளும்  பிரச்சினைதான்   என்பதையும்  அவர் குறிப்பிட்டதுடன்,  இதழுக்கு  பெயர்  சூட்டுவதற்கும்  அவர்  தக்க ஆலோசனை   சொன்னார்.


சுழலும்    சக்கரத்தின்    சுழலாத  புள்ளியே    மரபு -  என்ற வார்த்தையை  ஒரு  மந்திரம்  போல   உச்சரித்து  மரபு  எனப்பெயர் சூட்டுமாறு   எஸ்.பொ.  சொன்னார்.  அத்துடன்  மரபார்ந்த  ஒரு தொடரை    மரபுவில்  எழுதுவதற்கும்  அவர்  சம்மதித்தார்.
எஸ்.பொ,    இலங்கையில்  பிறந்தாலும்  கல்வி  நிமித்தம் தமிழ்நாட்டுக்குச்சென்றிருந்தாலும்    தொழில்  சார்ந்து  நைஜீரியாவில் சிறிது   காலம்  வாழ்ந்தாலும்  பின்னர்  அவுஸ்திரேலியாவுக்கு  வந்து புகலிடம்  பெற்றிருந்தாலும்  அவரது  வேர்   எமது  தாயகத்தில்தான் படர்ந்திருந்தது.   அவரது  வாழ்வு  இங்கும்  வேர்  தயாகத்திலுமாக பழைய   நினைவுகளை   மீட்டுக்கொண்டு  அவர்  நேரடியாக உரையாடும்   பாங்கு  எம்மையெல்லாம்  எமது  பிறந்து  ஊருக்கே அழைத்துச்சென்றுவிடும்.
குறிப்பாக  அவரது  உரையாடலில்  ஒலிக்கும்  சொற்கள்  எமது இலங்கையின்  வடக்கு  கிழக்கு  பிரதேச மொழிப்பிரயோகங்களைக்கொண்டிருக்கும்.   நான்  மறந்துவிட்ட  பல யாழ்ப்பாணப்    பேச்சுத்தமிழை   அவரது  வாயிலிருந்து  கேட்டபொழுது மெய்சிலிர்த்துவிட்டேன்.
வடமாகாணத்தின்   ஒரு   கால  கட்டத்தின்  ஆத்மக்குரலாகவே  அவரது   உரையாடல்   ஒலித்தன.   கேட்டுக்கொண்டே   இருக்கலாம்.
அவருடனான   அன்றைய  கலந்துரையாடலில்தான்  நனவிடை தோய்தல்    தொடர்   பிறந்தது.   அன்றைய  யாழ்ப்பாணத்தை மீட்டு வந்து  புகலிடத்தில்  அதனை    எம்மவருக்கு  அறிமுகப்படுத்துவதற்கு அவர்   எடுத்துக்கொண்ட  தலைப்புத்தான்  அவர்  மரபுவில்  தொடர்ந்து  எழுதிய   நனவிடை   தோய்தல்.
கடந்த    காலம்  எம்மிடம்  இல்லை.  எதிர்காலம்  எப்படி  அமையும் என்பதும்   எமக்குத்தெரியாது.  நாம்   நிகழ்காலத்திலிருந்து  கடந்த காலத்தை   மனதில்  அசைபோட  முடியும்.  அவ்வாறு  அவர் அசைபோட்டு   எழுதிய  தொடர்தான்  நனவிடை   தோய்தல்.
எஸ்.பொ.   மாதாந்தம்  தொடர்ந்து  எழுதி  தபாலில்    அனுப்புவார். இன்றுபோல்    அன்று  கணினி   வசதி  இருக்கவில்லை.  அவர்  கணினி நவீன   தொழில்  நுட்பம்  வந்தபின்னரும்கூட    ஓயாமல் தன்கையினாலேயே    எழுதி    எழுதி   குவித்தவர்.
அதுவும்   அவர்  பற்றிய  எனது  ஆச்சரியங்களில்  ஒன்று.
நனவிடை  தோய்தல்  தொடருக்கு  வாசகர்  மத்தியில்    நல்ல வரவேற்பு    இருந்தது.  அவுஸ்திரேலியாவில்  மட்டுமல்ல  ஐரோப்பிய நாடுகள் ,  கனடா,  இலங்கையிலிருந்தெல்லாம்  வாசகர்கள்  கடிதம் எழுதினார்கள்.    தமிழ்  இலக்கியத்தில்  அவரது  நனவிடை    தோய்தல் முற்றிலும்   புத்தம்  புதிய    முயற்சி.   அதிலே   அவர்  காண்பித்த காட்சிகள்   பல.  காட்சிகளை   ஒரு  ஒளிப்படக்கலைஞன்  போன்று எமது    கண்ணெதிரே  கொண்டு  வந்த  அவரது  நுட்பம் அருமையானது.
ஒவ்வொரு   மனிதருக்குள்ளும்  கனவுகளும்  இருக்கின்றன. நனவுகளும்    வாழ்கின்றன.   எஸ்.பொ.வுக்கும்  பல  கனவகள் இருந்தன.   அவற்றில்  சிலவற்றை   அவர்  நனவாக்கினார்.   அதேசமயம்    அவர்  நனவிடை   தோய்ந்தவர்.  அந்த  நனவுகளை  பதிவு    செய்வதற்கு  அவர்  தெரிவு செய்த  எனது  மரபு  இதழ்  தமிழ் இலக்கியத்திற்கு   அவரூடாக  வழங்கிய  பங்களிப்பு  நல்வரவாகும்.
எஸ்.பொ.   எப்பொழுதும்  தமது  படைப்புகளுக்கு  மிகவும்   சிறிய தலைப்புகளையே    வைப்பார்.    அது   சிறுகதையாக  இருந்தாலும் கட்டுரையாக   இருந்தாலும்  விமர்சனமாக  இருந்தாலும்  பத்தி எழுத்துக்களாக   இருந்தாலும்  அவற்றுக்கு  அவர்  சூட்டும் தலைப்புகள்   அலாதியானவை.
மரபு    இதழில்  அவர்  எழுதிய  நனவிடை   தோய்தல்    தொடரில் ஒவ்வொரு    அத்தியாயத்திற்கும்  அவர்  சூட்டிய தலைப்புகளைப்பாருங்கள்.
போர்,    பணம்,  பஞ்ஞீலம்,  ரதம்,  புதிசு,  வெளி,  கல்வி,  பேர்,  கோலம், பாடு,   சுவை,  குளம்,  கோயில்,  கரை.  இவ்வாறு   14   அத்தியாயங்களில்  அந்தக்காலத்து  வடமாகாணத்தின் பண்பாட்டுக்கோலங்களை - அவர்களின்  வாழ்க்கை  முறைகளை சடங்குகள்    -  சம்பிரதாயங்களை   - நம்பிக்கைகளை - அனுட்டானங்களை  -   உறவு  முறைகளை   எல்லாம்  இலக்கிய நயத்துடன்   எளிமையாக  சித்திரித்தார்.
கறுத்தக்கொழும்பான்    மாம்பழமும்,    ஏ.போட்டி,    மொரிஸ் மைனர் கார்களும்,    இலுப்பை    மரங்களும்,  வண்ணான்  குளமும், பிரதட்டையும்,    அவரது    நனவிடை    தோய்தலில்   வரும். என்னுடனான     உரையாடலில்  அவருக்கு  எனது தந்தையாரைப்பற்றியும்    சொல்லிவிட்டேன்.  அவர்  அக்காலத்தில்  ஒரு    கார் வைத்திருந்தார்.  எங்கள்  வீட்டு    ஒழுங்கைக்குள்  அதனை செலுத்த    முடியாது.  அவ்வளவு    ஒடுக்கம்.  அதனால்  அவர் ஒழுங்கைக்கு   அப்பால்  சற்றுத்தூரத்திலே    நிறுத்திவிட்டு  நடந்தே வீட்டுக்கு   வருவார்.  அச்சமயம்  பார்த்து  அந்தக்காரை   வேடிக்கை பார்க்க   ஊரே   திரண்டுவிடும்.  அதனை   ஒரு  புதிய  வஸ்துவாகவே எம்மவர்கள்   அன்று  கண்ட  காட்சி  பற்றி  சொன்னதும்  எஸ்.பொ. அதனைக்கூர்ந்துகேட்டு   மனதில்  பதியவைத்துக்கொண்டார்.
 பின்னர்  -  யாழ்ப்பாணத்தில்  அன்று  ஓடிய  கார்கள்  பற்றிய அத்தியாயத்தில்   எனது  தந்தை   பற்றியும்  அவரது  கார்   பற்றியும் எழுதியிருந்தார்.
அவரிடம்   எதனையும்  புறம்  ஒதுக்காமல்  கூர்ந்து  பார்க்கும் திறனும்   பெற்றுக்கொண்டதை   நினைவில்  தக்கவைத்து தருணம்  வரும்பொழுது  பதிவுசெய்துவிடும்   நினைவாற்றலும் எம்மையெல்லாம்  வியக்கவைப்பவை.   அவர்  மரணிக்கும்  வரையில் நினைவாற்றல்  மிக்கவராகவே  வாழ்ந்தார்.   இது  அவருக்கு  கிட்டிய பாக்கியம்.
நாம்   பலவற்றை    உடனடியாகவே  மறந்துவிடுவோம்.  யாராவது நினைவு படுத்தல் வேண்டும்  என்று  எதிர்பார்ப்போம்.
ஆனால் -   எஸ்.பொ.வுக்கு  அவரது  பால்யகாலம்  முதல் அண்மைக்காலம்   வரையில்  மனதில்  நிரந்தரமாகவே   தங்கியிருந்தது.   அதனால்தான்  அவரால்  அந்த  நனவிடை   தோய்தல் தொடரை    எந்தவித  தங்கு  தடையுமற்று  எழுத  முடிந்தது.
குறிப்பிட்ட    தொடர்  பின்னர்  அவர்  சென்னையில்  தொடக்கிய  மித்ர பதிப்பகத்தினால்  1992   ஆம்  ஆண்டு  வெளியிடப்பட்டது.   மீண்டும் இரண்டாவது   பதிப்பும்  வெளியாகியது.  அந்த  நூலில்  முன்னுரையை எழுதும்    பாக்கியமும்  எனக்கு  கிட்டியது.
அந்த  முன்னுரையின்  இறுதியில்  இவ்வாறு  எழுதியிருந்தேன்:
நனவிடை   தோய்தல்   புதிய    இலக்கிய  முயற்சி.  நடை புதிது. அமைப்புப்புதிது.   நோக்கம்  புதிது.  அநுபவம்   புதிது.  ஆக்கம்  புதிது. இதனால்   ஈழத்து  இலக்கியம்  மேலும்  வளம்பெறுகின்றது.
எஸ்.பொ.வின்   நினைவாற்றல்  நம்மை    பிரமிக்கவைக்கின்றது.   அவர்   தமிழ்  எழுத்துலகில்  ஒரு  தேர்ந்த CRAFTSMAN.   அற்புதமான  CREATIVE  ARTIST.   சொற்களின்   சுருதிகளை   அறிந்த எழுத்தாளர்.  ஈழத்தின்  ஏனைய  பகுதிகளின்  மண்வாசனைகளையும் அநுபவங்களையும்    இலக்கியமாக்கித்தரக்கூடிய  வல்லவர். எஸ்.பொ.வின்    அநுபவங்கள்  அனைத்தும்  இலக்கியமாக  நிலைத்தல் வேண்டும்    என்பதே  என்  ஆவல். -    
என்று  1992  ஆம்   ஆண்டு செப்டெம்பர்    மாதம்   3   ஆம்    திகதி  அந்த  முன்னுரையை   எழுதியிருந்தேன்.
அந்த    முன்னுரை   தீர்க்கதரிசமானதும்  மகிழ்ச்சியானதும்  மனதிற்கு    நிறைவானதுமாகும்.  ஆம்,  அவர்  அதன்  பின்னர்  மரபு இதழில்   மகாவம்ச   என்ற    தொடரும்  எழுதினார்.  அத்துடன்  மேலும்   பல  நூல்களை    எழுதினார்.  ஆயிரக்கணக்கான  பக்கங்களில் எழுதினார்.    அவர்  தமிழில்  பல்லாயிரம்  பக்கங்கள்  எழுதிய  எழுத்து வேந்தர்.    புதிய  புதிய  சொற்களை   தமிழுக்கு  அறிமுகப்படுத்திய எழுத்துச்சித்தர்.
அவர்   மறைந்தாலும்  அவரது  எழுத்துக்கள்  என்றும்  தமிழ் உலகத்தில்  வாழ்ந்துகொண்டிருக்கும்.   அவர்  தமிழ்  இலக்கியத்தின் ஊடாக    வாழ்ந்துகொண்டிருப்பார்.  அவருடைய  காலத்தில்  நாமும் வாழ்ந்தோம்   என்பதும்    மகிழ்ச்சியானது.
இந்த    உரையை   இங்கு  சமர்ப்பிப்பதற்கு  எனக்கு  ஒரு  சந்தர்ப்பம் வழங்கியதற்கும்   அதில்  நான்  முன்னர்  நடத்திய  மரபு  இதழ் பற்றிச்சொல்வதற்கும்    எஸ்.பொ. வுடனான  எனது  நினைவுகளை பகிர்ந்துகொள்வதற்கும்   களம்  தந்த  நண்பர்  முருகபூபதிக்கும்  எனது    உரையை    கேட்ட  தலைவர்  உட்பட  சபையினருக்கும்  எனது நன்றி.   வணக்கம்.
---0---



No comments: