அபலையின் குரலில் பதிவு செய்த நாவல் - முருகபூபதி

.
அவிழ்க்கமுடியாத   முடிச்சுகள்   நிரம்பியதுதான்   வாழ்க்கை.
எழுத்தாளனுக்குள்    ஒளிந்திருந்த    உண்மைகளை அபலையின்   குரலில்   பதிவு செய்த  நாவல்
                                          
( அவுஸ்திரேலியா   தமிழ்  இலக்கிய  கலைச்சங்கம்  அண்மையில்  மெல்பனில்  நடத்திய  நாவல்  இலக்கிய அனுபவப்பகிர்வில்  சமர்ப்பித்த   கட்டுரை)


ஸ்ரிபன்  செவாக் (Stefan Zweig)  எழுதிய  Letter from an Un-known Woman  என்ற   குறுநாவலின்   தமிழ்  மொழிபெயர்ப்பு  அபலையின்  கடிதம்.
 Stefan Zweig    ஜெர்மனியில்  மூத்த  படைப்பாளி.  இவர்  1881  இல் வியன்னாவில்   பிறந்து  1942  இல்   தமது  60   வயதில்  பிரேசிலில் மறைந்தார்.
ஆனால் -  அது  இயற்கை  மரணமல்ல.  அவரும்  அவரது மனைவியும்  நஞ்சருந்தி  தற்கொலை    செய்துகொண்டதாகவே இந்நாவலை   தமிழுக்கு  வரவாக்கிய  இலங்கையின்  மூத்த படைப்பாளி    செ.கணேசலிங்கன்   இந்நூலின்   முதல்  பதிப்பில்  1965 இல்   பதிவு செய்துள்ளார்.
அதன்பிறகும்  இந்த  நாவல்  இரண்டாம்  பதிப்பில் வெளியாகியிருக்கிறது.   இந்தப்படைப்பாளிபற்றிய  பல சுவாரஸ்யமான   தகவல்களையும்  துயரமான  செய்திகளையும் நீங்கள்    Google   இல்    தேடிப்பார்க்கலாம்.
அவர்   மன  அவஸ்தைக்குள்ளாகி  விரக்தியின்  விளிம்பிற்குச்சென்று மன  அழுத்தத்தினை   குறைப்பதற்கு  எடுக்கும்  மருந்தை   அளவுக்கு அதிகமாக   உட்கொண்டே   மரணித்துள்ளார்.  அவரது  மருந்தே அவருக்கு  விஷமாகியிருக்கிறது  என்ற  சோகச்செய்தி பதிவாகியிருக்கிறது.கடவுளும்   கிழவனும்   முதலான    உலகப்புகழ்பெற்ற படைப்புகளைத்தந்த  நோபல்  பரிசு  பெற்ற   ஹெமிங்வேயும் இவரைப்போலத்தான்   தற்கொலை   செய்துகொண்டார்.     Stefan மனஅழுத்தம்   போக்கும்  மருந்தை   அளவுக்கு  அதிகமாக உட்கொண்டார்,    ஹெமிங்வே   தன்னைத்தானே  துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு  தற்கொலை  செய்துகொண்டார்.
தமிழில்   நான்  அறிந்த  வரையில்  கவிஞர்கள்தான்  இலங்கையிலும்   தமிழ்நாட்டிலும்  தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.
ஏன்  இதனை   இங்கே  குறிப்பிடுகின்றேன்  என்றால்  இவ்வாறு மனவிரக்தியடையும்   படைப்பாளிகளுக்கும்  பல  பக்கங்கள் இருக்கின்றன.    அவர்களின்    இயல்புகள் -  செயற்பாடுகள்  அவர்களது படைப்பு    இலக்கியத்திலும்  எப்படியோ    பிரதிபலித்துவிடும். எம்மவரிடம்   குறிப்பாக  வாசகர்களிடம்  ஒரு  பழக்கம்  இருக்கிறது.
ஒரு  நாவலை   அல்லது  சிறுகதையை  - கவிதையை   படித்தவுடன் அதனை   எழுதிய  படைப்பாளியை   நேரில்  சந்திக்கும்பொழுது                  “ உங்கள்   படைப்பு  படித்தேன்.  என்ன... அது  உங்கள்  சொந்த அனுபவமா...?”   என்ற  கேள்வியை  கேட்கத் தவறமாட்டார்கள். ஒவ்வொரு   படைப்பாளியும்  தமது  வாழ்வின்  தரிசனங்களையே தமது  படைப்புகளில்  பிரதிபலிக்கின்றார்கள்.
புனைவும்  யதார்த்தமும்  இரண்டறக்கலந்ததுதானே   படைப்பு இலக்கியம். 
 தமிழில் மொழிபெயர்க்கும்பொழுது  ஒவ்வொருவரும்   ஒவ்வொரு விதமாகச்சொல்லக்கூடும்.   குறிப்பாக   ஒருவர்   எனது  மண்   என்று தமிழில்   எழுதியதை    மொழிபெயர்த்தவர்  My Soil  என எழுதினார்.


அது  Understand   என்பதை  நேரடியாக  தமிழுக்கு  கொண்டுவந்தால் எப்படி   அபத்தமாகிவிடுமோ  அவ்வாறு    ஆகிவிட்டது  எனது  மண்.
கணேசலிங்கன்   மூத்த   படைப்பாளி  அத்துடன்  60   இற்கும்   அதிகமான   நூல்களை   எழுதியிருப்பவர்.  இலங்கை  எழுத்தாளர்களில் அதிக  எண்ணிக்கையில்  நாவல்ளை   எழுதியிருப்பவர்.
தற்பொழுது    தமிழ்நாட்டில்   குமரன்    பதிப்பகத்தை   நடத்திவருகிறார்.
அவரது    முதல்  நாவல்    நீண்ட பயணம்.    நான்   1970  களில்  படித்த முதல்  நாவல்.  அன்று  முதல்  நான்  அவரது  வாசகன்.   Stefan இன் இந்த  நாவலை  அவர்  மொழிபெயர்த்துள்ள  பாங்கு  மிகவும் சிறப்பானது.   அதனால்  அதனை   தொடர்ந்து  படிக்க  ஆவலுற்று  சில மணிநேரத்துக்குள்    படித்துவிட்டேன்.     நீங்களும்    இதனை   ஒரே வாசிப்பில்   இரண்டு  மணித்தியாலங்களுக்குள்  படித்துவிடமுடியும்.
இந்நாவலின்  முதல்  வசனமே    படிப்பதற்கான ஆவலைத்தூண்டுகிறது.
இரா – என்ற   புகழ்பெற்ற  நாவலாசிரியர்    விடுமுறையை   கழிக்க மலைநாட்டுக்குச்சென்றிருந்தார். -   என்று   தொடங்குகிறது   நாவல்.
முதல்   வரியிலேயே  யார்  இந்நாவலின்  நாயகன்  என்பது  எமக்கு தெரிந்துவிடுகிறது.   அந்தப்பாத்திரம்  பற்றி  பதிவுக்காக   பல பக்கங்களில்   சுற்றிவளைத்து  எம்மை   அழைத்துச்சென்று அலுப்பூட்டாமல்    உடனடியாகவே   எம்மை    கதைக்குள் அழைத்துவிடுகிறார்   Stefan.
மலைநாட்டுக்குச்சென்றிருந்தார்  என்ற  வரிகள்   அடுத்து  அவர் மலைநாட்டின்   பசுமையை   அதன்   இயற்கை  எழிலை சித்திரிக்கப்போகின்றார்   என்றுதான்  நினைத்திருப்போம்.    ஆனால் காட்சி    சடாரென்று   திரும்புகிறது.
அந்த  இரா   என்ற   எழுத்தாளர்,  வியன்னா  ரயில்  நிலையம்  வந்து அங்கே  அன்றைய  தினசரியைப்பார்த்தபின்புதான்  அன்றைய  திகதி அவருக்குத் தெரிகிறது.    அது  அவருக்கு    முக்கியமான   திகதி. அன்றுதான்   அவரது   பிறந்த தினம்.
 முதல்    பந்தியிலேயே    எத்தனை   செய்திகள். படைப்பிற்குத்தேவையான  தொய்வற்ற  இறுக்கம்தான்   ஒரு படைப்பின்    வெற்றியாக   இருக்கமுடியும்.
( இங்கே   மீண்டும்  ஒரு   விடயத்தை  அழுத்தமாகச்சொல்கின்றேன். – அதாவது   ஒரு  எழுத்தாளர்  பற்றி  மற்றுமொரு  எழுத்தாளர் சொல்லும்   கதைதான்    இந்த  அபலையின்  கடிதம்.)


வீடு  திரும்பும்  அவருக்கு  வந்திருக்கும்  ஒரு  கட்டுக்கடிதங்களை வேலையாள்   தருகின்றான்.  அவற்றில்  சில அவருக்குத்தெரிந்தவர்களினது.    அவரது    வாசகர்களாகவும் இருக்கலாம்.   ஆனால் ,  அவற்றுள்  சற்றுக்கனமான  ஒரு  கடித  உறை   அவரை   ஆச்சரியத்தில்  ஆழ்த்துகிறது.  அதில்  முகவரி எழுதியுள்ள   கையெழுத்தை  அன்றுதான்  முதல்  முதலில் பாரக்கிறார்.
பிரிக்கிறார்.   பல   டசின்  தாள்களில்  ஒரு  நீண்ட கட்டுரையாகவே விரிகிறது   அக்கடிதம்.  கடிதம்  சொல்லும்  கதைதான்  இந்த  நாவல்.
அதனால்  மிகவும்  வித்தியாசமான  படைப்பாகிவிடுகிறது.
இரா   என்ற   அந்த  எழுத்தாளரை   ஒருதலைப்பட்சமாக  காதலித்து தனது   உடலையும்  அவருக்கு  அர்ப்பணித்து  அதன்  பரிசாக  ஒரு ஆண்  குழந்தையையும்  பெற்றெடுத்து,  பறிகொடுத்துவிட்ட நிலையில்   அநாதரவான  ஒரு  இளம்பெண்ணின்  அவலம்தான்  இந்த அபலையின்   கடிதம்.
இவ்வாறு   கதை  சொல்லும்  உத்தியை   நீங்கள்  சிறுகதைகளில் பார்த்திருக்கலாம்.   நான்   கூட    ஆண்மை   என்ற   சிறுதையை   அந்த உத்தியில்   முன்னர்  எழுதியிருந்தேன்.  அபலையின்  கடிதம்,  அவளது    இயல்புகளை , உணர்வுகளை,   இழப்புகளை , இயலாமையை காதலின்  மெல்லிய   உணர்வுகளை,  அதிலிருக்கும்  இன்பம்  கலந்த சோகத்தையெல்லாம்  துல்லியமாகவும்   நுட்பமாகவும் பதிவுசெய்கிறது.
அவள்  தன்னைக்காதலித்தாளா...?  என்பது  தெரியாமலேயே  அவர் அவளுடன்  முதலில்  நட்பாகிறார்.  நெருங்கி  வருகிறார்.   அவளுடன் உறவும்   வைத்துக்கொள்கிறார்.    அவருக்கு   மேலும்  பல    சிநேகிதிகள். ஆனால்  - அவர்கள்  அவரது  காதலிகள்  அல்ல.
அவரது   தேவைகளுக்கு  வந்து  சென்றவர்கள்தான்.   இதனையெலலாம்   அயல்  வீட்டிலிருந்து  பார்த்தவாறே  அவரை வெறுக்காமல்   ஒருதலைப்பட்சமாக  காதலித்த இளம்வயதுப்பெண்தான்    அந்த    அபலை.   அவள்    ஊரைவிட்டும் செல்ல   நேரிடுகிறது.
தனது    குழந்தையை   நோய்க்கு   பறிகொடுத்துவிட்டு  துவண்டுவிட்ட    நிலையில்   அவள்   தனது  உணர்ச்சிகளைக்கொட்டி  எழுதும்    கடிதம்   நாவலாகவே   விரிகிறது.
என்ன    வேடிக்கை    என்றால்    அந்தப் பிரபலமான    எழுத்தாளர்   தனது     பிறந்த தினத்தன்றுதான்   அக்கடிதம்  பார்க்கின்றார். வாசகர்களின்   கடிதங்களை  அதுவரையில்  பார்த்தவர்,  அவற்றினால் தம்மை  தாமே  சுயவிமர்சனம்    செய்துகொள்ளாவிடினும்   அவரை ஒரு தலைப்பட்சமாக  காதலித்த   அந்த    அபலையின்   கடிதம்    அவரை சுயவிமர்சனத்திற்குள்ளாக்குகிறது.
அது   அவருக்கு  வந்த  முதலாவது  வித்தியாசமான  கடிதம்.  ஆனால் -  அந்த   அபலைக்கோ  அதுவே  அவள்  எழுதிய  அவளது  வாழ்வின் இறுதிக்கடிதம். 
அவள்   தனது  அன்புக்குழந்தை  சென்ற  இடத்துக்கே போய்விடுகிறாள்.    அவளது    மரணம்  பல   கேள்விகளை எழுப்புகிறது.
ஏன்...அவள்  அவரை   தொடர்புகொண்டு  தனது  காதலை வெளிப்படுத்தவில்லை...?    அந்தக்குழந்தை   உங்களுடையதுதான் என்று    மரணிக்கும்   வரையில்   சொல்லாமல்   அக்கடிதம்   மூலமே ஏன்   சொன்னாள்...?
ஸ்ரிபனின்   தனிப்பட்ட    வாழ்விலும்    பல  பெண்கள்  வந்திருப்பது தெரிகிறது.    அப்படியாயின்  இது  அவரது  சொந்தக்கதையா...? தன்னைத்  தானே  சுயவிமர்சனம்  செய்து  கொள்வதற்கு அவரைத்தூண்டிய    கதையா...?    இறுதியில்  அவரும்   மன அழுத்தத்தினால்தானே   தனது  உயிரை   மாய்த்துக்கொண்டார் தனித்தும்   அல்ல   அவர்    தனது   இரண்டாவது   மனைவியுடனும் இணைந்தே    மரணத்தை   தழுவுகின்றார்.
எனக்கு   இந்த  நாவலைப்படித்தபொழுது  அண்மையில்  பார்த்த சிங்களத்திரைப்படம்தான்    நினைவுக்கு    வந்தது.
எஸ்வெசும    (The Compensation )   என்ற     இத்திரைப்படம் இலங்கையில்    சுதந்திரத்துக்கு  முற்பட்ட  ஒரு  காலகட்டத்தையும் சுதந்திரம்   கிடைத்த   நாளையும்    சித்திரிக்கின்றது. அக்காலப்பகுதியில்   மலேரியா  பரவியிருந்த  இரத்தினக்கல்  அகழ்வு    மேற்கொள்ளும்    பிரதேசம்   பற்றிய    கதை.
ஜோ  அபேவிக்கிரம    திறம்பட    நடித்த  படம்  எஸ்வெசும. பேர்ணார்ட்    ரத்நாயக்கா   திரைக்கதை  எழுதி  இயக்கிய  படம்.
ஐம்பது   ஆண்டுகளுக்கு  முன்னர்  இரத்தினக்கல்  அகழ்வுசெய்யும் நதிக்கரையோரக்கிராமத்தின்    கதை.     கரேலிஸ்   (ஜோ. அபேவிக்கிரம)    இளம்   குடும்பஸ்தனாக  மனவியுடன்  வாழ்ந்த காலத்தில்   செய்த  மூன்று  கொலைகளுக்காக  பிராயச்சித்தம்  தேடி பொலிஸ்  நிலையத்தில்   சரண்  அடையும்    காட்சியுடன்   Flash  back   உத்தியில்  தொடங்கும்  படம்.
தனக்கும்   தனது  மனைவிக்கும்  மாத்திரமே  தெரிந்த அக்கொலைச்சம்பவம்   அவருடன்  நீண்டகாலமாகவே குற்ற உணர்வுடன்   உறுத்துகின்றது.   காலப்போக்கில்   மனைவியும்   இறந்த பின்னர்   அவரது  உடலை  தகனம்  செய்துவிட்டு  வந்து பொலிஸ் நிலையத்தில்  சரண்புகுந்து  தன்னை   கைதுசெய்து  சிறையில் அடைத்து  உரிய  தண்டனை   தருமாறு  கேட்கிறார்.
அவருக்கு   மனநோய்தான்  பீடித்திருக்கிறது  என்று  பொலிஸார் அவரை  களைத்துவிடப்பார்க்கிறார்கள்.   ஆனால்,  அவர்  பிடிவாதமாக பொலிஸ்    நிலையத்திலேயே  தரித்துவிடுகிறார்;.
 மிகவும்  பழைமையான  கறையான்  அரித்துவிட்ட  புகார்  பதியும் பேரேடுகளை  எடுத்த  பொலிஸார்  அவற்றை     தூசு தட்டிப்பார்க்கின்றனர்.    ஐம்பது  ஆண்டுகளுக்கு   முன்னர்    காட்டுக்கு வேட்டைக்குச்சென்ற   மூவர்  திரும்பி  வரவில்லை  என்ற  தகவல் மாத்திரம்    பதிவாகியிருக்கிறது.
அம்மூவரையும்  தான்தான்   கொன்றதாகவும்  அதற்கான காரணத்தையும்   கரோலிஸ்  (ஜோ அபேவிக்கிரம) என்ற பாத்திரம் சித்திரிப்பதே   இத்திரைப்படம்.
இத்திரைப்படத்தின்  செய்தி:   உண்மை  தெரிந்த  மனைவியும் இறந்தபின்னர்   அந்த  மர்மத்தை  தன்னுள்வைத்திருப்பதற்கு  மிகவும் கஷ்டமாக  இருக்கிறது   என்பதே   அந்தப்பாத்திரத்தின்    வாதம். மனச்சாட்சி   அவரை   தொடர்ந்து   ஆட்டிப்படைக்கிறது.
தனக்கு  விடுதலை  வேண்டுமானால்  தான்  முழு  உண்மைகளையும் சொல்லி   அதற்குரிய  தண்டனையை   பெறுவதுதான்  ஒரே  வழி என்பதே  அந்தப்பாத்திரம்  முன்வைக்கும்   வேண்டுகோள்.
என்றாவது  ஒரு  நாள்   உண்மைகள்   வெளியாகவேண்டும்.
 ஸ்ரிபனின்  அபலையின்    கடிதம்  நாவலும்   அவ்வாறே. அந்தப்பெண்ணின்   அந்தரங்கம்  என்றாவது  ஒருநாள்  அவளது இறுதிக்கடிதம்   மூலம்  அவள்  ஒருதலைப்பட்சமாக  காதலித்த  அந்த    புகழ்பெற்ற   எழுத்தாளருக்கு   தெரியவேண்டும்   என்ற நோக்கத்தை  கொண்டிருக்கிறது.
இந்நாவலின்   தொடக்கம்  அவிழ்க்க  முடியாத  முடிச்சுகளுடன் தொடங்குகிறது.    (பதிப்புரை  உட்பட)   முடிவும்    அவிழ்க்க    முடியாத முடிச்சுடன்   நிறைவு   பெறுகிறது.
வாழ்க்கையே    அப்படித்தான்.
---0---
letchumananm@gmail.com

 


No comments: