நான் பார்த்து ரசித்த (Super Singer 4 ) ஜத்ரா மியூசிக்கல் நைற் - செ.பாஸ்கரன்

.
கனவா நீ காற்றா என்ற அந்தப்பாடல் காற்றில் மிதந்து வருகிறது இன்ப இசை வெள்ளத்தில் முக்குளிக்க காத்திருந்தவர்களின் கரவோசை பரமட்டா றிவர்சையிட் மண்டபத்தை நிறைக்கின்றது. மண்டபம் நிறைந்திருந்தது போலவே கரவொலியும் எத்திசையும் எழுகிறது. இது கனவா என்று எண்ணத்தோன்றிய போதும் இல்லை நிஜம்தான் என்று எம்முன்னே வெள்ளை உடையோடு அரங்கத்தில் நின்று பாடுகின்றார் பிரபல பின்னணிப்பாடகரான ஸ்ரீனிவாஸ் அவர்கள் பக்கத்தில் விஜே தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் அறிவிப்பாளர் பாவனா.

சனிக்கிழமை இரவு (26.04.2014) பரமட்டா றிவர்சையிட் மண்டபம் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருக்கிறது. மண்டபத்தை சுற்றியிருந்த வீதிகள் கார்களால் நிறைந்து கிடக்கிறது. சற்று தாமதமாக வந்தவர்கள் மிகத்தூரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓடிஓடி வருகின்றார்கள்.யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் ஜத்ராவின் ஆதரவில் நிகழ்த்திய இந்த நிகழ்ச்சி மண்டபம் நிறைந்த மக்களோடு 5.30 மணிக்கு விஜே தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் அறிவிப்பாளர் பாவனா வினால் ஆரம்பிக்கப்பட்டது.







ஸ்ரீனிவாஸ் அவர்கள் கனவா நீ காற்றா என்று பாட சுப்பர் சிங்கர் இசைக்கலைஞர்கள் அற்புதமாக இசையை பரவ விடுகிறார்கள். தொலைக்காட்சியில் இந்த இசைக்குழுவின் இசையைக் கேட்கின்றபோது நான் வியந்த ஒரு விடயம் பாடல்வரிகள் மிகத்தெளிவாக கேட்கும்படியாக இசை தொடர்து வந்து கொண்டிருக்கும். அந்த வகையான இசையை அவர்கள் இங்கும் மிகத்திறமையாக தந்துகொண்டிருந்தார்கள். அதற்காக அதன் குழுத்தலைவர் மணியை பாராட்டத்தான் வேண்டும். 




நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பாக இந்த இசைக்கலைஞர்களை எனது புகைப்பட கருவிக்குள் பிடித்துவிடுவதற்காக சென்றேன் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் இசைக்கருவிகளை சுருதி கூட்டிக்கொண்டிருந்தார்கள். அந்த நிலையிலேயே அவர்களை எனது புகைப்படக் கருவி பதிந்து கொண்டது.

மேடையில் ஸ்ரீனிவாசைத் தொடர்ந்து பாவனா குட்டிப்பெண்ணான மெலோடிக்குயீன் பார்வதியை கட்டி அணைத்தபடி அறிமுகம் செய்துவிட்டு பார்வதி இப்போ மெட்ராஸ் பாசையில் என்னைத் திட்டுவார் என்று கூறியதும் திட்டினாரே பாருங்கள், மெட்ராஸ் பாசை தூள்கிளம்பியது. பாடல் திறமை மட்டுமல்ல நடிப்புத்திறமைகளும் இவர்களிடம் அமைந்திருக்கிறது என்பதை பாவனா சுவாரசியமான முறையில் கொண்டுவந்ததை ரசிகர்கள் ரசித்தார்கள் இதை கரவொலிமூலம் காணக்கூடியதாக இருந்தது. தொடர்ந்து பார்வதி தேடும் கண்பார்வை என்ற இனிமையான பாடலை அவரின் இனிமையான குரலில் பாடினார்.

தொடர்ந்து சரத் சந்தோஸ் அறிமுகப்படுத்தப்பட்டு ராகங்கள் பதினாறு உருவான வரலாறு என்ற எஸ் பி பாலாவின் தில்லுமுல்லு படப்பாடலை மிக அற்புதமாக சங்கதிகளையெல்லாம் அள்ளி வீசிப்பாடினார்.பாடிமுடிந்ததும் பாவனா தெலுங்கில் சில வசனங்கள் பேசுவார் என்றதும் அவர் பேசியது புரியாவிட்டாலும் அவருடைய ஆழுமையை எடுத்துக்காட்டியது. பாவனா கூறியதுபோல் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அவரைத் தொடர்ந்து சோனியா அறிமுகப்படுத்தப்பட்டார் செண்பகமே செண்பகமே என்ற பாடலை கணீரென்ற குரலில் பாடி சபையோரின் பலத்த கரவொலியைப் பெற்றுக்கொண்டார். அவரும் சில வசனங்களை பல ரசங்களில் ( சோகம் சிரிப்பு சந்தோசம்) செய்து காட்டினார்.




அவரைத் தொடர்ந்து பாவனா மேடையில் சையத்தை அழைக்க ஸ்ரீனிவாசன் வந்து பாவனா, சையத் இன்னும் வந்து சேரவில்லை என்ன செய்யலாம் என்று கேட்டதும் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. பாவனா இல்லை நாங்கள் கூப்பிடுவோம் எங்கிருந்தாலும் வருவார் என்று சொல்லி மீண்டும் அழைக்க சையத் மண்டபத்தில் மக்கள் மத்தியில் இருந்து செம்மீனே என்ற பாடலை பாடிக்கொண்டே புறப்பட்டு வந்தபோது அரங்கமே அதிர கரகோசம் எழுந்தது. பாவனா அறிமுகம் செய்தபோது இவர் எங்கள் மைக்கல் ஜக்சன் என அறிமுகப்படுத்தினார்.

அவரைத் தொடர்ந்து என்ன சொல்லப்போகிறாய்  என்ற பாடலோடு அரங்கில் நுளைந்தவர் சுப்பசிங்கர் வெற்றியாளர் திவாகர். சங்கர் மகாதேவனின் பாடல்கள் நன்றாகவே திவாகருக்கு பொருந்துகின்ற பாடல்கள் அந்தவகையில் அவர் தேர்வுசெய்திருந்த சந்தனதென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் என்ற பாடல் அவருக்கும் பலத்த கரகோசத்தை அள்ளித்தந்தது.

தொடங்கிய நேரம் தொடக்கம் எந்த தொய்வும் இல்லாது நிகழ்ச்சியை நகர்த்திக்கொண்டிருந்தார்கள். குறிப்பாக அறிவிப்பாளராக வந்த பாவனா அளவோடும் சுவையோடும் பேசிக்கொண்டு சென்றது நன்றாகவே இருந்தது.
உருகுதே மருகுதேபாடலை திவாகரும் சோனியாவும்பாட குறுக்குசிவத்தவளே பாடலை சரத்தும் பார்வதியும் பாட அப்பிள் பெண்ணே என்று ஸ்ரீனிவாஸ் பாட அவரோடு சேர்ந்துகொண்ட சோனியா மின்சாரப்பூவே பாடலையும் பின்பு ஜவரும் சேர்ந்து சிங்கப்பூரு சிங்காரி பாடலை பாடி ரசிகர்களை கொள்ளை கொண்டுவிட்டார்கள். மீண்டும் மெலோடிக்குயீன் பார்வதி சின்னத்தாயவள் தந்தராஜாவே என்ற ஜானகி பாடிய தளபதிபடப்பாடலை பாடி நம்மை கண்கலங்க வைத்துவிட்டார்.

சிக்புக்கு ரயிலே பாடலை சையத் பாடிமுடிந்ததும் மழையே மழையே பாடலை மிக அற்புதமாக சந்தோஸ் பாடி நம்மை கவர்ந்து கொண்டார். மீண்டும் திவாகர் தனியே தன்னந் தனியே என்ற சங்கர் மகாதேவன் ரிதம் படத்திங்காக பாடிய பாடலை பாடினார் அவரோடு மற்றைய அனைவரும் கலந்து கொள்ள அரங்கமே களைகட்டியது. அதைத் தொடர்ந்து சோனியாவின் அழகுமலராட என்ற பாடலோடு இடைவேளை 20 நிமிடங்கள் தரப்பட்டது.





இடைவேவைளையில்  யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் சிற்றுண்டி உணவு வகைகளை வழங்கிக்கொண்டிருந்தார்கள். சிற்றுண்டியும் மசாலா தேனீரும் அருந்தியபோது ஊர்ப்பாடசாலை கன்ரீன் நினைவு பொறிதட்டியது. அத்தனை ரசிகர்களுக்கும் ஒழுங்காக உணவு பரிமாறிய யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் பாராட்டப் படவேண்டியவர்களே. பகி துசி ,சசி ,ராஜ்குமார் இப்படி பலர் தொண்டர்களாக நி;ன்றதைக் காணக்கூடியதாக இருந்தது.

இடைவேளை விட்டு மீண்டும் தொடங்கியபோது குரல்வல்லவரான அனந்த் வைத்தியநாதன் பாவனாவால் மேடைக்கு அழைக்கப்பட்டார் அவரும் ஒருசில வார்த்தைகள் பேசிவிட்டு குரல் பயிற்சி ஒன்றை அவுஸ்ரேலியாவில் உள்ள பிள்ளைகளுக்கு வழங்கப்போவதாக கூறினார் இது இங்குள்ள பிள்ளைகளுக்கு ஒரு அரிய சந்தர்ப்பமாகும்.

அதன் பின்பு பல பாடல்கள் பாடப்பட்டது அத்தோடு மறைந்த பாடகர்களான    ரி எம் எஸ் , பி பீ ஸ்ரீனிவாஸ் , தியாகராஜபாகவதர் போன்ற மேதைகளுக்கு மரியாதை செய்வதாக ஸ்ரீனிவாஸ் சில பாடல்களின் சில வரிகளை பாடினார். அத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கும் மேதைகளான எஸ் பி பாலா ,கே ஜே ஜேசுதாஸ்ஆகியோரின் சில பாடல்கள் பாடப்பட்டது. தொடர்ந்து மாடிமேலே மாடிகட்டி பாடல் பாடப்பட்டது. ஸ்ரீனிவாஸ் பாவனாவையும் ஒரு பாட்டுபாடும்படி கேட்க அவரும் Who is the hero என்ற பாடலை நன்றாகவே பாடினார் அவரோடு பார்வதி இணைந்துகொண்டார்.

மீண்டும் மெலோடிக்குயீன் பார்வதி கிழக்கு சீமையிலே படப்பாடலான தென்கிழக்கு சீமையில என்ற பாடலைப்பாடி மனதை நெகிழ வைத்து விட்டார். சுப்பர் சிங்கர் பாடகரான ஹரிகரசுதன் பாடிய ஊதாக்கலரு ரிப்பன் என்ற பாடலை மிக அற்புதமாக திவாகர் பாட  ரசிகர்கள சேர்ந்து கொண்டு பாடினார்கள். தொடர்ந்து என்னுயிரே என்னுயிரே பாடலை ஸ்ரீனிவாசும் சொர்கம் மதுவிலே பாடலை சையத்தும் சந்தோசும் ஆத்தா ஆத்தோரமா பாடலை அனைவரும் சேர்ந்து பாடி ரசிகர்களை உற்சாகமாவே வைத்திருந்தார்கள். இறுதிப்பாடலாக மாமா மாப்பிளே என்று ரசிகர்கள் கேட்க திவாகர் நீயே உனக்கு என்றும் நிகரானவன் என்ற அந்தப்பாடலை பாட வாத்திய இசைக்கலைஞர்கள் ஒரு ராக பிரளையத்தையே உருவாக்கி விட்டார்கள். விதி கூட உன் வடிவை நெருங்காதைய்யா என்ற எண்ணத்தோடு எழுந்து செல்ல மனமின்றி ரசிகர்கள் எழுந்து சென்றார்கள்.

மிக நேர்த்தியாகவும் நேரம் தவறாமலும் இடையிலே மாலை பொன்னாடை என்று வந்து குளப்பாமலும் அழகுற இந்த நிகழ்வான ஜத்ரா மியூசிக்கல் நைற்ரை வழங்கிய யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் மற்றும் ஜத்ரா நிறுவனத்தினர் பாராட்டுக்குரியவர்கள். அத்தோடு பாடகர் ஸ்ரீனிவாஸ் குறிப்பட்டதுபோல் இந்த நிகழ்விற்கு தொடர்பாளராக நின்று இயங்கிய கதிர் அவர்களும் பாராட்டுக்குரியவர்.
ஒரு நல்ல இசை நிகழ்வை பார்த்த நிறைவோடு சனிமாலை அமைந்திருந்தது. மீண்டும் இப்படி ஒரு நிகழ்வை எதிர்பார்த்து காத்திருப்போம்.

































2 comments:

Ramesh said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

Even if an old school boys or girls organised program there is no need for the school song and president speeches. We dont come to see that and waste ou money and time on non entertainment stuff. Have it at your annual general meetings. Waliking up and down throughout the program trying to show off and disturbing the audience who dedont care about their formalities but the program.