சங்ககாலத்தில் பெண்கள்.

.

உலகம் தழுவியதாகவும், நீண்டகாலமாகப் பேசப்பட்டு வருவதாகவும் இருக்கக்கூடிய விவாதப்பொருள் எதுவெனக் கேட்டால் பெண்ணுரிமையே என அடித்துக் கூறலாம்.


“உரிமை என்பது ஒரு பொருளா? எடுத்து வைத்துக்கொண்டு தரமாட்டேன் என்று சொல்லுவதற்கு. நாம் ஒன்றும் சட்டத்தால் தடுக்கப்படவில்லை, நாம் உரிமை என்று கருதுபவற்றை எடுத்துக்கொள்வதுவும் எடுக்காததுவும் எம் சிந்தனையிலேயே தங்கியுள்ளது. ஆண்களில் கைகளில் அல்ல.” என்று யாரோ ஒரு பெண்மணி பெண்ணுரிமை பற்றிக் கூறியதை வாசித்ததாக நினைவு.

உண்மை கொண்டதாகவும் விவாதத்திற்குரியதாகவும் இக் கருத்து தென்படுகின்றது.


உலகளாவிய வகையில் மனிதம் வாழ்கின்ற எல்லா இடங்களிலும் பெண்ணுரிமை பற்றிய கருத்துகளும் முரண்களும்; நிறைந்து கிடக்கின்றன. உயிர்மத் தோற்றகாலத்திலிருந்தே இந்த உரிமை முரண்கள் உருவாகிவிட்டன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

படைப்பளவில் ஆணும் பெண்ணும் நிகரே என்றபோதிலும், வாழ்வில் வெளிப்படுகின்ற ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணங்கள் எவையெவையெனக் கண்டறியும் ஆழமான முயற்சிகள் கடந்த இரு நூற்றாண்டுகளாகத்தான் மேற்கொள்ளப்பட்டன எனலாம். வளர்ச்சி பெற்றதாகக் கருதப்படுகின்ற, வளர்ச்சி பெற்று வருகின்ற எல்லா இனங்களுக்குள்ளும் பெண்ணுரிமை பற்றிய சிந்தனைகளும்; முரண்களும் வலுவாகவே உள்ளன.

பன்முகப் பரப்புகளையும், பல்வேறு தளங்களையும் கொண்டதான ‘பெண்ணியம்’ எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமால் மிக நுட்பமாகக் கையாள வேண்டிய தலைப்பாக உருக்கொண்டுள்ளது. “கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே வேரிற் பழுத்த பலா” என முதிர்கன்னிகளுக்காகக் குரல் கொடுத்த பாரதிதாசனும், பெண்களைக் கனிகளாகப் பார்த்த குற்றத்திற்கு ஆளாகி நின்றார்.

இவற்றை மனதிற்கொண்டு, தமிழ் இலக்கியப்பரப்புக்குள் மட்டுமே நின்று பெண்கள் வாழ்வியலை நோக்க விழைகின்றது இக்கட்டுரை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என உலகப்பொதுமை போற்றிய தமிழரின் ‘பெண்ணியச் சிந்தனை’ எவ்வாறு இருந்தது என்பதைத் தெரிந்துகொள்வது இக்கட்டுரைக்கு மிகப் பொருத்தமாக அமையும்.

அழிவுற்ற பல இலக்கியங்களுக்குப் பின்னாற் தோன்றிய இலக்கண நூல்களில் வரிசையில் நமக்குக் கிடைத்திருக்கும் பழம்பெரும் இலக்கணம் தொல்காப்பியம் என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. இந்த இலக்கணம் ஏனைய மொழி இலக்கணங்களைப் போல, எழுத்தோடும் சொல்லோடும் மட்டும் நின்றவிடாது, மனிதர் வாழ்வுக்கும் இலக்கணம் வகுத்தது என்பதை முன்பொரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

ஆண், பெண் என இரு பகுப்புகளை மட்டுமே கொண்ட மனிதவினத்தின் வாழ்வியல் இயல்புகளைச் சுட்டிக்காட்ட முனைந்த தொல்காப்பியர் தமிழரது வாழ்க்கைமுறைக்கேற்ப, பெண்களது இயல்புகளையும் கடமைகளையும் வரையறுத்திருக்கின்றார். தமிழர் சமூகத்தில் பெண்கள் வாழ்ந்த நிலையைக் கொண்டும், எவ்வாறு வாழ்தல் சிறப்பானது என்பதைக் கருதியும் தொல்காப்பியர் இந்த வரையரைகளை உருவாக்கியுள்ளார் எனக் கருதலாம். 

பொருளதிகாரத்தில் களவியல் என்னும் பகுதியிலேயே இந்த இலக்கணங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.  பெண்ணின் இலக்கணங்களைக் கூறுவதற்கு முன்பாக ஆணின் இயல்புகளைக் கூறுகின்றார் தொல்காப்பியர்.

“பெருமையும் உரனும் ஆடூஉ மேன”     தொ: களவு: 7

ஆண்கள் பெருமைக்குரியவர்களாகவும் நெஞ்சுறுதி கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது இவரது விதி.  அடுத்த நூற்பாவிலேயே பெண்கள் இயல்பையும் கூறிவிடுகின்றார்.

“அச்சமும் நாணமும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற்குரிய என்ப.”  தொ: களவு: 8

பொருந்தாதவற்றைக் காணும் போதும், உணரும் போதும் ஏற்படுகின்ற மருட்சி அச்சம் எனப்பட்டது. இயல்பாகவே பெண்களுக்குரிய வெட்கம் நாணம் எனப்பட்டது. அடக்கமாவிருத்தல் மடம் எனப்பட்டது. இ;வை மூன்றும் பெண்கள் முன்னிறுத்த வேண்டிய இயல்புகள் என்கின்றார் தொல்காப்பியர். பிற்காலத்தில் நான்காவதாக இணைக்கப்பட்ட பயிர்ப்பு என்பது கணவன் அல்லாத பிற ஆடவர் தொடுகையின்போது ஏற்படுகின்ற அருவருப்பு ஆகும் எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

மற்றுமொரு நூற்பாவில் பெண்களின் இயல்புகளை விளக்குகின்றது தொல்காப்பியம்.

“கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்”   தொ: கற்பு: 11

கற்பில் மேம்பட்டும், மிகுந்த அன்பைக் கொண்டவளாகவும், வகுக்கப்பட்ட ஓழுக்க முறைமைகளைக் கொண்டவளாகவும்,  பொறுமைக்குணம் மிக்கவளாகவும், அடக்கம் நிறைந்தவளாகவும் பெண் இருப்பாள். வீட்டுக்கு வரும் விருந்தினரை வரவேற்றுப் போற்றும் மாண்புகளோடு வேறு பலவும் பெண்களுக்குரிய இயல்பாகும் என்கின்றார்.

தொல்காப்பியரின் இக்கருத்துகள் பெண்ணியலாளரின் எதிர்வினைகளுக்கு ஆட்பட்டவை எனினும், அக்காலச் சமுதாய நோக்கில் வாழ்வை வடிவமைக்கும் ஒழுக்கமுறைகளில் மேலாண்மை கொண்டிருந்தவர்கள் பெண்களே என்பது தெளிவு.

பிறிதொரு நூற்பாவில்,

செறிவும் நிறையுஞ் செம்மையுஞ் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பா லன்ன  தொல்: பொருளியல்: 14
                
என்கின்றார் தொல்காப்பியர். பலவற்றை அறிந்து அடங்கியிருக்கும் அடக்கமும், கொடுநோக்குக் கொண்டோர் வயப்படாத மனவலிமையும், நடுநிலைமை கொண்டிருத்தலும், செய்யத்தக்கவற்றைக் கூறுதலும், நன்மை தீமைகளை வேறுபடுத்தி அறிகின்ற ஆற்றல் கொண்டிருத்தலும், தம் உள்ளக் கருத்துகளைப் பிறர் அறிகின்ற தன்மையை அரிதாகக் பெற்றிருத்தலும் பெண்மையின் குணங்கள் என்பது இந்நூற்பா வழி புலனாகின்றது.

வாழ்வின் பதிவுகளான இலக்கியங்களில் கூறப்பட்ட கருத்துகளே இலக்கண வரையறைகளுக்கு அடிப்படையாக அமைந்தன  என்பது ஆய்வாளர் கருத்து. ஆதலால் அக்காலப் பெண்கள் சமூகக் கட்டமைப்பில் முதன்மையிடம் பெற்றிருந்தனர் எனக் கருதலாம்.

கணவன் தவறான வழி சென்று துயருற்று மீள்கின்றபோது, தாய்போல் இடிந்துரைத்து அவனது மனத்துயரத்தை நீக்கி, அவனுக்கு அமைதிமொழி கூறுவதுவும் பெண்ணின் கடன் என்கின்றார் தொல்காப்பியர்.

“தாய்போற் கழறித் தழீஇக் கோடல்
ஆய்மனைக் கிழத்திக்கும் உரிதென மொழிப”   தொல்: கற்பு: 32 

இவற்றைப்போன்று தொல்காப்பியத்தில் ஆங்காங்கே பெண்கள் பற்றிய பல கருத்துகள் கூறப்பட்டுள்ளன. சங்க இலக்கியப் பெண்மாந்தர்களாகத் தலைவி, தோழி, செவிலித்தாய், தாய் என்போர் குறிக்கப்பெற்றுள்ளனர். இவர்களது கூற்றுகள் வாயிலாகச் சங்ககாலப் பெண்களின் மாண்பை நாம் உணர்ந்துகொள்ள முடியும்.

இல்லக்கிழத்திகள் எனும் மனைவாழ் பெண்களுக்கான குணங்களை வரையறுத்த தொல்காப்பியர் பரத்தையர் என்று கூறப்பட்ட அக்கால விலைமாதரைக் கடிந்து விளக்கம் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிள்ளைகளை நற்குடிமக்களாக வளர்த்து ஆளாக்கும் பாரிய சமூகப் பொறுப்புக் கொண்டவளாக அக்காலத்தில் பெண்ணே திகழ்ந்திருக்கின்றாள் என்பதைத் தொல்காப்பியர் வழிநின்று அறியலாம்.

தொல்காப்பியத்திற்கு முன்பின்னாகத் தோன்றியவை எனக் கருதப்படுகின்ற சங்க இலக்கியங்களில் மகளிர் பெற்றிருக்குமிடம் பற்றிச் சிறிது நோக்குவோம்.

சங்ககாலத்தில் பெண்கள் கல்வியில் மேம்பட்டிருந்தனர் எனக் கருத இடமுண்டு. ஒளவையார், காக்கைபாடினியார், நக்கண்ணையார், வெள்ளிவீதியார், நப்பசலையார், வெண்ணிக் குயத்தியார், குறமகள் குறிஎயினி போன்ற பெண்பாற் புலவோர் கோலாச்சிய காலம் அது. இவர்கள் கல்விவேள்விகளில் சிறந்தோங்கியது மட்டு;மல்லாமல் அரசர் அவைகளிலும் ஆண் புலவோருக்கு நிகராகப் புலமை பூத்திருந்தனர். ஒளவையார் அதியமானின் தூதுவராகத் தொண்டைமானிடம் சென்றிருக்கின்றார் என்ற புறநானூற்றுச் செய்தி வியப்பளிக்கின்றது.

‘அரசனின் தூதாக ஒரு பெண் அக்காலத்தே பணியாற்றியமை உலகப் பெண்ணியல் வரலாற்றில் ஓரு முதன்மையான பதிவு என்கின்றார்’ முனைவர் அ. தட்சனாமூர்த்தி.

பாணர், கூத்தர் குடிப்பெண்கள் இசையிலும் ஆடலிலும் வல்லவர்களாகச் சிறந்து விளங்கினர். அரசன் அவையில் வேந்தியல் கூத்தும், பொதுமக்கள் முன்னிலையில் பொதுவியல் கூத்தும் ஆடி மகிழ்வித்திருக்கின்றனர். ஒரு பெண் பாடிய குறிஞ்சிப்பண் கேட்டு திணைப்பயிர் உண்ண வந்த யானை மயங்கி நின்றதாகப் புறநானூறு கூறுகின்றது.

ஆண்களைச் சார்ந்தே பெண்கள் வாழ்வது பெரும்பாலும் இயல்பாகவே நிகழ்ந்து வருகின்றது. ஒருத்தி ஒருவன் என்கின்ற கற்புநெறி அக்காலத்தே போற்றப்பட்டிருக்கின்றது. சொத்துகள் ஆண்பிள்ளைகளுக்கே உரிமையாக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும் பெண்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவோ, அடிமைகளாகவோ நடத்தப்படவில்லை.

சங்கச் சமூகத்தில் வயதடைந்த பெண்கள் தோழியரோடு சென்று நீராடுவதுவும், ப+க்கொய்து வருவதுவும், திணைப்புலங்கள் காக்கச் செல்வதுவும் வழக்கங்களாகவிருந்தன. வீட்டுக்குள்ளேயே பெண்களைக் காக்கும் முறையை அக்காலத்தில் ‘இச்செறித்தல்’ என்றனர். இது ஒருவகையில் வீட்டுக்காவலை ஒத்ததாயினும் தீய உறவுகள் ஏற்படாது பெண்களைப் பேணவே இம்முறை ஏற்பட்டதாகக் கூறுகின்றனர்.
தன் மணாளனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கு இருந்தாலும் தடைகளும் இருந்தன. மடலேறுதல், உடன்போக்கு போன்றவை காதலுக்கேட்பட்ட தடைகளால் தோன்றியவை எனலாம்.

சங்க இலக்கியத்தில் காதல் மரபுகளைத் தொகுத்துரைக்கும் அகத்திணை பெருஞ்சிறப்புப் பெற்றது. தலைவன், தலைவி, தோழி, தோழன், செலிலி, தாய் போன்றோர் அகத்திணை இலக்கிய மாந்தராவர். இந்த மாந்தருள் பேரறிவு கொண்டும், புற, அகச்சூழல் உணர்ந்து களங்களைக் கையாளும் திறன் கைவரப்பெற்றும் விளங்குகின்றவள் தோழியே. கதைக்களங்களில் ஒருநிலை சாராது பொதுநிலை நோக்கி காட்சிகளை நகர்த்துபவளாகத் தோழியே திகழ்கின்றாள்.

குறுந்தொகை எனும் இலக்கியத்தில் ஒரு காட்சி.

வழமைபோல் அன்றும் தலைவனைச் சந்திக்கப் புறப்படுகின்றாள் தலைவி. இடம் குறிஞ்சி என்பதால் சந்திப்புக்குரிய நேரம் நள்ளிரவு. அவாவோடு புறப்படும் தலைவியைத் தடுக்கின்றாள் தோழி.

“தலைவனை நீ மணம் செய்யும் வேளை நெருங்கிவிட்டது. நீயும் அது பற்றிப் பேசுவதாக இல்லை. அவரும் திருமணம் பற்றிச் சிந்திப்பதாக இல்லை. அலர் (ஊருக்குத் தெரிதல்) எழ முன் உன் காதல் கனிந்தாக வேண்டும். இன்று நீ போக வேண்டாம் நான் போய் வருகின்றேன் என்கிறாள்” தோழி.

அரைமனதோடு தலைவி விடைகொடுக்க, தலைவன் வருமிடம் நோக்கிச் செல்கின்றாள்.

இருளுக்குள் எங்கும் விழி எறிந்தபடி தலைவி வருகைக்காகக் காத்திருந்த தலைவன் எதிரிற் போய்நின்றாள் தோழி. மருண்ட தலைவனுக்கு மறுமொழி கூறுகின்றாள்.

“உடல்நலக்குறைவு இன்று தலைவி வரமாட்டாள்”
“அப்படியா, சரி நான் போய்வருகின்றேன்.”
“கொஞ்சம் பொறுங்கள் நான் உங்களோடு போச வேண்டும்.”
“என்ன கூறு.

“வேரிலே பலாப்பழங்கள் பழுத்திருக்கின்ற, மூங்கில் வேலிகளாற்; சூழப்பட்ட மலைச்சாரலைக் கொண்டவனே, நான் சொல்வதைக் கேள். எது எப்போது நடக்கும் என்று எவருக்கும் தெரியாது. மலையின் அடிவாரத்தில் சிறிய காம்பிலே தொங்குகின்ற முற்றிய பெரிய பலாப்பழத்தைப்போல் தலைவியின் உயிர் மிகச்சிறிதாகிவிட்டது. உன்னால் அவள் பெற்றிருக்கும் காதல் நோயோ மிகப்பெரிதாகியுள்ளது.”

தோழி சொற்களாகக் கூறியவை இவை மட்டுமே. ஆனால் பல விடயங்களைத் தன் மதிநுட்பத்தால் உணர்த்திவிட்டாள். “உரிய பொழுதிலே பழத்தைப் பறித்து உண்ணாவிட்டால் அது கீழே விழுந்து சிதறிவிடும். மணம் பரவி பழம் விழுந்த செய்தியை ஊருக்கு அறிவிக்கும். உரிய பொழுதில் மணம் செய்யாவிட்டால் தலைவியின் நிலையும் இதுவே” எனத் தலைவனை எச்சரிக்கின்றான். சிலவேளை ‘சிறுகொம்புப் பெரும்பழச்’ சமாச்சாரம் உனக்குத் தெரியாமல் இருக்கலாம். ஏனென்றால் உன்னூரி;ல் பலா வேரிற்தானே பழுக்கும்.

தன் தலைவியின் காதலைப் பேணுவதற்காகத் தலைவனை வழிப்படுத்தும் மதிநலம் மிக்க மங்கையாகத் திகழ்கின்றாள் தோழியாகிய பெண். இத்துணை அறிவுநலம் வாய்ந்த மாந்தர் சங்க இலக்கியத்தில் தோழியைத் தவிர எவருமிலர்.

வேரல்வேலி வேர்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யார் அஃது அறிந்திசினோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம்போல் தூங்கியாங்கு
இவளுயிர் தவச்சிறிது காமமோ பெரிதே.     குறுந்தொகை 18

மனைவாழும் பெண்; அக்காலத்தே ‘இல்லக் கிழத்தி’ என அழைக்கப்பட்டாள். இதன் பொருள் ‘இல்லத்திற்கு உரிமையுடையவள்’ என்பதாகும். தவறிழைக்கும் கணவனைக் கடிந்து நல்வழிப்படுத்தி , புதல்வரைப் பெற்றுப்பேணி, விருந்தினரைப் போற்றும் மாண்பு மகளிருக்கே இருந்தது.

இம்மை மாறி மறுமை ஆயினும்
நீயா கியரெம் கணவனை
யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே.      குறுந்தொகை 49

இப்பிறவி முடிந்த பின்னும் மறுபிறப்பிலும் நீதான் என் கணவனாக வேண்டும் என்றுரைத்து அன்பின் அணியாகின்றாள் சங்கப் பெண்.


“அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின்
மெல்லியற் குறுமகள்....”                 நற்றிணை 142

நள்ளிரவு ஆயினும் மனை நோக்கி வந்தோருக்கு விருந்தளித்துப் போன்றும் மனைவியின் மாண்பினைக் கணவன் பாராட்டி மகிழ்கின்றான்.

கணவனூர் சென்று வாழும் பெண்ணைப் பார்த்துத் தோழி கிண்டலாக உன் கணவன் ஊர்த் தண்ணீர் குடிப்பதற்குதவாதே என்ன செய்கின்றாய்” என்கிறாள். அதற்குத் தலைவி, 

“என்கணவன் வீட்டிலே தழைகள் மூடிய பள்ளத்தில் மான் குடித்து மீதமிருக்கும் நீரை அருந்துவது, தாய்வீட்டிலே தரப்படுகின்ற தேன் கலந்த பாலிலும் சுவையானது” என்கிறாள் சங்கத்து இல்லாள்.

“அன்னாய் வாழிவேண் டன்னை நம்படப்பைத்
தேன்மயங்கு பாலினும் இனிய வவர்
நாட்டுலைக் கூவற் கீழ
மாணுண் டெஞ்சிய கலிழிநீரே”  ஐங்குநுறூறு 203

ஒளவையார் பெரும் புலவராயினும் ஒரு பெண் என்பதை எவரும் மறவர். அதியமான் இறந்தபோது, அவனோடிருந்த நட்பைக் கூறுகின்றார் ஒளவையார்.

“சிறியகட்பெறினே எமக்கீயும் மன்னே
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே...”  புறம் 235

“சிறிய அளவில் இருந்தாலும் எனக்கும் கள் தந்து பருகும் மன்னனே,
கள் பெரிய அளவில் கிடைத்தாலும் எனக்கும்; தந்து, பாடுமாறு பணித்து அருந்தும் மன்னனே” எனப் புலம்புகின்றார்.

ஒரு பெண்ணாக, மன்னனோடு கூடியிருந்து கள் அருந்தும் உரிமை ஒளவையாருக்கு இருந்திருக்கின்றது. அந்த நிகழ்வைப் பாடலாகப் பதிவு செய்தபோது கழகப் புலவோர் அதைப் புறந்தள்ளாது இலக்கியமாக்கியுள்ளமை பெருஞ்சிறப்பு. இது அக்காலப் பெண்களுக்கிருந்த சமூகப் பெறுமானத்தைப் புலப்படுத்துகின்றது.

நக்கண்ணையார் என்றொரு பெண்புலவர் சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி மீதான ஒருதலைக்காதலைப் புறநாநூற்றில் பதிவு செய்துள்ளார்.

“அடிபுனை தொடுகழல், மையணல் காளைக்குஎன்
தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே
அடுதோள் முயங்கல் அவைநா ணுவலே....”          புறம் 83

“கழல் அணிந்த கால்களையும் கருநிறத் தாடியையும் உடைய காளை போன்ற நற்கிள்ளிமேல் நான் கொண்ட காதலால் என் கைவளைகள் கழன்று விழுகின்றன. ஆகவே, நான் காதல் கொண்ட செய்தி என் தாய்க்குத் தெரிந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். அவனது வலிய தோள்களைத் தழுவவேண்டுமென்ற எண்ணம் தோன்றுகிறது. ஆனால், அவையில் பலரும் இருப்பதால் அவனைத் தழுவுவதற்கு நாணுகிறேன்” என்கிறார் நக்கண்ணையார். 

யாப்பு அமைப்பில் பிழை கொண்ட இப்பாடலை, நக்கண்ணையின் காதல் உணர்வைப் போற்றி இலக்கிய உலகு ஏற்றுக்கொண்டது.
தன் காதலை இவ்வளவு வெளிப்படையாக இப் புதுமைவுலகிலும் ஒரு பெண்ணால் வெளிப்படுத்த முடியுமா என்பது ஐயமே.

புறநானூற்றுப் பாடலொன்று பெண்களை வீட்டின் விளக்கு என்கின்றது. சங்கப் பெண்கள் பரத்தையர் நடத்தைகளால் பாதிக்கப்பட்டனர் எனினும் மீண்டு வரும் கணவனை நேரிடையாகவோ மறைமுமாகவோ கண்டித்திருக்கின்றனர். பரத்தையரிடத்தே சென்ற கணவரும் மனைவியருக்கு அஞ்சியிருக்கின்றனர்.

மகனை வீரனாய் வளர்த்துப் போருக்கு அனுப்பி மகிழ்கின்ற மறக்குலத்தவளாகவும் தாயே திகழ்கின்றாள். என் மகன் போரில் புறமுதுகிட்ட செய்தி உண்மையாயின் அவன் வாய் வைத்து உண்ட மார்பகத்தை அறுத்தெறிவேன் என்கின்றாள் சங்கத்தாய்.

ஆண்களால் பெண்கள் துன்புறுத்தப்பட்டதற்கான சான்றுகள் எதுவும் சங்க இலக்கியங்களில் இல்லை. தமிழ்ச்சமூகம் தாய்வழிப்பட்ட சமூகம் என்தற்குச் சான்று, தொன்றுதொட்டு நிலவி வருகின்ற கொற்றவை வழிபாடேயாகும். காலத்தால் முற்பட்ட கொற்றவை வழிபாட்டு வழக்கம் பெண்மை போற்றலின் ஒரு குறியீடாகவே கருதப்படுகின்றது. பின்னாளில் தோன்றிய கண்ணகி வழிபாடு இதன் தொடர்ச்சியே.

பெண்களைக் குறிக்கவெனச் சங்கப் புலவோர் பயன்படுத்திய சொற்கள் வியப்பைத் தருகின்றன. மாதர், பெண், நல்லார், ஆயிலை, அணியிழை, மென்சாயலர், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை என நீளும் பெயர்கள் இலக்கியங்கள் எங்கும் விரவிக் கிடக்கின்றன.

அக்காலத்தே உலகெங்கும் வாழ்ந்த இனங்களுக்குள் சங்க மகளிரின் சான்றாமையே உயர்ந்திருந்ததாகச் சிலர் கருதுகின்றனர். அரசியல், போர், தொழில் தவிர்ந்த ஏனைய சங்ககாலக் களங்களில் பெண்களே ஆளுமை செலுத்தினர் என்பதைச் சான்றுகள் வாயிலாக அறிய முடிகின்றது.

சங்ககாலத்தைத் தொடர்ந்து பௌத்த, சமண வழிபாட்டு நெறிகள் தமிழரிடையே தலையெடுத்தன. பெண்களைப் புறக்கணிக்கும் இந்த வழிபாட்டு நெறிகளும், பின்னாளில்; வடநாட்டார் அறிமுகப்படுத்திய மனுதர்மமும் பெண்களைக் கீழ்நிலைக்குத் தள்ளின.

பரத்தையர் ஒழுக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த வள்ளுவருக்கும்,
பெண்களைப் போற்றிய சில அடியார்களுக்கும்,
சாதி இரண்டாழிய வேறில்லை என்ற சோழர்கால ஒளவையாருக்கும் பின்னர் இருபதாம் நூற்றாண்டில் பெண்களுக்காகச் சிந்தித்த முதல் புலவன பாரதியே.

இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பெண்களின் உயர்வு, உலகளாவிய பரட்சிகளின் விளைவாகவே தோற்றம் கொண்டது. அயர்லாந்துப் பெண்மணியான நிவேதிதாவின் (ஆயசபயசநவ நுடணையடிநவா ழேடிடந) சந்திப்பே பாரதியின் பாதிப்புக்கு ஏதுவாய் அமைந்தது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பிறவினத்தோரின் பண்பாட்டுப் படையெடுப்புகளுக்கு முற்பட்ட காலத்திலேயே,

செறிவும் நிறையுஞ் செம்மையுஞ் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பா லன்ன                தொல்: பொருளியல்: 14

என்று பெண்மைப் போற்றிய பெருமை தமிழருக்குண்டு. 

தமிழரது வரலாற்றுச் சுவடுகளின் வழியே உற்றுநோக்குகையில், இக்காலத்தைப் போன்று பெண்கள் உயர்வுற்றிருந்த காலம் சங்ககாலமே என்பது தெளிவாகும். 

                                                                   பொன்னையா விவேகானந்தன் 

ஏப்ரல் 2014  - தாய்வீடு (கனடா) இதழில் வெளியான கட்டுரை. 

இக்கட்டுரைக்கென ஓவியம் வரைந்த ஓவியர் மருது அவர்களுக்கும் வரைகலையால் அழகூட்டிய கருணா  அவர்களுக்கும் நன்றி. 
Nantri paniveli

No comments: