திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.
மாக்ஸீய    மனிதநேயவாதி    கணேசலிங்கன்
                                                                                                                           
   
    
 பொன்னாடையோ - பூமாலையோ - பாராட்டுகளோ - வெண்கல - வெள்ளித்தகடு  விருதுகளோ - விசேட பட்டங்களோ    வேண்டாம் எனச்சொல்லும்    ஒரு   ஆக்க    இலக்கியப்படைப்பாளி   எமது  தமிழ் சமூகத்தில்   எண்பத்தியைந்து  வயது   கடந்தபின்பும்   அயராமல்  எழுதியவாறு   இயங்கிக்கொண்டிருக்கிறார்   என்றால்   அவர் தமிழகத்தில்    வாழ்ந்துகொண்டிருக்கும்    இலங்கையின்   மூத்த எழுத்தாளர்    செ. கணேசலிங்கன்தான்  என்று உறுதியாகப்பதிவுசெய்யமுடியும்.
2008 ஆம்  ஆண்டு  என  நினைக்கின்றேன்.   தமிழ்நாடு  - சென்னையிலிருந்து   ஒரு   இலக்கிய  அமைப்பிடமிருந்து  கடிதம் வந்தது.   அதில்   தமிழகத்தில்   வதியும்    மூத்த   எழுத்தாளர் செ.கணேசலிங்கன்  அவர்களுக்கு  75  வயது   பிறந்துவிட்டது.   அதனை முன்னிட்டு   இலக்கிய   நண்பர்கள்   இணைந்து   அவருக்கு   பவளவிழா  நடத்தவிருக்கின்றோம்.    அந்த   விழாவில்   வெளியிடுவதற்கு  ஒரு  மலரைத்தயாரிக்கின்றோம்.   நீங்களும்   கணேசலிங்கன்  பற்றிய கட்டுரை   ஒன்றை   எழுதி   அனுப்பவேண்டும்.   விரைவில் எதிர்பார்க்கின்றோம். -  என்று   அக்கடிதத்தில்   குறிப்பிடப்பட்டிருந்தது.
நானும்   தாமதிக்காமல்   ஒரு   கட்டுரையை   எழுதி  தபாலில் அனுப்பிவைத்தேன்.   மாதங்கள்   பல   கடந்தும்   பவளவிழா  நடந்த செய்தியோ   மலர்  வெளியான   தகவலோ   எனக்குக்கிடைக்கவில்லை.
ஒரு நாள்  கணேசலிங்கனுடன்  தொலைபேசியில்   தொடர்புகொண்டு என்ன   நடந்தது?  எனக்கேட்டேன்.


பிறப்பதும்   இறப்பதும் - வயதுகள்   கடப்பதும்  இயற்கை  -  ஆனால்  - வாழ்வை   அர்த்தமுடன்   கடப்பதுதானே   உன்னதம்.   எதுவுமே வேண்டாம்    உங்கள்   அனைவரதும்   அன்பு   மாத்திரம்   போதும்  எனச்சொல்லி   அன்புக்கட்டளை   இட்டேன்.  -  என்று இரத்தினச்சுருக்கமாக  பதில்   தந்தார். 
 கணேசலிங்கனுக்கு  75   வயது  பிறந்ததும்   பவளவிழாக்காலத்தை முன்னிட்டு   சென்னையிலிருக்கும்  சில  இலக்கிய  நண்பர்கள் இணைந்து  -   இவருக்காக   பவளவிழா   மலரையும்   தயாரித்து விழாவும்   கொண்டாட  முனைந்தனர்.
 மலருக்கான    கட்டுரைகளையும்   கணேசலிங்கனுக்குத் தெரியாமலேயே    சேகரிக்கவும்   தொடங்கினர்.    எப்படியோ இத்தகவலை   அறிந்துகொண்ட   இவர்   மறுத்துவிட்டார்    இந்த வித்தியாசமான   மனிதர்.
இந்த   நூற்றாண்டில்   இப்படியும்   மனிதர்கள்   இருக்கிறார்கள்.
 கருத்தை   இலக்கியத்தோடு   மட்டும்   வைத்துக்கொண்டு முற்போக்கு -  பிற்போக்கு   பேதமற்ற   நட்புறவைச் சகல எழுத்தாளர்களோடும்   கொண்டுள்ள   ஒரு -   சிலவேளை   ஒரே  ஒரு ஈழத்து   எழுத்தாளர்   கணேசலிங்கன் -   என்று    இலக்கு -   என்னும்   இதழ்  1996   ஆம்   ஆண்டு    இவரைப்பற்றிக்குறிப்பிட்டிருக்கிறது.
கணேசலிங்கனின்   குமரன்   இதழ்களைப்படித்தே   அரசியல் அறிவுபெற்றேன்  -    என்று   ஒருசந்தர்ப்பத்தில்  கவிஞரும்   இலக்கிய ஆர்வலருமான   முஸ்லிம்   காங்கிரஸின்    தலைவர்   மறைந்த   அஷ்ரப்    குறிப்பிட்டிருக்கிறார்.
எனக்கு  நல்லதொரு   நண்பராக   மாத்திரமன்றி  மூத்த சகோதரனாகவும்   இருப்பவர்   கணேசலிங்கன் -   என்று  ஒரு நேர்காணலில்   பதில்சொல்கிறார்   இயக்குநர்   பாலுமகேந்திரா.
இன்றும்   இலக்கிய   உலகில்   பேசப்படும்    சரஸ்வதி    இதழின் ஆசிரியர்    விஜயபாஸ்கரன்  -  கணேசலிங்கனின்   திருமணத்திற்காக இலங்கை   வந்து   வாழ்த்தினார்.   அவரது    வருகையின்மூலம் இலங்கை - தமிழக   எழுத்தாளர்கள்   மத்தியில்   ஆரோக்கியமான உறவு மலர்ந்தது -   என்று   சொன்னார்   எஸ்.பொன்னுத்துரை.
  காலம்   காலமாக   ஆங்கிலம்   கற்றோரிடமும்   அரசியல் ஆய்வாளர்களிடமுமே    மறைத்துவைக்கப்பட்டிருந்த சொத்துப்போலிருந்த   கருத்துக்கள்   மிகவும்   எளிமையான   தமிழில்  - கருத்துப்பேதமோ  சேதமோ  இன்றி   மக்கள் மத்தியில் பரவலாக    எடுத்துச்செல்லும்   பணியில்   கணேசலிங்கன் வெளியிட்ட   குமரன்   இதழ்கள்   முனைப்புடன்   செயற்பட்டது. - என்று   ஆய்வு   செய்தார்   தெளிவத்தை  ஜோசப்  ( தினகரன் வாரமஞ்சரி -2002 )
   தஞ்சாவூருக்கு   மருத்துவ   சிகிச்சைக்காக  வந்தவிடத்தில்   எதிர்பாராத விதமாக   மரணமடைந்த   டானியலின்   மறைவுச்செய்தி அறிந்தவுடன்    சென்னையிலிருந்து    ஓடோடிவந்து   சகல வேலைகளையும்    பொறுப்பேற்று    முன்னின்று   செய்தார் கணேசலிங்கன். -  என்று   தற்போது  பிரான்ஸில்   வாழும் எழுத்தாளரும்   டானியலின்   சகாவுமான   இளங்கோவன்   கூறுகிறார்.
 செ.யோகநாதன்    சென்னையில்   இருதய   நோயால் பாதிக்கப்பட்டபோது    சொந்தச்சகோதரனைப்   பராமரிப்பது   போன்று அக்கறையுடன்   கவனித்துக்கொண்டவர்   தோழர்  கணேசலிங்கன் - என்று   சொன்னார்   தாமரை   இதழின்   ஆசிரியரும்  தமிழ்நாடு   மாநில  கம்யூனிஸ்ட்  கட்சியின்   துணைச்செயலாளருமான மகேந்திரன்.
இலங்கையின்    மூத்த   எழுத்தாளரும்    இலங்கை  முற்போக்கு  எழுத்தாளர்   சங்கத்தின்   கீதத்தை    இயற்றியவருமான  அ. ந. கந்தசாமி கொழும்பில்   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவேளையில்   அவரைப்  பராமரித்தவர்களில் குறிப்பிடத்தகுந்த  ஒருவர்   கணேசலிங்கன் .  மற்றவர்    கலைஞர் லடீஸ்  வீரமணி  -  என்பது    இலங்கை   இலக்கிய வட்டாரத்தில் உலாவும்   தகவல்.
  இந்த   அரிய   தகவல்கள்   ஒருபுறம்   இருக்கட்டும்  -  மல்லிகை  ஜீவா சொல்கின்ற   செய்தி   உண்மையிலேயே   எம்மையெல்லாம் நெகிழச்செய்யும்.   வியப்பூட்டும்.
 அப்பொழுது   ஜீவா    யாழ். கஸ்தூரியார்   வீதியில்   ஜோஸப் சலூனை நடத்திக்கொண்டிருந்த  காலம்.   யாழ். பரமேஸ்வராக்கல்லூரியில் அக்காலப்பகுதியில்   படித்துக்கொண்டிருந்த   கணேசலிங்கன் (இக்காலப்பகுதியில்   இருவருமே   இலக்கிய   ஈடுபாடு   கொண்ட நண்பர்கள்)    மாலை   வேளையில்   அங்கே   வருவாராம்.   ஜீவாவுடன் உரையாடிக்கொண்டே    தரையில்    சிந்திக்கிடக்கும் தலைமயிர்க்குவியல்களை   தும்புத்தடியினால்   கூட்டிப்பெருக்கி அவ்விடத்தை   சுத்தம்    செய்வாராம்.
  பாட்டாளிவர்க்க    சர்வதேசியத்தை    எழுத்திலும்    மேடையிலும் மாத்திரம்   சொல்லாமல்    இதயசுத்தியோடு    வாழ்ந்தும்   காட்டியவர் இந்த   எண்பது  வயதும்   கடந்துள்ள    மனிதநேய வாதி.
  கார்ல்  மார்க்ஸ்  நுற்றாண்டு   விழா  கொழும்பில்   கொண்டாடப்பட்ட   காலகட்டத்தில்   அதன்   அமைப்புக்குழுவில் இணைந்து   இயங்கியவர்   கணேசலிங்கன்.    விழாச்செலவுகளுக்கு பணம்    தேவைப்பட்டபோது   ஒருவர்  முகத்தை  ஒருவர்   பார்த்து யோசித்துக்கொண்டிருக்கையில்   பல    ரூபாய்    நாணயத்தாள்களை  எடுத்துக்கொடுத்து   செலவுக்கு   வைத்துக்கொள்ளுங்கள்.   மேலும் தேவைப்பட்டால்    சொல்லுங்கள்    என்றாராம்   கணேசலிங்கன்.
அவர்  அன்று  வழங்கிய   நன்கொடையில்   ஆயிரம்ரூபாவுக்கும் மேலிருக்குமாம்   என்று   எனது   நண்பரும்   தற்போதைய   தினக்குரல் பிரதம   ஆசிரியருமான   தனபாலசிங்கம்  ஒரு  தடவை  சொன்னார்.
                                 இச்சம்பவத்தினால்   சற்று   அதிர்ந்துபோன   தோழர்   என். சண்முகதாஸன் -   என்னிடம்   இருந்திருந்தால் கூட    அப்படி தூக்கிக்கொடுத்திருக்கமாட்டேன்  -  என்று  சக  தோழர்களிடம் சொன்னாராம்.
கம்யூனிஸம்  -  மார்க்ஸிஸம்   பேசுபவர்கள்  சரியான நெஞ்சழுத்தக்காரர்கள்.   கடினமான   போக்குக்கொண்டவர்கள் என்பதுதான்    பொதுவான    அபிப்பிராயம்.
இந்தப்பதிவை   எழுதும்    எனக்கும்   ஒரு  கால  கட்டம்வரையில்   அந்த அபிப்பிராயத்தில்   உடன்பாடு   இருந்தது.

  பேராசிரியர்   கைலாசபதியின்   மறைவின்போதுதான் கணேசலிங்கனின்   மென்மையான  -  நாமெல்லோருமே நெகிழ்ந்துபோகும்   உள்ளத்தை   புரிந்துகொள்ள முடிந்தது. பேராசிரியரின்   எதிர்பாராத  மறைவினால்   நாம் உறைந்துபோயிருந்தபோது   கணேசலிங்கன்   மாத்திரம்   கதறிக்கதறி அழுதுகொண்டிருந்தார்.
  மரணச்சடங்கிற்கு   முதல்   நாளிரவு   இலங்கை   வானோலியில் ஒலிபரப்பான   விசேட   இரங்கல்  நிகழ்ச்சியில்   நுஃமானுடன்  சேர்ந்து அஞ்சலி   உரை நிகழ்த்திய   கணேசலிங்கன்  -  வானொலிக்கலையகம் என்றும்   பாராமல்  வானலைகளில்   கருத்துக்கள்  பரவுகின்றன என்ற   பிரக்ஞையுமில்லாமல்   அழுது   அரற்றிக்கொண்டே உரையாற்றியது   இன்றும்  எமது  நினைவுகளில்  சஞ்சரிக்கிறது.
 சுமார்    ஐம்பதிற்கும்   மேற்பட்ட   நாவல்கள்  பல  சிறுகதை  -  கட்டுரை -  விமர்சன   நூல்கள்  -  சிறுவர்   இலக்கியம்   -   பயண   இலக்கியம்  என தொண்ணூறுக்கும்   மேற்பட்ட   நூல்களை   தமிழ்  இலக்கிய உலகிற்குத்தந்துள்ள   கணேசலிங்கனின்   தற்போதைய   வயதிலிருந்து கணக்குப்பார்த்தாலும்   வருடத்துக்கு   ஒரு   புத்தகம்   என  பிறந்தது முதல்   இன்று   வரையில்   அதிகம்  புத்தகங்கள்   எழுதியிருக்கின்றார்   இந்த   அமைதியும்  தன்னடக்கமும்  மிக்க சாதனையாளர்    என்ற   முடிவுக்கு   வரமுடியும்.
மூத்த   அறிஞர்  மு.வரதராசனும்   (மு.வ)   இவரது   நெருங்கிய   நண்பர். மு.வ.   மறைந்தபின்பு   அவரது   நினைவாகவும்   ஒரு  நூலை எழுதியிருக்கின்றார்.
  அச்சிலே   வெளிவந்த   இத்தனை  நூல்களும்   எத்தனை   ஆயிரம் பக்கங்களைக்கொண்டவை   என்ற   ஆராய்ச்சியில்   நாம் ஈடுபடத்தேவையில்லை.
 2007  ஆம்   ஆண்டு   இந்தியாவில்  சாகித்திய   அகடமி விருது பெற்ற நீலபத்மநாபனைப்பற்றிய  தகவல்களைப்  பதிவு  செய்து   அவரது நேர்காணலை   வெளியிட்ட    குமுதம் - தீராநதி  -  நீலபத்மநாபன் எழுதி   அச்சில்   வெளிவந்த    பக்கங்கள்   மொத்தம்   6467   என்று  பதிவு  செய்கின்றது.
  கணேசலிங்கன்   இச்சாதனையை   முறியடித்திருப்பார்   என நிச்சயமாகச் சொல்ல முடியும்.
இவரது  நீண்ட பயணம்  நாவல்  குறிப்பிடத்தகுந்ததொன்று.  ஈழத்து தமிழ்நாவல்   இலக்கிய   வளர்ச்சியில்   இந்நாவலே   முதன்மையிடம் பெறுகின்றது   எனச்சொல்கிறார்   கலாநிதி செ. யோகராசா.
இக்கருத்து   விமர்சனத்துக்கும்   விவாதத்திற்குமுரியது. என்றபோதிலும்  கூட   செ.க.வின்   நீண்டபயணம்   நாவல்   அவரது எழுத்துலக   நீண்டபயணத்தின்   தொடக்கத்தில்   ஆழமாகப்பதியப்பட்ட ஒரு   மைல்கல்  என்பதில்  அபிப்பிராய  பேதமிருக்காது.
  செவ்வானம்    நாவல்   கைலாசபதியின்   முன்னுரையுடன் வெளியானது.   குறிப்பிட்ட  நீண்ட   முன்னுரையே   பின்னாளில்   தமிழ்  நாவல்  இலக்கியம்  என்ற  விரிவான  நூலாகியது. இந்நூல்குறித்து   வெங்கட்சாமிநாதன்    மாக்ஸின் கல்லறையிலிருந்து   ஒரு  குரல்   என்ற  சிறு நூலை  எதிர்வினையாக எழுதினார்.  1973   இல்   பூரணி   காலாண்டிதழ்   இதனை மறுபிரசுரம் செய்தது.   நுஃமான்   இதற்கு   எதிர்வினையாக   நீண்ட கட்டுரைத்தொடரை   மல்லிகையில்   எழுதினார்.    அதற்கு மு.பொன்னம்பலம்   மல்லிகையிலேயே    எதிர்வினை   எழுதினார்.       இவ்வாறு    ஆரோக்கியமான   விமர்சன   கருத்துப்பரிமாறல்களுக்கு வழிகோலிய   மூலவர்   செவ்வானம்   படைத்த   கணேசலிங்கன் என்பது  இலக்கிய  உலகின்   பழையசெய்திதான்.   எனினும்   இப்படியும் எமது   தமிழ்   இலக்கியப்பரப்பில்   நிகழ்ந்திருக்கிறது   என்ற தகவலையும்    இச்சந்தர்ப்பத்தில்  -    புதிதாக    எழுதவந்துள்ள   இளம் ஆக்க இலக்கிய வாதிகளுக்கும்   இளம்    விமர்சகர்களுக்கும் தெரிவிக்கின்றேன்.
பேராசிரியர்   கைலாசபதி   யாழ்ப்பாணம்   பல்கலைக்கழகத்தில்   நாவல்   நூற்றாண்டு   ஆய்வரங்கை   நடத்தியபொழுது   சமர்ப்பிக்கப்பட்ட   பல  கட்டுரைகளில்   கணேசலிங்கனின் நாவல்கள்தான்   அதிகம்   பேசுபொருளாக   இருந்தன.
ஆய்வரங்கு   நிறைவுபெற்றதும்  நண்பர்   டானியல்  தமது   இல்லத்தில்  அனைவருக்கும்  இராப்போசன  விருந்து  வழங்கினார்.
இந்த   நாவல்  நூற்றாண்டு  ஆய்வரங்கில்   கணேசலிங்கனும் கலந்துகொண்டிருந்தால்  மிகவும்   சிறப்பாகவிருந்திருக்கும்   என்று கைலாசபதியிடம்   அந்த   விருந்தின்போது   குறிப்பிட்டேன்.
உண்மைதான்.  அவரது   செவ்வானம்  நாவலிற்குத்தான்  நான்  நீண்ட முன்னுரை   எழுதினேன்.   அவர்   இங்கு   வரக்கூடிய   சூழ்நிலை இல்லை.   அதனால்   வரவில்லை.   எனினும்   அவர்பற்றி  நாம்  இங்கு நிறையப்பேசுகின்றோம்.   அந்தவகையில்   அவர்   மிகுந்த கவனிப்புக்குள்ளான   நாவலாசிரியர்   என்று  கைலாஸ்   சொன்னார்.
        சர்வதேசப்புகழ்பெற்ற   கவிஞர்    பாப்லோ நெருடா  (இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றவர்)   இலங்கை   வந்த சமயம்  அவரை   வரவேற்கும்   எழுத்தாளர்களின்  கூட்டத்திற்கு தலைமைதாங்கிச்சிறப்பித்த  பெருமையும்  கணேசலிங்கனுக்குண்டு.
 கமல்ஹாஸன்   நடித்து   பாலுமகேந்திராவின்  இயக்கத்தில் வெளியான  கோகிலா (கன்னடம்)   திரைப்படத்தின்   தயாரிப்பு நிர்வாகியாகவும்   இயங்கியிருக்கும்   கணேசலிங்கன் -  தமிழக  சினிமா உலகின்   கோலங்களை   தமது    கவர்ச்சிக்கலையின்   மறுபக்கம்   என்ற   நாவலில்   சித்திரித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில்   பல்கலைக்கழகப்பிரவேசப்   பரீட்சைக்கு தமிழும்   ஒரு பாடம்.
தமிழ்மொழிப்பாடப்  பரீட்சைக்கு  தோற்றும்   பல  மாணவர்களுக்கு பெண்கள்   தொடர்பாக   வரும்   நேர்முக - எழுத்துப்பரீட்சைகளுக்கு கணேசலிங்கனின்     பெண்ணடிமை  தீர    என்ற   நூல் உசாத்துணையாகப்பயன்பட்டது   என்ற   புதிய   தகவலையும்  இங்கு பதிவு  செய்யவிரும்புகிறேன்.
நாவல்   சிறுகதை    கட்டுரை     விமர்சனம்  திறனாய்வு     மொழிபெயர்ப்பு பயண  இலக்கியம்   சிறுவர்  இலக்கியம்  முதலான   துறைகளில்  பல நூல்களை    எழுதியிருக்கும்   கணேசலிங்கனின்   எழுத்துக்களை   சமூகவியல்  பெண்ணியம்   மாக்சீயம்  தத்துவம்  முதலான கண்ணோட்டங்களிலேயே   வாசிப்பு   அனுபவங்களை   நாம் பெற்றுக்கொள்ளமுடியும்.   
கவர்ச்சிக்கலையின்  மறுபக்கம்   என்ற   நாவலின்   தலைப்பு  ஒரு  கட்டுரை நூலுக்கான   தலைப்பாக  இருந்தபோதிலும்  -   தமிழ்   சினிமாவில்  வெளி உலகத்தால்    கண்டுகொள்ளப்படாத    துணை  நடிகர்கள்  மற்றும்  காதல் பாடல்  காட்சிகளில்  நாயகன்   நாயகிக்குப்பின்னால்   உடலை  வருத்தி ஆடும்   துணை   நடிகைகளின்   தீனமான   அவலக்குரல்   அந்த  நாவலில்  கேட்கிறது.
இவருடைய   செவ்வானம்  நாவல்   சென்னைப் பல்கலைக்கழகத்தில்   தமிழ்  எம்.ஏ.  பட்டப்படிப்பிற்கு   இலக்கிய பாட  நூலாக   தெரிவாகியுள்ளது. நீண்ட பயணம்   நாவல்  இலங்கையில்   தேசிய  சாகித்திய விருதைப்பெற்றது.   மரணத்தின்   நிழலில்  நாவல்  தமிழக அரசின் பரிசுபெற்றுள்ளது.
மகாகவி  பாரதி   தொடர்பாக   நிறைய   ஆய்வுகளை மேற்கொண்டவர்கள்   கைலாசபதி  -  தொ.மு.சிதம்பர ரகுநாதன் ஆகியோர்.   எனினும்   அவர்களுடன்   பாரதிவிடயத்தில்   நிரம்பவும் கருத்து  ரீதியாக  முரண்பட்டு   எழுதியவர்    கணேசலிங்கன்.
ஆயினும்  -   அவர்களிடத்தில்    துளியளவும்   பகைமை   பாராட்டாமல் அவர்கள்   வாழ்ந்தபோதும்   மறைந்தபோதும்   உணர்வுபூர்வமாகவும் அதேசமயம்   ஆக்கபூர்வமாகவும்    செயற்பட்டவர்   கணேசலிங்கன்.
    கொழும்பு   கனத்தை   மயானத்தில்   கைலாசின்   பூதவுடல் தகனத்திற்காக     இருக்கிறது.   பலரும்   அடுத்தடுத்து   அஞ்சலி உரையாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
கணேசலிங்கன்   கைலாசின்   உருவப்படம்   பதிந்த  அஞ்சலி பிரசுரங்களை   அழுதழுது   விநியோகித்துக்கொண்டிருக்கிறார். கைலாஸ்   மறைந்து   சில   நாட்களில்   அதாவது    1982 டிசம்பர் 15 ஆம் திகதிய   குமரன்   இதழில்   கைலாஸின்   படத்தை   அட்டையில் பிரசுரித்து   சிறப்பிதழ்   வெளியிட்டார்.
கைலாஸ்   மறைந்து   ஒரு    மாத   காலத்திற்குள்    கைலாஸின்    சில கட்டுரைகளைத்தேடித்திரட்டி   இலக்கியச்சிந்தனை   என்ற  நூலை வெளியிட்டார்.   பின்னர்   பாரதி   தொடர்பாக   கைலாஸ்   எழுதிய   பல    கட்டுரைகளைத்தொகுத்து   பாரதி  ஆய்வுகள்  என்னும்  நூலை பதிப்பித்தார்.
தொ.மு.சி.ரகுநாதன்    இறந்தவுடன்   ஃபுரன்ட்லைன்    இதழில்   விரிவான   கட்டுரை   எழுதியதுடன்   நில்லாமல்   பொன்னீலன்   எழுதிய   ரகுநாதன்   வாழ்வும்  பணியும்   என்ற  நூலை தூரதேசங்களிலும்   வாழும்   இலக்கிய   ஆர்வலர்க்கு கிடைக்கச்செய்தார்.
இந்தத்தகவல்களை    இங்கு  பதிவு   செய்வதற்கு   காரணங்கள் பலவுண்டு.
கருத்து   முரண்பாடு   வந்தவுடனேயே   பகைமையை வளர்த்துக்கொண்டு   முகம்கொடுத்தும்   பேசாமல்   ஆணவ மனப்பான்மையுடன்   நடமாடும்   எம்மவர்   பலருக்கு    இந்த  முதிய வயதிலும்   தளராது   இயங்கிக்கொண்டு   சகோதரவாஞ்சையுடன் மாற்றுக்கருத்துக்கொண்டோரையும்   அரவணைக்கும்   பண்பு கொண்ட கணேசலிங்கன்     மிகச்சிறந்த   முன்னுதாரணம்.
கருத்து   முரண்பாடுகள்   எனச்சொல்லிக்கொண்டு   முதுகிலே   குத்துபவர்கள் பல்கிப்பெருகியுள்ள   கலை   இலக்கிய   அரசியல்   உலகிலே  எது கருத்துமுரண்பாடு ?   எது   துரோகம் ?   என்பதை   எவ்வாறு  அடையாளம் காண்பது?   என்ற    கேள்வியும்   எழுவது    தவிர்க்கமுடியாதது.
இக்கேள்விக்குரிய   பதில்கள் -    உளப்பாதிப்பு  ஏற்படுத்துபவர்களினதும் -பாதிக்கப்பட்டவர்களினதும்    மனச்சாட்சியிலேயே  கிடைக்கப்பெறும்.   ஆனால்  -  அந்தப்பதில்களும்   மௌன  மொழியில்    கரைந்துவிடும்.




 கணேசலிங்கன்    1971  முதல்  1983  வரையில்   கொழும்பு   புறக்கோட்டையில்  டாம் வீதியில்  அமைந்த   தமது   குமரன்   அச்சகத்திலிருந்து   குமரன்  இதழை   வெளியிட்டார்.   அத்துடன்   பல   எழுத்தாளர்களின்  நூல்களையும்   பதிப்பித்தார்.
குமரன்   இதழில்தான்    வரதபாக்கியான்  என்ற  புனைபெயரில் முன்னர்   கவிதைகள்    எழுதிய   புதுவை  ரத்தினதுரை  எமக்கு  அறிமுகமானார்.  அச்சமயம்   புதுவை   ரத்தினதுரை  தீவிர   சீனச்சார்ப்பு இலக்கியவாதியாக  இருந்தார்.   அவரின்   பெரும்பாலான   கவிதைகள் சர்வதேச    பாட்டாளிவர்க்கத்தின்   குரலாகவே    காணப்பட்டது.
குமரன்   இதழ்களில்   புதுக்கவிதைகள்   வெளிவந்துகொண்டிருந்த காலம்  பற்றி  கணேசலிங்கன்   இவ்வாறு   குறிப்பிடுகிறார்: -
புதுக்கவிதை   எழுதி   குமரனில்   வெளிவரவிரும்புபவர்கள்   மட்டும் பெருந்தொகையினராக  இருந்தனர்.  எடிற் செய்து - தேர்ந்து - திரட்டி வெளியிடுவதிலும்   சிரமமிருந்தது.   கவிதைத்துறையில் என்னைக்கவர்ந்தவர்கள்    இருவரே.   முதலாவதாக   புதுவை ரத்தினதுரையைக்   கூறவேண்டும்.   வரதபாக்கியான்   என்ற   பெயரிலும்   அவர்   எழுதிவந்தார்.   அவர்   குமரன்   இதழுக்காக எழுதிய    கவிதைகள்   யாவும்   எழுதியபடியே   வெளிவந்தன. மணிமேகலை    என்ற    பெயரிலும்   கவிதை   வெளிவந்தது. சமூக விழிப்புணர்வும்    எழுச்சியும்    கொண்ட   கவிதைகள்.   கவிதைக்குரிய ஓசைநயத்தையும்   அவர்   விட்டுவிடவில்லை.
மற்றவர்   சாருமதி.    புரட்சி   அரசியலே  அவரது கோட்பாடு.  ஓசை நயம்  பற்றி  அவர்  கவலைப்படவில்லை.   சமூகப்புரட்சியை  வேண்டிய  அரசியல் சார்ந்த  கோட்பாட்டை   அவர்   என்றும்  விட்டுவிடவில்லை.
குமரன்  இதழ்கள்   யாவும்   தொகுக்கப்பட்டு  933  பக்கங்களில் வெளியான   பெரியதொரு   தொகுப்பினை   தமிழகத்தில் கணேசலிங்கனை   சந்தித்தபொழுது   எனக்குத்தந்தார்.
 எனது   சில  நூல்களை   அவரது   சென்னை  குமரன்  பதிப்பகம்தான் வெளியிட்டிருக்கிறது.   அவர்   எனக்கு  பெரும்பாலும் ஏரோகிராமில்தான்   கடிதங்கள்   எழுதுவார்.   எனக்கு    அதிகம்   கடிதம் எழுதியவர்களின்    வரிசையில்   அவரும்    இணைந்துள்ளார்.   அவரது கடிதங்கள்    யாவற்றையும்    ஒரு    தனிக்கோவையில்   பாதுகாத்து வைத்துள்ளேன்.
கணேசலிங்கனுக்கு  75   வயது பிறந்த  2008  காலப்பகுதியில் இலங்கையில்    வெளியாகும்   ஞானம்   இதழில்   அட்டைப்பட   அதிதி கட்டுரையை    எழுதியிருக்கின்றேன்.    அத்துடன்    மல்லிகையிலும் ஒரு   கட்டுரையை    எழுதினேன்.   தினக்குரல்   இதழும் கணேசலிங்கன்   பற்றி   நான்   எழுதிய   கட்டுரையை   மறுபிரசுரம் செய்திருக்கிறது.
ஒரு   மனிதனின்    இயல்புகள்தான்   அவனது    விதியைத்தீர்மானிக்கும்  என்று  வட   இந்திய   எழுத்தாளர்  அருண்ஷோரி   என்பவர்   ஒரு சந்தர்ப்பத்தில்    குறிப்பிட்டுள்ளார்.    எங்கள்  செ.க.   என்ற  கணேசலிங்கனுக்கும்    மிகச்சிறந்த   குண இயல்புகள்    இருக்கின்றன. கலை   இலக்கிய   அரசியலில்  மாற்றுக்கருத்துக்களுக்கு    அப்பாலும்   அவர் படைப்பிலக்கியவாதிகளினாலும்   விமர்சகர்களினாலும்    வாசகர்களினாலும்   நேசிக்கப்படுவதற்கு    அவரது    இயல்புகள்தான் காரணம்.
letchumananm@gmail.com

                                   ---0----
                                                                                                                                           
                                                                                                                    


No comments: