.
1974ல் நெல்லு என்ற மலையாள சினிமா வெளிவந்தது. ராமுகாரியட் இயக்கி பிரேம்நசீர் நடித்தபடம். அப்போது எனக்கு பன்னிரண்டு வயது. ஒரு மாமா வீட்டுக்குச் சென்றிருந்தபோது திருவனந்தபுரத்தில் அந்தப் படத்தைப் பார்த்தேன். உண்மையில் எனக்கு சினிமா என்ற அழகனுபவம் அங்கேதான் தொடங்குகிறது. நான் செம்மீனையும் வேறுபல முக்கியமான மலையாளப்படங்களையும் அதற்குப்பின்னர்தான் பார்த்தேன். அதுவரை நான் பார்த்திருந்த படங்கள் கறுப்புவெள்ளை மலையாளக் குடும்பப்படங்கள். எம்.ஜி.ஆர்,சிவாஜிகணேசன் நடித்த வண்ணப்பிழம்புகளான தமிழ்ப்படங்கள். நெல்லு எனக்கு ஒரு சினிமாவாகவே தெரியவில்லை. அது ஒரு கனவு. எனக்கும் இயற்கைக்குமான உறவை தீர்மானித்த அனுபவங்களில் அதுவும் ஒன்று என்று மிகப்பிந்தித்தான் உணர்ந்தேன்
நெல்லு படத்தை நான் பதினைந்து வருடம் கழித்து மீண்டும் பார்த்தேன். மிகமிகச் சாதாரணமான படம். வத்சலாவின் நாவலை முடிந்தவரை சிதைத்து உதிரிக்காட்சிகளாக ஆக்கியிருந்தார் ராமுகாரியட். அபத்தமான பொய்மயிருடன் நசீர் கோமாளி மாதிரி இருந்தார். கொழுத்து உருண்ட ஜெயபாரதியையும் சிவந்த நவநாகரீக முகத்துடன் மோகனையும் ஆதிவாசிகளாகவே எண்ண முடியவில்லை. ஆனால் உயிருடன் இருந்தவை இசையும் ஒளிப்பதிவும். சொல்லப்போனால் அடுத்த பதினைந்தாண்டுகளில் அவை பேருருவம் பூண்டு மலையாளச் சினிமாவுன் உச்சகட்ட சாதனைகளாக அங்கீகரிக்கப்பட்டிருந்தன. இசை சலீல் சௌதுரி. ஒளிப்பதிவு பாலு மகேந்திரா
இலங்கையைச் சேர்ந்த பாலு மகேந்திரா பூனா திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவு பயின்று வெளிவந்து பணியாற்றிய முதல்படம் நெல்லு. ராமுகாரியட்டின் செம்மீன் அதுவரை ஒளிப்பதிவில் ஒரு சாதனையாக கருதபபட்ட படம். அதில் மார்க்கஸ் பட்லேயின் ஒளிப்பதிவுக்கு நிகராக நெல்லு படத்தின் ஒளிப்பதிவு அமையவேண்டும் என்று தேடிய ராமு காரியட் கண்டடைந்த இளைஞர் பாலு. கேரள சினிமாவையும் இந்திய சினிமாவையும் பிரமிக்கச்செய்தது அந்த ஒளிப்பதிவு. பாலு அதற்காக தேசியவிருதையும் பெற்றார்.
நெல்லு இயற்கையை காட்டவில்லை, இயற்கையை பார்க்கவேண்டிய சில குறிப்பிடத்தக்க கோணங்களை அறிமுகம்செய்தது. ஒளியால் கொஞ்சப்படும் மரங்களும் செடிகளும். ஒளிசொட்டும் இலைகள். ஒளியை சிதறடிக்கும் மலர்கள். ஒளியை தேக்கிவைத்திருக்கும் மேகங்கள் ஒளியை குழைத்தோடும் ஓடைகள். இன்னும் சொல்லப்போனால் சூரிய ஒளியின் சில அழகிய தருணங்களைக் கொண்டு அந்த சினிமாவைக் கோர்த்திருந்தார் பாலு.
மேலும் பத்துவருடங்கள் கழித்து நான் பாலு மகேந்திராவைச் சந்தித்து அவரை பாலு என அழைக்குமளவுக்கு நெருங்கியபின் அவரிடம் அவ்வனுபவத்தைச் சொன்னேன். ‘நவீன இலக்கியத்தில் திரைப்பட ஒளிப்பதிவு செலுத்தியிருக்கும் செல்வாக்கைப்பற்றி தனியாகவே ஆராயவேண்டும்’ என்று சொன்னேன். ‘அந்த நாட்கள் எனக்கு போதை நிறைந்தவை’ என்றார் பாலு .சற்று யோசித்து ‘எனக்கு எப்போதுமே அழகுதான் பெரிய போதையை கொடுத்தது’என்றார்
பாலு மகேந்திரா என்னும் திரைப்படக்காரரை ஒரேவரியில் அவ்வாறு வகுத்துக்கொள்ளலாம். அழகு என்னும் போதையைப் பின் தொடர்ந்த மனிதர். எல்லா வகை அழகுகளுக்கும் முழுமையாகவே தன்னை அடிமையாக்கிக் கொண்டவர். அதன் அலைக்கழிப்புகள் ,வருத்தங்கள், எக்களிப்புகள், தியானங்கள் அனைத்தும் அவருக்குக் கைகூடியிருந்தன.
மீண்டும் இப்போது நெல்லு படத்தின் பாடல்களைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.நாற்பதாண்டுகள் ஆகப்போகின்றன. ஒளிப்பதிவில் இன்று என்னென்னவோ உத்திகள் வந்து விட்டன. விரும்பும் வண்ணத்தை, ஒளியை இன்று ஆய்வகத்திலேயே கொண்டுவருகிறார்கள். மிக உயர்தர காமிராக்கள் வந்துவிட்டன. நினைக்கமுடியாத கோணங்கள். அவற்றுக்கெல்லாம் கண்கள் பழகியும் விட்டிருக்கின்றன. ஆனால் மிகமோசமான யூ டியூப் ஒளிக்காட்சியில்கூட இன்றும் மாபெரும் இம்பிரஷனிச ஓவியங்களைப்போல கனவை நிறைக்கிறது பாலுவின் ஒளிப்பதிவு.
முன்பொருமுறை அவரிடம் சொன்னேன், நெல்லு நிகழ்த்திய அந்தச்சாதனையை அவர் அதிகம் தாண்டவில்லை என்று. ‘நான் ஒளியை காதலிச்சவன். காதல் உச்சத்தில இருந்த வயசு அது’ என்றார் பாலு
பாலு இந்நேரம் அவருக்குப் பிரியமான சலில்தாவை சந்தித்திருப்பார் என்று அசட்டுத்தனமாக எண்ணிக்கொள்வது வலிமிக்க நிறைவை அளிக்கிறது
Nantri http://www.jeyamohan.in/
No comments:
Post a Comment