தமிழ் சினிமா - பண்ணையாரும் பத்மினியும் -

.
பழைய பத்மினி காரும் அதன் மேல் பண்ணையாரும் அவருடன் இருப்பவர்களும் காரின் மீது வைத்திருக்கும் காதல் தான் ‘பண்ணையாரும் பத்மினியும்’.
ஒரு கிராமத்தில் பண்ணையாராக இருக்கிறார் ஜெயப்பிரகாஷ். நவீன பொருட்கள் எது வந்தாலும் அதை அந்த ஊருக்கு கொண்டு வந்து மக்களுக்கு அறிமுகம் செய்துவைப்பவர் இவர்தான்.
இந்நிலையில் பண்ணையார், உறவினர் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு பத்மினி காரை பார்க்கிறார். பார்த்தவுடன் காரின் மீது ஆசைப்படுகிறார். உறவினரிடம் பண்ணையார் காரைப்பற்றியே பேசுகிறார்.
இதை கவனிக்கும் உறவினர், தன் மகள் வீட்டுக்கு செல்லும்போது காரை பண்ணையாரிடம் கொடுத்துவிட்டு தான் திரும்பி வரும்வரை காரை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு செல்கிறார்.
மகிழ்ச்சியடைந்த பண்ணையார், காரை ஓட்டுவதற்கு விஜய் சேதுபதியை நியமிக்கிறார். இதிலிருந்து ஊரில் எந்தவொரு நல்லது, கெட்டதுக்கும் பத்மினி காரை பயன்படுத்துகிறார்கள்.
ஒருநாள் துக்கவீட்டில் நாயகி ஐஸ்வர்யாவை சந்திக்கிறார் விஜய் சேதுபதி. பார்த்தவுடன் அவர் மீது காதல் வயப்படுகிறார். பின்பு அவரையே சுற்றி சுற்றி வருகிறார். ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா, காதலை ஏற்றுக்கொள்கிறார்.
பண்ணையாரும், அவர் மனைவி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் பத்மினி காரை மிகவும் நேசிக்கிறார்கள். கார் இல்லாத வாழ்க்கையை அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு செல்கிறார்கள்.
இந்நிலையில் பத்மினி காரின் உரிமையாளர் மகளான சினேகா பண்ணையார் வீட்டுக்கு வருகிறார். அங்கு பண்ணையாரிடம் தன் தந்தை இறந்து விட்டதாகவும், அவர் விட்டுச்சென்ற சொத்துக்களை தரும்படி கேட்கிறார். பண்ணையார் சொத்துக்களை கொடுத்துவிட்டு காரை மட்டும் கொடுக்காமல் விட்டுவிடுகிறார். பின்பு தன் மனைவியின் அறிவுறுத்தலின்படி காரை சினேகாவிடம் கொடுக்கிறார். அதற்கு சினேகா வாங்க மறுப்பு தெரிவித்து நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.
இதனால் பெரும் மகிழ்ச்சியடைகிறார் பண்ணையார். இந்நிலையில் தனது திருமணநாள் நெருங்குவதால் அதற்குள் பத்மினி காரை ஓட்டக்கத்துக்கொண்டு தன் மனைவியை உட்காரவைத்து ஓட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
இவர் மனைவிக்கும் இதே ஆசை உள்ளது. இதற்கு விஜய் சேதுபதியை கார் ஓட்ட கற்றுத்தரும்படி கூறுகிறார். பண்ணையாருக்கும் ஓட்ட கற்றுக்கொடுத்தால் தன்னால் இக்காரை விட்டு பிரியவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் ஓட்ட கற்றுத்தராமல் ஏமாற்றி வருகிறார்.
இதற்கிடையில் வீட்டில் உள்ள ஒவ்வொன்றாக எடுத்துச்செல்லும் பண்ணையாரின் மகளான நீலிமா, பத்மினி காரையும் எடுத்துச் செல்கிறார்.
இறுதியில் பத்மினி காரை மகளிடம் இருந்து மீட்டாரா? தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றினாரா? என்பதே மீதிக்கதை.
பண்ணையாராக வரும் ஜெயப்பிரகாஷ் தன் இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். கார் மீது பாசம் காட்டுவது, மகளிடம் மென்மையாக பேசுவது, கார் ஓட்ட துடிப்பது என பல்வேறு கோணங்களில் நடிப்பு திறனால் மிளிர்கிறார்.
பண்ணையார் மனைவியாக வரும் துளசி, தன் அழகிய நடிப்பால் பட்டையை கிளப்பியிருக்கிறார். அவருடைய மர்மப்புன்னகை பார்ப்பதற்கு ரசிக்கும் படியாக உள்ளது.
ஒட்டுனரான விஜய் சேதுபதிக்கு முக்கியத்துவம் குறைவு. இருந்தாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக பண்ணையார் கார் ஓட்ட கற்றுக்கொண்டால் தன்னைக்கழட்டி விட்டுவிடுவாரோ என்ற பதட்டம் அவருடைய சிறந்த நடிப்புக்கு உதாரணம்.
நாயகியாக ஐஸ்வர்யா, இவருக்கு நடிக்க வாய்ப்பு குறைவு. கிராமத்து வேடத்துக்கு அழகாக பொருந்துகிறார்.
குறும்படத்தை முழுநீளப்படமாக எடுத்த இயக்குனர் அருண்குமாரை பாராட்டலாம். காரை மையமாக வைத்து அதில் காதல், பாசம் என அனைத்திலும் வெற்றி கண்டிருக்கிறார்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. கோகுல் பினாய் ஒளிப்பதிவில் 1980ம் ஆண்டை நம் கண்முன் அற்புதமாக காட்சி தந்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘பத்மினி’ காரில் ஒரு ரவுண்டு போகலாம்.
நடிகர்: விஜய் சேதுபதி
நடிகை: ஐஸ்வர்யா
இயக்குனர்: அருண்குமார்
இசை: ஜஸ்டின் பிரபாகரன்
ஓளிப்பதிவு : கோகுல் பினாய்


Nantri Viduppu 

No comments: