இலங்கைச் செய்திகள்

* தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயத்துக்கு எதிரான பிரசாரங்கள்
* எதிரணியின் கிளர்ச்சிக் கனவு
* இலங்கைத் தமிழர்களைத் திருப்பியனுப்பும் சுவிஸ் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அகதி அமைப்புகள் கடும் கண்டனம்
* இலங்கையில் ஏழு இரகசிய முகாம்கள் இயங்குவதாக ஐ.நாவில் தெரிவிப்பு
* அரசாங்கத்தின் காணிப்பதிவு அறிவித்தல் இடைநிறுத்தம் மேன் முறையீட்டு நீதிமன்றம் பணிப்பு
*  திடீர் பொலிஸ் பதிவு ; மக்கள் அச்சத்தில்
* சட்டத்தின் ஆட்சியின் அவசியம்
* இணையத்தளங்கள் தொடர்பான அரசாங்கத்தின் உத்தரவு
* கொடிய போரினால் பாதிக்கப்பட்டு காணாமற் போன ஆயிரக்கணக்கானவர்களை அவர்களது குடும்பத்தினர் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஜனவரி முதல் விசா கட்டணங்களில் மாற்றம்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயத்துக்கு எதிரான பிரசாரங்கள்


 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் அமெரிக்காவுக்குச் சென்று ஒபாமா நிருவாகத்தின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியமை ஒரு தேசத்துரோகச் செயல் என்ற வகையிலான பிரசாரமொன்று தென்னிலங்கையில் முடுக்கிவிடப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அவர்கள் வாஷிங்டனுக்குப் புறப்படுவதற்கு முன்னதாகவே ஜாதிக ஹெல உறுமய, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் மற்றும் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி போன்ற கடும்போக்கு சிங்கள தேசியவாத அமைப்புக்களே குற்றச்சாட்டுக்களை முன்வைத்தன. ஆனால் பின்னர் சம்பந்தன் குழுவினர் வாஷிங்டனில் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருந்த நாட்களில் சிரேஷ்ட அமைச்சர்கள் கூட தங்களது கண்டனத்தை வெளியிடத் தொடங்கினார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனைச் சந்திப்பதற்கான வாய்ப்புகளும் இருப்பதாகப் பேசப்பட்ட வேளையில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூட்டமைப்பு இலங்கைத் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல என்று கூறி அவர்களுடன் செயலாளர் நாயகம் நடத்தக்கூடிய எந்தவொரு சந்திப்புமே முறையானதாக அமையாது என்ற தொனியில் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

கடந்த வாரம் கொழும்பில் செய்தியாளர் மகாநாட்டில் உரையாற்றிய பேராசிரியர் பீரிஸ் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் யார் யாரைச் சந்திக்க முடியுமென்று இலங்கையினால் ஆணையிட முடியாது என்ற போதிலும், இந்த நாட்டில் உள்ள சகல தமிழ் பேசும் மக்களினதும் அபிப்பிராயங்களைப் பிரதிபலிக்கும் ஒரு அரசியல் அமைப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்குவது அடிப்படையில் தவறானதாகும் என்று குறிப்பிட்டார். பல அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அவற்றில் சில கட்சிகள் பாராளுமன்றத்தில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்றும் பேராசிரியர் கூறினார். அடுத்து கடந்த வியாழக்கிழமை அமைச்சரவைப் பேச்சாளரான தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல செய்தியாளர் மகாநாட்டில் உரையாற்றுகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் ஏக பிரதிநிதிகள் அல்ல என்றும் அத்தகைய பொறுப்பை அவர்கள் தங்களுக்குரியதாக்கிக் கொள்ள முடியாது என்றும் கூறினார். அவர்கள் இலங்கையில் சகல வளங்களையும் அனுபவித்துக்கொண்டு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து கொண்டு தங்களுடைய தாய்நாட்டுக்கெதிராகச் செயற்படுகிறார்கள் என்றும் ரம்புக்வெல செய்தியாளர்கள் மத்தியில் குறிப்பிட்டார்.

முதலில் அடிப்படையான ஒரு அம்சத்தைக் கவனத்தில் எடுக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபோதுமே தங்களை இலங்கைத் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று உரிமை கோரியதில்லை. கூட்டமைப்பு தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய அரசியல் இயக்கமாக விளங்குகிறது என்றே அவர்கள் கூறிவந்திருக்கிறார்கள். போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் தமிழ் மக்கள் மத்தியில் கட்டுறுதியான அரசியல் சமுதாயமொன்று இல்லாதிருந்த சூழ்நிலையில் அந்த மக்கள் தங்களுடைய எதிர்பார்ப்புகளையும் அக்கறைகளையும் அரசாங்கத்துக்கோ அல்லது சர்வதேச சமூகத்துக்கோ வெளிக்காட்டுவதற்குப் பயன்படுத்தக்கூடிய ஒரே அரசியல் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே நோக்குகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சகல அணுகுமுறையையும் செயற்பாடுகளையும் நியாயப்படுத்துவதற்கு நாம் முன்வரவில்லை. ஆனால், கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் அதற்குப் பிறகு நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களிலும் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே தமிழ் மக்கள் பெரிதும் ஆதரித்து தங்களின் அரசியல் பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொண்டார்கள்.

தென்னிலங்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை எந்தக் காரணத்துக்காக சகல தேர்தல்களிலும் தென்னிலங்கையில் சிங்கள மக்கள் அமோகமாக ஆதரித்தார்களோ அதற்கு நேர் எதிரான காரணத்துக்காக வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கிறார்கள். கூட்டமைப்பின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அக்கறை காட்டுகின்ற எந்தத் தரப்பினருமே அவர்களைத் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாகக் கருதுகிறார்கள் என்று நம்பவேண்டிய அவசியம் ஏதுமில்லை. கடந்த பத்துமாதங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்ற அரசாங்கம் அவர்களை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாகக் கருதாததைப் போன்றே ஏனையவர்களும் செய்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் எந்தத் தரப்பினரும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாக அரசாங்கம் கூறுகின்ற வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதானால், யாரும் எதிர்க்கப் போவதில்லையே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூட அதை ஆட்சேபிக்கப் போவதில்லை.

கூட்டமைப்பின் தலைவர்கள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில்தான் வாஷிங்டன் சென்றார்கள். அவர்களுக்கு அத்தகைய அழைப்பொன்று கிடைக்கப்பெற்றமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சர்வதேச சமூகத்தின் மத்தியில் நியாயபூர்வமான ஒரு அந்தஸ்தை வழங்குவதாக அமைந்துவிடும் என்பதே அரசாங்கத்தின் விசனத்துக்கு அடிப்படைக் காரணமாக இருக்கலாம். வேறுயாருமல்ல, ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் மிகவும் நெருக்கமான தொடர்பைக் கொண்டவரும் அவரை அடிக்கடி பேட்டி காண்பவருமான சென்னை "இந்து' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.ராம் அண்மையில் கொழும்பில் நிகழ்த்திய உரையொன்றில் அண்மைய தேர்தல்களில் பெற்ற பெருவெற்றிகளையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பகமான கட்சியாக மாத்திரமல்ல, தலைமைத்துவ சக்தியாகவும் மிளிர ஆரம்பித்திருக்கிறது என்றும் அரசாங்கத்துக்கும் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளுக்கு இருக்கக்கூடிய தேசிய முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடும் எவருமே பெருங்கேடு விளைவிக்கக்கூடிய தவறைச் செய்தவர்களாவார் என்றும் கூறியதை இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்குமென்று நம்புகிறோம்.

இலங்கை இன நெருக்கடி அரசாங்கத் தலைவர்கள் இறுமாப்புடன் நினைப்பதைப் போன்று இன்று வெறுமனே ஒரு உள்நாட்டு நெருக்கடியாக இல்லை. கடந்த மூன்று தசாப்தகால நிகழ்வுப் போக்குகள் அதற்கு தவிர்க்க முடியாத சர்வதேசப் பரிமாணத்தைக் கொடுத்திருக்கிறது. இந்த உண்மையை உணராமல் அல்லது உணரவிரும்பாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் வெளிநாடுகளில் நடத்தக்கூடிய பேச்சுவார்த்தைகளைத் தேசத்துரோகமென்று கூச்சல் போடுவது பெரும் அபத்தமாகும்!

நன்றி தினக்குரல்

எதிரணியின் கிளர்ச்சிக் கனவு

 Tuesday, 08 November 2011

எதிரணிக் கட்சிகள் தற்போது மக்கள் கிளர்ச்சிகளைப் பற்றி அடிக்கடி பேசுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அரபுலகில் இடம்பெறுவதைப் போன்று இலங்கையிலும் மக்கள் கிளர்ந்தெழ வேண்டிய அளவுக்கு பொருளாதார நெருக்கடியும் சட்டத்தின் ஆட்சியின் சீர்குலைவும் ஏற்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரியவும் ஏற்கனவே பல தடவைகள் கூறியிருந்தார்கள். ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.)யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க ஒருதடவை டியூனீஸியாவிலும் எகிப்திலும் எதேச்சாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்ததைப் போன்று இலங்கையிலும் மக்கள் கிளர்ச்சி செய்வார்களேயானால் அவர்களுக்குத் தலைமை தாங்குவதற்கு தனது கட்சி தயாராயிருக்கிறது என்று சொன்னார். அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி கிளர்ச்சி செய்யப்போவதாகக் கூறாமல் மக்கள் கிளர்ச்சி செய்தால் தலைமைதாங்கத் தயாராயிருப்பதாக அவர் எதற்காகக் கூறினார் என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.

நேற்று முன்தினம் கொழும்பில் செய்தியாளர் மகாநாட்டில் உரையாற்றிய ஜே.வி.பி.யின் பாராளுமன்ற குழுத் தலைவர் அநுராகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு டியூனீஸியாவிலும் எகிப்திலும் இடம்பெற்றதைப் போன்று மக்கள் சக்தியைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் எழுந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். பாராளுமன்றத்தில் அதிகப் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்ட அரசாங்கங்கள் மக்கள் சக்தியினால் கவிழ்க்கப்பட்ட எண்ணற்ற உதாரணங்கள் வரலாற்றில் இருக்கின்றன. தனியார்துறை ஊழியர்களுக்கான சர்ச்சைக்குரிய ஓய்வூதியத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் நோக்குடனான சட்டமூலத்தை இலங்கை அரசாங்கம் மக்கள் சக்திக்கு முகங்கொடுக்க முடியாத நிலையிலேயே வாபஸ் பெற்றது. அரபுலகில் நடைபெறுகின்ற கிளர்ச்சிகள் ஆட்சியாளர்களை விரட்டிக்கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். ஜனநாயக விரோத நடவடிக்கைகளைத் தோற்கடிப்பதற்குப் பாராளுமன்றத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கையை சூழ்ச்சித்திறமாக பயன்படுத்துவதன் மூலமாகவன்றி மக்கள் சக்தியை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் திசாநாயக்க கூறியிருக்கிறார்.

அதேவேளை, நேற்றைய தினம் கொழும்பில் செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய கருஜெயசூரிய ஜனநாயக விதிமுறைகளை அரசாங்கம் தொடர்ந்து மீறிக்கொண்டிருக்குமேயானால் வெகுவிரைவில் மக்கள் எழுச்சி ஏற்படும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். அநுராகுமார திசாநாயக்கவும் ஜெயசூரியவும் மக்கள் சக்தி பற்றியும் மக்கள் எழுச்சி பற்றியும் தற்போது கதைப்பதற்கு உடனடிக் காரணம் இவ்வாரம் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவிருக்கும் ஒரு அவசர சட்டமூலமேயாகும். நஷ்டத்தில் இயங்குகின்றதும் பயன்படுத்தப்படாமலிருக்கின்றதுமான தொழில் நிறுவனங்களையும் சொத்துக்களையும் கையகப்படுத்துவதற்கான சட்ட மூலமே அதுவாகும். சிம்பாப்வேயில் வெள்ளைக்காரப் பண்ணையாளர்களின் சொத்துக்களைச் சுவீகரிப்பதற்கு ஜனாதிபதி றொபேர்ட் முகாபே கொண்டு வந்ததைப் போன்ற கொடுமையான சட்டத்தைப் போன்றதே அரசாங்கத்தின் சட்டமூலம் என்று திசாநாயக்கவும் ஜெயசூரியவும் இச்சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் அரசாங்கம் அதன் விருப்பு வெறுப்புக்கேற்ப எந்தவொரு தனியார் நிறுவனத்தையும் சொத்தையும் கையகப்படுத்தக்கூடியதாக இருக்குமென்று எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

மேற்படி சட்டமூலம் தொடர்பில் எதிரணிக் கட்சிகளினால் வெளிப்படுத்தப்படுகின்ற ஆட்சேபனைகளை அரசாங்கம் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. அதனை உணர்ந்த நிலையிலேயே ஐ.தே.க.வும் ஜே.வி.பி.யும் மக்கள் கிளர்ச்சிகளைப் பற்றிப் பேசுகின்றன போலத் தெரிகிறது. தனியார்துறை ஊழியர்களுக்கான ஓய்வூதியச் சட்டமூலத்தை அரசாங்கம் கைவிட்டதற்குக் காரணம் உண்மையிலேயே தனியார் துறை ஊழியர்கள் காட்டிய கடும் எதிர்ப்பேயாகும் என்பதிலும் அவர்கள் நடத்திய ஆர்ப்பாட்ட இயக்கங்களுக்கு ஜே.வி.பி.யினர் வழங்கிய ஆதரவுமேயாகும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இவ்வாரம் கொண்டுவரப்படவிருக்கும் மிகவும் சர்ச்சைக்குரிய சட்டமூலத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டிப் போராடக்கூடிய வல்லமை ஐ.தே.க.வுக்கோ ஜனதா விமுக்தி பெரமுனைக்கோ இருக்கிறதா என்ற கேள்வியைக் கேட்காமல் இருக்கமுடியவில்லை. எதிரணிக் கட்சிகள் ஐக்கியப்பட்டு மக்களை அணிதிரட்டி ஜனநாயக ரீதியான வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தால் அரசாங்கத்தின் பல்வேறு ஜனநாயக விரோதச் செயற்பாடுகளைத் தடுத்திருக்க முடியும். ஆனால், அத்தகைய ஐக்கியத்தையும் அரசியல் துணிச்சலையும் வெளிக்காட்டாமல் எதிரணி பலவீனப்பட்டுக்கிடப்பதே அரசாங்கத்துக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.

போர்வெற்றியைக் காட்டி அரசாங்கத்தினால் முக்கியமான நெருக்கடிகளில் இருந்து மக்களின் கவனத்தை எளிதாகவே திசைதிருப்பக் கூடியதாக இருந்த சூழ்நிலைகளினால் எதிரணி நீண்டகாலமாகவே தடுமாற்றத்துக்குள்ளாகி வந்திருக்கிறது. இந்தத் தடுமாற்றத்தில் இருந்து தங்களை விடுவிக்கக்கூடியதாகவும் அரசாங்கத்தின் தவறான போக்குகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டக்கூடியதாகவும் அரசியல் வியூகங்களை வகுக்கக்கூடிய வல்லமையோ விவேகமோ எதிரணியிடம் இல்லை. இத்தகையதொரு துரதிர்ஷ்டவசமான நிலைமையில் விரக்தியின் விளிம்பில் நின்றுகொண்டு அரபுலகக் கிளர்ச்சிகளைப் பற்றி நினைவூட்டிக்கொண்டு ஐ.தே.க.வினதும் ஜே.வி.பி.யினதும் தலைவர்கள் கனவுகளைக் காண்கிறார்கள்!

நன்றி தினக்குரல்


இலங்கைத் தமிழர்களைத் திருப்பியனுப்பும் சுவிஸ் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அகதி அமைப்புகள் கடும் கண்டனம்
Monday, 07 November 2011

 புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களைத் திருப்பி அனுப்புவதற்கு ஆதரவாக சுவிற்சர்லாந்து நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை அகதிகளுக்கான முகவரமைப்புகள் கடுமையாகச் சாடியுள்ளன.

மனித உரிமைகள் தொடர்பான கவலைகள் இருந்து வருகின்றபோதிலும் புகலிடம் கோருவோரை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப முடியும் என்று சுவிற்சர்லாந்தின் சமஷ்டி நிர்வாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்தத் தீர்ப்பு தொடர்பாகக் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனை "முதிர்ச்சி யற்றது' என்று வர்ணித்துள்ள சுவிஸ் அகதிகள் பேரவை, இலங்கையின் கள

நிலைவரம் இன்னரும் ஸ்திரமற்றதாக இருப்பதாகக் கூறியுள்ளது.

அதேசமயம் அச்சுறுத்தப்பட்ட மக்களுக்கான சங்கமான சுவிஸைத் தளமாகக் கொண்ட அரசசார்பற்ற நிறுவனமும் இந்த முன்னகர்வுக்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது. கைதுகள், அச்சுறுத்தல் போன்ற சம்பவங்கள் திருப்பி அனுப்பப்பட்ட தமிழர்களுக்கு இடம்பெற்றிருந்தவை தொடர்பாக அறியப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

அரசின் எதிராளிகள் அரசின் பகைவர்களாகக் கருதப்பட்டும் அரசியல் ரீதியாக எதிரணியில் உள்ளவர்கள் சந்தேகிக்கப்பட்டும் இருப்பதாகவும் மனித உரிமைப் பணியாளர்கள், அரசை விமர்சிக்கும் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் என்பன விசாரணைக்குட்படுத்தப்படும் நெருக்கடி இருப்பதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

"இந்த மக்களுக்கு ஆபத்து இருப்பதாகக் கூறிக்கொண்டே சுவிற்சர்லாந்துக்கு வருவோரை ஏற்றுக்கொண்டு அவர்களைப் பின்னர் திருப்பி அனுப்ப வேண்டியுள்ளதாகக் கூறுவது அதிர்ச்சியான விடயமாகும். உண்மையில் என்னால் இதனை விளங்கிக்கொள்ள முடியவில்லை' என்று அச்சுறுத்தப்பட்ட மக்களுக்கான சங்கத்தின் பணிப்பாளரான கிறிஸ்தோப் வைட்மர் சுவிஸ் இன்போவுக்குக் கூறியுள்ளார். சுவிற்சர்லாந்திற்கு புலம்பெயர்ந்திருக்கும் குழுக்களில் அதிக தொகையினராக இருப்போரில் இலங்கையர்களும் உள்ளடங்கியுள்ளனர். கடந்த வருட இறுதியில் நிலுவையாக இருந்த புகலிடம் கோருவோரின் விண்ணப்பங்களில் இலங்கையரின் எண்ணிக்கை 2100 ஆக இருந்தது.

சுவிஸ் நீதிமன்றத்தின் விசாரணைகளின் பிரகாரம் கடந்த மூன்று வருடங்களில் இலங்கையின் பாதுகாப்பு நிலைவரம் மேம்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மோதல் இடம்பெற்ற வன்னிப் பிராந்தியத்தைத் தவிர ஏனைய பகுதிகளின் பாதுகாப்பு மேம்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 27 இல் வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம் இலங்கையிலுள்ள ஏனைய பகுதிகளுக்கு வன்னிப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போகக்கூடியதாக இருந்தால் அவர்களைத் திருப்பி அனுப்ப முடியுமெனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேவேளை, வடபகுதியைச் சேர்ந்த மக்களைத் திருப்பி அனுப்புவதற்கு விசேட சூழ்நிலைகள் காணப்பட்டால் மாத்திரமே தடை செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இலங்கையை விட்டு புகலிடம் கோருபவர் புறப்பட்டபோது அவரின் வாழ்க்கை நிலைவரம், தற்போதைய நிலைமை, சுவிற்சர்லாந்தில் தங்கியிருந்த காலம் என்பன தொடர்பாகக் குடிவரவுத்துறை அதிகாரிகள் பரிசீலனை செய்ய வேண்டிய தேவை உள்ளது.

வன்னியைச் சேர்ந்த ஆட்களுக்கு விதி விலக்கழிப்பதானது இந்த முறைமையைத் துஷ்பிரயோகம் செய்வதற்கு வழியமைத்ததாகிவிடுமென சமஷ்டி குடிவரவுத்துறை அலுவலகம் சுவிஸ் இன்போவுக்குக் கூறியுள்ளது. ஆனால், திருப்பி அனுப்பப்படும் ஒவ்வொரு நபர் தொடர்பாகவும் விரிவான முறையில் பரிசீலனை செய்யப்பட வேண்டியது அவசியமென அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சமஷ்டி குடிவரவுத்துறை அலுவலகத்தின் நிலைப்பாட்டிற்கு எதிராகக் கடந்த ஏப்ரலில் பாராளுமன்றத்திற்கு முன்னால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர்.

"உண்மையில் ஒவ்வொருவருமே அச்சுறுத்தலுக்குட்பட்டிருப்பதை அறிவோம். இந்த விடயத்தை குடிவரவுத்துறை அலுவலகம் மிகவும் கவனமாகக் கையாளும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்' என்று வைட்மர் கூறியுள்ளார்.

அரசாங்கத் திணைக்களத்துக்கு அழுத்தம் கொடுக்க அவரின் அமைப்பு திட்டமிடுவதாகவும் ஆனால் நீதிமன்றத் தீர்ப்பை மாற்ற முடியுமென அவர்கள் நினைக்கவில்லை என்பதை ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தாயகத்திற்குத் திரும்பிய பல தமிழர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்ட அதிகளவு சம்பவங்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இரு மாதங்களுக்கு முன்னர் சுவிஸில் புகலிடம் கோரியிருந்த தமிழர் ஒருவர் சுகவீனமடைந்திருந்த தாயாரைப் பார்க்க திரும்பிச் சென்றதாகவும் அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாகவும் வைட்மர் கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கையின் வடக்கு, கிழக்கில் வாழ்வதற்கான நிலைமை இப்போதும் மிகவும் கடினமானதாக இருப்பதாக சுவிஸ் அகதிகள் பேரவை கூறியுள்ளது. எவர் திருப்பி அனுப்பப்பட்டாலும் மோதலின் பின்னர் உள்சார் கட்டமைப்பு வசதிகள் இன்னரும் ஏற்படுத்தப்படவில்லை என்று பேரவை கூறியுள்ளது. வெளிநாடுகளிலிருந்து திரும்பும் தமிழர்கள் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுவதை பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது.

நன்றி தினக்குரல்

இலங்கையில் ஏழு இரகசிய முகாம்கள் இயங்குவதாக ஐ.நாவில் தெரிவிப்பு


9/11/2011

இலங்கை இராணுவம் மற்றும் அரசாங்கத்தின் ஆதரவு, ஆயுத குழுக்களின் கீழ் ஏழு இரகசிய முகாம்கள் இயங்கி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவா அமர்வின்போது சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்திருப்பதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இலங்கை இராணுவமும் அரச ஆதரவு ஆயுதக் குழுக்களும் இந்த இரகசிய முகாம்களை நடத்தியதாகவும் இதில் சில இன்னமும் செயல்படலாம் என்ற சந்தேகத்தையும் சர்வதேச மன்னிப்பு சபை அமைப்பு வெளியிட்டுள்ளது. இது போன்ற இடங்களில் சித்திரவதைகள், சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் போன்றவை நடைபெற்றதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

குறிப்பாக 7 முகாம்களின் முகவரியை சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது. வவுனியா பூந்தோட்டம் கல்லூரி, வவுனியாவில் இருக்கும் 211 ஆவது பிரிகேடின் தலைமையகம், வெளிக்குளம் பாடசாலை, புளொட் அமைப்பின் வவுனியா தடுப்பு மையம் மற்றும் தர்மபுரத்துக்கு 14 மைல்கள் தொலைவில் உள்ள ஐந்து கைவிடப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்களில் முன்னாள் புலிகள் 700 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 80 பேர் புலிகளின் முன்னணித் தலைவர்கள் என்றும் 300 பேர் புலிகளின் ஆதரவாக செயல்பட்ட பொது மக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர, முல்லைத்தீவில் இரண்டு இடங்கள் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்து இந்த அமர்வில் விரிவாக ஆராயப்பட்டது. குழுவின் தலைவரான பெலிஸ் கியர் இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச மன்னிப்பு சபை அமைப்பு உள்ளிட்ட அமைப்புக்கள் அளித்த ஆதாரங்கள் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டோர் மீது சுயாதீனமாக மருத்துவ பரிசோதனை நடத்தப்படுவதில்லை என்றும் ஐ.நாவின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவின் தலைவர் பெலிஸ் கியர் கூறினார்.

நன்றி வீரகேசரி


அரசாங்கத்தின் காணிப்பதிவு அறிவித்தல் இடைநிறுத்தம் மேன் முறையீட்டு நீதிமன்றம் பணிப்பு

Thursday, 10 November 2011

courtsவடக்கு, கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்தோர் எதிர்வரும் 20 ஆம் திகதிக்குள் தமது காணிகளைப் பதிவு செய்யுமாறு கோரும் அரசாங்கத்தின் அறிவித்தலை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று புதன்கிழமை இடைநிறுத்தி வைத்துள்ளது.


இலக்கம் 2011/04 காணிச் சுற்றறிக்கை அமுல்படுத்தப்படுவதை இடைநிறுத்தும் உத்தரவை விடுக்கக்கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

நீதியரசர் டபிள்யூ.எல்.ஆர்.சில்வா தலைமையில் இடம்பெற்ற விசாரணையின் போது காணிச்சுற்றறிக்கையை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்து கொண்டிருப்பதாகவும் இதற்காக குழுவொன்று நியமிக்கப்படக்கூடுமெனவும் பிரதி சொலிசிற்றர் ஜெனரல் முர்துபெர்னாண்டோ நீதிமன்றுக்கு அறிவித்தார்.

இதனையடுத்து 2011 நவம்பர் 20 இற்கு முன்னர் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த மக்கள் தமது காணிகளைப் பதிவு செய்யுமாறு கோரும் அரசாங்க அறிவித்தல் செயற்படுத்தப்படுவதை இடைநிறுத்தும் உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்தது.

அத்துடன் 2012 ஜனவரி 19 இல் இந்த விடயம் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மனுதாரரான சுமந்திரன் சார்பில் சட்டத்தரணி மோகன் பாலேந்திராவின் அனுசரணையுடன் ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனக ஈஸ்வரன், சட்டத்தரணிகள் விரான் கொரிய, பவானி பொன்சேகா, ஜெகான் குணதிலக ஆகியோர் நேற்று நீதிமன்றில் ஆஜராகினர்.

காணிப்பதிவு சுற்றறிக்கையானது வடக்கு, கிழக்கிலும் வெளிநாடுகளிலும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கவலையையும் விசனத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

நன்றி தினக்குரல்


திடீர் பொலிஸ் பதிவு ; மக்கள் அச்சத்தில்


ஜீவா சதாசிவம்

10/11/2011

மலையகப் பகுதிகளில் திடீரென பொலிஸ் பதிவுகள் மேற்கொள்ளுமாறு பொலிஸார் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் முன்னர் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் பதிவு முறை தற்போது, மலையகப்பகுதிக்கு விஸ்தரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் திடீர் பதிவு முறையால் மலையபகப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இப பதிவிற்கான விண்ணப்பப் படிவங்களை அந்தந்தப் பகுதிக்குட்பட்ட பொலிஸ் நிலையப் அதிகாரிகள் விநியோகித்து வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய மஸ்கெலியா பகுதியில் மேற்படி பதிவுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையகப் மக்களின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கமையவே இந்நடவடிக்கை முன்னெடுக் கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றனர்.
நன்றி வீரகேசரி


சட்டத்தின் ஆட்சியின் அவசியம்

Thursday, 10 November 2011

சட்டத்தைக் கையிலெடுக்க யாருக்கும் இடமளிக்கப்படமாட்டாது எனவும் அவ்வாறு செயற்படமுனைவோர் யாராக இருப்பினும் தயவு தாட்சண்யம் காட்டப்பட மாட்டாது எனவும் எச்சரித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சட்டத்தை செயற்படுத்தும் முழு அதிகாரமும் பொலிஸாரிடம் மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். தங்காலை நகரில் புதிய பொலிஸ் நிலையமொன்றைத் திறந்து வைத்துப் பேசும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்திருக்கிறார். உண்மையிலேயே சட்டத்தை கண்ட படி ஒவ்வொருவரும் கையிலெடுக்கும் பட்சத்தில் ஏற்படக்கூடிய விளைவுகள் மிகப்பாரதூரமானவை. இதனை யாரும் மறுக்க முடியாது. ஆனால், கடந்த கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக நாட்டில் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து போயிருப்பதையும் மறந்துவிட முடியாது. இவ்வாறு சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்து நாடு மோசமான அளவுக்குப் பாதிக்கப்படுவதற்கு இக்கால கட்டத்தில் நாட்டை ஆட்சி செய்த சகல அரசாங்கங்களும் பொறுப்பேற்க வேண்டும். இதிலிருந்து எவருமே தப்ப முடியாது.


சட்டத்தின் அதிகாரங்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அங்கும் அரசியல் தலையீடு அதிகரித்து பொலிஸ் தரப்பினர் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழக்கும் அவலம் பரவலாகவே காணப்படுகின்றது. அரசியல் அதிகாரத்தையுடையவர்கள் தமது அடாவடித்தனத்துக்கும் காடைத்

தனங்களுக்கும் பொலிஸாரைப் பயன்படுத்தும் போக்கு நீண்ட நெடுங்காலமாக இடம்பெற்றுவரும் சங்கதியாகவே உள்ளது. சட்டத்தையும் ஒழுங்கையும் பேண வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருப்பவர்களே இன்று அதனைக் காலில் போட்டு மிதிக்கும் கேவலத்தையே எங்கும் பார்க்க முடிகிறது. மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்கு வந்த போதிலும் மக்களால்

நிம்மதியாக , சந்தோஷமாக வாழ முடியாத நிலை தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. எங்கு பார்த்தாலும் மக்கள் அச்ச சூழ்நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்து போயுள்ளமையால் முன்னர் குறிப்பிட்ட கால் நூற்றாண்டு காலப்பகுதியில் நாட்டில் நல்லாட்சியொன்று நடந்ததாகவே தெரியவில்லை. வெறுமனே ஜனநாயகம் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதால் சட்டம் பாதுகாக்கப்படுவதாக அர்த்தம் கொள்ள முடியாது. சட்ட ஆட்சியைப் பற்றியும் சட்டத்தைப் பேணுவது பற்றியும் மேடைக்கு மேடை பேசுவதாலும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதாலும் எதுவும் நடக்கப்போவதில்லை. பாதுகாப்புத்தரப்பு சட்டவிடயத்தில் நேர்மையாகவும் நீதியாகவும் நடக்கக்கூடிய நிலைமையை ஏற்படுத்த வேண்டும்.

அண்மைக் காலத்தில் இடம்பெற்ற பொலிஸார் மீதான தாக்குதல், பொலிஸ் நிலையங்கள் மீதான தீவைப்புச் சம்பவங்களை நாம் ஒருபோதும் நியாயப்படுத்தத் தயாராக இல்லை. ஆனால், அவ்வாறான துர்ப்பாக்கிய சம்பவங்கள் இடம்பெறுவதற்கான காரணங்களைப் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. சட்டம் அனைவருக்கும் பொதுவானது. இதனை மறுக்கவில்லை. அதே சட்டம் பக்கச்சார்பாகப் பயன்படுத்தப்படுகிறபோது அநீதிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதைத் தவிர்க்க முடியாது. பொலிஸ் நிலையங்களில் அதிகாரிகள் இருக்கின்றனர். சட்ட ஏடுகள் இருக்கின்றன. முறைப்பாடு செய்ய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அதே பொலிஸ் நிலையங்களில் தான் முறைகேடுகளும் ஊழலும் தலைவிரித்தாடுகின்றன.

பொலிஸார் தவறிழைத்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதியும் அரசும் கூறி வருகின்றனர். கடந்த காலத்தில் இடம்பெற்ற மோசமான விளைவுகளுக்கு பொலிஸார் மீதே குற்றச்சாட்டுக்கள் அதிகமாகக் காணப்பட்டன. அவர்களில் எத்தனை பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கேட்கவிரும்புகின்றோம். சட்ட நடவடிக்கை என்ற பெயரில் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டனர் மற்றும் சிலரோ பதவி உயர்வுடன் வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். இது குற்றமிழைத்தவர்கள் மீது எடுக்கப்

படும் நடவடிக்கையா?

ஒரு கால கட்டத்தில் தேர்தல் முடிவுற்றதும் ஆட்சிக்கு வந்தவர்கள் பொலிஸாருக்கு 10 நாட்கள் விடுமுறை வழங்கியது அதன் பின் விளைவுகள் எவ்வாறாக அமைந்தது என்பதை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். சட்டத்தின் பெயரால் பாதுகாப்புத்தரப்பு செயற்பட்ட முறைகளை இந்த இடத்தில் விமர்சிக்க முற்பட்டால் நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும். எனவே தான் அதிகாரத்திலுள்ளவர்கள் மேடைப் பேச்சுகளிலும் சுற்றுநிருபங்களிலும் உத்தரவுகளைப் பிறப்பிப்பதால் மாத்திரம் சட்டம், ஒழுங்கைப் பேண முடியாது. இதய சுத்தியுடன் நேர்மையான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றோம். வாய்ப்பேச்சு வீரர்களாக இருந்துவிடாமல் மக்களுக்கு நம்பிக்கையூட்டக்கூடிய விதத்தில் செயற்பாடுகள் அமைய வேண்டுமென்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். மக்கள் சட்டத்தை மதிக்கக்கூடிய விதத்தில் அரசின் செயற்பாடுகள் அமைந்தால் நாட்டில் ஆரோக்கியமான சூழ்நிலையைக் கட்டியெழுப்ப முடியும்!

நன்றி தினக்குரல்


இணையத்தளங்கள் தொடர்பான அரசாங்கத்தின் உத்தரவு

Friday, 11 November 2011

இலங்கை தொடர்பான செய்திகளை வெளியிடுகின்ற சகல இணையத்தளங்களும் தகவல் திணைக்களத்தில் அவற்றைப் பதிவு செய்துகொள்ள வேண்டுமென்ற அரசாங்கத்தின் உத்தரவு விமர்சனங்களுக்குள்ளாகியிருக்கிறது. கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கடுமையான நடவடிக்கையாகவே இது பரவலாக நோக்கப்படுகிறது. தனது நலன்களுக்கு பாதகமானது என்று கருதுகின்ற செய்திகள் வெளியிடப்படுவது தொடர்பில் சிலவகையான கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கவேண்டுமென்று அரசாங்கம் நாட்டம் காட்டுகிறது என்பதில் சந்தேகமில்லை. அதனால், அரசாங்கத்தின் உத்தரவு தொடர்பிலான விமர்சனங்கள் நியாயபூர்வமானவை என்பதே எமது நிலைப்பாடாகும்.


தனிப்பட்ட முறையில் அரசியல் தலைவர்களினதோ, அதிகாரிகளினதோ அல்லது வேறு எந்தவொருவரினதுமோ புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்துவதையே பிரதான நோக்கமாகக் கொண்டு எண்ணற்ற இணையத்தளங்கள் செயற்படுவதை நோக்கும் போது இணையத்தளங்கள் மீது சிலவகையான கட்டுப்பாடுகள் பிரயோகிக்கப்பட வேண்டுமென்று கற்பிக்கப்படக்கூடிய நியாயத்தையும் நிராகரிப்பதற்கில்லை. எமது இக்கருத்தைக் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகளை ஆதரிப்பதாக அர்த்தப்படுத்த வேண்டியதில்லை. படுமோசமான பொய்களையும் மக்களைத் தவறாக வழிநடத்தக்கூடிய பிரசார நோக்கிலான தகவல்களையும் புனைகதைகளையும் ஊடக நயநாகரிகத்துக்கு எதுவிதத்திலும் ஒவ்வாத கொச்சைத்தனமான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்ட ஆக்கங்களையும் வக்கிரத்தனமானமுறையில் வெளியிடும் இணையத்தளங்கள் காளான்கள் போலப் பெருகியிருக்கின்றன என்ற உண்மை கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம் மீதான எந்தவொருவரினதும் அக்கறைக்குள் துரதிர்ஷ்டவசமாக அமிழ்த்தப்பட்டுவிடக்கூடாது என்பதே எமது வலியுறுத்தலாகும்.

அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஊடகத்துறையுடனான அதன் தொடர்பு முறை விரும்பத்தக்கதாக இருப்பதாகக் கூற முடியாது. கடந்த பல வருடகால நிகழ்வுப் போக்குகளே அதற்குச் சான்று. பிரத்தியேகமாக நாமெதையும் கூறித்தான் அதை விளக்க வேண்டுமென்றில்லை. ஊடக அறிவியலை உறுதியாகக் கடைப்பிடித்து செயற்படுகின்ற பத்திரிகைகளினதோ அல்லது இலத்திரனியல் ஊடகங்களினதோ நேர்மையான விமரிசனங்களை ஆரோக்கியமான உணர்வுடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெரும்பாலான அரசியல்வாதிகளிடம் இல்லை. ஊடகவியலாளர்களையும் ஊடகத்துறையையும் குரோதவுணர்வுடன் நோக்குகின்ற துரதிர்ஷ்டவசமான கலாசாரத்தை இந்த அரசியல்வாதிகள் வளர்த்தெடுத்து வந்திருக்கிறார்கள். தங்களின் மனதுக்குப் பிடிக்காத அல்லது தங்களால் ஜீரணிக்க முடியாத தகவல்களிலும் கருத்துகளிலும் உண்மையும் நியாயமும் இருக்க முடியும் என்பதை அரசியல்வாதிகள் உணர்ந்து கொள்ளத் தலைப்பட்டால் அதுவேபோதும் இன்று ஊடகத்துறையும்

ஊடகவியலாளர்களும் முகங்கொடுக்கவேண்டியிருக்கின்ற நெருக்கடிகளிலும் தொல்லைகளிலும் அதிகப்பெரும்பாலானவை அற்றுப் போவதற்கு

நன்றி தினக்குரல்

கொடிய போரினால் பாதிக்கப்பட்டு காணாமற் போன ஆயிரக்கணக்கானவர்களை அவர்களது குடும்பத்தினர் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
-அன்றூ பண்கோம்ப் (Andrew Buncombe)

Family searchஆறு வயதான அவனது பெயர் அபி, மற்றும் அவன் கடைசியாக அவனது குடும்பத்தினரது பார்வையில் பட்டது, அவர்கள் தஞ்சமடைந்திருந்த பதுங்கு குழிக்கு வெகு அருகில் பயங்கரமான எறிகணைகள் விழுந்து வெடித்த அந்த ஆவேசமான வேளைகளில்தான்.

அவனது சகோதரிகள் கடுமையான காயத்துக்கு இலக்கானார்கள். அவனது தாயாரும்கூட மோசமாகக் காயமடைந்திருந்தார். மற்றும் இந்த சிறு பாலகன் தனது கரங்களால் அவனது தாயாரைச் சுற்றிப் பிடித்துக்கொண்டு “அம்மா” என்று மூன்றுமுறை கூவி தேம்பி தேம்பி அழுதான்.

இந்தக் காட்சி அரங்கேறியது 2009ம் ஆண்டு மே மாதம் தமிழ் போராளிகள் முன்னேறிவரும் ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு எதிராகத் தங்கள் கடைசி நிலையை பாதுகாக்கப் போராடியபோது.

ஸ்ரீலங்காவின் வடபகுதி மண் இரத்தக்கறை தோய்ந்து சிவந்தமண்ணாக மாறியிருந்த அந்த நாட்களில், அவர்களுடன் கிட்டத்தட்ட 300,000 பொதுமக்களும் அங்கு தங்கியிருந்தார்கள்.

அப்போதிருந்தே அவனது குடும்பத்தினர் வெகுமதி எதனையும் அறிவிக்காமல் இராணுவத்தினர், தொண்டு நிறுவனங்கள், இந்து மதகுருமார்கள் என்று அனைவரிடமும் போய் முறையிட்டு அவனைத் தேடினார்கள்.” அவனுக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் அவன் எனது கழுத்தைச் சுற்றிப்பிடித்துக்கொண்டு கதறிய காட்சிதான்” என்று சொன்னார் அந்தச் சிறுவனின் தாயாரான கேதாரகௌரி மகேந்திரன்.

இந்த நிலையிலுள்ளது இந்தக் குடும்பம் மட்டுமல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளை நிர்மூலமாக்கி இரண்டரை வருடங்கள் கடந்த பின்னர் நூற்றுக்கணக்கான சிலவேளைகளில் ஆயிரக்கணக்கிலும் இருக்கக்கூடிய மக்கள் கணக்கில் இல்லாதவர்களாக காணாமற் போயுள்ளனர்.

அவர்களின் குடும்பத்தினரின் நிச்சயமற்ற தன்மை மற்றும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள உணர்வதிர்ச்சி என்பன பல தசாப்தங்களாக வன்முறைத் தழும்பேறியுள்ள நாட்டில் நல்லிணக்கத்தை நோக்கி அரசாங்கம் அடியெடுத்து வைக்கும் முயற்சிகள் யாவற்றுக்கும் இடறவைக்கும் தடைக்கற்களாக குறுக்கே நிற்கின்றன.

யுனிசெஃப்புடன் இணைந்து ஸ்ரீலங்கா அதிகாரிகள் காணமற்போயுள்ள சிறுவர்களைக் கண்டுபிடிப்பதற்காக உருவாக்கியுள்ள ஒரு திட்டத்தின்படி கிடைத்துள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிப்பது, 700 இளையோர் உட்பட 2,592 பேர்கள் காணாமற் போனவர்களாகவும் மற்றும் கணக்கில் இல்லாதவர்களாகவும் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று.

வவுனியாவில் உள்ள குடும்ப தடங்காணும் பிரிவு (எப்.ரி.யு) ஒன்றுக்கு மட்டும்தான் குழந்தைகளை தேடுவதற்கும், அத்தோடு காணாமற்போன பெரியவர்களைப்பற்றிய விபரங்களை ஏனைய அரசாங்க அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவும் அதிகாரம் உள்ளது.

எப்.ரி.யு தொடங்கப்பட்டு அதன் பணிகளை ஆரம்பித்த 2009ம்ஆண்டு இறுதியிலிருந்து கிட்டத்தட்ட 30 குழந்தைகள் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் குடும்பங்களுடன் ஒன்றிணைக்கப் பட்டுள்ளார்கள். மற்றும் 20 குழந்தைகள் செயற்பாட்டில் உள்ளார்கள். அதற்கு மேலதிகமாக இன்னும் காணாமற்போன 64குழந்தைகளின் பெயர்கள் இந்தப்பிரிவின் தரவுத்தளத்தில் உள்ள பெயர்களுடன் பொருந்தியுள்ளது. இந்தக் குழந்தைகள் விடயத்தில் சுமார் 65 விகிதமானவை எல்.ரீ.ரீ.ஈ யினரின் கட்டாய ஆட்சேர்ப்பு விவகாரத்தடன் தொடர்பு பட்டவை.

மூன்று பெண் பராமரிப்பு உத்தியோகத்தர்களைக் கொண்ட இந்தப்பிரிவின் தலைவராகிய ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியாகிய பிரிகேடியர். ஜே.பி.கல்கமுவ “இது ஒரு எளிதான செயல் அல்ல. மிகவும் கடினமான ஒன்று”எனத் தெரிவித்தார்.

காணாமற் போனவர்களைப்பற்றிய விபரங்களைச் சேகரிப்பதற்காக காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினரின் பதிவுகள்,ஐfamily search-2 வத்தியசாலைகள் மற்றும் சிறுவர் இல்லங்கள் என்பனவற்றை அலசி ஆராயவேண்டி உள்ளது. சில சிறுவர் இல்லங்கள் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என்கிற சந்தேகங்களும் உருவாகியுள்ளன.” எங்களால் இயன்றளவு அந்தக் குடும்பங்களுக்கு உதவி செய்வதற்காக பாடுபட்டு வருகிறோம்” என்று சொன்ன அவர் மேலும் தெரிவித்தது, ”நாங்கள் அனைவரும் பெற்றோர்கள் அல்லது நல்ல மகன்களாகவோ அல்லது மகள்களாகவோ இருந்திருக்கிறோம், மற்றும் அதன்காரணமாகத்தான் நாங்கள் இந்த விடயத்தின் முக்கியத்துவத்தை உணருகிறோம்” என்று.

நிச்சயமற்ற தன்மை உள்ளவர்கள், அதாவது இப்போது எப்.ரி.யு உதவி செய்து வருகிற காணாமற்போன ஆறு வயதுள்ள அபியின் குடும்பத்தவர் போன்றவர்கள், சமீபத்தில்தான் அகதி முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், யுத்தத்தினால் இன்னமும் இழுபறிப்படும் துயரங்களை கூட்டுச்சேர்ந்து அனுபவிக்கும் ஒரு சமூகமாக உள்ளனர். யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கையைப்பற்றி தீவிர சர்ச்சை ஏற்பட்டுள்ளதாலும் மற்றும் அரசாங்கப்படைகள் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ ஆகிய இருபகுதியினருமே யுத்தக் குற்றங்கள் புரிந்துள்ளனர் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாலும் இன்னமும் இந்தப் பிரிவினரின் பணியானது மிகவும் உணர்திறனுள்ளதாகவே அமைந்திருக்கிறது.

அதிகாரிகள் தெரிவிப்பது, இந்தப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட வளங்கள் மற்றும் அதிகாரபூர்வமாக ஒருவர் காணாமற்போனவராக கருதப்படுவதற்கு அவரது விடயத்தை உயிருடன் இருக்கும் அவரது உறவினர் யாராவது பதிவு செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் உள்ளதால் எப்.ரி.யு வின் புள்ளிவிபரங்கள் மொத்தமாக கணக்கில் வராத அந்த காணாமற்போன மக்களின் ஒரு சிறுபகுதியாகத்தான் இருக்கலாம் என்று.

“எங்களிடம் வருபவர்களில் பெரும்பாலானவர்கள் எங்களை மீண்டும் ஒன்றுசேர்க்க உங்களால் முடியாவிட்டால், அந்தக் குழந்தை உயிரோடிருக்கிறதா அல்லது இறந்து விட்டதா என்றாவது உங்களால் உறுதிப்படுத்த முடியுமா என்று கேட்கின்றனர்” என்று தெரிவித்தார் தனது பெயரை வெளியிட விரும்பாத இந்தத் திட்டத்துடன் தொடர்புள்ள ஒரு உத்தியோகத்தர்.

”இத்தகைய நிச்சயமற்ற தன்மை நிலவுவதால் அவர்கள் தங்கள் சொந்தக் கிராமங்களில் சென்று மீள்குடியேற விரும்பவில்லை ஏனெனில் இங்கு இருக்கவேண்டும் என்றே அவர்கள் நினைக்கிறார்கள். மேலும் அவர்கள் உணருவது காணாமற்போன தங்கள் குழந்தை மீட்கப்படாதவரை தங்களால் திரும்பவும் தங்கள் தொழில்களுக்குச் செல்லுவதோ அல்லது தங்கள் வயல்களுக்குச் செல்லுவதோ இயலாத காரியம் என்று.

ஸ்ரீFamily serch-1லங்கா இராணுவம் முன்னேறியபோது சக்திவாய்ந்த எல்.ரீ.ரீ.ஈயினர் வடக்கு மற்றும் கிழக்கு பக்கமாக திரும்பிச்சென்ற 2009 ஜனவரி முதல் மே வரையான காலப்பகுதியில்தான் பெரும்பான்மையான நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கின்றன. அவர்கள் அப்படிச் செய்தபோது கிட்டத்தட்ட 300,000 வரையான பொதுமக்கள் அவர்களிடம் பிடிபட்டார்கள், எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை ஒரு தடுப்பு மற்றும் பேரம்பேசும் சாதனம் ஆகிய இரண்டு வழிகளிலும் பயன்படுத்த எண்ணியிருந்தார்.

சாட்சிகள் தெரிவித்திருப்பது, பின்னர் அரசாங்க கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கு தப்பிச்செல்ல முயன்ற பொதுமக்களை எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தினர்கள் சுட்டுக் கொன்றார்கள் என்று.

கிளிநொச்சியிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ யின் தலைமைச் செயலகம் 2009 ஜனவரி ஆரம்பத்தில் வீழ்ச்சியடைந்த பின்னர் பொதுமக்கள் கூட்டம் கிழக்குப் பக்கமாக ஏ-35 பாதையூடாக கடைசி யுத்தம் நடைபெற்ற இடத்துக்கு நெருக்கமாகவுள்ள முல்லைத்தீவை நோக்கி பாயத் தொடங்கியது. அந்தப் பகுதி ஊடகவியலாளர்கள் செல்வதற்கு தடையுள்ள பிரதேசமாகவிருந்தது. இன்று கிளிநொச்சி, மற்றும் மாரி மழை சேறும் சகதியுமாக மாற்றியுள்ள இந்த பழுதடைந்த சாலையோரம் ஆகிய எல்லா இடத்திலும் தென்படும் காட்சி அநேகமாக ஒவ்வொருவரும் ஒன்றில் ஒரு உறவினரையோ அல்லது ஒரு நண்பரையோ இழந்த சோகம் அல்லது கணக்கில்வராமல் காணாமற் போன யாரையோ தேடும் காட்சி.

கிளிநொச்சியிலுள்ள ஒரு சிகையலங்கரிப்பு நிலையத்தில் இருந்த பொன்னுத்துரை சூரியகுமார் கிழக்குப் புறமாக அரசாங்கம் நிறுவியிருந்த தாக்குதலற்ற பிரதேசத்தை அடையும் வரை தான் தனது குடும்பத்தினருடன் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டதை நினைவுகூர்ந்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளமுடியாமல் தேம்பி அழுதார்.

இந்த சிறிய துண்டுக் காணிக்குள் அரசாங்கம் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ ஆகிய இரு பகுதியினரும், பொதுமக்களுக்கு பேரழிவினைத் தரக்கூடிய விளைவினை எற்படுத்தக்கூடியதாக மாறிமாறி துப்பாக்கிச்சூடு நடத்தியதை எண்ணிலடங்காதளவு கண்ணால் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர்.

family search-3மே 8ந் திகதி ஒரு தனி ஷெல் தாக்குதல் தன்னுடைய எட்டு வயது மகன் சகிந்தர் உட்பட அவருடன் கூடத் தஞ்சம் அடைந்திருந்த 13 உயிhகளைக் காவு கொண்டது என திரு.சூரியகுமார் சொன்னார். மிக மோசமான காயங்களுக்கு திரு.சூரியகுமார் கூட உள்ளானார். அவரது 23 வயதான சகோதரியை அன்றிலிருந்து காணவில்லை என்றும் அவர் சொன்னார். “அவளைப்பற்றிய எந்தத் தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அங்கிருந்த நிலையை உங்களால் கற்பனைகூடச் செய்ய முடியாது. எல்லாமே குளறுபடியாகத்தான் அங்கிருந்தது” என்று அவர் சொன்னார்.

ஏ-35 பாதைக்கு சமீபமாக வசிக்கும் பாலசிங்கம் எனும் விவசாயி தெரிவித்தது, அரசாங்கப் படைகளால் கைப்பற்றப்பட்ட பொக்கணை எனும் கிராமத்தை அடையும்வரை அவரது குடும்பம் ஓடிக்கொண்டேயிருந்தது என்று.

அங்குதான் அவரது சகோதரர் காணாமற்போனார். ”எல்லா மக்களும் இராணுவத்தினரை நோக்கி ஓடினார்கள். ஆனால் அவர் அதில் இருக்கவில்லை. நாங்கள் இறந்து கிடந்த மனித உடல்களுக்கு மேலாக ஓடினோம்” என்று சொன்னார் ஒரு அரசாங்க முகாமிலிருந்து இந்த வருடம் மே மாதம் விடுதலையான திரு. சிங்கம். “நாங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் காவல்துறை தொண்டு நிறுவனங்கள் என்று சகலரிடமும் முறையிட்டு விட்டோம். நான் இன்னும் அவனைத் தேடிக்கொண்டே இருக்கின்றேன்”.

வலுவான தகவல்கள் எதுவும் கிடைக்காதபடியால் அநேக குடும்பங்கள் மதகுருமாரையும் மற்றும் சோதிடர்களையும் நோக்கிச் சென்று அவர்களிடமிருந்தாவது ஏதாவது அறிவைப் பெறமுடியுமா என முயற்சிக்கின்றனர்.

அதிகாரிகள் தெரிவிப்பது ஒரு குடும்ப உறுப்பினர் இறந்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்வதற்கிடையில் அவரது உறவினர்கள் உடைந்து போய்விடுகிறார்கள். தாங்க முடியாத சோகத்துடன் அவர் உயிரோடிருக்கின்றார் என்கிற நம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு அவர்கள் தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

கணவன்மாரை காணாமற் போக்கடித்த இளம்பெண்கள் மிகவும் பாதிக்கப் பட்டவர்களாக உள்ளனர். அதிகாரிகள், சோதிடர்கள் அனைவரையுமே சந்தேகத்தோடு நோக்கவில்லை – அவர்களது வேவைக்கு ஒரு கட்டணம் வழங்கப்படுவது – அவர்கள் பொறுப்புடன் செயற்படுவதற்கே.

தமிழ் சமூகத்தினரின் இதயப் பகுதியான ஓரு இடமாகவும் பல மோசமான வன்முறைகளையும் மோதல்களையும் கண்ட ஓரிடமாகவும் விளங்கும் யாழ்ப்பாணத்தில் சிவசண்முகநாதக்குருக்கள் என்றழைக்கப்படும் ஒரு இந்து மதகுரு, காணாமற் போன தங்கள் பிரியப்பட்டவர்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் வந்து தன்னைச் சந்திப்பதாகச் சொன்னார்.

2006ம் ஆண்டிலிருந்து எல்.ரீ.ரீ.ஈ ஒரு சமாதான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இந்த பிரிவினைவாத கிளர்ச்சியை முடிவுகட்ட இராணுவ நடவடிக்கைகளை புனராரம்பிக்க முடிவு செய்து அதன் காரணமாக 100,000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்க நேர்ந்ததிலிருந்து இந்த காணாமற் போனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது.

”அவர்கள் காணாமற் போனவரின் ஜாதகத்துடன் என்னிடம் வருகிறார்கள். ஜாதகத்தின் மூலமாக ஒரு நபர் உயிரோடிருக்கிறாரா அல்லது இறந்து விட்டாரா என்று எங்களால் சொல்ல முடியும்” என்று சொன்னார் அந்த மதகுரு.”சமீபத்தைய வரலாற்றை எடுத்துக் கொண்டால் அநேகமானவர்கள் உயிருடன் இல்லை. சில குறிப்பிட்ட சம்பவங்களில் மட்டுமே அந்த நபர் உயிரோடிருப்பதை அறிய முடிகிறது”.

தன்னுடைய முடிவுகளில் 95சதவீதமானவை மிகத் துல்லியமாக கணிக்கப்பட்டவை எனக்கூறும் இந்த மதகுரு, தனது பிரியப்பட்டவரின் விதியினைப்பற்றி அறிய வரும் அவரது உறவினரை தான் ஒருபோதும் தவறாக வழி நடத்தவில்லை எனவும் தெரிவித்தார். இருந்தாலும் அவர்களது வேதனையின் வலியை தணிக்கும் முயற்சியாக யாருக்காவது அவரது உறவினர் இறந்துவிட்டார் என்று நேரடியாக தான் ஒருபோதும் தெரிவிப்பதில்லை எனக்கூறிய அவர் , அத்தகைய சம்பவங்களில் நாங்கள் அவரைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்றுதான் கூறுவோம்” என விளக்கம் தந்தார்.

ஏ-35 க்கு அருகிலுள்ள வயல்களில் நெற்செய்கை புரியும் விவசாயியான கே.சத்தியானந்தராஜா, தனது மாமனாரும் மைத்துனியும் மோதலின்போது கொல்லப்பட்டதாகவும் அதேவேளை 21 வயதான அவரது மருமகன் அப்போது காணாமற்போனதாகவும் தெரிவித்தார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை தொடர்பு கொண்டபோதும் எந்தப் பலனும் கிட்டவில்லை. அந்தக் குடும்பம் ஒரு மதகுருவை தொடர்பு கொண்டது. “ அவர் எல்.ரீ.ரீ.ஈ யினால் பிடித்துச் செல்லப்பட்டாரா அல்லது இராணுவத்தால் கொண்டு செல்லப்பட்டாரா என்று எங்களுக்கு நிச்சயமாகத் தெரியாது. நாங்கள் சோதிடர்களைத் தொடர்பு கொண்டபோது அவர் இன்னமும் உயிரோடிருப்பதாக அவர்கள் சொன்னார்கள். அவரால் தற்சமயம் வரமுடியாது ஆனால் மூன்று அல்லது நான்கு மாதங்களின்பின் அவர் நிச்சயம் திரும்ப வருவார் என சோதிடர்கள் சொன்னார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

திரு.ராஜபக்ஸ அவாகளது அரசாங்கம் வடக்கில் சாலைகளைச் சீரமைத்தல், உட்கட்டமைப்பு வசதிகள், தற்காலிக உறைவிடங்களை அமைத்தல், உணவு மற்றும் நிதி உதவிகள் போன்ற போருக்கு பிந்தியதான அபிவிருத்தி திட்டங்களுக்காக மில்லியன் கணக்கான நிதியினை செலவு செய்யும் அதேவேளை முன்பு எல்.ரீ.ரீ.ஈ யினர் கைப்பற்றியிருந்த பிரதேசங்களில் அதிக எண்ணிக்கையிலான இராணுவத் தளங்களையும் அமைத்து வருகிறது. இருந்தாலும் பிரச்சாரர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் தெரிவிப்பது இந்த காணாமற்போனவர் பற்றிய விடயம் தொடரும் அதிர்வுணர்வுகளின் ஒரு ஆதாரமாக எஞ்சியிருக்கிறது என்று.

மாணவர் அமைப்பின் மனித உரிமைகளுக்கான தலைவர் நுவான் போப்பகே முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்களை வெளியிடுமாறு கோரிக்கை விடுத்தள்ளார்.

யுத்தத்தின் கடைசி வாரங்களில் நடைபெற்ற போராட்ட சூழ்நிலைகள் ஆழமான சர்ச்சைக்குரியவையாக உள்ளன. இந்த வருட ஆரம்பத்தில் ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட ஒரு குழு போரின் இறுதிக் கட்டங்களில் எல்.ரீ.ரீ.ஈ மற்றும் ஸ்ரீலங்கா இராணுவம் ஆகிய இருதரப்பினரும் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதற்கு நம்பத் தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளதாக கண்டறிந்திருந்தது. அதன் அறிக்கையில் பதினாயிரக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்திருப்பதோடு, சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றுக்கும் அது அழைப்பு விடுத்திருந்தது.

குழுவினரின் கண்டுபிடிப்புகளை ஸ்ரீலங்கா அதிகார சக்திகள் நிராகரித்துள்ளன. மோதல் பற்றிய அதன் சொந்த விசாரணைக்குழு அதன் அறிக்கையை இம்மாத இறுதியில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவுள்ளது. ஆளும் கூட்டணியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் மற்றும் நல்லிணக்கம் சம்பந்தமான ஜனாதிபதியின் ஒரு ஆலோசகருமான பேராசிரியர் ரஜீவ விஜேசேன கூறுகையில், அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ போராளிகள் 11,000பேரில் அநேகமாக இப்போது எல்லோரும் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்,அதில் சுமார் 200 பேர் வரையானவர்கள் குற்றம் சாட்டப்பட உள்ளனர் என்று தெரிவித்தார்.” தடுத்து வைக்கப் பட்டிருப்பவர்களுடைய பெயர்கள் தேசிய மனித உரிமைகள் ஆணையகத்தில் உள்ளன....அடுத்துள்ள உறவு முறையானவர்களுக்கு பெயர்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் பற்றிய விடயத்தில் எல்.ரீ.ரீ.ஈ யினரால் கொல்லப்பட்டவர்கள், அதேபோல கூட்டு சேதங்களின் விளைவாக இறந்தவர்கள் உட்பட மொத்தமாக ஒரு 5000 பேர் வரை இறந்திருக்கலாம் என தான் நம்புவதாக திரு.விஜேசேன கூறினார்.

பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திகளின் ஊடாக அரசாங்கம் நல்லிணக்கத்தை நோக்கி பல நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் ஆனால் செய்யப்பட வேண்டியவைகள் இன்னும் ஏராளமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.”பன்முக சமுதாயத்தை நோக்கிப் பணியாற்றும் விதமாக மக்கள் மனங்களை மாற்றுவதற்கு நாங்கள் முயற்சிக்கிறோம்” என அவர் மேலும் கூறினார்.

அதேவேளை இப்போது ஒன்பது வயதை அடைந்திருக்கும் அபியின் குடும்பத்தினரைப் போன்ற சாதாரண மக்களால் நம்பிக்கையுடன் காத்திருப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்.”அவன் எங்கேயோ இருக்கிறான் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்று சொன்னார் அபியின் தாயார்.

பின்விளைவு: உண்மை மற்றும் எதிர்க் குற்றச்சாட்டுகளை சமாளித்தல்

2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்ட பிறகு போர்க் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் அதனால் சுதந்திரமான விசாரணை அவசியம் என்று பரவலான அழைப்புகள் விடுக்கப்பட்டன. ஆனால் அந்தக் கோரிக்கைகளை ஸ்ரீலங்கா நிராகரித்து விட்டது.

2010 வசந்த காலத்தின்போது ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஒரு குழுவை நியமிக்கப் போவதாகச் சொன்னார். அதே நேரத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ 2002 லிருந்து 2009 வரை நடந்த நிகழ்வுகளைப் பரிசீலிக்க தனது சொந்த குழுவான கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை பற்றி அறிவிப்புச் செய்தார். இந்தக் ஆணைக்குழு தனது அறிக்கையை இந்த மாதக் கடைசியில் சமர்ப்பிக்கும் என நம்பப்படுகிறது,ஆனால் ஏற்கனவே பலர் இந்த ஆணைக்குழு அரசு சார்பானது மற்றும் சாட்சிகளை பாதுகாக்கும் பொறுப்புடைமை இல்லாதது எனக் குற்றம் சாட்டியுள்ளார்கள். ”ஸ்ரீலங்காவின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒரு நம்பிக்கையான பொறுப்புக்கூறும் பொறிமுறையல்ல.அதன் அதிகாரம் தீவிரமான குறைபாடுள்ளதாகவும் மற்றும் நடைமுறைப்படி அது தேசிய விசாரணை ஆணைக்குழுக்களின் சர்வதேச தரங்களைவிட வெகு தாழ்வாகவும் உள்ளது” என்று சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.

இதேவேளை ஐநாவின் அறிக்கையில் அரசாங்கப் படைகள் மற்றும் தமிழர்கள் ஆகிய இருபகுதியினரும் போர்க்குற்றங்கள் புரிந்துள்ளார்கள் என நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் எமுந்துள்ளன எனக் கண்டறியப் பட்டுள்ளது. மிகவும் தீவிரமான குற்றங்களாக ஸ்ரீலங்கா இராணுவத்தை இலக்கு வைத்திருப்பது அது சூட்டுத் தாக்குதலற்ற வலயம் எனப் பிரகடனப் படுத்தப்பட்ட இடத்தில் போரிட்டது மற்றும் மருத்துவ நிலையங்கள் மீது முறைப்படி குண்டுமாரி பொழிந்தது என்பன. கட்டாய ஆட்சேர்ப்பு நடத்தியது,பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியது,மற்றும் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பொதுமக்களை செல்லவிடாது அவர்களின் வழிகளை தடைசெய்தது போன்ற குற்றச்சாட்டுகளை எல்.ரீ.ரீ.ஈ மீது அது சுமத்தியுள்ளது.பதினாயிரக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், பெரும்பாலானவர்கள் அரசாங்கப் படைகளாலேயே கொல்லப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்து விட்டது.
நன்றி: த இன்டிப்பென்டன்ட்
தமிழில்: எஸ்.குமார்
நன்றி தேனீ

ஜனவரி முதல் விசா கட்டணங்களில் மாற்றம்

13 /11/2011

2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமுலுக்கு வரும் வகையில் விசா கட்டணங்களில் மாற்றம் கொண்டு வரப்படவுளள்ளது.

இணையத்தின் மூலம் இலங்கை விசா பெறுவதற்கான கட்டணங்களிலேயே மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சார்க் நாடுகளின் பிரஜைகளுக்காக விசா கட்டணம் 10 அமெரிக்க டொலர்களாகவும் ஏனைய நாடுகளுக்கான கட்டணத் தொகை 20 அமெரிக்க டொலர்களாகவும் மாற்றப்பட வுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
நன்றி வீரகேசரி

No comments: