தொடரும் பயணம் - நவீன விருட்சத்தில்..

.

ஒரு தேவதையைப் போலதான்
வாழ்ந்திருந்தாள்.
கிரீடத்தில் நட்சத்திரங்களாக
ஒளிர்ந்த வைரங்களுடன்
கூந்தல் நிறம் போட்டி போடவும்
பறத்தலில் வேகம் குறைந்தது.
உதிரும் சிறகுகளால்
வீடெங்கும் குப்பையாவதாக
இறக்கைகள்
வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டன.
ஆயினும் கூட்டிலே ஓய்வெடுக்க
அனுமதியில்லை.
நடந்தேனும் ஊர்ந்தேனும்
தனக்கான தானியத்தை
ஈட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம்.



பாய்ந்து வந்த
வார்த்தை அம்புகளைத் தடுக்க
எட்டுகிற தொலைவில் கிடந்தும்
கேடயத்தை எடுக்கின்ற தெம்பில்லை.
சுழற்றி வீச வாளொன்று
சுவரிலே தொங்கியும்
நிமிர்த்திப் பிடிக்க
விரல்களில் வலுவில்லை.
இவள் தொட்டு ஆசிர்வதித்த
செங்கற்களைக் கொண்டு
எழுந்த மனையென்பது
எவர் நினைவிலும் இல்லை.

மேகங்களுக்குள் புகுந்து
வெளிவந்த காலத்தில்
அதன் வெண்மையை வாங்கி
மிளிர்ந்த உடை
பழுப்பாகிப் போய்ப் பாதந்தடுக்க
இரை தேடக் கிளம்புகிறாள்.
வழக்கமாகச் செல்லும் பேருந்து
நிறுத்தம் தாண்டிச்
சென்று விட்டதாக எண்ணி
நடக்கத் தொடங்குகிறாள்.

சற்றுதூரம் கடந்திருக்கையில்
ஒட்டி வந்து நின்றது
ஏதோ காரணத்தால்
தாமதமாகப் புறப்பட்டிருந்த பேருந்து.
சாலைவிதிகளை மீறி
நிறுத்தக் கூடாத இடத்தில் நிறுத்தி
ஏறிக் கொள்ளுமாறு
அன்றாடப் பயணி அவளை
அடையாளம் கண்டு அழைத்த
ஓட்டுநரின் கனிவு..

மயிற்பீலியின் நீவலென
ஆற்றுகிறது மனதின் காயங்களை.

கால் துவளும் வேளையில்
ஏதேனும் ஒரு பல்லக்கு
எங்கிருந்தோ வந்தடைகிறது
பயணத்தைத் தொடர.
***

1 comment:

Anonymous said...

This is a tribute to all the old Widows left alone in our Country.
a Touching piece of Poetry