- -நடராஜா முரளிதரன் -
எந்த நாடும் எனக்குச் சொந்தமில்லை
அந்த அவாவினை
என் நினைவின் இடுக்கிலிருந்து
பிடுங்கியெறிவதையே
என் எதிரிகளும்
என்னவர்களும்
இடைவிடாது புரியும்
தொழிலாகக் கொண்டுள்ளார்கள்
எனது கனவுகளின் போதே
சாத்தியமாகியுள்ள
அந்த நினைவுப்படலத்தை
எனது அன்புக்குரியவளே
நீயும் சிதைத்து விடாதே
மூடுண்ட பனியில்
அமிழ்ந்து போய்
சுவாசம் இழந்துபோய்
நான் தவிப்பதுவாய்
நேற்றும் ஓர் கனாக் கண்டேன்
கோடை தெறித்த வெய்யிலில்
கருகும் உயிரினத்துக்கான
உஷ்ணவெளியில்
பிறந்த நான்
கனவுகளில்
உயிர் பிழைப்பதாய்
நீ நம்புவாய்
ஆனால்
எனது மண்ணிலிருந்து
நான் இடம்பெயர்க்கப்பட்டபோது
எனது மண்ணின் சில துணிக்கைகளும்
என்னோடு ஒட்டிக்கொண்டு
விலக மறுத்து
சகவாசம் புரிவதை
யாருக்கு நான் உணர்த்துவேன்
2 comments:
Very high standerd
keep it up
Guna
Yes good one, keep writing more.
Post a Comment