.
ஈழத் தமிழர் கழகம் ஆண்டு தோறும் ஏப்பிரல் மாதத்தில் கலை நிகழ்வு ஒன்றினை நடாத்தி அதன் மூலம் திரட்டப்படும் நிதியை இலங்கையின் வட கிழக்குப் பிரதேசங்களில் வாழும் நம் தமிழ் உறவுகளின் நல்வாழ்வுக்குப் பயன் படுத்தி வருகின்றது. இவ் ஆண்டு ஏப்பிரல் மாதம் 18 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை இதமான ராகங்கள் என்ற இசை நிகழ்சியை நாடாத்த உள்ளது. இந் நிகழ்வில் சகானா நாடகத் தொடரில் பல பாடல்களைப் பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தவரான டாக்டர் நாராயணன், இளம் இளையராஜா எனப் போற்றப்டும் சதீஸ் மற்றும் உள்ளுர் கலைஞரான திருமதி மீனாட்சி வெங்கடேஸ் ஆகியோருடன் மற்றும் பல உள்ளுர் கலைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந் நிகழ்வில் தமிழிசை மெல்லிசை திரை இசை ஆகிய அம்சங்கள் இடம் பெற உள்ளதாக அறியப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் திரட்டப்படும் நிதி வவுனியாவில் உருவாகிவரும் ஆனந்த நிலைத்துக்கு வழங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். வன்னியில் இடைத் தங்கல் முகாமில் இருந்து கொண்டு வரப்பட்ட 60 முதியவர்களுக்கு புது வாழ்வு அளிக்கும் பாரிய பணியில் ஆனந்த நிலையம் ஈடுபட்டுள்ளதாகவும், இம் முதியவர்களுக்கு உதவ உறவினர் எவரும் இல்லை என்றும் குறிப்பிடப்படுகின்றது. இவர்களுக்கான குடியிருப்பு வசதிகளை மேற்கொள்வதற்கு வவுனியா அரச அதிபர் 10 ஏக்கர் அரச நிலத்தினை வழங்கியுள்ளார். இந் நிலத்தில் இவர்கள் குடியேறுவதற்கும், அங்கு வாழ்வதற்கும் அத்தியாவசியமான உள்கட்டுமாணப் பணியினை ஆனந்த இல்லம் அறக் கட்டளை நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நற்பணிக்கு உதவும் நோக்குடன் கழகம் ஏற்கனவே 4 ஆயிரம் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்கியுள்ளதாகவும் இப் பணம் ஆனந்த இல்லம் மேற்கொள்ளும் பாரிய பணிக்குப் போதுமானதல்ல என்றும், எனவே தேவையான பணத்தின் ஒரு பகுதியையேனும் சேகரிக்கும் நோக்குடன் கழகம் இந் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளதென்றும், இந்நற்பணியில் ஒஸ்ரேலிய மக்களும் பங்கு கொண்டு வாழ்வாதாரத்துக்கு ஏங்கும் எம் உடன் பிறப்புகளுக்கு உதவ முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றார்கள் ஈழத்தமிழர் கழகத்தினர்.
ஆனந்த இல்லத்தின் கட்டுமானப் பணிகளைக் காட்டும் படங்கள் சில:
No comments:
Post a Comment