இன்று (21) புதுடில்லியில் நடைபெற்ற சந்திப்புக்களின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பெறுபேறுகளை இலக்காகக் கொண்ட பயனுள்ள கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகளை வெற்றிகொள்வதில் இந்திய இலங்கை பங்குடமையானது வலுவான மூலாதாரமாக இருந்ததாக இரு நாடுகளினதும் தலைவர்கள் ஏற்றுக்கொண்டிருந்த அதேசமயம், இலங்கை மக்களுக்காகவும் அரசாங்கத்துக்காகவும் முன்னொருபோதுமில்லாத வகையில் இந்தியாவால் தக்கதருணத்தில் வழங்கப்பட்ட ஆதரவுக்காக இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு விசேட பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.
2. இலங்கையில் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை, பொருளாதார மீட்சி, ஆகியவற்றுக்கான தமது அர்ப்பணிப்பினையும் நம்பிக்கையினையும் இரு தலைவர்களும் இச்சந்திப்புகளின்போது மீள வலியுறுத்தியிருந்த அதேவேளை, நல்லிணக்கத்தினை ஊக்குவிப்பதற்காகவும் நாட்டின் சகல பகுதிகளிலும் உள்ள இலங்கையின் அனைத்து சமூகங்களினதும் நலன்களுக்காக ஸ்திரமானதும் சமமானதும் வலுவானதுமான பொருளாதார வளர்ச்சிக்கான இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் முதலீட்டின் முக்கியத்துவத்தினை அவர்கள் உறுதிப்படுத்தியிருந்தனர்.