“ எழுத்தாளராகிய எவரும் தங்கள் இளவயதில் தாம் ஓர்
எழுத்தாளராக வரவேண்டும்
என்று நினைத்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்திருப்பார்களா என்பது கேள்விக்குரிய
விடயம். ஆனால், எங்கள் வாழ்க்கையின் சூழ்நிலையும்
சந்தர்ப்பங்களும், படிப்பறிவும், அனுபவங்களும், சந்திக்கும் மனிதர்களும், மோதிக்கொள்ளும்
கருத்தாடல் நிகழ்வுகளும் எழுத்தாளர் ஒருவரை உருவாக்க உதவும் என்பது எனது படைப்பு அனுபவத்தில்
நான் தெரிந்து கொண்ட விடயங்களில் சிலவாகும்.
“
எனச்சொல்லியிருப்பவர்தான் இங்கிலாந்தில் நீண்டகாலம் வதியும் புகலிட தமிழ்
இலக்கிய உலகின் மூத்த படைப்பாளி இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள்.
இவருக்கு ஜனவரி 01
ஆம் திகதி பிறந்த தினம். எங்களால் ராஜேஸ் அக்கா
என அன்புடன் அழைக்கப்படும் இவரை வாழ்த்துகின்றோம்.
சில வருடங்களுக்கு முன்னர் தமிழ்நாடு
திருப்பூர் கனவு இலக்கியப்பேராவை மெய்நிகரில் நடத்திய நிகழ்வில், ராஜேஸ் அக்கா நிகழ்த்திய
உரையின் தொடக்கத்தையே இந்த பதிவின் ஆரம்பத்தில் பார்த்தீர்கள்.
ராஜேஸ் அக்கா மேலும் இவ்வாறு சொல்கிறார்.
“ எனது இளவயதில் எங்கள் வீட்டில் எனது தகப்பனார்
திரு
குழந்தைவேல் நூற்றுக்கணக்கில் பல தரப்பட்ட புத்தகங்களை வைத்திருந்தார். சிறுவயதில்,எங்களுக்குத்
தெரிந்த தேவார திருவாசக புத்தகங்களில் எனது 'புத்தகப்படிப்பு' ஆரம்பித்தது. அக்.காலகட்டத்தில
அப்பா வாங்கி வரும் கல்கி கலைமகளுடனும் வாசிப்பு தொடர்ந்தது. அந்த அனுபவங்கள், பல விதமான
எழுத்துக்களைப்; படிக்கும் உணர்வையும் எழுத்தை ரசிக்கும், பூசிக்கும் உணர்வையும் எனது
இளவயதில் எனக்குத் தந்தது என்று நினைக்கிறேன்..அந்த அனுபவங்களால்,எனது அடிமனதில் எழுத்தாளராக
வரவேண்டுமென்ற உந்துதல் பிறந்திருக்கும்.
“
இயற்கை எழில் கொஞ்சும் கிழக்கிலங்கை கிராமத்திலிருந்து வல்லரசு
இங்கிலாந்து வரையில் பயணித்த பெண்ணிய ஆளுமை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.
படைப்பு இலக்கியத்திலும் , பெண்ணிய மனிதஉரிமை செயற்பாட்டிலும் ஆவணப்படத்துறையிலும்
மனித நேயப்பணிகளிலும் அயராது பங்காற்றியவர் இவரது வாழ்வும் பணிகளும் குறிப்பிடத்தகுந்தன. விதந்து
போற்றுதலுக்குரியன.
அத்துடன் எதிர்வினைகளை எதிர்கொண்டு, அவதூறுகளை துச்சமாக்கிய புகலிட
இலக்கிய முன்னோடிதான் இவர்..
பெண்கள் எப்பொழுதும் வீட்டுக்குள் இருந்து குடும்பக் கடமைகளைப்
பார்த்தால் போதும் என்றும் – அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்றும்
சொல்லப்பட்டு, அவர்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையும் மறுக்கப்பட்ட ஒரு
காலம் முன்பிருந்தது.
சமையல்கட்டு வேலை , பிள்ளைப் பராமரிப்புடன் கணவனின் தேவைகளை
பூர்த்திசெய்யும் இயந்திரமாகவும் பெண்ணின் வாழ்வு முடக்கப்பட்டிருந்த காலம்
மலையேறிவிட்டது என்று இன்னமும் சொல்ல முடியாதிருக்கிறது.