.
தமிழ் சினிமா உலகில் ஆண்டாண்டு காலமாக உழன்று கொண்டிருக்கும் படத் தயாரிப் பாளர்களுக்கு இல்லாத அதிர்ஷ்டம் திடிரென்று முளைத்த தயாரிப்பாளர்களுக்கு கிட்டி விடுவதுண்டு. அவர்களுள் இருவர் தான் இதயம் பேசுகிறது மணியன், வித்துவான் வே. லஷ்மணன். இவர்கள் இருவரும் எம் ஜி ஆர் எனும் நட்சத்திர நடிகரின் முழு ஆசியினால் படத் தயாரிப்பாளர்களாகி வெற்றி கண்டவர்களாவர். மூன்று வருடங்களுக்குள் மூன்று படங்களை எம் ஜி ஆர் நடிப்பில் தயாரித்த பெருமை இவர்களுக்குண்டு.
எம் ஜி ஆர் நடிப்பில் இதய வீணை, சிரித்து வாழ வேண்டும், படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக இவர்கள் எடுத்த படம் பல்லாண்டு வாழ்க. அதாவது எம் ஜி ஆர் பல்லாண்டு வாழ்க. டய்டிலில் அப்படித்தான் காட்டப் படுகிறது. நியாயம்தானே. எம் ஜி ஆரின் கால்ஷீட்டுக்காக பலர் காத்திருக்க மணியனும், லஷ்மணனும் அனாயசியமாக மூன்றாவது படத்தையும் வெளிட்டார்கள் 1975ம் ஆண்டு.
ஹிந்தியில் புகழ் பூத்த இயக்குநரான கே. சாந்தாராம் இயக்கி வரவேற்பை பெற்ற தோ ஆங்கேன் பாரா ஹாத் படத்தின் கதைக் கருவை ஏற்று அதன் அடிப்படையில் எம் ஜி ஆர் படமாக உருவாகியிருந்தார்கள். ஒரு சிறைச்சாலை அதிகாரி. கொடூர குற்றவாளிகள் அறுவரை திருத்தி , நல்லவர்கள் ஆக்க முடியும் என்ற இலட்சியத்தில் திறந்த வெளி சிறைச்சாலைக்கு அவர்களை அழைத்துச் செல்கிறார். அங்கே அவர் எதிர் நோக்கும் சவால்கள், ஆபத்துக்கள் , துன்பங்கள் இவற்றை எல்லாம் சமாளித்து எவ்வாறு தன் இலட்சியத்தை அவர் அடைந்தார் என்பதே படத்தின் கதை.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இம் மூன்றையும் கொள்கையாக கொண்டு இயங்கும் அதிகாரியாக வரும் எம் ஜி ஆர் அப் பாத்திரமாகவே மாறி விட்டார் எனலாம். முரடர்களிடம் அவர் காட்டும் பரிவு, அவர்களின் வெறித்தனத்தை அமைதியாக , பொறுமையாக எதிர் கொள்வது, அகிம்சையை நாடுவது என்று கதா பாத்திரத்துக்கு நியாயம் செய்கிறார் எம் ஜி ஆர். அந்த வகையில் அவர் வாத்தியார் தான். ஆனாலும் படத்தில் சண்டைக் காட்சிகள் இல்லாமல் இல்லை. ஆனால் அதன் காரணம் வேறு.
கடமை தவறாத ஜெய்லரிடம் அடைக்கலம் தேடி வரும் நாயகி அவரை காதலிக்கிறாள். அதனால் அவ்வப்போது கனவு காண்கிறாள். இதனால் எமக்கு மூன்று டூயட் கிடைக்கின்றன. ஹீரோயின் லதா பாடல் காட்சிகளில் கவர்ச்சியாகத் தோன்றி இளமை விருந்தளிக்கிறார்.
பி. எஸ் .வீரப்பா, எம் .என் . நம்பியார், ஆர். எஸ். மனோகர், வி.கே. ராமசாமி,தேங்காய் சீனிவாசன், குண்டு மணி என்று ஆறு வில்லன்கள். இவர்களில் முப்பது ஆண்டுகளாக எம் ஜி ஆருடன் நாடகங்களிலும், படங்களிலும் சிறு வேடங்களில் தோன்றி சண்டைக் காட்சிகளில் நடித்து வந்த குண்டு மணிக்கு இதில் பிரதான வில்லன்களுள் ஒருவராக புரொமோஷன் கொடுக்கப் பட்டிருந்தது. இவர்கள் அறுவருக்கும் மேக்கப் போட்டவரை பாராட்டத்தான் வேண்டும்.
எம் ஜி ஆர் படங்களில் தொடர்ந்து வில்லனாக நடித்த இந்த ஆறு நடிகர்களும் இதில் அவருடன் ஆடிப் பாடுகிறார்கள் . அவருடன் சேர்ந்து பொது எதிரியை எதிர்த்து போராடுகிறார்கள் , ஹாஹா !
எம் ஜி ஆர் படங்களில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்த கே. வி. மகாதேவன் படத்துக்கு இசையமைத்திருந்தார். நா. காமராசன் எழுதிய போய் வா நதியலையே பாடல் ஹிட் அடித்தது. புலமைப்பித்தனின் என்ன சுகம் என்ன சுகம், சொர்கத்தின் திறப்பு விழா, பாடல்கள் சிருங்கார ரசனையை வெளிப்படுத்தின. ஒன்றே குலம் என்று படுவோம், புதியதோர் உலகம் செய்வோம் பாடல்கள் போதனை ஊட்டின.
படத்தில் வி கோபாலகிருஷ்ணன், தங்கராஜ், பண்டரிபாய், கே. கண்ணன், ஐசரி வேலன், கரிகோல் ராஜு, வி .எஸ் . ராகவன் , கே. கண்ணன், ஜஸ்டின் , தங்கராஜ் ஆகியோரும் நடித்திருந்தனர். வசனங்களை ஆர் .கே .சண்முகம் எழுதியிருந்தார். காட்சிக்கு பொருத்தமாக அவை அமைந்தன. ராஜாராம் ஒளிப்பதிவு செய்ய , அங்கமுத்து அரங்க அமைப்பை அமைத்திருந்தார்.
எம் ஜி ஆர் நடிப்பில் 1952ம் வருடம் வெளிவந்த குமாரி படம் முதல் ஏராளமான எம் ஜி ஆர் படங்களுக்கு இசையமைத்தவர் திரை இசைத் திலகம் கே வி மகாதேவன். எம் ஜி ஆர் நடிப்பில் தேவர் எடுத்த பதின்னாறு படங்களுக்கும் இசையமைத்தவர் இவர். எம் ஜி ஆருடனான இவரது இசைப் பயணம் பல்லாண்டு வாழ்க படத்துடன் நிறைவடைந்தது.
சாந்தாராமின் ஹிந்தி படத்தில் காதல் இல்லை, சிருங்காரம் இல்லை , இறுதியில் நாயகன் இறக்கிறான் , ஆனால் எம் ஜி ஆர் படத்தில் இது நடக்குமா. எம் ஜி ஆருக்கு ஏற்றாற் போல் கதையில் சில மாறுதல்கள் செய்யப்பட்டன. இப்படி மாறிய கதையை டைரக்ட் செய்தவர் கே. சங்கர். படத்தின் எடிட்டரும் அவரே. எம் ஜி ஆர் ரசிகர்கள் எம் ஜி ஆரை பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவது போல் படம் அமைந்தது.
ஹிந்தி படத்தை இயக்கி ஜெய்லராக நடித்த வி . சாந்தாராம் மீது எம் ஜி ஆர் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். இதன் காரணமாக அவர் தமிழக முதல்வரான பின்னர் இடம் பெற்ற ஒரு பொது நிகழ்வில் எல்லோர் முன்னிலையிலும் மேடையில் சாந்தாராம் காலில் விழுந்து வணங்கி மரியாதை செய்தார் எம் ஜி ஆர் !


.png)
.png)

No comments:
Post a Comment