தோழர் அநுரகுமார திஸ்ஸநாயக்காக்கு ஓர் திறந்த மடல்! - நடராஜா குருபரன்

 .

நண்பர் நடராஜா குருபரன் அவர்கள் தனது முகப்பு புத்தகத்தில் பிரசுரித்ததை இங்கு தருகின்றேன் . 


“உங்களை மக்கள் தெய்வமாக்குவார்கள் நீங்கள் தெய்வமாகிவிடாதீர்கள்”
தோழர் அநுரகுமார திஸ்ஸநாயக்கா அவர்களே, 2026 ஆம் அண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தை சமர்பித்த களைப்பில் இருப்பீர்கள்.
ஏறத்தாள நான்கரை மணிநேரம் இடைவிடாது கேள்வி பதில்களோடு அசத்தியிருந்தீர்கள்.
வடக்கு, கிழக்கு மலையக பகுதிகளின் நலனுக்காக பல முன்மொழிவுகளையும், நிதிஒதுக்கீடுகளையும் அறிவித்துள்ளீர்கள் வாழ்துகள்.
“எங்கள் நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டுவிட்டது என எதிர்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பின் ரவூவ்ஹக்கீம் சான்றளித்துள்ளார்.”
“இந்த அரசு முழுப்பொருளாதாரத்தையும் நிலைப்படுத்திவிட்டது அதனை நாம் ஏற்றுக்கொள்கிறுாம். நாம் அறிந்த வரலாற்றில் திறைசேரி அதிகமான நிதியுடன் இருக்கிறது. மக்களுக்கு சொந்தமான அரச வங்கிகளில் ஒரு டிரில்லயனுக்கு அதிகமான பணம் உள்ளது.” என எதிர்கட்சிகளின் பொருளாதார நிபுனர் ஹார்சாடி சில்வாவும் போற்றிப் புகழ்ந்திருக்கிறார்.
அந்த மயக்கத்தில் என் நெஞ்சை உறுத்திய விடயங்கள் பற்றி உங்களுடன் பேசாதிருக்க முடியவில்லை பேசியே ஆகவேண்டும்.
எப்பொழுதும் முப்பொழுதும் உங்களையும், NPP அரசாங்கத்தையும் வாழத்திப் பாடும் அரசவைப் புலவர் என்ற குற்றச்சாட்டுகள் எனை பின்தொடர்வதை நீங்கள் அறிவீர்களோ தெரியாது.
ஆனால் நல்லதை நல்லவாறு சொல்லவேண்டும் என்பதில் இருக்கும் தெளிவு, தவறை தவறு என விமர்சிப்பதிலும் இருக்கிறது. ஒரு ஊடகவியலாளனாக அந்தத் துணிவு என்னிடம் எப்பொழும் இருந்தது - இருக்கிறது என்பதனை, கொழும்பில் நான் வாழ்ந்த காலங்கள் தெளிவுபடுத்தியிருக்கும் என நம்புகிறேன்.
மலையகத்தின் ஹற்றன் நகரில் உங்களின் படத்திற்கு வழிபாடு செய்திருக்கிறார்கள். எனது தெய்வம் (“மகே தெய்யோ” ) என ஒருவர் சாஸ்டாங்கமாக விழுந்து உங்களை கும்பிட்டிருக்கிறார். அங்கு பலர் வெடிகொழுத்தி மகிழ்ந்திருக்கிறார்கள்.
2026 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில் ஹற்றன் நகர அபிவிருத்திக்கு நீங்களும், உங்களின் அரசாங்கமும் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறது.
மலையக தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1750.00 ரூபாவாக நிர்ணயித்துள்ளீர்கள். மலையக தோட்டத்தொழிலாளரின் சம்பள உயர்வு குறித்த வரலாற்றில் இது ஓரு திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவே இந்தக் கொண்டாட்டங்களும். தனிநபர் வழிபாடும் அமைந்திருக்கிறது.
சுதந்திரத்திற்கு பின்னரான கடந்த 75 வருட கால வரலாற்றில் இடதுசாரித்துவம் என சொல்லப்பட்டாலும், JVPயின் வழி நடத்தலில் இடது மைய அரசியலில் நீங்களும் NPPயின் ஆட்சியாளர்களும் பயணிக்கிறீர்கள்.
அதனால் இந்த தனிநபர் வழிபாட்டில் நீங்களோ ஆட்சியாளர்களோ மயங்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.
காரணம் எமது அரை நூற்றாண்டு கால அகிம்சை போராட்டம் உள்ளிட்ட ஆயுதப் போராட்ட காலங்களில், விமர்சனங்களை கடந்து, விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு நம் தலைவரைகளை தந்தையென, தாயுமானவர் என, பெரியவர், பெரிஐயா என, மேதகு, சூரியக்கடவுள் என்றெல்லாம் விழித்து வண்ங்கி வீழ்ந்து போனோம் இன்னுமே எழமுடியவில்லை.
மறுபுறம் புலிகளும், தலைமையும், தமிழ்த்தேசியமும், தமிழ் மக்களின் விடுதலையும் ஒன்றாகிப் போனது. அதனால் புலிகளையும், தலைமையையும் விமர்சிப்பது, அவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவது துரோகமாக்கப்பட்டது.
அந்த விமசர்னங்கள், எதிப்புகள் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானதாக, ஈழவிடுதலைக்கு எதிரானதாக சித்தரிக்கப்பட்டன. விமர்சனம் சுயவிமர்னங்களுக்கு அப்பாற்பட்ட தனிமனித வழிபாடும், தெங்வங்கள் தவறுவிடமாட்டாது என கட்டமைக்கப்பட்ட கருத்தியலும் எமது விடுதலையை விடுதலை இயக்கங்களை நிர்மூலமாக்கின.


அதுபோலவே உங்களின் இடதுமைய அரசியலில் அநுர மாண்மியமோ, JVP + NPP புராணமோ தனிநபர் விழிபாட்டு முறைமையோ உருவாகி விடும் என்ற ஐயம் ஏற்படுகிறது.
காரணம் உங்களை உங்களின் ஆட்சியை, ஆளும் அரசாங்கத்தை விமர்சிப்பது, உங்கள் தவறுகளை சுட்டிக் காட்டுவதனை தவறாக சிலர் சித்தரிக்க முனைகிறார்கள்.
குறிப்பாக உங்களுக்கும், NPPக்குமான விமர்சனங்கள் - லஞ்சம், ஊழல், போதை மாபியாவுக்கு எதிரான போராட்டத்திற்கு எதிரானது என்ற பிம்பத்தை சிலர் கட்டமைக்க முனைகிறார்கள். இது ஒரு ஆபத்தான முன்உதாரணமாக அமைந்துவிடும்.
NPPயினது, JVPயினது, அநுரகுமாரவினது, தவறுகளை சுட்டிக் காட்டினால், விமர்சித்தால் அது லஞ்சம், ஊழல், போதைவஸ்த்து கடத்தல் + விநியோகத்திற்கு எதிராக நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிரானது என்ற தவறான கருத்துருவாக்கம் வலுப்பெறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்தகைய நிலை உருவாகினால் வடக்கு கிழக்கு எதிர்கொண்ட பேரவலத்தை தெற்கும் அனுபவிப்பது தவிர்க்க முடியாது.
உலகில் தவறுவிடாத அரசாங்கங்கங்களோ, தலைவர்களோ இல்லை. தவறுகளை தவறுகளாக ஏற்று சுயவிமர்சனங்களுடாக முன்னோக்கிச் செல்வதே ஒரு நல்லாட்சி அரசாங்கத்தினதும், அதனை் தலைமையினதும் சிறப்பாகும்.
அதனால் சொல்கிறேன் லஞ்சம், ஊழல், போதைமயவாக்கல், வீண்விரையம் முதலானவற்றிற்கு எதிராக நீங்கள் எடுத்த, எடுக்கும் நடவடிக்கைகளுக்கு வாழத்துகள். 2026 வரவு செலவுத்திட்டத்தில் மக்கள் நலன்சார்ந்து முன்மொழியப்பட்ட விடயங்குளுக்கும் நன்றிகள்.
அந்த சிறப்பம்சங்களுக்குள் மக்களை மூழ்கடித்து நீங்கள் கடந்து செல்ல முற்படும் விடயங்களை நாம் எப்படி கண்டுகொள்ளாது இருக்கமுடியும்?
மாகாண சபைத் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளீர்கள்.
எனினும் அந்த தேர்தலை நடத்துவதற்கு முன்னைய அரசாங்கத்தின் பக்கம் பந்தை அடித்து, உங்கள் பொறுப்பில் இருந்து நீங்கள் விலகிவிட முடியாது.
எல்லை நிர்ணயத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தேர்தலை நடத்தும் திகதியை உறுதியாக கூற முடியாது. தற்போதுள்ள சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை கொண்டுவரும் தேவையுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவேண்டும் என காரணம் கற்பித்து, 159 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்கும நீங்கள் தப்பித்துவிட முடியாது.
“ஜனாதிபதி சட்டத்தை உருவாக்க முடியாது. உருவாக்கினால் ஹிட்லர் என்பீர்கள், உங்கள் அரசாங்கத்தில் தேர்தலும் இல்லை, அதற்கான பணமும் இல்லை. இப்போ பணம் இருக்கிறது தேர்தலைநடத்தும் சட்டம் இல்லை என சிரித்து மழுப்பி உங்கள் பொறுப்பை கடந்து செல்ல முடியாது.”
அதனால் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்று மகாண சபைத் தேர்தலை அடுத்தவருட முற்பகுதிக்குள் நடத்துங்கள்.
அடுத்து தொல்பொருளியல் ஆலோசனைக் குழுவில் ஏனைய தேசிய இனங்களின் பிரதிநிதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
2025 நவம்பர் 01ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில், தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் தொல்பொருளியல் லோசனைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான 19 பேர் அடங்கிய குழுவில் ஏனைய தேசிய இனங்களைச் சேர்ந்த ஒருவரேனும் உள்ளக்கப்படவில்லை என்பது மிகவும் கவலைக்குரியது.
உங்களது எண்ணக்கருவில் உள்ள சமதர்ம சமூகம் உருவாகும் வரை, இனத்துவ முரன்பாட்டுள் சிக்கித் தவிக்கும் ஏனைய தேசிய இனங்களின் அபிலாசகைளை, ஏக்கங்களை புரிந்துகொள்ளுங்கள்.
கடந்த 3 தசாப்தங்களாக அதனை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. இனியாவது உங்கள் (அனுரவின்) தலைமையின் கீழ் புரிந்து கொள்வீர்கள் என நம்பி, வடக்கு கிழக்கில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களை உங்களில் இருந்து அந்த மக்கள் தேர்வுசெய்தார்கள்.
கடந்த கால அரசாங்கங்கள், நில அபகரிப்பு, ஆக்கிரம்பிப்பு, கலாசார மேலாதிக்கம் என்பற்றை நிறைவேற்ற தொல்பொருள் திணைக்களத்தையே கருவியாக பயன்படுத்தின என்ற நிலைப்பாடு தமிழ்பேசும் மக்களிடையே ஆழ ஊடுரிவியிருக்கிறது.
அவ்வாறான சூழலில் தொல்பொருள் குழுவில் இன அடிப்படையில் நாம் எவரையும் நியமிக்கவில்லை என்ற தத்துவத்தை மீண்டும் கட்டமைக்காமல் தவறை ஏற்று குழுவின் பிதிநித்துவத்தை மாற்றி அமையுங்கள்.
தோழர் அநுர அவ்ரகளே, உங்களை மக்கள் தெய்வமாக்குவார்கள் நீங்கள் தெய்வமாகிவிடாதீர்கள் அனைத்து இன மக்களுக்கும் நல்ல மனிதராக தோழராக மக்களுடன் பயணியுங்கள்.
மீண்டும் மற்றுமொரு மடலுடன் சந்திப்போம்.
இந்தப்பதிவு எனது தனிப்பட்ட பதிவு. அதற்கு முழுமையாக நானே பொறுப்பு. ஆரோக்கியமான விவாதங்கள், கருத்தியல் ரீதியான விமர்சனங்கள் மகிழ்வுக்க உரியதாக இருக்கும்.

நன்றி :நடராஜா குருபரன் ( முகப்புத்தகம் )

No comments: