.
எதையும் தொடங்க ஒரு தொடக்கப்புள்ளி வேண்டுமல்லவா? தொடக்கப்புள்ளி என்றால் பிள்ளையார் சுழியோ ஶ்ரீராமஜெயமோ அல்ல. எனது தொடக்கப்புள்ளி சாயனாரா சிங்கப்பூரா என்று சிங்கப்பூரில் இருந்து தொடங்கியது.
இளமைக் காலம் இந்தியாவில் இருந்தபோது பிரபலமான சாயனாரா சிங்கப்பூரா என்ற நான் கேட்ட திரைப்படப் பாடலின் வரிகள் எப்படியாவது சிங்கப்பூர் செல்லவேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தது. ஆனால் இப்போது சிங்கப்பூர் எனக்கு புழக்கடை போல் ஆகிவிட அதுவே எனது சீனப் பயணத்துக்கு தொடக்கப்புள்ளியாகவும் ஆனது.
உறவினர் ஒருவரின் திருமணத்துக்காக நானும் மனைவியும் சிங்ஙப்பூர் சென்றபோது ஐந்து நாட்கள் தங்கியிருந்து பின் சீனப் பயணத்தை தொடங்கினோம். உறவினர் திருமணத்துக்கு சிங்கப்பூரில் ஐந்து நாட்கள் தங்க வேண்டுமா என்று எண்ணாதீர்கள். முதல்நாள் வரவேற்பு, மறுநாள் திருமணம் அடுத்த நாள் எங்களுக்கு விருந்து உபசரிப்பு என்று மூன்று நாட்கள் ஓடின.
அவர்கள் திருமணத்துக்கு சிங்கப்பூர் வந்ததற்காக சிங்கப்பூரை எங்களுக்கு சுற்றிக்காட்ட விரும்பினார்கள். அவர்களிடம் நாங்கள் சிங்கப்பூரை எத்தனையோ முறை நன்றாக சுற்றிப் பார்தத்துவிட்டோம் என்று கூறினோம். அதற்கு இப்போது சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் உருவாக்கிய “க்ளௌவுட் ஃபாரஸ்ட்” மற்றும் “கார்டன்ஸ் பை தி பே”போன்ற சுற்றுலாத் தளங்களை பார்த்திருக்க மாட்டீர்கள் என்று அழைத்துச் சென்றார்கள்.
உண்மையிலேயே நாங்கள் அந்த இடங்களைப் பார்க்கவில்லை. க்ளௌவுட் ஃபாரஸ்ட் என்ற இடத்தில் சில குறிப்பிட்ட நாடுகளிலுள்ள மரம் செடிகள் மற்றும் மலர்ச்செடிகளை வைத்து அழகு படுத்தி இருக்கிறார்கள். அவற்றில் ஆஸ்திரேலியா கார்டனும் அடங்கும். இதனால் பத்து நாட்கள் செல்லவேண்டிய சீனப்பயணம் ஓரு வாரத்துக்குள் முடிந்தது.
இருப்பினும் ஒருசில இடங்கள் தவிர பார்க்க வேண்டிய எல்லா இடங்களையும் பார்த்து முடித்தோம். எல்லா இடங்களையும் பார்த்துவிடவும் முடியாது. ஆஸ்திரேலியாவிலேயே இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன. ஆசைதீர குடித்தவரும் இல்லை அழுக்கு போக குளித்தவரும் இல்லை என்று யாரோ எங்கோ சொல்லக் கேட்டிருக்கிறேன்.
சிங்கப்பூரில் மையமாக விளங்கும் பென்கூலன் பகுதியில் பென்கூலன் தெருவிலுள்ள வீ ஹோட்டல் பென்கூலன் என்ற ஹோட்டலில் தங்கியிருந்தோம். ஹோட்டலின் அடித்தளத்திலேயே இரயில் நிலையமும் உள்ளது.
ஹோட்டலில் தங்க நான் கேட்டிருந்த வசதிகளுக்கேற்ப எனக்கு கிடைத்த அறை எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என்தலைவன் என்ற பாடலை நினைவு படுத்தியது. அந்த பாடலில் வரும் அடிகளைப் போலவே எட்டாவது மாடியில் என் அறை இருந்தது. அந்த ஹோட்டலில் ஐந்து நாட்களை கழித்தபின் அந்த ஹோட்டலை விட்டுவிட்டுச் சென்றோம்.
அடுத்த அடியாக அவன் வேறுபக்கம் சென்றானடி என்று வரும் அடியைப்போல நான் அங்கிருந்து சீனா பக்கம் சென்றேன். எட்டாவது மாடியிலிருந்த எங்கள் அறையிலிருந்து பார்த்தபோது எதிரே ஓர் உணவகம் தெரிந்தது. மேலிருந்து பார்த்தபோது அருகிலிருப்பது போல் தோன்றிய உணவகம் கீழே இறங்கியபோது
அதை அடைவது அவ்வளவு சுலபமல்ல என்று தெரிந்தது.
ஹோட்டலின் அருகில் மகிழுந்து செல்லும் குறிகியசாலை வழியாக சென்றால் அது முட்டுச் சந்தில் போய் முடிந்தது. பின் கூகுளின் உதவியுடன் அந்த உணவகத்தை அடந்த போது அங்கே பல உணவகங்கள் அந்த வளாகத்துக்குள்ளேயே இருந்தன. அத்தனையும் சீன உணவகங்கள். அவற்றின் ஊடே ஒரு இந்திய உணவகம் இருந்தது. அப்பாடா என்று மூச்சை இழுத்து விடுமுன்னே
அது மூடியிருந்ததால் ஏக்கப் பெருமூச்சாக மாறியது.
செரங்கூன் ரோடு பகுதியில் நிறைய தமிழ்நாட்டு உணவகங்கள் இருக்கின்றன. அத்தோடு வனபத்ரகாளியம்மன் மற்றும் வீரமாகாளியம்மன் போன்ற கோவில்களும் உள்ளன. ஆனால் பென்கூலனில் அப்படி ஒன்றும் இல்லை. இருப்பினும் நான் தங்கியிருந்த ஓட்டலின் எதிர்ப்புறம் இருந்த பள்ளிவாசலைப் பார்தத்ததும் எனக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டது.
புத்துணர்ச்சிக்கு காரணம் தமிழ்தான். சிங்கப்பூரில் தமிழ் எழுத்துக்களை விமானநிலையம் தொடங்கி காணலாம். இங்கே மதம் கடந்து தமிழ்ப்பற்றை பள்ளிவாசல் முகப்பில் கண்டேன். ஆம், இஸ்லாமிய சொந்தங்கள் தமிழ்மீது கொண்டுள்ள பற்றுக்கு சான்றாக நாடுகடந்து வந்தபின்னும் தமிழை பள்ளிவாசல் முகப்பில் பென்கூலன் பள்ளிவாசல் என்று எழுதியிருப்பதைக் கண்டதும் இறுமாப்படைந்தேன்.
அந்த இறுமாப்பு காலை உணவைப்பற்றிய அதிக அக்கறையைத் தடுத்தது. ஓட்டலின் அடித்தளத்திலிருந்த ரயில்நிலையம் சென்று அங்கிருந்து செரங்கூன் ரோடு செல்லலாம் என எண்ணினேன். ஆனால் இப்போது கண்ணுக்கு விருந்திருக்கும் போது சிறிதே வயிற்றுக்கு ஈய்தல் போதுமென்று அடித்தளத்தில் இருந்த ஓட்டல் உணவகத்தில்
ஜப்பான் மரக்கறியுடன் கூடிய ரொட்டியுடன் காலை உணவை முடித்துக் கொண்டேன்.
அதன்பின் திருமணத்துக்கு சென்றோம். திருமணம் முடிந்ததும் உணவை ரேஸ் கோர்ஸ் சாலையிலுள்ள “அம்ரித் பை த சாங் ஆப் இந்தியா” என்ற உணவகத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். கல்யாணமோ காதுகுத்தோ நம்ம சகுந்தலாதான் என்று தொலைபேசி விளம்பரத்தில் வரும் சகுந்தலா உணவகமும் அருகிலேயே இருந்தது.

அம்ரித்திலும் அதன்பின் உறவினர் வீட்டிலும் சாப்பிட்டதோடு அடுத்த ஒரு வாரகாலம் வெறும் பிரட்டும் நூடுல்ஸும் சாப்பிட்டுத்தான் நாட்களை ஓட்டவேண்டும் என்று எண்ணவே இல்லை. சிங்கப்பூரிலிருந்து சீனா செல்ல வேட்டியநாள் வந்தது. மாலை நாலரை மணிக்கு சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் இருந்து சீனாவுக்கு செல்லவேண்டும்.
குறித்த நேரத்தில் சாங்கி விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் இரவு பதினொரு மணிக்கு சீனாவின் தலைநகரான பீஜங் கேபிடல் இண்டர்நேஷனல் விமானநிலையத்தை வந்தடைந்தது. பயணப்பொதி பெட்டிகளை கொணர்வியில் இருந்து எடுத்தபின் கைபேசிக்கான சிம் கார்டை வாங்கலாம் என்று எண்ணினேன்.
நான் ஆஸ்திரேலியாவில் இருந்து வரும்போதே சிம் கார்டை வாங்கியிருக்கலாம். ஆனால் சில சீன நண்பர்களிடம் விசாரித்த போது சீனாவில் சென்று வாங்குவதுதான் நல்லது என்றார்கள்.
காரணம் விலை குறைவாக இருப்பதுடன் எத்தகைய சிம் கார்டு பொருத்தமாக இருக்கும் என்பதையும் அறியமுடியும் என்றார்கள். மேலும் சில செயலிகளை சீனாவில் தடை செய்திருப்பதால் அவை அங்கு வேலை செய்யாது என்றும் கூறினார்கள்.
-சங்கர சுப்பிரமணியன்.
(தொடரும்)


No comments:
Post a Comment