திருவருள் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்


.


தமிழ் சினிமாத் துறையில் முருகப் பெருமானின் தீவிர பக்தனாக அல்ல , முரட்டு பக்தனாக திகழ்ந்தவர் தயாரிப்பாளர் சாண்டோ எம் . எம் . ஏ . சின்னப்பா தேவர். முருகனிடம் சண்டை போட்டு, பிடிவாதம் பிடித்து, வாதாடி காரியம் சாதிப்பது இவரது வாடிக்கை. அப்படிப் பட்ட தேவர் கந்தனின் பெருமைகளை பறை சாற்றும் விதமாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தயாரித்தப் படம் திருவருள்! 

ஏற்கனவே துணைவன், தெய்வம் என்று இரண்டு பக்திப் படங்களை எடுத்து வெற்றி கண்டவர் அதே பார்முலாவை பின் பற்றி திருவருள் படத்தை தயாரித்தார். இதற்காக கதையைத் தேடி அவர் அலையவில்லை . தன்னுடைய வாழ்க்கையில் இடம்பெற்ற சம்பவங்களை வைத்தே கதை பண்ணி விட்டார். 

 சாதாரண மில் தொழிலாளியாக இருந்து, ஸ்டண்ட் நடிகராகி, படத் தயாரிப்பாளராகி வெற்றி கண்ட தேவர் மருதமலை முருகன் மீது அளவற்ற நம்பிக்கை கொண்டு அறப் பணிகளுக்கு அள்ளி அள்ளி வழங்கினார். இந்த விஷயத்தில் அவர் எவர் பேச்சையும் கேட்பதில்லை. அப்படி வாழ்ந்த தேவர் இந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு படத்தின் கதையை உருவாக்கி விட்டார். 




கூலி வேலை செய்யும் தேவர் , மன்னிக்கவும் , தேவன் தன்னுடைய முருக பக்தியினால் பலவித தொல்லைகளுக்கும் , அவமானத்துக்கு ஆளாகிறான். மருதமலையில் எதிர் பாராத விதமாக பாம்பாட்டி சித்தரை சந்திக்கும் அவன் அங்கே ஒரு முருகன் ஆலயம் அமைக்க திடசங்கற்பம் பூணுகிறான். முருகன் மீது அவன் பாடும் பாடலை கேட்கும் ஒர் இசைத் தட்டு விற்பனையாளர் அவனை பாட வைத்து இசைத் தட்டுகளை வெளியிட தேவன் பிரபலமடைகிறான். வசதி , வாய்ப்புகள் பெருகுகின்றன. ஆனாலும் முருகனுக்கு போக மிஞ்சுவதே தனக்கு என்று வாழும் அவனுக்கு வள்ளியம்மை மனைவியாகிறாள். அவளின் தாயாரின் போதனையால் முருகனுக்கு செய்யும் செலவுகளை குறைக்கும் படி அவள் வற்புறுத்துகிறாள். இதனால் பிரச்னை பெரிதாகி கணவன் , மனைவி இடையே பிரிவு வருகிறது. அவர்களை முருகப் பெருமான் எவ்வாறு சேர்த்து வைத்தார் என்பதே மீதிக் கதை. 




 படத்தில் குமாரதேவனாக நடிக்கும் ஏவி . எம் . ராஜன் அந்த பாத்திரமாகவே மாறி விட்டார். பிடிவாதம், பக்தி, உருக்கம், ஆவேசம் என்று எல்லா வித உணர்ச்சிகளையும் தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி சாதித்து விட்டார் அவர். மருதமலையில் முருகன் விக்கிரகத்துக்கு முன் உருகுவது, பணத்தை அள்ளி , அள்ளி கொடுக்கும் போது பரவசப்படுவது , மனைவியின் செயல்களை கண்டு பொறுக்க முடியாமல் ஆவேசப்படுவது, என்று ராஜனின் நடிப்பு அருமை. அவருக்கு இணையாக வரும் ஜெயாவும் நடிப்பில் ஈடு கொடுக்கிறார். விரல் விட்டு எண்ணக் கூடிய சில படங்களில் மட்டும் கதாநாயகியாக நடித்த ஜெயாவின் நடிப்புக்கு இந்தப் படம் பெருமை சேர்த்தது. 50 ஆண்டுகளுக்கு முன் இப் படத்தில் நடித்த ஜெயாவுக்கு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசினால் கலைமாமணி விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுந்தரராஜன் கோயில் தர்மகத்தாவாகவும், பின்னர் பிச்சைக்காரனாகவும் வந்து இரு வேறு நடிப்பை வழங்குகிறார். தேங்காய் சீனிவாசன் நடிப்பும் ஓகே. ஆனாலும் நாகேஷின் கதா பாத்திரமும், நடிப்பும் மனதை கவர்கிறது. சுகுமாரியும் தன் பங்குக்கு குறை வைக்கவில்லை. இவர்களுடன் வி. கோபாலகிருஷ்ணன், உடையப்ப தேவர், ஆகியோரும் நடித்திருந்தனர். 


இவர்கள் எல்லாரும் இருக்க , திருமுருக கிருபானந்த வாரியாருக்கு படத்தில் இருக்கிறார். வழமைக்கு மாறாக இதில் ஒரு கதா பாத்திரமாகவே அவர் மாறி விட்டார். தேவர் அவரை எப்படியோ ஒரு நடிகராகவும் மாற்றி விட்டார். ஓம் முருகா! 





படத்துக்கு பாடல்களை கண்ணதாசன் எழுதினார். இசை தந்தவர் குன்னக்குடி வைத்தியநாதன். கந்தன் காலடியை வணங்கினால், மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க, உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே, ஆகிய பாடல்கள் டி . எம். சௌந்தரராஜன் குரலில் உச்சம் தொட்டன. அதே போல் சீர்காழி கோவிந்தராஜன் மலைகளில் சிறந்த மலை மருதமலை பாடலை படத்தில் தோன்றி பாடியிருந்தார். 

 படத்தில் ஓர் அரிய காட்சியாக காமராஜர் முருகன் கோயில் திருவிழாவில் கும்பிடும் காட்சியை இணைத்திருந்தார்கள். அது மட்டுமன்றி கோவில் திருவிழா, காவடி ஆட்டம், அபிஷேகம், என்று எல்லாவற்றையும் இணைத்து ஆன்மீக அனுபவத்தை வழங்கியிருந்தார் தேவர். 
படத்தை சுந்தரபாபு ஒளிப்பதிவு செய்தார். தேவரின் கதை இலக்காவில் இருந்த மா ரா, தூயவன், கலைஞானம் எல்லோரும் இணைந்து கதையையும் , வசனத்தையும் எழுதினார்கள். படத்தை ஆர். தியாகராஜன் டைரக்ட் செய்தார். பக்திக் படம் ஒன்றை தொய்வில்லாமல் விறுவிறுப்பாக இயக்கும் வித்தையை அவர் தன் மாமா தேவரிடம் கற்று விட்டார் என்பதை அவரின் இயக்கம் காட்டியது. கந்த சஷ்டி காலத்தில் பார்த்து ரசிக்க ஏற்ற படம் திருவருள்!







 

No comments: