இலங்கைச் செய்திகள்

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 05 பில். அமெ. டொலராக அதிகரிப்பு 

வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதியால் ரூ.33,710 கோடி வருமானம் அதிகரிப்பு

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை இம்மாதம் ஆரம்பம்

நசீர் அஹமட், லக்ஷ்மன் யாபா ஆளுநர்களாக பதவிப்பிரமாணம்

யாழில் 7 ஆயிரம் அரச காணி துண்டுகள் பகிர்ந்தளிப்பு


நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 05 பில். அமெ. டொலராக அதிகரிப்பு 

2023 உடன் ஒப்பிடுகையில் 9.8 வீத வளர்ச்சி

May 3, 2024 9:00 am 

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 05 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2024 மார்ச் வரையான மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பின் அளவு அதிகரித்ததாக தெரிவித்துள்ள மத்திய வங்கி, உள்நாட்டு மற்றும் அந்நிய செலாவணி சந்தைகளிலிருந்து நிகர அடிப்படையில் அந்நிய செலாவணியை கணிசமான அளவில் கொள்முதல் செய்ததால் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரித் ததாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த கையிருப்பு அதிகரிப்பில்

சீன மத்திய வங்கியின் அந்நிய செலாவணியும் உள்ளடங்குகிறது. வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் மார்ச்சில் 1,139 மில்லியன் அமெரிக்க டொலர் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த வருட மார்ச்சுடன் ஒப்பிடுகையில் இது 9.8 வீத அதிகரிப்பாக உள்ளது. தொழில்துறை பொருட்களின் ஏற்றுமதியே வருமான அதிகரிப்பில் பங்களிப்புச் செலுத்தியுள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி ஏப்ரல் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 9.1 வீதத்தால் அதிகரித்த அதேசமயம், யூரோ, ஸ்டேர்லிங் பவுண்ட், ஜப்பானிய யென், இந்திய ரூபா மற்றும் அவுஸ்திரேலிய டொலர் ஆகியவற்றுக்கு நிகரான ரூபாவின் பெறுமதியும் அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.    லோரன்ஸ் செல்வநாயகம்  நன்றி தினகரன் 

 வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதியால் ரூ.33,710 கோடி வருமானம் அதிகரிப்பு

ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவிப்பு

May 3, 2024 8:49 am 

2023 மார்ச் மாதத்தோடு ஒப்பிடுகையில் 4.79 வீத அதிகரிப்பென்றும் சுட்டிக்காட்டு

நாட்டின் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக, ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரம் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதால், கடந்த மார்ச் மாதத்தில் 33,710 கோடி ரூபாவை (1,138.9 அமெரிக்க டொலர்கள்) வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி வருமானமாக பெற்றுக் கொள்ள முடிந்துள்ளதாகவும் அச்சபை தெரிவித்துள்ளது.

இத்தொகை, கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கைக்கு கிடைத்த வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி வருமானத்தோடு ஒப்பிடுகையில், நூற்றுக்கு 9.77 வீத அதிகரிப்பைக் காட்டுவதாகவும் இந்த வருடத்தின் மார்ச் மாதத்தின் ஏற்றுமதி செயற்பாடுகள் பெப்ரவரி மாதத்தோடு ஒப்பிடுகையில், நூற்றுக்கு 7.51 வீத அதிகரிப்பைக் காட்டுவதாகவும் சபை தெரிவித்துள்ளது.

அதேவேளை, இவ்வருடத்தின் மார்ச் மாதத்துக்கான சேவை ஏற்றுமதியின் பெறுமதி 275.1 மில்லியன் அமெரிக்க டொலரென்றும், கடந்த வருடத்தின் இக்காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், அது நூற்றுக்கு 8.39 வீத அதிகரிப்பைக் காட்டுவதாகவும் சபை தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் முழு வர்த்தக பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி உள்ளிட்ட முழுமையான ஏற்றுமதி வருமானம் 4.1 பில்லியன் டொலராக பதிவாகியுள்ளதாகவும் அந்த சபை தெரிவித்துள்ளது.

ஏற்றுமதி உற்பத்திப் பொருட்களான ஆடைகள், தேயிலை, இறப்பர் மற்றும் இறப்பர் சார்ந்த உற்பத்திப் பொருட்கள் தேங்காய், தெங்கு சார்ந்த உற்பத்திப் பொருட்களுக்கான கேள்விகள் குறைந்தும் அதிகரித்தும் காணப்பட்டன.

இதையடுத்து, கடந்த பெப்ரவரி மாதத்தில் ஆடைகள், தேயிலை, இறப்பர், தேங்காய் மற்றும் தெங்கு உற்பத்திப் பொருட்கள் மாணிக்கக்கற்கள் இலத்திரனியல், வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்பட்ட உணவுகள், கடலுணவு, வளர்ப்பு மீன்கள் மரக்கறி, பழங்கள் உள்ளிட்ட உற்பத்திப் பொருட்கள் மூலமான ஏற்றுமதி வருமானமே அதிகரித்துள்ளதாகவும் அந்த சபை தெரிவித்துள்ளது.

இலங்கையின் வர்த்தக உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதியில் ஐக்கிய ராஜ்ஜியம், அமெரிக்கா, இந்தியா, ஜெர்மன், இத்தாலி, நெதர்லாந்து, கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், அவுஸ்திரேலியா, சீனா, ஜப்பான், துருக்கி, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகள் முக்கியமாக உள்ளன.

அந்த வகையில் இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் அதிக ஏற்றுமதி வருமானம் ஐக்கிய ராஜ்ஜியம் தவிர ஐரோப்பிய நாடுகள் மூலமே கிடைத்துள்ளன. அது

248,48 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். கடந்த வருடத்தின் மார்ச் மாதத்தோடு ஒப்பிடு கையில், அது 4.79 வீத அதிகரிப்பு என்றும் அந்த சபை தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மூலம் 241. 5 மில்லியன் டொலர்களும், தெற்காசிய நாடுகளுக்கான ஏற்றுமதி வருமானமாக 103.52 மில்லியன் டொலர்களும் கிடைத்துள்ளதாகவும் அந்த சபை தெரிவித்துள்ளது.  லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன் 
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை இம்மாதம் ஆரம்பம்

நிலத் தொடர்பு பற்றிய 02 ஆம் கட்ட பேச்சு விரைவில்

May 3, 2024 6:00 am 

காங்கேசன்துறை, நாகப்பட்டினமிடையிலான கப்பல் சேவை, இம்மாதம் நடுப்பகுதியில் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மட்டக்களப்புக்குச் சென்ற சந்தோஷ் ஜா, நேற்று வியாழக்கிழமை (02) மட்டக்களப்பு காந்திபூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரம் (ஜனா), மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் பொறியியலாளர் என்.சிவலிங்கம் ஆகியோரும் இணைந்திருந்தனர்.

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு ஆரம்பிக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டுள்ள கப்பல் சேவையை மீள ஆரம்பித்தல் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,

கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இம் மாத நடுப்பகுதியில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பாலம் அமைத்தல் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த உயர்ஸ்தானிகர்,

இரு நாடுகளுக்குமிடையே நிலத்தொடர்பை ஏற்படுத்துவது குறித்து இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்து வருகிறோம்.

முதலாவது கட்ட பேச்சுக்கள் நிறைவடைந்துள்ளன. இரண்டாவது கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறோம். இது நீண்டகாலத் திட்டம். ஒரு சில வருடத்தில் நிறைவடையும் விடயமல்ல எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.   நன்றி தினகரன் 

நசீர் அஹமட், லக்ஷ்மன் யாபா ஆளுநர்களாக பதவிப்பிரமாணம்

- ஜனாதிபதியினால் சற்று முன்னர் நியமனம்

May 2, 2024 10:56 am 

வட மேல் மாகாண ஆளுநராக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாபா அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இருவரும் சற்று முன்னர் (02) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் செயலாளார் சமன் ஏக்கநாயக்கவும் இதன்போது கலந்துகொண்டிருந்தார்.   நன்றி தினகரன் 

யாழில் 7 ஆயிரம் அரச காணி துண்டுகள் பகிர்ந்தளிப்பு

May 1, 2024 5:03 am 

யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் 7 ஆயிரம் அரச காணித்துண்டுகள், காணியற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக மாகாண காணி ஆணையாளர் அம்பலவாணர் சோதிநாதன் தெரிவித்துள்ளார்.

மாகாண காணி ஆணையாளர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்டத்தில் 05 வீதத்திற்கும் உட்பட்டதாகவே அரச காணிகள் காணப்படுகின்றன. சாவகச்சேரி, மருதங்கேணி, கோப்பாய் மற்றும் தெல்லிப்பழை ஆகிய பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அரச காணிகள் உள்ளன.

யாழ்.நகரை அண்டிய பகுதிகளில் காணிகள் விஸ்தீரணம் கொண்டதாக இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை முதலீட்டு நடவடிக்கைகளுக்காக அரச காணிகளை வழங்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், முதலீட்டுக்கு ஏற்ற காணிகளை பிரதேச செயலகங்கள் ஊடாக இனம் கண்டு அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.   நன்றி தினகரன் 
No comments: