மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ...... அவுஸ்திரேலியா
சைவத்தைச் சிவனை போற்றிடும் குடும்பம்
சன்மார்க்க வழியிலே நடந்திடும் குடும்பம்
பெண்ணும் ஆணும் பிள்ளையாய் வாய்த்தனர்
பெற்றோர் சிவனைப் பரவியே வாழ்ந்தனர்
சிவனைச் சைவத்தை சிந்தையில் இருத்திட
பெற்றோர் நாளும் எண்ணியே வளர்த்தனர்
பெற்றோர் வழியில் பிள்ளைகள் நடந்தனர்
நற்றவச் செல்வமாய் நன்றாய் வளர்ந்தனர்
இல்லற வாழ்வில் இணைத்தனர் பெண்ணை
நல்லதோர் துணையும் வந்தே அமைந்திட
பெற்றவர் மகிந்தார் உற்றவர் மகிழ்ந்தார்
காலனோ மகிழா கண்ணீரைக் கொடுத்தான்
காலம் ஓடின பெற்றோர் பிரிந்தார்
கணவனை இழந்தாள் தம்பியை அணைத்தாள்
தம்பிக்குத் தாயாய் ஆகியே நின்று
தம்பியைக் காத்திட சாமியை வேண்டினாள்
தம்பி பெயரோ மருள் நீக்கியார்
மருளது அகன்றிட வழிவகை செய்தாள்
படித்தான் படித்தான் பலதும் படித்தான்
சஞ்சலப் பட்டதால் சமணத்தில் கலந்தான்
தம்பியின் போக்கால் தமக்கை நொந்தாள்
எம்பிரான் திருவடி பற்றியே நின்றாள்
சமணத் தலைமை ஏற்றிட்ட தம்பி
தன்னுள் மாற்றம் வருவதை உணர்ந்தான்
சகோதரி வேண்டுதல் சங்கரன் ஏற்றான்
தம்பியை மாற்றிட சங்கரன் விரும்பினான்
சூலை வந்தது சூழ்நிலை கலைந்தது
மீளவும் தம்பி சைவம் பற்றினான்
பற்றிய தம்பி பாடினான் பாடினான்
நற்றமிழ் நாவில் ஊற்றென வந்தது
நெற்றிக் கண்ணனும் பற்றினான் பாடலை
நாவுக் கரசனாய் வாழ்ந்திட அருளினான்
தரும சேனராய் சமணத் தலைவராய்
இருந்தவர் மாற்றம் எரிச்சலைத் தந்திட
சமணர் எதிர்த்தார் தண்டனை கொடுத்திட
ஆண்ட அரசனை அணுகினார் அனைவரும்
அரசனும் சமணன் ஆட்சியும் சமணமே
அதிகாரம் அனைத்தும் சமணத்தின் வசமே
கைது செய்திடக் கட்டளை பிறந்தது
காவலர் விரைந்தனர் கைதினை மேற்கொள
அரசன் ஆணையை அறைந்தனர் காவலர்
அரனின் அடியார் ஆத்திரம் கொண்டார்
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
துணிவுடன் சொல்லி பணியவே மறுத்தார்
வெகுண்டான் அரசன் வில்லங்கம் விளைந்தது
சமணக் கூட்டம் சந்தோஷம் கொண்டது
நீற்றறை பூட்டினார் நஞ்சினை ஊட்டினார்
யானையே ஏவியே கொன்றிட முயன்றார்
கல்லுடன் கட்டி கடலினுள் வீசினார்
நற்றுணை நாமமாய் நமச் சிவாய
உற்றிடு துணையாய் ஆகியே நின்றது
கற்றுணை அங்கே தெப்பமாய் மிதந்தது
நாதனின் அருளால் அனைத்தும் அகன்றது
நாட்டினை ஆண்டவன் பணிந்துமே நின்றான்
சைவம் தளைக்க வழியும் பிறந்தது
சங்கரன் நாமம் தமிழெலாம் நிறைந்தது
நாவுக் கரசரை நற்றமிழ் பெற்றது
நம்சைவம் நல்லதோர் அடியாரைக் கண்டது
திருமுறை புதியதோர் கருவினைப் பெற்றது
தத்துவம் வித்துவம் தமிழினை நிறைத்தது
புதுமையைப் புகுத்தினார் புரட்சியைக் காட்டினார்
சமுதாயம் தளைக்கச் சைவத்தை வளர்த்தார்
திருவருள் நம்பினார் செப்பினார் திருமுறை
குருவென இறையின் திருவடி பற்றினார்
அரனைத் தொழுவார் அனைவரும் சமமென
அரிய தத்துவம் அப்பர் மொழிந்தார்
ஈசன் நாமத்தை இதயம் இருத்துவார்
இன்னல் அகன்று இருப்பார் என்றார்
நிலைபெற இருக்க எண்ணிடும் யாவரும்
நித்தம் கோவில் செல்லுக என்றார்
படி முறையாக பலபல செய்திடப்
பலரும் உணர்ந்திடப் பாடமும் நடத்தினார்
வணங்கத் தலையும் வாழ்த்த வாயும்
கும்பிடக் கையும் பூகொய்திட விரல்களும்
நற்பணி செய்ய நடந்திடக் கால்களும்
தந்தவன் இறைவன் என்றுமே மொழிந்தார்
தொண்டினை முதலாய்க் கொண்டவர் அப்பர்
என்றுமே உழவாரம் ஏந்தியே நின்றார்
உழைத்திடல் உயர்வெனக் கண்டவர் அப்பர்
உழைப்பவர்க் கிறைவனும் உதவுவான் என்றார்
பக்தி உலகினில் முத்தாய் ஒளிர்கிறார்
பக்குவம் பெற்றிட்ட பரமனின் அடியார்
ஓடும் செம்பொனும் ஒன்றென நோக்குவார்
ஓரிறை சிவனென உலகிடை வாழ்ந்தவர்
எண்பத் தொன்றில் இறைவன் அழைத்தான்
இன்தமிழ் இசைத்தமிழ் கேட்டிட அழைத்தான்
துன்பப் பட்டார் துயரிடை உழன்றார்
என்பும் தோலுமாய் இறையடி அடைந்தார்
ஆளுடைப் பிள்ளையார் அப்பரே என்றார்
ஆண்டவன் நாவுக்கு அரசரே என்றார்
அன்னையும் தந்தையும் மருணீக்கியார் என்றார்
ஆளுமைச் சேக்கிழார் வாகீசர் ஆக்கினார்
தாண்டக வேந்தராய் தமிழன்னைக் கண்டாள்
தமிழிசை மறவாப் பாடல்கள் தந்தார்
ஆண்டவன் விரும்பிட அருந்தமிழ் கொடுத்தார்
அடியார்க் கெளியனாய் அப்பர் மிளிர்ந்தார்
No comments:
Post a Comment