சர்வர் சுந்தரம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 தமிழ் திரையில் சாதாரண நடிகனாக நுழைந்து மிக குறுகிய


காலத்தில் பிரபல நகைச்சுவை நடிகராக உயர்ந்தவர் நாகேஷ். நட்சத்திர நடிகர்களின் கால்ஷீட்டுக்கு தயாரிப்பாளர்கள் தவம் கிடந்த காலம் போய் நாகேஷின் கால்ஷீட்டுக்கு நட்சத்திர நடிகர்கள் காத்திருக்கும் காலம் 64ம் ஆண்டளவில் உருவாகியிருந்தது. அந்தளவிற்கு இரவு பகல் என்று நடித்து தள்ளிக் கொண்டிருந்தார் அவர். நாகேஷின் திறமைக்கும், அவருக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பிற்கும் இருக்கும் ஆதரவையும் கண்ட ஏவி மெய்யப்ப செட்டியார் அவரையே கதாநாயகனாக போட்டு படம் ஒன்றை தயாரிக்கத் தீர்மானித்தார். அவ்வாறு அவர் ஏவி எம் புரடக்சன்ஸ் சார்பில் தயாரித்த படம் தான் சர்வர் சுந்தரம்.


ராகினி கிரியேஷன்ஸ் என்ற நாடக குழுவை அமைத்து அதன் மூலம்

தான் கதை வசனம் எழுதிய நாடகங்களை இயக்கி மேடை ஏற்றிக் கொண்டிருந்த கே பாலச்சந்தரின் சர்வர் சுந்தரம் நாடகத்தையும், அதில் நாகேஷின் நடிப்பையும் பார்த்த ஏவி எம் அதனையே படமாக்க முடிவு செய்து கதை வசனத்தை மட்டும் பாலச்சந்தரிடம் எழுதி வாங்கி கொண்டார். படத்தை இயக்கும் பொறுப்பை அனுபவசாலிகளான கிருஷ்ணன் பஞ்சு இருவரிடமும் ஒப்படைத்தார்.

நாகேஷ் முதன் முதலில் ஹீரோவாக நடித்த இப் படத்தில் அவருடன் முத்துராமன், கே ஆர் விஜயா, சுந்தரராஜன், எஸ் என் லஷ்மி, எஸ் ராமராவ் , மனோரமா , ஆகியோரும் நடித்தார்கள். இவர்களுடன் எஸ் வி ரங்காராவ் ஒரு காட்சியில் நடித்திருந்தார். இவர்களுடன் ராகினி கிரியேஷன்ஸ் நாடக குழுவை சேர்ந்த சில நடிகர்களும் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்கள்.

ஏழ்மையும் , வெகுளித்தனமும் கொண்ட சுந்தரம் சினிமாவில் நடிக்கும் ஆசையால் சென்னை வந்து , அம் முயற்சியில் தோற்று ஹோட்டல் ஒன்றில் சர்வராக பணியாற்றுகிறான். தன்னுடைய தாயுடன் குடிசையில் வாழும் அவன் ஹோட்டல் முதலாளியின் மகள் ராதாவை ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறான்.

ராதா தன் மீது காட்டும் பரிவை காதல் என்று தவறாக புரிந்து கொள்ளும் அவன் தன்னுடைய காதலை பற்றி தன் நண்பன் ராகவனுக்கு சொல்கிறான். அது மட்டுமன்றி அவலட்சணமான தனக்கு ராதா கிடைப்பாளா என்ற ஏக்கத்தையும் அவனிடம் வெளிப்படுத்துகிறான் . சுந்தரத்தின் காதல் நிறைவேற அவனின் அந்தஸ்து உயர வேண்டும் என்று எண்ணும் ராகவன் , சுந்தரத்துக்கு சினிமாவில் சேரும் வாய்ப்பை பெற்று கொடுக்கிறான். சுந்தரத்தின் புகழ், அந்தஸ்து உயர்கிறது. அதே சமயம் ராதா ராகவனை காதலிக்கிறாள் என்ற உண்மையும் தெரிய வருகிறது.


இப்படி அமைந்த கதையில் சுந்தரமாக நாகேஷ் நடித்தார் என்பதை விட பாத்திரமாகவே மாறியிருந்தார் எனலாம். தாயிடம் கெஞ்சுவதாகட்டும், நண்பனிடம் தன் ஆற்றாமையை வெளிப்படுத்வதாகட்டும், காதலியிடம் காதலை சொல்லாமல் உருகுவதாகட்டும் எல்லா காட்சிகளிலும் நாகேஷின் நடிப்பு மிளிர்கிறது. அவருக்கு தோதாக முத்துராமன் தன் மிகையில்லாத நடிப்பை வழங்கியிருந்தார். இவர்கள் இருவருக்கும் மத்தியில் இளமை, அழகு இரண்டும் ததும்ப வருகிறார் கே ஆர் விஜயா . இளமையான அப்பாவை பார்க்கும் வாய்ப்பு சுந்தரராஜன் மூலம் கிடைக்கிறது. நாகேஷுடன் தோன்றும் காட்சிகளில் எல்லாம் எஸ் என் லட்சுமியின் நடிப்பு அசத்துகிறது.

சிறிய பட்ஜெட்டில் எடுத்த படம் என்றாலும் இசைக்கு விஸ்வநாதன்

ராமமூர்த்தி இருவரையும் செலெக்ட் பண்ணியிருந்தார்கள். சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு, தத்தை நெஞ்சம் , போகப் போகாத தெரியும் ஆகிய பாடல்கள் கண்ணதாசன் கவி வரிகளில் கவர்ந்தன. கடைசி நேரத்தில் படத்தில் இணைக்கப் பட்ட வாலியின் அவளுக்கென்ன அழகிய முகம் பாடல் மிக பிரபலமானது. இந்த பாடல் காட்சியில் எம் எஸ் விசுவநாதன், டி எம் சௌந்தரராஜன், வாலி ஆகியோர் தோன்றுவது ரசிகர்களுக்கு போனஸ். சிதம்பர ரகசியமாக இருந்த படம் எடுக்கும் முறையை இப் படத்தில் சில காட்சிகளில் காட்டியிருந்தார்கள் . இது ரசிகர்களுக்கு புதுமை.


நாடகத்தில் இருந்து திரைக்கு வந்தாலோ என்னவோ படம் முழுதும் வசன மயமாகவே இருந்தது. ஆனாலும் நல்ல வேலை பாலச்சந்தரின் வசனங்கள் ரசிக்கும் படி அமைந்திருந்தது. ஒளிப்பதிவை நேர்த்தியாக எஸ் மாருதிராவ் கையாண்டிருந்தார். ஆர் விட்டல் படத் தொகுப்பை பார்த்துக் கொண்டார். ஏ கே சேகரின் அரங்க அமைப்பு குட்.

ஏவி எம் நிறுவனத்தில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்த

கிருஷ்ணன் பஞ்சு இருவரும் மீண்டும் இப்படத்தின் மூலம் ஏவி எம்மில் இணைந்துக் கொண்டார்கள். அதன் பலனாக சர்வர் சுந்தரம் வெற்றிப் படமாகி , பின்னர் ஹிந்தியிலும் உருவாகி ரசிகர்களை கவர்ந்தது.

No comments: