பவளவிழா நாயகன் செல்வத்துரை ரவீந்திரன் மெல்பனில் கலை இலக்கிய பொதுப்பணிகளில் இணைந்திருக்கும் எங்கள் ரவி அண்ணனுக்கு 75 வயது - முருகபூபதி


அவுஸ்திரேலியாவில் புகலிட தமிழ் சமூகத்தில் நன்கு அறியப்பட்ட பெயருக்குரியவருக்கு 75 வயது பிறக்கிறது. இவரது இயற்பெயர் செல்வத்துரை ரவீந்திரன்.
தந்தையார் செல்வத்துரை ஓவியர். ஒளிப்படக்கலைஞர். இலங்கையில் புகழ்பூத்த நவாலியூர் சோமசுந்தரப்புலவர் யோகர் சுவாமிகள் முதலானோரை தனது  கெமராவில் படம் எடுத்தவர். அந்தப்படங்களே  இன்றுவரையில் மக்களிடம் அறிமுகமாகியிருக்கிறது.
கலைஞர் செல்வத்துரை அய்யாவுக்கு ரவீந்திரநாத் தாகூரின் எழுத்துக்களில் அலாதிப்பிரியம். அதனால், தனக்கு மகன் பிறந்தால் ரவீந்திரன் என்ற பெயரைச்சூட்டுவதற்கு விரும்பியிருந்தார்.
செல்வத்துரை தம்பதியருக்கு இரண்டாவது புதல்வனாக 1943 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி பிறந்தவர் ரவீந்திரன். கொழும்பு இரத்மலானை இந்துக்கல்லூரியிலும் படித்து பின்னர் சட்டக்கல்லூரியில் இணைந்து சட்டத்தரணியானவர்.
தமிழ்க்காங்கிரஸ் கட்சியும் அதிலிருந்து தோன்றிய தமிழரசுக்கட்சியும் இவை இரண்டினாலும் பின்னாளில் உருவான தமிழ்க்கட்சிகளும் பெரும்பாலும் சட்டத்தரணிகளின் முகாம்களாகவே விளங்குகின்றன.
இந்த முகாம்களிலிருந்து சமஷ்டி சுயநிர்ணயம் தேசியம் பேசிய பலருடன் நெருக்கமான உறவுகளைக்கொண்டிருந்த ரவீந்திரன் 1983 இல் இலங்கையில் நிகழ்ந்த இனக்கலவரத்தையடுத்து இங்கிலாந்து சென்றார். அங்கு தமிழர் தகவல் நிலையம் மற்றும் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகம் முதலான அமைப்புகளுடன் இணைந்தவர்.
இதனால் தமிழ் அரசியல் இயக்கங்களுடன் மாத்திரமில்லாது தமிழ் அகதிகள்  நலன்களின் பொருட்டும் உருவாகிய தமிழ் அமைப்புகளிலும் இணைந்திருந்தவர்.
அவுஸ்திரேலியா மெல்பனுக்கு வந்தபின்னரும் விட்ட குறை தொட்ட குறையாக தொடர்ச்சியாக தனக்குத் தெரிந்த வழிமுறைகளில் தமிழர் சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபாடு காண்பிப்பவர்.
இவரது தங்கை எழுத்தாளர் அருண். விஜயராணியின் இலக்கிய நண்பர்களும் இவரது நண்பர்களாயினர். அத்துடன் இவரும் கலை இலக்கிய ஆர்வலராக விளங்கியமையினால், எனது நெஞ்சத்திற்கும் நெருக்கமானவர்.
எனது குடும்ப நண்பர் என்பதைவிட எனது மூத்த சகோதரர் என்ற வாஞ்சையுடன்தான் அவருடன் உறவாடிவருகின்றேன். அவருக்கு டிசம்பர் 27 ஆம் திகதி 75 வயது என்று அவரது துணைவியார் எங்கள் அண்ணி சொன்னதும் மிகுந்த ஆச்சரியமடைந்தேன்.

இந்தவயதிலும் ஓய்வுபெறாமல்  தனது  தொழில் சார்ந்த கடமைக்குச்சென்றுவருகிறார் இந்த அயராத உழைப்பாளி.
மெல்பனில் முதல் முதலில் தோன்றிய இலங்கைத் தமிழ்ச்சங்கம் (C.T.A) பின்னர் ஈழத்தமிழ்ச்சங்கமாகி (E.T.A) தற்போது விக்ரோரியா (V.T.A) தமிழ்ச்சங்கமாக மாறியிருக்கிறது. கடந்த நான்கு தசாப்த காலத்திற்குள் இவ்வாறு பெயரில் உருமாறியிருக்கும் இந்த அமைப்பின் தொடக்க காலத்தின் உறுப்பினர் சட்டத்தரணி ரவீந்திரன்  இலங்கைத்  தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவராக இருந்த காலப்பகுதியில்தான் நானும் மெல்பனுக்கு புலம் பெயர்ந்தேன். எனது அகதி அந்தஸ்து கோரிக்கை விண்ணப்பத்தை இவர் ஊடாகத்தான் குடிவரவு திணைக்களத்திற்கு சமர்ப்பித்திருந்தேன்.
அது தொடர்பான விசாரணைக்குச்சென்ற சமயத்தில்தான் இவர் அருண். விஜயராணியின் அண்ணன் என்பது தெரியவந்தது.
நான் வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் அருண். விஜயராணியின் பல படைப்புகள் அச்சுக்கு வந்தபோது   அவற்றை ஒப்பு நோக்கியிருக்கின்றேன். அக்காலப்பகுதியில் அவர் விஜயராணி செல்வத்துரை என்ற பெயரில் எழுதிவந்தார். அருணகிரியை திருமணம் செய்தபின்னர் அருண் விஜயராணியானார்.
சட்டத்தரணி ரவீந்திரன் அவர்களை சந்தித்த காலப்பகுதி இன்றும் பசுமையாக நினைவில் தங்கியிருக்கிறது. இவரது அலுவலகம் நான் முதலில் மெல்பனில் வசித்த Brunswick என்ற பிரதேசத்தில் சிட்னி வீதியில் அமைந்திருந்தது. எனது வசிப்பிடத்திற்கு நடந்து செல்லும் தூரம்தான். அதனால் இவரை அடிக்கடி சந்திப்பேன். இவரிடம் வரும் தமிழ் இளைஞர்கள் குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு வந்திருந்த Married Bachelors பெரும்பாலும் இவரை  இவருடைய அலுவலகத்தில் சந்தித்த பின்னர் என்னிடமும் வருவார்கள். அக்காலப்பகுதியில் நடந்து செல்லும் தூரத்தில் நான் பணியாற்றிய Australian Textiles Printing Company  இருந்தது. எனக்கு இரவு வேலை. அதனால் பகலில் வீட்டிலிருப்பேன்.
சட்டத்தரணி ரவீந்திரன் எங்கள் அனைவருக்கும் ரவி அண்ணன் ஆகியது இக்காலப்பகுதியில்தான். அன்று முதல் எமக்கு இவர் ரவி அண்ணன்தான். எங்கள் அண்ணருக்கு பவளவிழா என அறிந்ததும் வாழ்த்துக்கூறியவாறு இந்தப்பதிவை எழுதுகின்றேன்.
1972 ஆம் ஆண்டு கொல்வின் ஆர் டீ. சில்வா உருவாக்கிய புதிய அரசியலமைப்பு  பல சிக்கல்களை இலங்கை அரசியலில் ஏற்படுத்தியது. அந்த இடியப்பச்சிக்கலை இன்றுவரையில் அவிழ்க்கமுடியாமல் மேலும் மேலும் திருத்தங்களும் வந்து சிக்கல்கள் தொடருகின்றன.
1972 இல் அந்த அரசியலமைப்பை மீறியதனால் தமிழ்த்தலைவர்கள் சிலர் கைதாகி தடுத்துவைக்கப்பட்டனர். அமிர்தலிங்கம் ஆனந்த சங்கரி உட்பட சில தலைவர்கள் கைதாகியிருந்தனர்.  அவர்களை மீட்பதற்காக நடந்த வழக்கு விசாரணைக்கு அன்று சூட்டப்பட்ட பெயர் ட்ரயல் அட் பார்.
                அச்சந்தர்ப்பத்தில் பல  தமிழ்ச் சட்டத்தரணிகள் இந்த வழக்கில் தோன்றினர். அவர்களின் நீண்ட பெயர்ப்பட்டியலைப்பார்த்து நான் வியப்படைந்தேன். தமிழர் உரிமைக்கு குரல்கொடுப்பதற்கு இத்தனை தமிழ் சட்டத்தரணிகளா? சிவில் வழக்கறிஞர்கள் - கிரிமினல் வழக்கறிஞர்கள் அனைவரும் தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒரு புறத்தில் ஒதுக்கிவைத்துவிட்டு கொழும்பில் ஒன்றிணைந்து எதிர்கொண்டு வெற்றியீட்டிய வழக்குத்தான் அந்த பிரசித்தி பெற்ற ட்ரயல் அட்பார் நீதி விசாரணை.
வீரகேசரியில் இடம்பெற்ற நீண்ட சட்டத்தரணிகளின் பெயர்ப்பட்டியலில் செல்வத்துரை ரவீந்திரனின் பெயரும்  இடம்பெற்றிருந்தது. இவருடைய தொடர்பும் நட்புறவும் சகோதர வாஞ்சையும் எனக்கு அவுஸ்திரேலியாவில்தான் கிட்டியது. கடந்திருக்கும் ஆண்டுகளை ( 1987 - 2018) திரும்பிப்பார்த்தால்  அந்தப்பாதையில்  இவரும் நானும் இணைந்து மேற்கொண்ட பணிகளையும் சந்தித்த சவால்களையும் எளிதில் மறக்கமுடியாது. 
1987 ஆம் ஆண்டுகளில் இலங்கைத்தமிழ்ச்சங்கம் (C.T.A) இலங்கைத்தமிழர்களின் உரிமைகள் நலன்கள் தொடர்பாக தீவிரம் காண்பித்திருந்தாலும் அவுஸ்திரேலியாவுக்கு அதிலும் குறிப்பாக மெல்பனுக்கு அகதிகளாக வந்த இலங்கைத்தமிழர்களை அவ்வேளையில் சங்கத்தில் இணைத்துக்கொள்வதற்கு தயங்கியது.
விக்ரோரியா மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்டிருந்த இச்சங்கத்தில் இணைவதற்கு இந்தநாட்டின் குடியுரிமை அவசியம். அகதிவிண்ணப்பங்களை சமர்ப்பித்துவிட்டு எப்போது நிரந்தர வதிவிட அனுமதி கிடைக்கும்?  என்று நாம் காத்திருந்தபொழுது இலங்கைத்தமிழ்ச்சங்கம்  பழ .நெடுமாறனுக்காக கூட்டம் நடத்துவதிலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் எதிர்காலம் குறித்தும் அக்கறைகொண்டிருந்தது.
இங்கிருந்த தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தனது கட்டுப்பாட்டில் தமிழ்ச்சங்கத்தை வைத்திருந்தமை அன்றைய காலத்தின்கோலம்தான்!
தமிழ் அகதிகளுக்கென ஒரு அமைப்பு உருவாகவேண்டிய தேவை தோன்றியபோது  சட்டத்தரணி ரவீந்திரன்  எமது நண்பர்கள் நடேசன் இராஜரட்ணம் சிவநாதன் நல்லையா சூரியகுமாரன் தருமகுலராஜா திவ்வியநாதன் தணிகாசலம் ஆகியோர் எமக்கு தங்கள் தார்மீக ஆதரவை வழங்கினர்.
தமிழ் அகதிகள் அனைவரும் ஒன்றுகூடி இதுசம்பந்தமாக ரவீந்திரனுடன் உரையாடினோம். மெல்பன் வை. டபிள்யூ. சி. ஏ. மண்டபத்தில் இச்சந்திப்பு நடந்தது. நல்லையா சூரியகுமாரன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து இயங்கத்தொடங்கியபோது இலங்கைத்தமிழ்ச்சங்கத்திற்கு எதிராக ஒரு அமைப்பு உருவாக்கப்படுகிறது என்ற தவறான தகவலை அச்சங்கத்தின் தலைமைப்பீடத்தின் காதில் சிலர் ஓதத் தொடங்கிவிட்டனர்.
அதனால் கிளர்ச்சியுற்ற அன்றைய சங்கத்தின் தலைவர் ( அமரர்) சோம சுந்தரம் அடுத்த வாரமே அவசர அவசரமாக மற்றும் ஒரு கூட்டத்தை அதே  மெல்பன் வை. டபிள்யூ. சி. ஏ. மண்டபத்தில் நடத்தினார்.
அத்தகைய ஒரு அழுத்தம் அச்சங்கத்திற்குத் தோன்றியபோதுதான் அவர்கள் ஏன் அகதியாக வந்தவர்களை இணைத்துக்கொள்வதற்கு தயங்குகிறார்கள்? என்பதும் வெளிச்சத்திற்கு வந்தது.
எனினும் நாம் எமது Lobby Group  ஐ தமிழ் அகதிகள் கழகமாக்கி விக்ரோரியாவில் பதிவுசெய்தோம். அதன் அமைப்பு விதிகளை ரவீந்திரன் அவர்களே தயாரித்து தந்தார். இதே காலப்பகுதியில் எனது வாடகை குடியிருப்பு அறையில் 1988 ஆம் ஆண்டு நவராத்திரி காலத்தில் சரஸ்வதி பூசை நடத்தி  அந்த நிகழ்வில் இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற அமைப்பிற்கான பிரகடனத்தை வெளியிட்டேன். என்வசம் வந்து சேர்ந்திருந்த இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களின் கோரிக்கைகள் அடங்கிய கோவைகள் சிலவற்றை அன்றைய நிகழ்வில் அறிமுகப்படுத்தி உதவும் அன்பர்களையும் தெரிவுசெய்தேன்.
இந்த நிகழ்வை மங்களவிளக்கேற்றி தொடக்கிவைத்தவர்தான் எங்கள் ரவி அண்ணன். அவரே இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கும் அமைப்புவிதிகளை எழுதித்தந்ததுடன் விக்ரோரியா மாநிலத்தில் பதிவுசெய்தும் தந்தார். இந்த அமைப்பு 31 ஆண்டுகளை பூர்த்தி செய்தவாறு ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கும் உதவியிருப்பதுடன் தங்கு தடையின்றி தொடர்ந்தும் இயங்கிவருகின்றது.
1987 முதல் இலங்கையில் பல  அரசியல் மாற்றங்கள் ஆட்சிமாற்றங்கள் அதிபர் பதவிகளில் மாற்றங்கள் நேர்ந்துவிட்டன.
ஆனால் அன்று ரவி அண்ணன் விளக்கேற்றி  தொடக்கிவைத்த கல்வி நிதியம் இன்றும் சீராக  இயங்கிவருகிறது! இந்த அமைப்பின் முதலாவது தலைவராகவும்    ( 1988 - 1989) அவரே தெரிவானார்.
இக்காலப்பகுதியில் இலங்கையில் ரவி அண்ணரின் நண்பர்கள் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகத்தின் ஸ்தாபகர் சட்டத்தரணி கே. கந்தசாமி மற்றும் அமிர்தலிங்கம் - வெ. யோகேஸ்வரன் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவங்களை கண்டிப்பதற்கும் இலங்கைத் தமிழ்ச்சங்கத்தின் அன்றைய நிருவாகம் தயக்கம் காண்பித்தமைக்கு பெரிய கொம்பனியான தமிழர் ஒருங்கிணைப்புக்குழுதான் காரணம்.
எனினும் ரவி அண்ணன் மருத்துவர் ( அமரர்) பொன். சத்தியநாதன் இராஜரட்ணம் சிவநாதன் ஆகியோரின் தொடர் அழுத்தங்களினால் தலைவர் சோமசுந்தரம் கண்டனக்கூட்டங்களை அல்ல- அஞ்சலிக்கூட்டங்களை நடத்துவதற்கு முன்வந்தார்.
கந்தசாமிக்காக மெல்பனிலும் சிட்னியிலும் நடத்தப்பட்ட கூட்டங்களில் நானும் ரவி அண்ணனுடன் கலந்துகொண்டு உரையாற்றினேன். மெல்பன் கூட்டத்திற்கு சிட்னியிலிருந்து வருகை தந்திருந்த தமிழர் மனித உரிமைச்செயற்பாட்டாளர் கணக்காளர் திரு. துரைசிங்கம் அவர்களையும் ரவி அண்ணன்தான் எனக்கு அறிமுகப்படுத்தியிருந்தார். துரைசிங்கம் சிட்னியிலும் கந்தசாமிக்காக ஒரு நிகழ்ச்சியை நடத்தியபோது அதற்கு மருத்துவர் (அமரர்) இராசநாயகம் தலைமைதாங்கினார்.
மருத்துவர் பிறையன் செனவிரத்ன கந்தசாமியின் சகோதரர் பரமேஸ்வரன் ஆகியோருடன் ரவி அண்ணனும் நானும் உரையாற்றினோம். ரவி அண்ணனின் தொடர்பினால் சிட்னி அன்பர் திரு. துரைசிங்கம் அவர்களின் நட்புறவும் கிடைத்தது. அவர் என்னை 1989 டிசம்பர்  கோடை கால விடுமுறையில் சிட்னிக்கு அழைத்து பல அன்பர்களிடமும் அழைத்துச்சென்று எமது கல்வி நிதியத்திற்கு உதவும் அன்பர்களையும் இணைத்துவிட்டதுடன் அவர் சார்ந்திருந்த மனித உரிமைகள் அமைப்பின் சார்பில் 25 ஆயிரம் வெள்ளிகளையும் நிதியத்திற்கு வழங்கினார். அதனை இன்றளவும் நிரந்தர சேமிப்புக்கணக்கில் வைப்பிலிட்டு  அதிலிருந்து கிடைக்கும் வட்டிப்பணத்திலிருந்தும்  பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவிவருகின்றோம்.
அன்பர் துரைசிங்கத்தின் ஏற்பாட்டில் ---  சிட்னியில் லிங்காலயா ஆடற் கலையகத்தை நடத்தியவரும் முன்னாள் நாடாளுமன்ற வவுனியா உறுப்பினருமான அடங்காத் தமிழர் முன்னணியின் தலைவர் சி. சுந்தரலிங்கத்தின் பேத்தி ஆனந்தவல்லி   எமது நிதியத்திற்காக சகுந்தலை நாட்டிய நாடகத்தை அரங்கேற்றி கணிசமான நிதியுதவியை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கும் ரவி அண்ணன் அவர்கள் அண்ணி ஜெஸி ரவீந்திரனுடன் வந்து உரையாற்றினார்.
இந்தத்தகவல்களை இங்கு பதிவுசெய்வதன் நோக்கம்  " நண்பர்கள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள்"  என்பதை அழுத்தமாக பதிவுசெய்வதற்குத்தான்.
1990 களில் ரவி அண்ணன் தலைமையில் மெல்பனில் அவுஸ்திரேலியத் தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கினோம். கதம்ப விழா -கலைமகள் விழா - பாரதி விழா - முத்தமிழ் விழா - நாடகம் -நடனப்பயிற்சி பட்டறைகளும் நடத்தினோம். மாணவர்களின் தமிழ்ப்பேச்சாற்றலை வளர்க்கவும் ஊக்குவிக்கவும் நாவன்மைப்போட்டிகளையும் நடத்தினோம்.
ஒன்றியத்தின் நிகழ்ச்சிகளில் கலைஞர்கள் மாவை நித்தியானந்தன்- நடனக்கலைஞர் சந்திரபானு - மூத்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை முதலானோரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.
நவராத்திரி காலத்தில் குழந்தைகளுக்கு ஏடு துவக்கி வித்தியாரம்பம் செய்வித்தோம். ரவி அண்ணனின் தங்கை அருண்.விஜயராணி ஆசிரியராக இருந்த அவுஸ்திரேலிய முரசு மாத இதழும் வெளியிட்டோம்.
கலை இலக்கியம் சார்ந்த விடயங்களில் ஈடுபட்டிருந்த இந்த அமைப்பின் கவனம்  இலங்கையில் நீடித்த போரை நிறுத்துவதற்காக ஆயுதம் ஏந்திய இரண்டு தரப்பினருக்கும் நிர்ப்பந்தங்களை அழுத்தவேண்டிய தேவையும் தோன்றியது.
இரண்டு தரப்பினரும் அடிக்கடி போர் நிறுத்தம் என்ற கண்ணாம்மூச்சி விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். புலிகள் இயக்கம் வடக்கிலிருந்து இஸ்லாமிய மக்களை 24 மணிநேரத்தில் வெளியேற்றி இனமுறுகலையும் ஏற்படுத்தியிருந்தது.
இக்காலப்பகுதியில் ரவி அண்ணன் தலைமையில் நாம் சில தீர்மானங்களை நிறைவேற்றி இலங்கை அரசுக்கு அனுப்பினோம். ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தன.  இதனைப்பார்த்த பெரிய கொம்பனியினர் தாமே ஈழத்தமிழர்களை குத்தகை எடுத்தவர்கள் போன்று செயல்பட்டனர்.
அவர்களுக்கு எமது தமிழர் ஒன்றியம் வேம்பாக கசந்திருக்கவேண்டும். அனைத்து தமிழ் அமைப்புகளையும்  மாத்திரமின்றி இங்கிருந்த ஆலயங்களின் நிருவாகங்களையும் தங்கள் ஆளுகைக்குள் இழுப்பதற்கு பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டனர். தமிழர் ஒன்றியத்தை கலைத்துவிடுமாறு அன்று தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் தில்லை ஜெயக்குமார் ரவி அண்ணனை அடிக்கடி சந்தித்து அழுத்தம் பிரயோகித்தார்.
இவ்வேளையில் அவர்கள் நடத்திய ஒரு கவன ஈர்ப்பு நடவடிக்கை பற்றிய செய்தியை வெளியிட்ட எஸ். பி. எஸ். தொலைக்காட்சி  அதற்கு மாற்றான ஒரு அநாமதேய அமைப்பின் செய்தி அறிக்கையையும் வெளியிட்டது.
அந்த அறிக்கையை எமது ஒன்றியம்தான் வெளியிட்டது என்ற சந்தேகத்தில் ஜெயக்குமார் என்னையும் அச்சுறுத்தும் தொனியில் பேசினார். இதுவிடயமாக ரவி அண்ணன் தாமதமின்றி எஸ். பி. எஸ். தொலைக்காட்சி நிர்வாகத்துடன் உத்தியோகபூர்வமாகத் தொடர்புகொண்டு குறிப்பிட்ட செய்தி ஒளிபரப்பின் இறுவட்டுப்பிரதியை பெற்று பார்த்துவிட்டு ஜெயக்குமாருக்கும் அதிலிருந்த தவறை சுட்டிக்காண்பித்து அவர்கள் தரப்புக்கு விளக்கமளித்தார். அதன் பின்னர் ஜெயக்குமார் எனது வீட்டிற்கு நேரில் வந்து மன்னிப்பும் கோரினார்.
எனது பார்வையில் தில்லை ஜெயக்குமார்  அரசியல் ரீதியாக மாறுபட்ட கொள்கை கொண்டிருந்தபோதிலும் எனது நல்ல நண்பர்.  தான் நம்பிய அரசியலுக்கு விசுவாசமாக இருந்தவர். நாகரீகமாகப்பழகுபவர். அவருடைய அருங்குணங்கள் பற்றி அவர் மறைந்த காலத்தில் மெல்பனில் நண்பர் நடேசன் நடத்திய உதயம் பத்திரிகையிலும் எழுதியிருக்கின்றேன்.
ரவி அண்ணனுக்கு அக்காலப்பகுதியில் விக்ரோரியா மாநிலத்தின் இந்திய துணைத் தூதுவராலய Consulate    மருத்துவர் ராவ் அவர்களுடனும் நட்புறவு இருந்தது. ஒரு தடவை எமது ஒன்றியத்தின் கலைமகள் விழாவுக்கும் அவர் பிரதம விருந்தினராக  வந்துள்ளார்.
அவர் இந்திய வெளிவிவகார அமைச்சராகவிருந்த நரசிம்மராவ்  கன்பராவுக்கு வந்தசமயம் ஒரு சந்திப்புக்கு நாள் குறித்துக்கொடுத்திருந்தார்.
நரசிம்மராவ் - அச்சந்தர்ப்பத்தில் தென்னாபிரிக்கா  தொடர்பான விவகாரங்களை ஆராயும் கொமன் வெல்த் நாடுகளின் மாநாட்டிற்காக கன்பராவுக்கு வருகை தந்திருந்தார். அக்காலப்பகுதியில் இலங்கையில் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்திருந்தது.
பிரேமதாசா புலிகளை My Boys  என வரவேற்று -  ஹோட்டல் கலதாரி மெரிடீனில் தேன்நிலவு கொண்டாடிய காலத்தில்   இலங்கை - இந்திய உறவு சர்ச்சைக்குள்ளாகியிருந்தது.
இந்தப்பின்னணி நெருக்கடிக்கு மத்தியில் ரவி அண்ணன் - சிட்னி அன்பர் திரு. துரை சிங்கம் - மெல்பன் நண்பர் திரு. கொர்ணேலியஸ் ஆகியோரையும் அழைத்துக்கொண்டு நரசிம்மராவைச்சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சந்திப்பு கன்பரா ஹயாத் ஹோட்டலில் நடைபெற்றது.
இலங்கை அரசியல் பேச்சுவார்த்தைகள் எங்கு இடம்பெற்றாலும்  அவை ஹோட்டல்களில்தான் நடந்திருக்கின்றன என்பதையும்  இங்கு நினைவூட்டுகின்றேன்.
அது தொடர்பான விரிவான செய்தி அறிக்கையும் - எமது தமிழர் ஒன்றியத்தை இல்லாமல் செய்வதற்கு முயன்றும்  இயலாமல்போனதையடுத்து  அதில் அங்கத்தவராக இணைந்தாவது காலப்போக்கில் தனது ஆதரவாளர்களுடன் அதனை தனது ஆளுகைக்குள் கொண்டுவருவதற்காக தில்லை ஜெயக்குமார் அனுப்பிய உறுப்புரிமை விண்ணப்பக்கடிதம் மற்றும் பல முக்கிய ஆவணங்களும் என்வசம் பத்திரமாக இருக்கின்றன.
அதனால் ரவி அண்ணனின் வாழ்வையும் பணிகளையும் பற்றி சில ஆதாரங்களுடன் இன்று எழுத முடிகிறது.  ரவி அண்ணன் பேச்சுவார்த்தைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். அதனால் அவர் சந்தித்த சவால்களும் அநேகம். குறிப்பாக விக்ரோரியா இந்து சங்கம் உதயம் பத்திரிகை என்பனவற்றுக்கு நெருக்கடிகள் தோன்றிய சந்தர்ப்பங்களில் அவர் நடுநிலையாக நின்று நிதானமாக பேசுவார். அவரது நிதானம் - பொறுமை என்னை மிகவும் கவர்ந்தது.
எமது தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் எழுத்தாளர் விழாக்களில் இடம்பெற்ற கருத்தரங்குகள் சிலவற்றுக்கும் தலைமையேற்றவர். இவருக்கும் இலக்கிய கட்டுரைகள் சிறுகதைகள் எழுத முடியும். ஆனால்- அவர் அவற்றில் ஆர்வம் காண்பிப்பதில்லை.
நாம் தொகுத்து வெளியிட்ட உயிர்ப்பு கதைத்தொகுதியிலும் ரவிஅண்ணனின் ஒரு சிறுகதை இடம்பெற்றுள்ளது.  சிட்னியில் 2014 ஆம் ஆண்டு  மறைந்த எழுத்தாளர்கள் காவலூர் ராசதுரை  எஸ்.பொன்னுத்துரை ஆகியோருக்காக மெல்பனில் 2014 ஆம் ஆண்டு நடந்த இரங்கல் கூட்டத்திற்கும் ரவி அண்ணன்தான் தலைமை.
நீண்டகாலமாக எம்முடன் இணைந்து பயணிக்கும் ரவி அண்ணன் குறித்து சொல்வதற்கும் எழுதுவதற்கும் நிறையவுண்டு.  அவர் நல்லாரோக்கியத்துடன் பல்லாண்டு வாழவேண்டும் என்று அவரது பவளவிழாக்காலத்தில் வாழ்த்துகின்றேன்.
---0---


-->

No comments: