இலங்கைச் செய்திகள்


சர்வாதிகாரிகளை நிராகரிக்கக்கோரி வவுனியாவில் ஊர்வலம்

வெள்ளத்தால் வடக்கில் 16 ஆயிரத்து 872 குடும்பங்களைச் சேர்ந்த 54 ஆயிரத்து 819 பேர் பாதிப்பு

வவுனியா வடக்கில் 132 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேர் பாதிப்பு 

வெள்ளத்தால் கிளிநொச்சியில் 12 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் பாதிப்பு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்தும் நிவாரணம் வழங்கி வைப்பு

மிளகாய் தூள் விவகாரம் : பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது விசாரணைக் குழு

சீனா அறிமுகப்படுத்தியுள்ள புதிய விமான சேவை 

இலங்கையரான மொஹமட் நிசாம்தீன் மீதான சூழ்ச்சி : அவுஸ்திரேலிய வீரரின் சகோதரர் மீண்டும் கைது

பகிடிவதையால் தற்கொலைக்கு முயற்சித்த யாழ். பல்கலைக்கழக மாணவன்

பிரதேச சபை உறுப்பினர்  உள்ளிட்ட  மூவர் துப்பாக்கியுடன் கைது

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோர் தொகை ஒரு இலட்சத்தையும் தாண்டியது

ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை விநியோகம் ஜனவரியில் ஆரம்பம்


சர்வாதிகாரிகளை நிராகரிக்கக்கோரி வவுனியாவில் ஊர்வலம்


23/12/2018 ஜனநாயத்திற்கான இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று வவுனியாவில் சர்வாதிகாரிகளை நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு ஊர்வலமொன்று இடம்பெற்றது.
இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வருகை தந்திருந்த சுமார் 250 இளைஞர்கள் ஒன்றுதிரண்டு வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக இருந்து ஊர்வலமாக இலுப்பையடியை சென்றடைந்து அங்கிருந்து வைத்தியசாலை சுற்றுவட்டத்தின் ஊடாக குள வீதியையடைந்து மீண்டும் பாடசாலை முன்றலை வந்தடைந்திருந்தனர்.
இதன்போது இலங்கையில் சர்வாதிகாரத்தினை நிராகரிப்போம் என கொடிகளை தாங்கியவாறு சென்று இளைஞர்கள் ஜனநாயகம் வேண்டும் சர்வாதிகாரம் வேண்டாம் என்ற கோசத்தினையும் எழுப்பியிருந்தனர்.  நன்றி வீரகேசரி 









வெள்ளத்தால் வடக்கில் 16 ஆயிரத்து 872 குடும்பங்களைச் சேர்ந்த 54 ஆயிரத்து 819 பேர் பாதிப்பு

23/12/2018 யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 16 ஆயிரத்து 872 குடும்பங்களைச் சேர்ந்த 54 ஆயிரத்து 819 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இறுதியாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த வெள்ள அனர்த்தத்தில் 238 வீடுகள் சேதமடைந்துள்ளன. இவற்றில் 10 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன் 218 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 602 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 299 பேர் 38 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
இந்நிலையில், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் நேற்றைய தினம் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக 24 மணித்தியாலமும் செயற்படும் தொலைபேசியின் ஊடாக அனர்த்த நிலைமை தொடர்பில் அறிவிக்க முடியுமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். இதற்கான தொலைபேசி இலக்கம் 117 என அவர் மேலும் தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி 











வவுனியா வடக்கில் 132 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேர் பாதிப்பு 

26/12/2018 வவுனியாவில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 132 குடும்பங்களைச்சேர்ந்த 455 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா வடக்கு பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் 36 குடும்பங்களைச் சேர்ந்த 139 பேர் , கனகராயன்குளம் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் , நைனாமடு கிராம அலுவலர் பிரிவில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர் , மன்னகுளம் கிராம அலுவலர் பிரிவில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 89 பேர், மாறா இலுப்பை கிராம அலுவலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், வெடிவைத்தகல் கிராம அலுவலர் பிரிவில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 70 பேர் , கற்குளம் கிராம அலுவலர் பிரிவில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர் , கனகராயன் குளம் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 52 பேருமாக மொத்தம் 132 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு  ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
மேலும் 17 குடும்பங்களை சேர்ந்த 46 அங்கத்தவர்கள் வவுனியா வடக்கு ஊஞ்சல்கட்டி அ.த.க பாடசாலையில் தங்க வைக்கபட்டுள்ளனர்.
உதவிக்கரங்களை எங்கள் எல்லைக்கிராமங்கள் பக்கமும் மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது செய்கை செய்யப்பட்ட நெற்செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.அத்துடன் கால்நடைகள் பல வெள்ள நீரில் சிக்கி காணாமல் போயுள்ளதுடன், வீடுகள் வியாபார நிலையங்களுக்குள் வெள்ளம் சென்றமையால் சொத்திழப்புக்களும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 











வெள்ளத்தால் கிளிநொச்சியில் 12 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் பாதிப்பு

26/12/2018 கிளிநொச்சி மாவட்டத்தில் 12 ஆயிரத்து 597 குடும்பங்களைச் சேர்ந்த 41 ஆயிரத்து 317 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளம் அனர்த்தம் காரணமாக 41 ஆயிரத்து 317 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலகம் நேற்றைய தினம்( 25-12-2018 )வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுகளில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.  பாதிக்கப்பட்டவர்களில்  5885 போ்  19 நலன்புரி நிலையங்களில்  தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் கரைச்சி பிரதேசத்தில் 3142 குடும்பங்களைச் சேர்ந்த 103,39 பேரும், கண்டாவளையில் 7,635 குடும்பங்களைச் சேர்ந்த 24,820 பேரும் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 1819 குடும்பங்களைச் சேர்ந்த 6156 பேரும் பூநகரியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு 23 வீடுகள் முழுமையாகவும், 314 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது எனவும் குறித்த புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 










 வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்தும் நிவாரணம் வழங்கி வைப்பு

26/12/2018 வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இறுதியுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு ஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என்பன நேற்று வழங்கிவைக்கப்பட்டது.
அரியாலை சுதேசிய நூற்றாண்டு விழா சமூகத்தினரால் கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்சியான நிவாரணபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் முதற்கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட புளியம்பொக்கணை,பெரியகுளம்,தரம்புரம்,வட்டக்கச்சி ஆகிய பிரதேச மக்களுக்கு கடந்த 23.12.18ஆம் திகதி உலர் உணவு பொருட்கள் மற்றும் ஆடைகள் வழங்கி வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆனந்தபுரம்,ஒட்டிசுட்டான்,மாங்குளம்,பனிக்கன்குளம்,திருமுறிகண்டி ஆகிய பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என்பன அரியாலை சமூகத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது.
இரண்டு கட்டங்களாக இடம்பெற்ற நிவாரண பணிகளில் பத்து லட்சம் ரூபா மதிப்பிலான பொருட்களினை அரியாலை சமூகத்தினர் வழங்கியுள்ளனர்.
இவ் நிவாரண பணிகளில் அரியாலையை சேர்ந்த பெருமளவிலான இளைஞர்கள் கலந்து கொண்டு உதவி பொருட்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 









மிளகாய் தூள் விவகாரம் : பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது விசாரணைக் குழு


27/12/2018 பாராளுமன்றில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் குறித்து விசாரிக்கும் விசாரணைக் குழு பிரதி சபாநாயகர் தலைமையில் இன்று காலை கூடியது.
பாராளுமன்றில் கடந்த நவம்பர் மாதம் 14, 15, மற்றும் 16ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பில் விசாரணை செய்ய சபாநாயகர் கருஜயசூரிய, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை நியமித்திருந்தார்.
இக் குழு பாராளுமன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சி.சி.ரி.வி காணொளிகளை பரீசிலித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 










சீனா அறிமுகப்படுத்தியுள்ள புதிய விமான சேவை 


29/12/2018 சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க புதிய விமான சேவை ஒன்றை  சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. 
சீனாவில் சோன்ங்கிங் புதிய விமாசேவையை நேற்று இரவு அறிமுகப்படுத்தியது. 
சீனாவில் மிகப்பெரிய வர்த்தக மற்றும் தொழில்துறை நகரமாக சோன்ங்கிங் உள்ளது.
சோன்ங்கிங் விமான நிலையத்திலிருந்து நேற்று இரவு 9.10 மணியளவில்  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்து தனது புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 
A- 320 neo வகையான  விமானம் ஒன்று 152 பயணிகளுடனும் 11 பணியாளர்களுடனும்  இலங்கையை வந்தடைந்தது. 
குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்து அடைந்ததும் வான வேடிக்கையுடன் வரவேற்றுள்ளனர். 
விமான நிலையத்தில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வுக்கு விமான நிலையத்தின் தலைவர் உட்பட உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 
குறித்த விமான சேவையானது நேற்றிலிருந்து எதிர்வரும் திங்கட்கிழமை, புதன்  மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய வாரநாட்களில் இரவு 9.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை குறித்த விமானம் வந்தடைந்து அன்றைய தினமே இரவு 10.10 மணியளவில் சீனாவின் சோன்ங்கிங் நோக்கி பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 












இலங்கையரான மொஹமட் நிசாம்தீன் மீதான சூழ்ச்சி : அவுஸ்திரேலிய வீரரின் சகோதரர் மீண்டும் கைது

29/12/2018 அவுஸ்திரேலியாவில் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த இலங்கையரான மொஹமட் நிஷாம்தீனை பயங்கரவாதியென தெரிவித்து அவரைக் கைதுசெய்ய சதித்திட்டம் தீட்டி சூழ்ச்சி மேற்கொண்ட அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரர் அர்சலான் கவாஜா மீண்டும் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் சாட்சியாளரொருவருக்கு அழுத்தம் கொடுக்க முற்பட்டு பிணை நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டிலேயே அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரர் அர்சலான் கவாஜா கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அர்சலானின் சூழ்ச்சியால் இலங்கையரான மொஹமட் நிசாம்தீன் சுமார் ஒரு மாதக்காலமாக அவுஸ்திரேலிய உயர் பாதுகாப்பு சிறையொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுதலையானமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 










பகிடிவதையால் தற்கொலைக்கு முயற்சித்த யாழ். பல்கலைக்கழக மாணவன்


29/12/2018 யாழ்.பல்கலைகழக மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது. 
யாழ்.பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கற்கும் பளை பகுதியை சேர்ந்த முதலாம் வருட மாணவனே தற்கொலைக்கு முயற்சித்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
குறித்த மாணவன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வீட்டிலிருந்தவர்களிடம் பல்கலைகழகத்தில் தான் மோசமான பகிடிவதைக்கு உள்ளாகி வருவதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் தனது அறைக்குள் சென்று கழுத்தை அறுத்துள்ளார்.அதனை அவதானித்த வீட்டிலிருந்தோர். மாணவனை உடனடியாக மீட்டு பளை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
பளை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சை கிளிநொஞ்சி வைத்தியசாலையில் மாணவன் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 









பிரதேச சபை உறுப்பினர்  உள்ளிட்ட  மூவர் துப்பாக்கியுடன் கைது


29/12/2018 துப்பாக்கியை தன் வசம் வைத்திருந்த பிரதேச சபை உறுப்பினர் உட்பட மூவரை பொலிஸா் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கந்தான பிரேத சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவரே இவ்வாறு துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கடான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 










அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோர் தொகை ஒரு இலட்சத்தையும் தாண்டியது


30/12/2018 வட மாகாணத்தில் மழை மற்றும் வெள்ள அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை விட அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
39 ஆயிரத்து 64 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 1,411 குடும்பங்களைச் சேர்ந்த 4,515 பேர் 14 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 
வட மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டமே அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. இம் மாவட்டத்தில் 25,581 குடும்பங்களைச் சேர்ந்த 78,528 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
இதே வேளை முல்லைத்தீவில் 10 ஆயிரத்து 104 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 923 பேரும், யாழில் 4, 257 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 642 பேரும்,  மன்னார் மாவட்டத்தில் 39 குடும்பங்களைச் சேர்நத 141 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
இவ் அனர்த்தின் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலேயே அதிகளவான வீடுகளும் சேதமடைந்துள்ளன. இம் மாவட்டத்தில் 388 வீடுகள் முழுமையாகவும், 2225 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அதே போன்று முல்லைத்தீவில் 86 வீடுகள் முழுமையாகவும், 2297 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.    நன்றி வீரகேசரி 












ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை விநியோகம் ஜனவரியில் ஆரம்பம்

30/12/2018 ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 2019 ஆண்டு முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த அடையாள அட்டையை பரீட்சார்த்தமாக முன்னெடுக்கும் நடவடிக்ககை மேல், சப்ரகமுவ மாகாணங்களில் வழங்கும் பணி கடந்த 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. 
குறித்த பரீட்சார்த்த நடவடிக்கை வெற்றியடைந்திருப்பதால் இந்த வேலைத்திட்டத்தை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 





No comments: