இலங்கைச் செய்திகள்


தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக இராணுவத்தினர் வைத்திருந்தனர் : புகைப்பட ஆதாரங்களுடன் ஐ.நா.விடம் சிக்கியது

மத்திய வங்கி ஆளுநர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

வித்தியா படுகொலை வழக்கில் இன்று திடீர் திருப்பம்

காணிகளை விடுவிக்க கோரி யாழில் போராட்டம்.!








தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக இராணுவத்தினர் வைத்திருந்தனர் : புகைப்பட ஆதாரங்களுடன் ஐ.நா.விடம் சிக்கியது


21/02/2017 பெண்களை கைது செய்து, தடுத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படும் ஆறு இராணுவ அதிகாரிகளின் விபரங்களை சர்வதேச மனித உரிமை அமைப்பொன்று ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கையளித்துள்ளது.
விபரங்களுடன் கூடிய ஆவணங்களுடன் இரகசியமான இணைப்பில் 6 புகைப்படங்களை உள்ளடக்கப்பட்டுள்ளதாக தென் ஆபிரிக்காவின் ஜொகனனஸ்பேர்க் நகரை தலைமையகமாக கொண்டு இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு அறிவித்துள்ளது.
ஜெனிவாவில் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை பிரதிநிதிகளை சந்திக்கும் பெண்களுக்கு எதிரான வேறுபாடுகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவிடம் இந்த தகவல்களை வழங்கியுள்ள மேற்படி அமைப்பு, குற்றவாளிகளாக இராணுவ அதிகாரிகளை பணியில் இருந்து நீக்குமாறு இலங்கை அரசாங்கததை கோருமாறு கேட்டுள்ளது.
இந்த விபரங்களை இலங்கை அரசாங்கத்திடம் கையளித்து நம்பிக்கையான விசாரணையை நடத்தும் வரை அவர்கள் அனைவரையும் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யுமாறு பெண்களுக்கு எதிரான வேறுபாடுகள் தொடர்பான ஐ.நா குழு கோரும் என தாம் எதிர்பார்ப்பதாக இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பின் பணிப்பாளர் யஷ்மின் சூகா தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
அரசாங்கம் குற்றவாளிகளின் பெயர், விலாசங்களை எங்களிடம் தொடர்ந்தும் கோரி வந்தது. நாங்கள் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களின் விபரங்களை ஐ.நா குழு ஊடாக வழங்கியுள்ளோம். நீதியை நிலைநாட்டும் கடும் தேவை அரசாங்கத்திற்கு இருக்கின்றதா என்பதை பார்ப்போம்.
அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நாங்கள் எமது அறிக்கையில் கூறியுள்ளோம். ஐ.நா குழு அதன் முன்னேற்றங்களை கண்காணிக்க முடியும் என சூகா கூறியுள்ளார்.
குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இராணுவ அதிகாரிகளில் மேஜர் ஒருவரும் லெப்டினட் ஒருவரும் அடங்குகிறார்.
பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் இலங்கையின் மூன்று சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அவர்களிடம் சிக்கிய பெண்களின் சத்தியக் கடிதங்களின் பெயர்கள் ஐ.நா குழுவிடம் வழங்கப்பட்டுள்ள விபரமான அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.
இந்த அதிகாரிகளில் ஒருவர் ஐ.நா அமைதிக்காக்கும் படையில் சேவையாற்றியுள்ளார். நான்காவது அதிகாரி சித்திரவதை கொடுப்பதில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார். 5ஆவது அதிகாரி இந்த குற்றங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இராணுவத்தினர் பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்த அவர்களை நீண்டகாலம் தடுத்து வைத்தாக இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு முகாம்கள் தொடர்பான ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது.
முகாம்கள் இயங்கியதாக கூறப்படும் நான்கு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது.
வவுனியாவுக்கு அருகில் ஒரு முகாம், புத்தளத்திற்கு அருகில் ஒரு முகாம். கொழும்பில் ஒரு முகாம் , கொழும்புக்கு வெளியில் வடக்கு,கிழக்கு அல்லாத ஒரு பிரதேசத்தில் ஒரு முகாம் என இந்த முகாம்கள் இயங்கி வந்துள்ளன எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
விசாரணைகளை நடத்தாமை, பொறுப்புக் கூறவேண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம், ஐ.நா குழுவின் முன் கடுமையாக சாடியுள்ளது.
சித்திரவதை மற்றும் பயங்கரமான பாலியல் தாக்குதல்களை வெளியிட்டுள்ள 55 பெண்கள் தொடர்பான முழுமையான விபரங்களை அமைப்பு தனது புதிய அறிக்கையில் உள்ளடக்கியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 48 பெண்களும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனின் ஆட்சியின் கீழ் 7 பெண்களும் பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது.
எது எப்படி இருந்த போதிலும் இராணுவம் திட்டமிட்டு பாலியல் குற்றங்களில் ஈடுபட்டது என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு சிலர் அப்படியான குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 







மத்திய வங்கி ஆளுநர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்
21/02/2017 மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி பிணைமுறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் ஆஜராகியுள்ளார்.
பிணைமுறி விநியோகம் தொடர்பிலான வாக்குமூலமொன்றினை வழங்குவதற்காகவே இவர் இங்கு ஆஜராகியுள்ளார்.
குறித்த வாக்குமூலம் கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் முன்னெடுக்கப்படவுள்ளமைகுறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 






பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு
20/02/2017 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் எதிர்வரும் மாதம் 6 ஆம்  திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா. கணேசராஜா முன்னிலையில் அவரை இன்று (20) ஆஜர்படுத்தியபோதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவைப் பிறப்பித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 












வித்தியா படுகொலை வழக்கில் இன்று திடீர் திருப்பம்

22/02/2017 யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் இன்று திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த கொலையில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களில் ஒருவர் அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ளார்.
இதன்படி குறித்த 12 சந்தேகநபர்களில் 11ஆம் இலக்க சந்தேகநபரே அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ளதாக ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.ரியால் இன்று அறிவித்துள்ளார்.
அரச தரப்பு சாட்சியாளராக மாறும் பட்சத்தில் பொது மன்னிப்பு வழங்கப்படும் என சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
இதற்கமையவே குறித்த 11ஆவது இலக்க சந்தேகநபர் அரச தரப்பு சாட்சியாளராவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இழுபட்டுக்கொண்டிருக்கும் வித்தியா கொலை வழக்கிற்கு மேலும் ஒரு அனுகூலமான சாட்சி கிடைத்துள்ளது. இதனால் இந்த வழக்கில் சாதகமான ஒரு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   நன்றி வீரகேசரி 










காணிகளை விடுவிக்க கோரி யாழில் போராட்டம்.!
22/02/2017 ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ள நிலங்களை மீளத்தரக்கோரி பல்வேறு அமைப்புகள் இணைந்து யாழில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். பஸ் நிலையம் முன் ஆரம்பமான மேற்படி ஆர்ப்பாட்டம், பின்னர் மகஜர் ஒன்றை கையளிக்கும் பொருட்டு யாழ். மாவட்ட செயலகத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமென கோரி விமானப்படை முகாமின் முன்பாக சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என  கடந்த மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 23வது நாளாக இன்றுவரை தொடர்கின்றது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் பல்வேறு அமைப்புகள் இணைந்து இன்றைய தினம் அமைதியான முறையில் யாழில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.   நன்றி வீரகேசரி