"அது எங்கட காலம்" பிறந்த கதை - கானா பிரபா
ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக "மடத்துவாசல் பிள்ளையாரடி" என்ற வலைப்பதிவினூடாக கடந்த 11 வருடங்களாக எழுதிய பதிவுகளில் தேர்ந்தெடுத்த 21 கட்டுரைகளை வைத்து நூலாக்க வேண்டும், அந்தப் பதிவுகளில் இடம் பிடித்த இறந்து போனவர்களும் இன்னும் வாழ்பவர்களுமான எங்களூர் மனிதர்களோடு வாழ்ந்தவர்கள் முன்னால் இந்த நூலை வெளியிட வேண்டும் என்ற அவா என்னுள் இருந்தது.


இம்முறை தாயகப் பயணத்தில் அதை மெய்ப்படுத்த எண்ணி, ஜீவநதி ஆசிரியர் அன்புச் சகோதரன் பரணீதரன் கலாமணியிடம் அணுகிய போது "நான் வடிவாச் செய்து தாறன் அண்ணா" என்று பாரமெடுத்தார். அதன் பின்பு தான் தெரிந்தது அவர் ஜீவநதியின் 100 வது இதழை 600 பக்கங்களோடு கொண்டு வரும் முயற்சியில் இரவு பகலாக உழைப்பது. எனக்கு மனசுக்குக் கஷ்டமாகப் போய் மீண்டும் அவரிடம் "உங்களுக்கு நான் சிரமம் கொடுக்கிறேனோ" என்ற போது "அதொண்டுமில்லை அண்ணா" என்று விட்டு அசுர வேகத்தில் புத்தக வடிவமைப்பில் ஈடுபட்டார். அதிக பட்சம் நாலு நாள் உழைப்பைத் தான் வழங்கியிருப்பார். உண்மையில் நான் மானசீகமாக நன்றி சொல்லும் முதல் ஆள் அவர் தான்.
தைப்பூச நாளன்று இணுவில் கந்தசுவாமி கோயிலடியில் புத்தகக் கட்டைத் தந்தார் பரணீ.
மடத்துவாசல் பதிப்பகம் என்னும் என் பதிப்பகம் வழியாய் இரண்டாவது நூலாக, என்னுடைய மூன்றாவது படைப்பாக வெளிவந்திருக்கிறது.

இந்தப் புத்தகத்தில் வரும் எங்களூர் மனிதர்களின் பெயர்கள், சம்பவங்கள் எல்லாமே உள்ளது உள்ளபடி இருப்பதால் அதை எங்களூரில் வைத்தே வெளியிட வேண்டும் என்ற என் முடிவுக்கு தொடக்கம் முதல் விழா முடியும் வரை பேருதவியாக இருந்த சகோதரர்கள் சங்கர் மற்றும் கோமளன் இணுவில் பொது நூலகம் வழியே என்னுடைய சிறு பங்களிப்பு எதுவுமின்றி அத்தனையும் கூட இருக்கும் இளைஞர்களோடு ஒருங்கிணைத்துத் தந்தார்கள்.

அது எங்கட காலம்" என்ற பெயர் புத்தகத்தின் வடிவமைப்புக்கு முதல் நாள் வரை என் மனசில் எட்டாத பெயர். ஏகப்பட்ட பெயர்களை நினைத்து பின் சடுதியாக வந்தது ஆனால் இந்தத் தலைப்பை விடத் திறமான தலைப்பு இல்லை என்கிறார்கள் நூலைப் படித்தவர்கள். 

நூலை என் அன்பு அக்கா மறைந்த எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணிக்குச் சமர்ப்பணமாக்கினேன். எழுத்தாளர் திரு லெ.முருகபூபதி கொடுத்த முன்னுரையை எங்கள் அம்மா திரும்பத் திரும்பப் படித்துச் சிலாகித்தார்.
என் வலைப்பதிவு உலகின் ஆரம்ப வழிகாட்டி மதி கந்தசாமி அணிந்துரை தந்தார்.

இணுவில் பொது நூலகத்தின் கலாசார மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை பெப்ரவரி 12 ஆம் திகதி மாலை 4.30 க்கு நூல் வெளியீட்டு விழா ஆரம்பித்தது.

இணுவில் பொது நூலகத்தின் போஷகரும் எமது ஆசிரியருமான இரா.அருட்செல்வம் மாஸ்டர் நூலகம் சார்பில் தொடக்க உரை நிகழ்த்தினார்.

கிளிநொச்சியில் இருந்து வந்த இளைஞன் கு.அனுஷன் அழகாய்த் தமிழ்த் தாய் வாழ்த்து வழங்க, என் பெற்றோரும் உற்றாரும் மங்கல விளக்கேற்றினர்.

திரு இ.சர்வேஸ்வரா (யாழ்ப்பாண மருத்துவ பீட உதவிப் பதிவாளர்) தலைவராக அமைந்து வெகு கச்சிதமாக இந்த விழாவை நெறிப்படுத்தினார்.

வரவேற்புரையை என் அன்புக்குரிய அண்ணர் கணபதி சர்வானந்தா (ஊடகர் மற்றும் எழுத்தாளர்)

நூல் அறிமுகம் மற்றும் ஆய்வை சக வலைப்பதிவர் ஒருவர் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று திரு "சூரன்" ரவிவர்மா (ஊடகர் மற்றும் எழுத்தாளர்)வை அணுகிய போது குறுகிய காலத்தில் இந்தப் பணியைச் சிரமேற் கொண்டு சிறப்பித்தார்.

சிறப்புப் பிரதி முதலில் வெளியிட்டு வைத்தவர் திரு சந்திரசேகர சர்மா ( மூத்த எழுத்தாளர் மற்றும் சமூகத் தொண்டர்) விழா தொடங்க முதல் ஆளாக வந்து நிகழ்ச்சி முடிந்த பின்னும் அன்பொழுகப் பேசி விட்டுப் போனார்.

இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக 
திரு திருமதி வை.ஈழலிங்கம் (இயக்குநர் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்) கலந்து சிறப்பித்தனர். 

சிறப்பு விருந்தினராக வந்த கருவி மாற்றுத் திறனாளிகள் அமைப்பிலிருந்து திரு தர்மசேகரம் மற்றும் மூத்த ஊடகர் முன்னை நாள் ஈழ நாதம் சஞ்சிகை ஆசிரியர் திரு ராதேயன் ஆகியோர் நம் வாழ்வில் ஆவணப்படுத்தலின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினர்.

என்னுடைய பதிலுரையைத் தொடர்ந்து செல்வன் ஏ.கோமளன் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைந்தது.

இந்த நிகழ்வுக்குச் சிறப்பாக வந்த மாணவ சமூகம், என் அன்புக்குரியவர்கள், சக வலைப்பதிவு நண்பர்கள் வந்தியத்தேவன் (மயூரன்), கோகுலன்,சபேசன் தொலைதூரத்தில் இருந்து இணுவிலைத் தேடிப் பிடித்து வந்த அன்பு உள்ளங்கள் என்று நீண்ட பட்டியல் இந்த நிகழ்வை இன்னும் திருப்தியோடு பார்க்க வைத்து விட்டார்கள். உங்கள் எல்லோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஒரு புத்தகத்தில் வரும் இடம், ஆட்கள் அப்படியே மாற்றப்படாது எழுதப்பட்டு அந்த ஊரிலேயே  நூல் வெளியீடு கண்ட புதுமையையை நிகழ்த்திக் காட்டியாகி விட்டது.

"அம்மா! புத்தகம் எப்பிடி இருக்காம்" - நான்

"வாசிச்ச சனம் சிரிச்சுக் கொண்டு கேட்டவை எப்பிடி உவனுக்கு ஞாபக மறதி இல்லாமல்
எல்லாத்தையும் எழுத முடிஞ்சது" - அம்மா

புத்தக வெளியீட்டு விழா முழுமையான படத் தொகுப்பு இங்கே