ஆண்டவனை வேண்டிடுவோம் !


      ஆணவம் வந்துவிட்டால் 
      அப்பனும் தெரியமாட்டார்
      அம்மையும் தெரியமாட்டார்
      அறிவெலாம் மயங்கிநின்று
      அகந்தையின் உச்சம்சென்று
      அழிவினைத் தொட்டுநிற்கும்
      அவலத்தில் சிக்கிநிற்போம் !

    குடும்பமாய் கடவுள்காட்டும்
    குணமதைக் கொண்டுநிற்கும்
    அரும்பெரும் சமயந்தன்னை
    அறிந்திட முயலுகின்றார்
    ஆணவம் போக்குவென்று
   அம்மதம் சொல்லிசொல்லி
   அருமையாய் கதைகள்தன்னை
   அமுதமாய் அளிக்குதன்றோ !

  தேவரென மூவரென
  திரளாகக் கதைகள்சொல்லி
  யாவரையும் நல்லாக்க
  நம்சமயம் உதவுதன்றோ 
  பாவமெலாம் போக்குதற்கு
  பக்குவமே தேவையென்று
  பாரினுக்கு எடுத்துரைக்கும்
  பாடமதைப் புகட்டுதன்றோ !

 ஆணவத்தை கொண்டிருப்பார் 
 ஆண்டவனைக் காணார்கள்
 எனும்கருத்தை உணர்த்துகின்ற
 அரும்விரதம் சிவராத்ரி 
 அவ்விரத நாளினிலே
 அனைவருமே கோவில்சென்று
 ஆணவத்தைப் போக்குவென
 ஆண்டவனை வேண்டிடுவோம் !


 மனமார தொழுதழுதால்
 வஞ்சனைகள் ஓடிவிடும்
 சினமெம்மை விட்டகன்று
 சிந்தனையும் சிறப்பாகும் 
 குணம்மாறும் குறையகலும்
 குதித்துவரும் பக்குவமும்
 அவையாவும் எங்களுக்கு
 ஆனந்தம் நல்குமன்றோ !

 விரதம் இருப்பதனால் மெய்யுணர்வு உண்டாகும்
 மேலான எண்ணமெலாம் விரைவாக எமையடையும்
 அதனாலே விரதமதை அனைவருமே கைக்கொண்டால்
 ஆணவமும் விட்டகல ஆண்டவனும் அருளிடுவான் !



 ( எம். ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா ) 

image1.JPG