உலகச் செய்திகள்



சசிகலாவுக்கு பத்து கோடி ரூபாய் அபராதம்; நான்காண்டு சிறைத் தண்டனை; பத்தாண்டுகளுக்கு அரசியல் அஸ்தமனம்!

சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் அமெரிக்கா 

வானொலி நேரலை நிகழ்வின்போது இரு ஊடகவியலாளர்கள் சுட்டுக் கொலை

வட கொரிய ஜனாதிபதியின் ஒன்றுவிட்ட சகோதரன் மலேசியாவில் கொலை

104 செயற்கை கோள்களுடன் ஒரே நேரத்தில் பறந்த ஏவுகணை : விண்வெளி ஆய்வில் வரலாற்று சாதனை..!

தமிழக ஆட்சியை தீர்மானிப்பதற்கு ஆளுனருக்குள்ள ஐந்தே வழிகள்..!

மு.க.ஸ்டாலின் சற்றுமுன்னர் அதிரடி கைது

குமுறுகிறது இந்தியாவின் ஒரேயொரு எரிமலை!

பள்ளிவாசல் மீது தாக்குதல்: பாக்.கில் 39 ஐ.எஸ். சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை

பாகிஸ்தானிற்கு அமெரிக்கா கொடுத்த அதிர்ச்சி..! 

சூஃபி பள்ளிவாசலில் தற்கொலைத் தாக்குதல்; 72 பேர் பலி, 150க்கு மேற்பட்டோர் படுகாயம்





சசிகலாவுக்கு பத்து கோடி ரூபாய் அபராதம்; நான்காண்டு சிறைத் தண்டனை; பத்தாண்டுகளுக்கு அரசியல் அஸ்தமனம்!

14/02/2017 சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்புளித்துள்ளது. கர்நாடக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு அளித்துள்ளது.
14/02/2017 மேலும், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்துவிட்டதால் அவரை வழக்கில் இருந்து விடுவிப்பதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட சசிகலா உட்பட மூன்று பேருக்கும் நான்கு ஆண்டு கால சிறைத் தண்டனையை உறுதிசெய்துள்ள நீதிமன்றம், 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், அடுத்த பத்தாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் அறிவித்துள்ளது.
மேலும், இந்தத் தீர்ப்பின் பேரில், குற்றவாளிகள் மூவரும் உடனடியாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையை முன்னிட்டு தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான பொலிஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்களான எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூரில்ர் ஆயிரக்கணக்கான சிறப்பு பொலிஸ் படை பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
மேலும் சென்னையிலும், குறிப்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டைச் சுற்றிலும் பலநூற்றுக்கணக்கான பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது.
இந்தத் தீர்ப்பையடுத்து, சசிகலா தரப்பைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் முதல்வராவாரா அல்லது பன்னீர்செல்வமே தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.  நன்றி வீரகேசரி   









சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் அமெரிக்கா 

13/02/2017 அமெரிக்காவில் சட்டபூர்வமான ஆவணங்கள் எதுவுமின்றி வசித்து வந்த, பல்வேறு சட்டவிரோத குடியேற்றவாசிகளை கண்டுபிடித்து வெளியேற்றும் நடவடிக்கைகளை அந்நாட்டு பொலிஸாரும், குடிவரவு திணைக்கள அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.
சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 30 லட்சம் பேர் வெளியேற்றப்படுவார்கள். என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்திருந்தார்.
குறித்த வாக்குறுதியிற்கிணங்க, பிறப்பிக்கப்பட்ட புதிய உத்தரவால், அமெரிக்காவிலிருந்து சுமார் 30 இலட்சம் சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் பொலிஸாரும், குடிவரவு திணைக்கள அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.  
  
டிரம்பின் குறித்த உத்தரவை தொடர்ந்து அட்லாண்டா, அஸ்டின், சிகாகோ, லொஸ் ஏஞ்சல்ஸ், நியூயோர்க் மற்றும் கலிபோர்னியா உள்ளிட்ட நகரங்களில் ஒவ்வொரு வீடாக அதிரடி சோதனைகள் நடைபெற்று வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சுற்றிவளைப்புகளின் போது நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஏனைய மாநிலங்களிலும் தேடுதல் நடவடிக்கைகளை தொடங்கவுள்ளதாக, அமெரிக்க குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி















வானொலி நேரலை நிகழ்வின்போது இரு ஊடகவியலாளர்கள் சுட்டுக் கொலை

15/02/2017 வானொலி நேரலை நிகழ்ச்சியொன்றின்போது ஊடகவியலாளர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் டொமினிக்கன் குடியரசு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இக்கொலையுடன் தொடர்புடைய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொல்லப்பட்ட இருவரில் ஒருவர் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தார். மற்றையவர் அதை முகநூல் பக்கம் மூலம் நேரலையாக ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ஒலிபரப்பு அறைக்குள் புகுந்த மூவர் தொகுப்பாளரைச் சுடத் தொடங்கினர். திடீரென நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால், முகநூலில் நேரலை ஒளிபரப்புச் செய்தவர் பயந்து அலறத் தொடங்கினார். இதனால், தாக்குதல்தாரிகள் அவர் பக்கம் திரும்பி துப்பாக்கியை இயக்கினர்.
இதையடுத்து, ஊடகவியலாளர்கள் இருவரும் நிலத்தில் சாய்ந்தனர். குறித்த நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்துகொண்ட பெண் ஒருவரும் இத்தாக்குதலில் காயமடைந்தார்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், தாக்குதல் நடத்திய மூவரையும் கைது செய்தனர்.   நன்றி வீரகேசரி












வட கொரிய ஜனாதிபதியின் ஒன்றுவிட்ட சகோதரன் மலேசியாவில் கொலை

15/02/2017 வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் பிரிந்து வாழும் ஒன்றுவிட்ட சகோதரன் மலேசியாவின் கோலாலம்பூர் விமானநிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மக்கௌவுக்கு செல்ல விமானத்தை பிடிப்பதற்கு செல்லும் வழியில் நேற்று திங்கட்கிழமை கிம் ஜோங் நாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மலேசிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் அவர் இறப்பதற்கு முன்னால் பின்னால் இருந்து தாக்கப்பட்டதாகவும் அவருடைய முகத்தின் மீது திரவம் தெளிக்கப்பட்டதாகவும் கிம் ஜோங் நாம் தெரிவித்துள்ளார்.
அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவருடைய மரணத்திற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.      நன்றி வீரகேசரி













104 செயற்கை கோள்களுடன் ஒரே நேரத்தில் பறந்த ஏவுகணை : விண்வெளி ஆய்வில் வரலாற்று சாதனை..!

15/02/2017 இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, 104 செயற்கைகோள்களை ஒரே ஏவுகணையில் செலுத்தி சாதனை படைத்துள்ளதுடன், குறித்த பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.   
இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள  சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ஏவப்பட்ட பிஎஸ்எல்வி - சி 37 (PSLV - C37) எனும் ஏவுகணை 104 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் ஏவியதன் மூலம் 37 செயற்கோள்களுடன் பரந்த ரஷ்ய ஏவுகணையின் சாதனையை முறியடித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, செயற்கைக் கோள்கள் மற்றும் அவற்றை விண்ணில் செலுத்தப் பயன்படும் ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. குறித்த ஆய்வு மையத்தால் உள்நாட்டு செயற்கைக் கோள்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு செயற்கைக் கோள்களையும் வர்த்தக நோக்கில் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. 
குறித்த ஏவுகணையில் இந்தியாவின் கார்டோசாட்-2 செயற்கைக்கோள், ஐஎன்எஸ்-1ஏ, ஐஎன்எஸ் 1-பி என 2 செயற்கைக்கோள்கள், இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்குச் சொந்தமான 5 செயற்கைக்கோள்கள், அமெரிக்காவின் 95 செயற்கைக்கோள்கள் என 104 செயற்கைக் கோள்களையும் (PSLV - C37) ஏவுகணை சுமந்து சென்று சாதனை படைத்துள்ளது.
குறித்த செயற்கைக்கோள்கள் அனுப்பும் புகைப்படங்கள், உளநாட்டு பௌதீக மற்றும் புவியியல் சார்ந்த அம்சங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிவதற்கு ஏற்புடையதாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி











தமிழக ஆட்சியை தீர்மானிப்பதற்கு ஆளுனருக்குள்ள ஐந்தே வழிகள்..!

15/02/2017 தமிழக முதலமைச்சரை தெரிவு செய்வது தொடர்பாக நிலவி வந்த குழப்பங்களுக்கு தீர்வு காண்பதற்கு, தமிழக ஆளுனர் வித்தியாசாகர் ராவிற்கு ஐந்து வழிகள் உள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. 
அ.தி.மு.க. கட்சி தலைவராகவும், பொதுச்செயலாளராகவும் இருந்த சசிகலாவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதால், அவரால் இனி முதலமைச்சராக தெரிவாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்டு, தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் உரிமையை அவர் கோரி வருகின்றார். 
இந்நிலையில் முதலமைசசர் பன்னீர்செல்வம், தனக்கும் பெரும்பான்மை இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க உரிமை கோரிவருகிறார். இவர்கள் இருவரில் ஒருவரை ஆட்சி அமைக்க கோர வேண்டிய கட்டாயம் தற்போது தமிழக ஆளுனருக்கு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே சசிகலாவும், ஓ.பன்னீர் செல்வமும் உரிமை கோரிய நேரத்தில் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு வரை ஆளுனர் காத்திருக்கவேண்டிய நிலை உருவாகியிருந்தது.
மேலும் தற்போதைய சசிகலாவுக்கான தீர்ப்பு, கட்சியின் புதிய தலைவர், முதல்வர்   பன்னீர்செல்வதின் கோரிக்கை என்பன அடிப்படையில் ஆளுனர், ஐந்து வகையான முடிவுகளை எடுப்பதற்கு வாய்ப்புள்ளதாக, இந்திய அரசியல் மற்றும் சட்ட வல்லுனர்கள் கூறுவதாக இந்திய ஊடகங்கள் பகிர்ந்துள்ள தகவல்களானவை:  
1. எடப்பாடி பழனிச்சாமி தனக்கு அதிக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக மனுவொன்றை கொடுத்திருப்பதால் அதில் ஆளுனர் திருப்தியடைந்து எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைக்கலாம். அதன்படி எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக பதவி ஏற்கலாம்.
2. அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சிறை வைக்கப்பட்டு இருப்பதாக, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் புகார் கூறுவதால் அதையும் ஆளுனர் கவனத்துக்கு எடுத்து கொள்ளலாம். ஆனாலும் இதுவரை ஓ. பன்னீர்செல்வம் தனக்கு போதிய எம்.எல்.ஏ.கள் ஆதரவு இருப்பதை காட்டாததால், எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைத்து பதவி ஏற்றதும், உடனடியாக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கூறலாம்.
3. எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறினால், அதே சமயம் ஓ.பன்னீர் செல்வம் தனக்கு 117 சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதை நிரூபித்தால் ஓ.பன்னீர் செல்வத்தை ஆட்சி அமைக்க கோரலாம்.
4. எடப்பாடி பழனிச்சாமிஇ ஓ.பன்னீர்செல்வம் இருவருமே பெரும்பான்மையை நிரூபிக்க தவறினால், அதே சமயம் பன்னீர்செல்வம் அணியினர், தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி செல்லும் எண்ணிக்கை, அரைவாசிக்கு மேற்பட்ட உறுப்பினர்களாக இருந்தால் தி.மு.க.வை ஆட்சி அமைக்க கோரலாம்.
5. எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரும் பெரும்பான்மையை நிரூபிக்க தவறி விடும் அதே நேரத்தில் தி.மு.க.வுக்கும் அவர்கள் ஆதரவு தெரிவிக்காவிட்டால், ஆளுனர் 365 சட்டத்தின் படி தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை உருவாக்கலாம். 
மேலும் 6 மாதத்துக்கு ஜனாதிபதி ஆட்சி  நீடிப்பதோடு, அதற்குள் ஏதாவது ஒரு கட்சி பெரும்பான்மையை காட்டினால் அவர்கள் ஆட்சி அமைக்கலாம். அப்படியும் ஆட்சி அமையவில்லை என்றால், ஆளுனர் சட்டசபையை கலைக்க உத்தரவிடுவார்.பின் தமிழ்நாட்டில் புதிய சட்டசபை தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.     நன்றி வீரகேசரி










மு.க.ஸ்டாலின் சற்றுமுன்னர் அதிரடி கைது

18/02/2017   தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுகவின் எம்.எல்.ஏ.கள் சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மெரினா காந்தி சிலைக்கு முன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தமிழக சட்டசபையில் திமுகவினர் தாக்கப்பட்டமைக்கு எதிராக ஆளுநரிடம் முறையிட்டதன் பின்னர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் திடீரென தனது கட்சியின் எம்.எல்.ஏ.களுடன் மெரினா காந்தி சிலைக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் இவர் கைதுசெய்யப்பட்டார்.   நன்றி வீரகேசரி










குமுறுகிறது இந்தியாவின் ஒரேயொரு எரிமலை!

18/02/2017 இந்தியாவின் ஒரேயொரு எரிமலையான பெரன் தீவு எரிமலை, 150 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் குமுறத் தொடங்கியிருப்பதாக கோவாவில் இயங்கிவரும் தேசிய கடல்வள ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. புகைமூட்டமாகக் காணப்படும் இந்த எரிமலையில் இருந்து எரிமலைக் குழம்பு வெளிப்பட ஆரம்பித்திருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்தமான் - நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் ப்ளையருக்கு சுமார் 140 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள இந்த எரிமலை, கடைசியாக 1991ஆம் ஆண்டு சாம்பல்களை மட்டும் விசிறியது. அதன்பிறகு எந்தவிதமான மாற்றங்களும் இந்த எரிமலையில் ஏற்படவில்லை.
இந்த நிலையில்தான் இப்போது மீண்டும் அந்த எரிமலை குமுறத் தொடங்கியிருக்கிறது. ஆய்வாளர் குழுவொன்று எரிமலைக்குச் சுமார் ஒரு மைல் தொலைவில் இருந்தபடி நிலையை அவதானித்து வருவதாகவும், அவ்வப்போது ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு லாவா வெளிவருவதைக் காணக்கூடியதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி










பள்ளிவாசல் மீது தாக்குதல்: பாக்.கில் 39 ஐ.எஸ். சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை

17/02/2017 பாகிஸ்தானில், நேற்றிரவு சூஃபி பள்ளிவாசல் மீது ஐ.எஸ். இயக்கம் நடத்திய தற்கொலைத் தாக்குதலையடுத்து நடத்தப்பட்ட நாடளாவிய தேடுதல் நடவடிக்கையில், 39 ஐ.எஸ். சந்தேக நபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நடவடிக்கையின்போது 48 பேரைக் கைது செய்துள்ளதாகவும், அவர்களில் பெரும்பான்மையானோர், தாக்குதல் நடத்தப்பட்ட சிந்து மாகாணத்திலேயே கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.
இந்த நடவடிக்கை பற்றி வேறெந்தத் தகவல்களையும் அறியத் தருவதற்கு தமக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருப்பதாக பாகிஸ்தான் அரசு கூறியிருந்த நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதானது, உலக நாடுகள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.   நன்றி வீரகேசரி











பாகிஸ்தானிற்கு அமெரிக்கா கொடுத்த அதிர்ச்சி..! 

17/02/2017 அமெரிக்க புலனாய்வு நிறுவனமான சிஐஏயின், முன்னாள் உயரதிகாரி ஒருவர் உலகின் மிக அச்சுறுத்தலான நாடு பாகிஸ்தான். என அதிர்ச்சி தகவல்  ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உலக நாடுகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலான நாடு பாகிஸ்தான். அந்நாட்டில் பொருளாதாரம் சீர்குலைந்து, தீவிரவாதம் பெருகியுள்ளதுடன், அணுஆயுத போட்டியில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக பாகிஸ்தான், உலக நாடுகளை அச்சுறுத்துவதாக முன்னாள் அமெரிக்க சிஐஏ அதிகாரி கெவின் ஹல்பர்ட் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பணிபுரிந்துள்ள கெவின் ஹல்பர்ட், அமெரிக்க  புலனாய்வுத் துறையினரின் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் ‘சிப்பர் பிரீப்’ என்ற வலைத்தளத்தின் மூலமே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் பாகிஸ்தான் என்பது உலக நாடுகளின் ஒரு மத்திய மையமாகும் எனவும், அந்நாட்டின் பின்னடைவு உலக நாடுகளை அச்சுறுத்தும் வல்லமையுடையது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  
இந்நிலையால்தான் பாகிஸ்தானுக்கு அமெரிக்காவும், சர்வதேச நாணய நிதியமும் கோடிக்கணக்கான டொலர்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர். அத்தோடு அண்மைய நாடான ஆப்கானிஸ்தானின் இராணுவ செயற்பாடுகளை மேம்படுத்த, அமெரிக்காவிற்கு துணையாக இருக்கும் நாடாக பாகிஸ்தான் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 
மேலும் பாகிஸ்தான் பொருளாதார ரீதியாக மோசமான நிலையை அடைந்தால், அல்லது பாரிய தாக்கத்தை எதிர்கொண்டால் அது உலகநாடுகளிடையே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும், அதனை தடுப்பதற்காகவே தொடர்ந்து அமெரிக்க பொருளாதார பலத்தை ஏற்படுத்ததை கொடுப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி









சூஃபி பள்ளிவாசலில் தற்கொலைத் தாக்குதல்; 72 பேர் பலி, 150க்கு மேற்பட்டோர் படுகாயம்

17/02/2017 பாகிஸ்தானின் சூஃபி வணக்கஸ்தலம் ஒன்றில் நேற்றிரவு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 72 பேர் கொல்லப்பட்டதுடன் 150க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
வணக்கஸ்தலத்தின் பெண்கள் பிரிவை இலக்குவைத்து நடத்தப்பட்டதால் 30 குழந்தைகள் உட்படப் பெண்களே பெருமளவில் பலியாகினர். ஐ.எஸ். அமைப்பின் பாகிஸ்தான் பிரிவு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. 

காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. 
தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுக்கும் பொருட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்து வருவதாக பாகிஸ்தான் அரசு கூறிவரும் நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
அண்மைக்காலங்களில் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல்களுள் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.   நன்றி வீரகேசரி