இலங்கைச் செய்திகள்அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கௌரவ கலாநிதிப் பட்டம்.!

கருணாவின் ஒத்துழைப்பு இல்லாவிடில் கிழக்குப் பகுதியை புலிகளிடமிருந்து மீட்டிருக்க முடியாது ; கம்மன்பில

கோத்தபாய நீதிமன்றில் ஆஜர்.!

சிவனொளிபாத மலைக்குச் சென்ற 3 யாத்திரிகளின் உயிரைப் பறித்த குளிர்

இலங்கைக்கு வருமாறு அவுஸ்திரேலிய பிரதமருக்கு ரணில் அழைப்பு

மன்னித்து விட்டோம் புலம்பெயர் தமிழர் மீளவும் நாடு திரும்ப வேண்டும் ; அவுஸ்திரேலியாவில் பிரதமர்

எமது காணிகள் விடுவிக்கும் வரை உணவுத் தவிர்ப்பு போராட்டம் தொடரும் : புதுக்குடியிருப்பு மக்கள்

விக்டோரியா மாநிலத்தின் ஆளுனருடன் பிரதமர் ரணில் சந்திப்பு

புகைப்படம் எடுக்கும் இராணுவம் ; 17 ஆவது நாளாகவும் துணிவோடு போராடும் கேப்பாப்புலவு மக்கள்

யாழ் விஜயம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றியத் தூதுக் குழுவினர்
அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கௌரவ கலாநிதிப் பட்டம்.!

14/02/2017 பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, அவுஸ்திரேலிய கீலோங்கில் உள்ள டேய்கின பல்கலைக்கழகம் இன்று கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவுஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் நேற்றிரவு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரை சென்றடைந்தார்.
வன்முறை, முரண்பாடுகளில் இருந்து நிலையான ஜனநாயகத்தை நோக்கி இலங்கையை கொண்டு செல்லும், பிரதமரின் முயற்சிகளை கௌரவிக்கும் வகையிலேயே கௌரவ கலாநிதி பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 60 ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்த முதல் இலங்கை பிரதமர், ரணில் விக்கிரமசிங்கவே என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி கருணாவின் ஒத்துழைப்பு இல்லாவிடில் கிழக்குப் பகுதியை புலிகளிடமிருந்து மீட்டிருக்க முடியாது ; கம்மன்பில

13/02/2017 சிலவேளை கருணாவின் ஒத்துழைப்பு கிட்டியிருக்காவிட்டால் நாட்டின் கிழக்குப் பகுதியை புலிகளிடத்திலிருந்து மீட்க முடியாது போயிருக்கும். அதனால் அவ்வாறான ஒருவர் தலைமையில் கட்சி நிறுவப்படுவது காலோசிதமான முயற்சியாகுமென பாராளுமன்ற உறுப்பினரும் தூய்மையான ஹெல உறுமைய அமைப்பின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுபப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான புதிய கட்சியொன்று ஆரம்பிக்கப்படவுள்ளமையானது வரவேற்கத்தக்கதாகும். காரணம் அவர் இறுதி யுத்த காலத்தில் நாட்டின் கிழக்கு பகுதியை புலிகளிடத்திலிருந்து மீட்டெடுக்க பெரும் உதவி செய்தவர்.
தற்போது அவர் கட்சி ஆரம்பிக்க முற்படுகின்றமையானது மகிழ்ச்சிக்குரிய காரணம் புலிகளை வெற்றிகொள்ள உதவிசெய்துவிட்டு எமது தாய் தேசத்திற்கு வாழ்த்து கூறும் ஒருவர் கட்சி ஆரம்பிப்பதானது காலோசிதமான செயற்பாடாகும்.
சிலவேளை கருணாவின் ஒத்துழைப்பு கிட்டியிருக்காவிட்டால் நாட்டின் கிழக்கு பகுதியை புலிகளிடத்திலிருந்து மீட்க முடியாது போயிருக்கும். அதனால் அவ்வாறான ஒருவர் தலைமையில் கட்சி நிறுவப்படுவது காலோசிதமான முயற்சியாகும்.
அரந்தலாவ பிக்குகள் கொலைச் சம்பவத்தின் பின்னணியில் கருணா உள்ளார் என்று கூறப்பட்டாலும் அதனை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் இல்லை. அதேபோல் 2004 ஆம் ஆண்டில் அவர் புலிகளிடத்திலிருந்து விலகி வந்தைமையும் யுத்தத்தினை வெற்றிக்கொள்ள சாதகமாக அமைந்து.
அதேபோல் கருணாவையும் அவரின் கட்சியினையும் தமிழ் மக்கள் ஏற்றாலும் ஏற்கவிடினும். தற்போது மக்களை தூண்டிவிட்டுக் கொண்டிருப்பவர்களை பார்க்கிலும் கருணா சிறந்தவர் என்பதே எமது நிலைப்பாடாகும்.
அதனால் கருணாவை தன்டிக்க வேண்டுமாயின் அதற்கு முன்பாக கடந்த அரசாங்கம் விடுவித்த 11 ஆயிரம் புனர்வாழ்வளித்த போராளிகளையும் தண்டிக்க வேண்டும்.
தூய்மையான நாளைக்கான அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி 

கோத்தபாய நீதிமன்றில் ஆஜர்.!

13/02/2017 முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் தற்சமயம் பிரசன்னம் ஆகியுள்ளார்.
எவன்காட் சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழுவால் தொடரப்பட்ட வழக்கில் வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக, அவர் அங்கு முன்னிலையாகியதாக தெரியவந்துள்ளது.  நன்றி வீரகேசரி 
சிவனொளிபாத மலைக்குச் சென்ற 3 யாத்திரிகளின் உயிரைப் பறித்த குளிர்

13/02/2017 சிவனொளிப்பாத மலை உச்சிக்கு சென்றுகொண்டிருந்த மூன்று யாத்திரிகள் கடும் குளிர் காரணமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை(10) இரவு போயா தினத்தன்று இடம்பெற்றுள்ளது.
தெவிநுவர பகுதியைச் சேர்ந்த 65 வயதுடை சிரியாவதி என்ற பெண்ணும், கம்புறுபிட்டியவைச் சேர்ந்த 64 வயதுடைய சந்திரசேன என்ற நபரும், மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய கித்சிறி பெர்னாண்டோ என்ற நபருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக உடலில் ஏற்பட்ட மாற்றத்தால் இதயம் செயலிழந்து குறித்த நபர்கள் உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.  நன்றி வீரகேசரி

இலங்கைக்கு வருமாறு அவுஸ்திரேலிய பிரதமருக்கு ரணில் அழைப்பு

15/02/2017 உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தருமாறு அவுஸ்திரேலியா பிரதமர் மெல்கம் டிரன்புல்லுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன் சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை கன்பெரா நகரிலுள்ள பாராளுமன்ற வளாகத்தில் வைத்து அவுஸ்திரேலிய பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியே போது அவர் இந்த அழைப்பை விடுத்தார். 
1954 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலவின் விஜயத்திற்கு பின்னர் இலங்கை பிரதமர் ஒருவர் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொள்வதானது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விஜயமாக அமைந்துள்ளது.
அங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டதுடன் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. மேலும் இலங்கையின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் 19 மரியாதை வேட்டுக்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 
மன்னித்து விட்டோம் புலம்பெயர் தமிழர் மீளவும் நாடு திரும்ப வேண்டும் ; அவுஸ்திரேலியாவில் பிரதமர்

15/02/2017 இலங்கையில் தமிழர்களுக்கு தற்போது பாதுகாப்பான சூழல் நிலவுகின்றமை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆகவே சர்வதேச நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் மீளவும் நாடு திரும்ப வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவில் வைத்து அழைப்பு விடுத்தார்.
அத்துடன் மனித கடத்தல் காரர்களுக்கு அஞ்சி அவுஸ்திரேலியாவில் குடியேறி சட்டவிரோத முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கையர்களை மன்னித்து விட்டோம்.ஆகவே முகாம்களில் உள்ள இலங்கையர்கள் அனைவரும் நாடுதிரும்ப வேண்டும் 
மேலும் காணாமல் போனோர் குறித்து இனங்காண்பதற்கு காணாமல் போனவர்களுக்கான அலுவலம் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டிரன்புல்லை சந்தித்து பேசிய பின்னர் நடந்த இரு நாட்டு தலைவர்களின் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி


எமது காணிகள் விடுவிக்கும் வரை உணவுத் தவிர்ப்பு போராட்டம் தொடரும் : புதுக்குடியிருப்பு மக்கள்

15/02/2017 தமது நிலங்களையும் வீடுகளையும் கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக கடந்த 13 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மக்கள் நேற்றுமுதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரத்தில் மூவர் வீதம் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றுமுதல் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்க்கு முன்னால் பொதுமக்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த 3 ஆம் திகதி தொடக்கம்  தொடர்  கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
இந்த  நிலையில்  போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் தமது சொந்த நிலங்களையும் வீடுகளையட்டும் இராணுவம் விடுவிக்கவேண்டும் என்றும் காணிகள் விடுவித்த பின்னரே போராட்டத்தை கைவிடுவோமென்றும்  தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை நேற்றையதினம் யாழ் மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர்  ஸ்ரீதரன் மற்றும் இன்றையதினம் சரவணபவான்  ஆகியோர் சந்தித்து தமது ஆதரவினை  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி


விக்டோரியா மாநிலத்தின் ஆளுனருடன் பிரதமர் ரணில் சந்திப்பு

15/02/2017 அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டின் விக்டோரியா மாநில ஆளுனர் லிண்டா டேசாவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஆளுனர் லிண்டா டேசாவும் பங்கேற்கவுள்ளார்கள்.
இதேவேளை  டிக்கீன் பல்கலைக்கழகம் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கௌரவ கலாநிதி பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரம். கல்வி என்பனவற்றை மேம்படுத்தவும் மனித உரிமைகளை பாதுகாக்கவும் பிரதமர் ரணில் விக்மரசிங்க மேற்கொண்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக இந்த கௌரவ கலாநிதி பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. பாராளுமன்ற உறுப்பினராகவும் அவர் நீண்டகாலம் ஆற்றிய சேவைகள் பற்றி இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஜோ ஹொலன்டர் கருத்துத் தெரிவிக்கையில், 
இலங்கையின் புகழை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்ல பிரதமர் ரணில் விக்ரமசிங்க மகத்தான பணிகளை நிறைவேற்றியிருப்பதாக தெரிவித்தார். 
நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான அர்ப்பணிப்புகளும் சர்வதேச சமூகத்திடம் இருந்து நிதி ரீதியான ஒத்துழைப்பை பெற்றுக் கொண்டமை பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், 
பின்னடையும் சகல சந்தர்ப்பங்களிலும் முன்னோக்கிச் செல்வதற்கான வல்லமையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உலகின் மாற்றத்திற்கமைவாக எதிர்கால பயணப்பாதையில் மாறுவது அவசியமாகும். வாழ்வில் வெற்றி பெற தோல்விகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். வெற்றிகளின்போதும் தோல்விகளுக்கு முகம் கொடுக்கும்போதும் சளைக்கக்கூடாதென தெரிவித்தார்.   நன்றி வீரகேசரிபுகைப்படம் எடுக்கும் இராணுவம் ; 17 ஆவது நாளாகவும் துணிவோடு போராடும் கேப்பாப்புலவு மக்கள்

16/02/2017 முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் விமானப்படையினர் கையகப்படுத்தியுள்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்க்கவேண்டுமென கோரி கடந்த 17 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களையும் செய்தி சேகரித்துவரும் ஊடகவியலாளர்களையும்  ஆதரவு  தெரிவித்து வரும் சிவில் அமைப்புகள் மற்றும் மக்களையும் எதிரே உள்ள விமானப்படை முகாமில் உள்ள விமானப்படையினரும் இராணுவப் புலனாய்வாளர்களும் தொடர்சியாக புகைப்படம் மற்றும் காணொளி பதிவுகள் என்பனவற்றை எடுத்து அச்சுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இராணுவத்தினரின் இந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாத கேப்பாபுலவு பிலக்குடியிருப்புமக்கள் தமது போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இராணுவத்தினர் புகைப்படம் எடுப்பதாலோ  எம்மை மிரட்டுவதாலோ நாம் போராட்டத்தை  கைவிடப்போவதில்லை என்றும் தொடர்ந்து எமது போரட்டம் எமது மண்ணில் கால் பாதிக்கும் வரை தொடரும் என்றும்  போராட்டத்திலீடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள  விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமென விமானப்படை முகாமின் முன்பாக  கொட்டும் பனியிரவையும் சுட்டெரிக்கும் வெயிலையும் கொட்டும் மழையையும்  பொருட்படுத்தாது சிறுவர்கள்இகுழந்தைகள் இமுதியவர்கள் இபெண்கள்இஎன  அனைவரும்  கடந்த 31.01.2017 தொடக்கம்  தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துவருகின்றனர்.  
அத்தோடு இன்றையதினம்  முல்லைத்தீவு ்கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுசங்கத்தினர்  மற்றும் முல்லைத்தீவு அமரா பெண்கள்  தலைமைதாங்கும்  குடும்பத்தினர் சங்கம்  மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினர் ஆகியோர்   போராட்டத்துக்கு  ஆதரவாக போர்டடக்களத்துக்கு வருகைதந்து மக்களுக்கான தமது ஆதரவினை வெளியிடடனர்.
அத்தோடு இன்றைய தினம் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம்  சித்தார்த்தன்   மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கந்தையா சிவநேசன்  ஆகியோர் வருகைதந்து மக்களுக்கான தமது ஆதரவினை தெரிவித்தனர்.
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு கிராமத்தில் 84குடும்பங்களுக்கு சொந்தமான 50ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை கையகப்படுத்தி விமானப்படைத்தளம் அமைத்துள்ள விமானப்படையினர் அதனை பலப்படுத்தி வேலிகள் அமைத்து மக்கள்  செல்லமுடியாதவாறு தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். 
இந்த நிலையில் கடந்த மாதம் 31ஆம் திகதி காணிகள் அளவிடப்படும் எனவும் காணிகளுக்கு சொந்தமான மக்கள் அனைவரையும் அப்பகுதிக்கு வருமாறும் கேப்பாபுலவு கிராமசேவகர் அறிவித்தல் விடுத்திருந்த நிலையில் அப்பகுதிக்கு வருகைதந்திருந்தமக்கள் நாள்முழுவதும் வீதியில் காத்திருந்த போதும் அதிகாரிகள் எவரும் காணிகள் அளவிட வருகைதந்திருக்கவில்லை நீந்த நிலையில் ஆத்திரமடைந்த மக்கள் அன்றைய தினம் முதல் தாம் தமது சொந்த நிலங்களில் காலடி எடுத்து  வைக்கும் வரை போராட்டம்  தொடருமென கூறி தொடர் போராட்டத்திலீடுபட்டு வருகின்றனர்.
அத்தோடு இன்றும் பல பிரதேசங்களில் இருந்து மக்களும்இசிவில் அமைப்புகளும் வருகைதந்து மக்களுடன் கலந்துரையாடியதோடு பல உதவிகளையும் வழங்கி சென்றதோடு  மக்களுக்கான ஆதரவும் பல்வேறு வழிகளில் அதிகரிப்பதை அவதானிக்க முடிகின்றது. 
 இந்தப்போராட்டக்   களத்தில் உள்ள மாணவர்கள் வீதி ஓரத்திலேயே தமது பாடசாலையில் வழங்கப்பட்ட  வீட்டு வேலைகளை செய்வதோடு அனைவரும் இணைந்து தமது  கல்விநடவடிக்கைகளை மேற்கொள்வதனை அவதானிக்க முடிகின்றது. மேலும் இன்றும்  (16இ02)   ஆசிரியர்கள் இணைந்து போராட்ட   களத்திலே உள்ள மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளையும் உளவள ஆற்றுப்படுத்தல் செயற்பாடுகளையும்   மேற்கொண்டனர் .
போராடத்தில் ஈடுபடும் மக்களுக்கான உணவு  மற்றும் இதர உதவிகளை அயல் கிராம மக்களும் இளைஞர்களும் சிவில் சமூக அமைப்புகளும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி

யாழ் விஜயம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றியத் தூதுக் குழுவினர்

15/02/2017 வடக்கு மாகாணத்திற்கு  விஐயம் செய்திருக்கின்ற ஐரோப்பிய ஒன்றியத் தூதுக் குழுவினர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனைச் சந்தித்து மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். 
காலை 9 மணிக்கு யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த மேற்படித் தூதுக் குழுவினர் ஏ9 வீதி கைதடியிலுள்ள மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனைத் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக நீண்ட நேரம் கலந்துரையாடினர். 
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் பார்வையிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி