இரண்டாவது கோடை

யோகன்

தென் மேற்கு கன்பெராவுக்கு ஒரு பெருஞ்சுவர் போல நிற்கும் பிரிண்டபெலா மலைச்சாரலிலிருந்து நெருப்புப் புகையையும் எரிந்த இலைகளின் சாம்பலையும் கொண்டு வந்து கொட்டுகிறது காற்று. மலைச்சாரலிலுள்ள காடுகள் தீப்பற்றி எரிகின்றன. நகரம் புகை மண்டலத்தால் நிரம்பி விட்டதை சாம்பல் மணத்தை முகர்ந்து சனங்கள் அறிந்து கொள்கின்றனர்.  
காட்டுத்தீ ஆரம்பித்த இம்மலைச்சாரலின் மத்தியிலுள்ள நமாஜி தேசிய வனப்பிரதேசம் மட்டுமே அவுஸ்திரேலிய தலை நகர் பிராந்தியத்திற்கு சொந்தமானது. இதைவிட பிம்பேரி பிரிண்டபெலா வனபிரதேசங்கள் உட்பட ஏறத்தாழ நூறு கிலோ மீட்டர்களுக்கு மேல் நீண்டு கிடக்கும் இந்த மலைத்தொடரின் ஒரு பகுதி;;; தலை நகர் பிராந்தியத்திற்கும் நியு சவுத் வேல்ஸ்க்கும் மாநிலத்திற்கும் எல்லையாக எழுந்து நிற்கிறது.

இருண்டு போய்க்கிடக்கும் நீண்ட பகலும் புகைச்சுவாசமும் ஹேலிக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. வீட்டுக்குப் பின்னாலிருந்த ஏணியில் ஏறி நின்றபடி மலை முகடுகளில் எரியும் நெருப்பு தெரிகிறதா என்று பலமுறை பார்த்து விட்டாள். தூரத்தில் தெரியும் மரங்கள் எங்கும் மெல்லிய நீலப்படலமாய் புகை பரவியிருந்தது. டகர்னொங்; பள்ளத்தாக்கிலுள்ள நகரங்களிலிருந்து பார்த்தாற் தெரியும் அந்த நீண்ட மலைத்தொடர் முற்றாக மறைந்து விட்டது. டகர்னொங் என்ற பெயர் நணவால் ஆதிகுடிகளின் மொழியில் குளிர் பிரதேசம் என்று அர்த்தம். பள்ளத்தாக்கிலுள்ளதால் இந்நகரங்கள் வின்டரில் கடுங்குளிராக இருக்கும்.


ஹேலியின்; அப்பா ஜேம்ஸ் கிறிஸ்மஸ் புதுவருட விடுமுறைக்குப் பிறகு இந்த வாரந்தான் வேலைக்குப் போகத்தொடங்கினான்.
காட்டுத்தீயையோ புகையையோ பற்றிய எந்தக் கவலையுமின்றி வெளியே தெருவில் அயல் வீட்டு சிறுவர்களுடன் கிறிக்கற் விளையாடிக்கொண்டிருக்கிறான் ஹேலியின் தம்பி; ஜெருமி. அது வாகனப் போக்குவரத்துக் குறைந்த உள் வீதியாதலால் அவ்வப்போது விளையாட்டு மைதானமாகிவிடும். ஜெருமியும்; அயல் வீட்டு ஜேசனும் டிபிடி விளையாடுகிறார்கள். வீட்டுப்பின் வளவிலும்  தெருவிலும் சிறுவர் விளையாடும் ஒரு வகை கிறிக்கட். பந்தை அடித்தால் ஓடியே ஆக வேண்டும்.

'சும்மா பட்டை விசுக்காதே' ஜெருமி; கத்துகிறான். அவன்தான் பந்து வீசுகிறான்.
பட் பிடித்திருந்தவனுக்கு ஓடப் பஞ்சி போலும்.
"விக்கட்டுக்குப் பந்தைப் போடு. சொத்திக் கையனே" பதிலுக்கு கத்துகிறான்.
"விக்கட்டுத்தாண்டா போட்டேன். அடுத்த முறை உன் மண்டைக்குப் போடுகிறேன்.
"போடா பெட்டித்தலையா"
ஜேசன் கல்லொன்றை எடுத்து எறிகிறான். மோதல் ஆரம்பிக்கிறது.
"புகைக்குள் நின்று சண்டை போட்டது போதும். உள்ளே வா ஜெருமி;" ஜேம்ஸ் உள்ளிருந்து உரத்துக் கத்துகிறான்.
ஜேம்ஸ் வெளியே வந்தால் விபரீதமாகிவிடும் என்று ஜெருமிக்குத் தெரியும். பட்டையும் விக்கட்டுகளையும் பறித்துக் கொண்டு போய் கூரைக்கு மேலே போட்டு விடுவான்.
முன்பொரு முறை ஜெருமி அடித்த பந்து பக்கத்து வீட்டுகாரியின் பூனையைக் காயப் படுத்தியபோதும் இந்த தண்டனை கிடைத்தது. 
கட்டாய ராஜிநாமா செய்த எம்பிக்கள் போல இருவரும் தத்தமது வீடுகளுக்குத் திரும்புகின்றனர். ஜேசன் நிறுத்தி வைத்திருந்த விக்கட்டுகளை எடுக்கத் தவறவில்லை.

ஹேலிக்கு கிறிக்கட் பிடிக்காது. அவள் அம்மாவைப் போல குதிரை சவாரி செய்வதில் அவளுக்குப் பேராவல். வளர்ந்த பின் குதிரை ஓட்டும் ஒரு ஜொக்கியாக வர வேண்டுமென்று ஆசையும் உண்டு. அம்மாவின் நினைவு வந்ததும் அவளையறியாமலே கடந்த கோடை நினைவுகள் மனதின் ஆழத்திலிருந்து மிதந்து வரும். கடலில் சாடிக்குள் கிடந்த பூதம் வெளிக்கிளம்பி பயமுறுத்துவது போல அந்த நினைவும் அடிக்கடி எழுந்து வரும். கதையில் படித்தது போல பூதத்தைச் சாடிக்குள் அடைத்து கடலுக்குள் எறிந்ததைப்போல இந்த நினைப்பையும் தூக்கி எறிந்து விட்டால்..


சென்ற ஜனவரியில் பிறிஸ்பேன் மாநிலத்திலுள்ள பொற்கரைக்கு கோடை விடுமுறைக்காக ஆயிரம் கிலோ மீற்றர்களுக்கு மேல் காரில் சென்ற ஜேம்ஸ்ம் அமண்டாவும் பிள்ளைகளை விட அதிக குதூகலமாயிருந்தனர். கேளிக்கைப் பூங்காக்கள்  கடற்கரை  சினிமா என்று பத்து நாட்களை கழித்து தங்கியிருந்த விடுதியின் கணக்கை முடித்து விடுமுறை முடிந்த சோர்வுடன் கொளுத்தும் வெய்யிலில் சிட்னி வொலங்கொங் ஊடாக கன்பெரா நோக்கிய பயணம். பத்து மணி நேர கார்ப் பயணத்தின் பின் வொலங்கொங்கில் காரை நிறுத்தி கடற்கரையில் குளித்துச் சாப்பிட்டபின் வெய்யில் மூர்க்கமாகக் கொழுத்தும் பின் மதிய வேளையில் அமண்டா காரைச் செலுத்தினாள். கடற்கரையில் பியர் குடித்ததனால் ஜேம்ஸ் முன் சீட்டில் நித்திரையாக பிள்ளைகளிருவரும் பின் சீட்டில் போக்கிமொன் விளையாடிக்கொண்டிருந்தனர். 

வெளியே காற்றின் வேகம் வேகம் அதிகரித்திருந்ததனை வளைந்து மீளும் மரக்கிளைகளை கொண்டு அமண்டாவால் ஊகிக்க முடிந்தது. பாதையெங்கும் பெரும்பாலும் நீண்டுயர்ந்த கம் மரங்களின் தோப்பு. யுகலிப்டஸ் மரத்தின்  பல நூறு இனங்களுக்கும் பொதுப்பெயர் இந்த கம். கார் ரெடியோவை போட்ட அமண்டா ஜெம்ஸின் நித்திரையைக் குழப்பாதிருக்க அதன் சத்தத்தை குறைத்து விட்டு பின்னே திரும்பினாள். ஹேலியும் ஜேசனும் அரை நித்திரையாயிருந்தனர். ஹேலி பத்து வயதினை எட்டுகிறாள். வெள்ளைக் கம் மரத்தின்; தண்டுகள் போல திரட்சி பெற்றுவரும் அவள் கால்களும் உடலும் ஒரு கணம் அமண்டாவின் கண்ணில் தெறித்து மறைகிறது. கடலில் எறிந்து விளையாடிய டென்னிஸ் பந்து நனைந்து காய்ந்தபின் ஜெருமியின் காற்சட்டைப் பொக்கட்டில் கிடக்கிறது. நாலாம் வகுப்பில் படிக்கும் அவனுக்கு ஒன்பது வயது.

ரேடியோவில் காற்றின் வேகம் 80 இலிருந்து 90 கிமீ வரை அதிகரிக்கலாமென்றும்; பின்னிரவில் மழைக்கு சாத்தியமுண்டு என்றும் வானிலை அறிவிப்பில் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதற்கிடையில் கன்பெராவை அடைந்து விடலாம். இன்னும் ஒரு இரண்டரை மணி நேர ஓட்டம்தான். ரேடியோவில் தொண்ணூறுகளில் வெளிவந்த அவளுக்குப் பிடித்தமான பாடலொன்று வருகிறது அவளும் சேர்ந்து முணுமுணுக்கிறாள். 

அமண்டாவுக்குக் கார் ஓட்டப் பிடிப்பதில்லை. அடைத்த உலோககூட்டுக்குள் செல்லும் அலுப்பான சவாரி என்பாள். குதிரைச் சவாரி அவளுக்கு மிகப் பிடித்ததொன்று. அவள் தந்தை நாட்டுப் புறத்தில் குதிரை பண்ணையொன்று வைத்திருந்தார்.  சின்ன வயதிலேயே தகப்பனுடன் குதிரைகளை வளர்ப்பதும் பிறகு பயிற்சி கொடுப்பதும் என்று அமண்டா ஆர்வமாக இருந்தாள். ஜேம்ஸைத் திருமணம் செய்தபின் நகரத்திற்கு வந்து விட்டாலும் அமண்டாவுக்குத் தான் வளர்த்த குதிரை ஜுலியை இன்னும் மறக்க முடியவில்லை. லாவகமாக ஏறுவது முதல் தன் கால்களின் அசைவில் ஜுலியைத்திசை திருப்புவது வரை அவள் இளமையிலேயே இந்த வித்தைகளை கற்றுக் கொண்டு விட்டாள். இரு மாதத்திற்கு ஒரு முறையாவது வார விடுமுறையில் குழந்தைகளுடன் பண்ணைக்குச் சென்று ஜுலி மீது சவாரி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததுடன் ஜுலியின் ஞாபகமாகவே பெண்ணுக்கு ரைம் பண்ணும் ஹேலி என்று பெயர் வைத்தாள்.

வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதையில் ஏறி இறங்கி பின் காட்டுப்புற சமதரையில் ஓடிக்கொண்டிருக்கிறது கார். அந்த இரு வழிப் பாதையோரமாக வில்லொ மரங்களும் வெள்ளைக் கம் மரங்களும் காற்றுடன் உக்கிரமாக மறியல் போராட்டம் நடாத்திக் கொண்டிருந்தன. தலை விரித்த குட்டைப் பெண்ணின் கூந்தலைப் போல வில்லொவின் கொடிகள் காற்றில் அலைக்கழிந்து மிதந்தன. இடையிடையே காற்றுக்கு புறந்திரும்பி வெள்ளிலை காட்டும் பொப்லார் மரங்களும் நின்றிருந்தன அமண்டாவின் காருக்குப் பின்னால் யுட் ஒன்றில் வந்து வந்து கொண்டிருந்தவன் பிளம்பர் தொழில் செய்யும் டெறி. காற்றின்  இழுப்புக்கு அமண்டாவின் கார் பக்கவாட்டாக அசைவதை டெறி காண்கிறான். இனிமேல் நடந்தவை எல்லாம் டெறிக்கு ஒரு ஸ்லோ மோஷன் காட்சிகளாகி விட்டிருந்தன.

பாதையின் இடப்பக்கமாக நின்றிருந்த கிழட்டு வெள்ளைக் கம் மரமொன்று காற்றுக்குச் சரிந்து அமண்டாவின் காரின் மேல் விழுந்ததும் கார் வலப்பக்கமாகத் திரும்பி தெருவின் நடுவிலிருந்த கொங்கிறீட் தடுப்புச் சுவரில் பலமாக மோதியதும் யுட்டை நிறுத்தி விட்டு உதவிக்கு ஒடியதில் எவ்விதத்திலும் வெளியே அகற்ற முடியாத படி மரத்தின் கீழ் நசுங்கி போயிருந்த இருவரை கண்டதும் பின் சீட்டிலிருந்த பிள்ளைகளைத்தூக்கிக் கொண்டு அம்புலன்ஸைக் கூப்பிட்டதும் சில கணங்களில் நிகழ்ந்து விட்டதாக டெறிக்குத் தோன்றியது.
அமண்டா அவ்விடத்திலேயே இறந்து விட்டாள். காயமுற்று மயக்க நிலையிலிருந்த ஜேம்ஸை சிகிச்சைக்காக கொண்டு செல்ல ஹெலிகொப்டர் ஒன்றும் வந்திருந்தது.  


வெளியே வெக்கைக் காற்றுக்குள் நின்று விட்டு வீட்டுக்குள் வந்த ஹேலி போத்தலுக்குள் இலைகளுடன் போட்டு மூடி வளர்க்கும் லேடி பீற்றில் வண்டுகளைப் பார்க்க அறைக்குள் போகிறாள். சிவப்பு நிறத்தில் கறுப்புப் பொட்டுகள் கொண்ட சிறிய வண்டுகள் பச்சை இலைகளுக்குள் பதுங்கியிருந்தன. 
கதவு மணிச் சத்தம் கேட்கிறது. ஜேம்ஸ் அன்று மத்தியானமே வேலையால் வந்து விட்டான். வந்து கொண்டே ஹேலியின் தலையில் குனிந்து முத்தமிட்டான். வழக்கமாக ஹெலியை தன் முதுகில் உப்பு மூட்டையாக ஏற்றிக் கொள்வான். அன்று இருந்த காடுத்தீ பதற்றத்தில் உப்பு மூட்டை ரத்து. எல்லாரையும் வீடுகளுக்குச் சென்று நெருப்பிலிருந்து அவரவர் வீடுகலைப் பாதுகாக்கும் முன்னேற்பாடுகளைச் செயும்படி ரேடியோவில் அறிவிப்பு வந்து கொண்டிருந்தது. ஜேம்ஸ் கட்டைக் காற்சட்டை மாற்றிக் கொண்டு முதலில் வளவின் பின்புற வேலியோரமாக நின்ற கமிலியாஸ் மரங்களின் இலைக்குப்பையை அப்புறப்படுத்தினான். பிறகு நெருப்பு பிடிக்காமலிருக்க ஹோஸ் பைப்பினால் வீட்டின் செங்கட்டிச் சுவரிலும் கூரையிலும் தண்ணீரைப்; பீச்சியடிக்கத் தொடங்கினான். பீலித் துவாரங்களைத் துணியால் அடைத்து நீரை நிரப்பினான்.

வெளியே ஓடிய ஹேலி முன்புறத்தோட்டத்தின் புற்தரையைப் பாய்ந்து தாண்டுகிறாள். புற்களின் இலைகளெங்கும் சாம்பற் துகள்கள் ஒட்டியிருந்தன. மேலே வானத்தில் புகைக்குள் அகப்பட்ட சூரியன் பழுத்த பீச் பழ நிறத்திலிருந்தான். வேலியொரத்தில் நின்ற இரு சூரிய காந்திப் பூக்கள் நூதனச் சூரியனை முழுசிப் பார்த்துக் கொண்டிருந்தன. வானமும் சிவந்திருந்தது. வெறுங்கண்களால் சூரியனை நன்றாகப் பார்க்க முடிந்தது. ஹேலி நிலத்தில் விழுந்திருந்த சூரிய காந்தியின் மஞ்சள் இதழ்களைப் பொறுக்குகிறாள்.   

தாடி வைத்த குருவானவர் தனது பிரசங்கத்தின் நடுவே மஞ்சள் நிற டியுலிப் பூ ஒன்றையும் அதன் குமிழ் விதையையும் பலிபீடத்தின் பக்கவாட்டிலிருந்த திரை மறைவிலிருந்து எடுத்து வருகிறார். அந்தக்; கோடையில் எங்குதான் டியுலிப்பைக் கண்டெடுத்தாரோ? பிறகு ஒரு மந்திரவாதியைப்போல இரண்டையும் உயர்த்தி சபைக்குக் காட்டுகிறார். பிறகு ஹேலியைப் பார்க்கிறார். புன்னகைத்தவாறே ஏதேதோ கூறுகிறார். 
ஆராதனையில் முன் வரிசையில் தகப்பனுடனும் தம்பியுடனும் அமர்ந்திருந்த ஹேலிக்கு அவர் சொன்னது எதுவும் கேட்கவில்லை. அவளுக்கும் குருவானவருக்கும் இடையில் அமண்டாவின் உடல் மலர் வளையங்கள் சூழக் கிடத்தப் பட்டிருக்கிறது. ஜேம்ஸ் அமண்டாவையும் ஜெருமியையும் ஆதரவாக அணைத்துக் கொண்டிருந்தான். குருவானவர் தான் பிரசங்கத்தின் இறுதியில் இனி இந்தப் பிள்ளைகளின் மேல் சபையாரின் அன்பு எப்போதும் சூழ்ந்திருக்கட்டும் என்ற வேண்டுகோளுடன் முடிக்கிறார். ஜேம்ஸின் கரம் பிள்ளைகளை இறுக்குகிறது. 

பிரேத அடக்கம் முடிந்து வீடு வந்த பின்பே ஹேலி தகப்பனிடம் அந்த டியுலிப் பூவை பற்றிக் கேட்கிறாள். அந்த குமிழ் விதைதான் அம்மாவாம். அந்த விதை உக்கித்தான் அழகிய டியுலிப் வந்ததாம். அதே போல அம்மாவின் உடல் அழிந்தாலும் அவ இன்னொரு அழகிய உருவம் பெற்று விட்டாவாம்.
"அது யார் அந்த உருவம்"?
ஹேலியின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவள் தலையில் முத்தமிடுகிறான். 


மலைகளின் எரியும் நெருப்பை சுழல் காற்று ஊதி ஊதிப் பெருப்பிக்கிறது. கம் மரங்களுடன் பைன் மரங்களும் போட்டி போட்டுக்கொண்டு எரிகின்றன. விண்டரிலும் இலை கொட்டாத மரங்களிவை. இதை விட கம் மரத்தின் எண்ணைப்பற்று நெருப்பின் வேலையை இலகுவாக்கி விடுகிறது.  எரிந்து கறுத்துப் போன இலைகள் தும்பிகள் பறப்பது போல சுழன்றபடியே வந்து விழுகின்றன. புற்தரையில் விழுந்த கருகிய இலைகளைப் பொறுக்கிச் சேர்த்துக் கொண்டு போய் ஜெருமியிடம் காட்டுகிறாள் ஹேலி. 

தெருவில் பலர் பதட்டத்துடன் நிற்கின்றனர். புகைச் சுவாசம் ஒத்துக்கொள்ளாத பலர் மூக்கைத்துணியால் கட்டிக்கொண்டிருக்கின்றனர். நெருப்பு வீடுகளைத் தொடுமுன் வெளீயேறிவிடும் பரபரப்பு பலருக்கு. தங்குவதற்கு தற்காலிக முகாம்கள் நகரின் சில இடங்களில் அமைக்கப் பட்டுள்ளதாக ரேடியோ அறிவிப்பு வந்து கொண்டிருந்தது.  
ஹேலியிடமும் ஜெருமியிடமும் உடுப்புகளை சூட்கேஸில்; போட்டு ஆயத்தமாக இருக்கும்படி சொல்லிவிட்டு முக்கியமான பத்திரங்களை எடுக்கப் போனான்; ஜேம்ஸ்.  

கரடிப் பொம்மையையும்; அம்மாவின் அல்பத்தையும் லேடி பீற்றில் வண்டுகளையும் ஹேலி எடுத்துக் கொண்டாள்.  வெக்கை தாங்காது பறந்து வந்த அழகிய ரொசெல்லா ஒன்று பின் பக்க வாசற் கண்ணாடிக் கதவருகே ஒதுங்கியது. 
அதற்குத் தானியங்கள் எடுத்து வர உள்ளே ஓடினான் ஜெருமி. திரும்பி வருவதற்கிடையில் அது பறந்து போய் விட்டது. இந்த ஆரவாரத்திற்கிடையில் ஜெருமி வளர்த்து வந்த பூனைக்குட்டி தொலைந்து விட்டது.

இரவு ஏழு மணியளவில் காற்று கொஞ்சம் அடங்கியது. ஆனாலும் மலை முகட்டில் எரியும் சுவாலை எரிமலைக் குழம்பு தள்ளுவது போல இருட்டில் பயமுறுத்திக் கொண்டிருந்தது. அடிக்கடி தீ அணைக்கும் ஹெலிகொப்டர்கள் தண்ணீர்த் தொட்டிகளைத் தொங்க விட்டபடி பறந்தன. அன்று ஹேலியின் வீட்டுக்கு கூப்பிடு தொலைவு வரை வந்த நெருப்பு புற நகரில் ஏறத்தாழ ஐநூறு வீடுகளை எரித்து நான் கு பேரையும் பலி கொண்டது.
இரவு நெடு நேரம்வரை பூனை திரும்பி வரக்கூடுமென்று ஜெருமி விழித்திருந்து காதுகளைக்கூர்மையாக வைத்திருந்து அதன் முனகல் சத்ததிற்காகக் காத்திருந்தான். ஹேலி படுக்கைக்குப் போகுமுன் ஏணியில் ஒருதரம் ஏறி மலைகளைப் பார்த்தாள். விண்டரில் பனி பூத்திருக்கும் மலைகள் நெருப்புப் பூத்திருந்தன.

சுpல நாட்களுக்குப் பிறகு தகப்பனுடனும் தம்பியுடனும் கடைக்குப் போனாள் ஹேலி. கடைதெருவின் முடிவில் நெருப்புக் காயம் படாத தரையில் ஒரு பெரிய நீலக்கூடாரம் திடீரென முளைத்திருப்பதைக் காண்கிறனர். ஊருக்கு சேர்கஸ் வந்து விட்டது. காட்டுதீயின் பேரழிவினால் சோர்ந்திருந்த பெற்றொர்க்கும் பிள்ளைகளுக்கும் ஒரு புது உற்சாகம். ஒரு நண்பகல் காட்சிக்குப் பிள்ளைகளை அழைத்துச் சென்றான் ஜேம்ஸ். பெரிய கூடாரத்தை சுற்றிவர குளிர் பானங்கள் சிற்றுண்டி விற்பனைக்கு சிறிய கொட்டகைகள் மற்றும் தற்காலிக கழிவறைகள் இவை எல்லாவற்றையும் ஏற்றி 
இழுத்து வந்த ஏழெட்டு டிரக்குகள் பின்னணியில் நின்றன. சேர்கஸ் முடிந்து வரும் போது நுரை கொண்ட ஐஸ் கப் வாங்கி கொண்டனர். 

வரும்போது தீயில் அழிந்த புறநகர்ப்பகுதியைப் பார்ப்பதற்காக அவ்வழியே காரைச் செலுத்தினான் ஜேம்ஸ். எரிகாயம் பட்ட கறுத்த நிலத்தில் பட்ட மரத்தின் இலைகள் காற்றுக்கு உதிர்கின்றன. எரியாமல் எஞ்சியிருந்த மரங்களின் நிழலில் புல்லுக்கு அலைந்து களைத்த கங்காருக்கள் படுத்துக் கிடக்கின்றன. காட்டுத்தீ மரங்களை மட்டுமல்ல புற்களையும் விட்டு வைக்கவில்லை. சாட்டுக்கு மழை ஓரிரு முறை வந்து நாலு துளிகளை விசிறி விட்டுப் போகிறது. மண் மணத்தை விட சாம்பல் மணம் உரத்து ஓங்குகிறது. காரை நிறுத்திவிட்டு மூவரும் இறங்கிப் பார்க்கின்றனர். எரிந்து போன கம் மரங்கள் நடனமிடும் கறுத்தப் பிசாசுகள் போல கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிந்தன. சில மரங்களின் அடிப்பகுதியிலிருந்து இன்னும் புகை வந்து கொண்டிருந்தது.  

"அநியாயமாய் அழிந்து விட்டன" இது ஜெருமி.
"கவலைப்படாதே கம் மரங்களை மீண்டும் நடலாம். மீண்டும் ஒரு தோப்பு உருவாகும்" என்றான் ஜேம்ஸ்.
"ஆனால் பல வருடங்கள் செல்லுமே"
"ஆனால் இது ஒன்றும் எனக்குக் கவலை இல்லை" இது ஹேலி.
"ஏன் அப்படிச் சொல்லுகிறாய் " என்றான் ஜெருமி.
"இந்த கம் மரம்தானே அம்மாவைக் கொன்றது"
ஜேம்ஸ்ம் ஜெருமியும் திடுக்கிடுத் திரும்பி அவளைப் பார்த்தனர்.
ஹேலி காரில் போய் ஏறிக்கொண்டாள்.
(நன்றி - உதயம் )