எம்.எச். 370 விமானத்தினுடையது என நம்பப்படும் இரண்டாவது பாகம் கண்டுபிடிப்பு
இந்தியாவில் ரயில் விபத்து : 30 பேர் பலி, பலர் காயம்
மீட்கப்பட்ட விமானத்தின் பாகம் எம்.எச்.370 உடையதே : மலேசிய பிரதமர்
600 குடியேற்றவாசிகளை ஏற்றி வந்த படகு லிபிய கடற்கரைக்கு அப்பால் மூழ்கியது
எம்.எச். 370 விமானத்தினுடையது என நம்பப்படும் இரண்டாவது பாகம் கண்டுபிடிப்பு
03/08/2015 காணாமல்போன மலேசிய எம்.எச். 370 விமானத்தினுடையது என நம்பப்படும் இரண்டாவது பாகமொன்று பிரான்ஸின் இந்து சமுத்திர தீவான றீயூனியன் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் புதன்கிழமை எம்.எச். 370 விமானத்தினுடையது என சந்தேகிக்கப்படும் இறக்கைப் பாகமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த புதிய பாகம் சென் டெனிஸ் நகரின் தெற்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி விமானமானது கடந்த வருடம் மார்ச் மாதம் 239 பேருடன் பயணித்த வேளை காணாமல் போனது.இந்நிலையில் முதலாவதாக கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்ட விமானத்தின் பாகம், அது காணாமல்போன எம்.எச். 370 விமானத்திற்குரியதா என்பதை கண்டறிவதற்கு பரிசோதனை மேற்கொள்ளும் முகமாக பிரான்ஸுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அது போயிங் 777 ரக விமானத்தினுடைய சிதைவு என நம்பப்படுகிறது.இந்நிலையில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் காணாமல்போன ஒரேயொரு போயிங் 777 ரக விமானமாக எம்.எச். 370 உள்ளமை, அந்தப் பாகம் அந்த விமானத்தின் சிதைவு என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் றீயூனியன் தீவுப் பிராந்தியத்தைச் சேர்ந்த இருவர், தாம் கடந்த மே மாதமளவில் விமானத்தினது என நம்பப்படும் பயணப்பொதிகளையும் ஆசனமொன்றையும் கண்டதாகவும் ஆனால் குறிப்பிட்ட எம்.எச். 370 ஆனால் விமானத்தின் இறக்கைப் பாகம் கரையொதுங்கும் வரை அவை விமானமொன்றிலிருந்து வந்தவையாக இருக்கக் கூடும் என தாம் நினைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
காணாமல்போன எம்.எச். 370 விமானத்தை தேடும் நடவடிக்கையொன்று றீயூனியன் தீவுக்கு சுமார் 4,000 கிலோமீற்றர் தொலைவில் அவுஸ்திரேலியாவால் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள விமானப் பாகங்கள் எம்.எச். 370 விமானத்தினுடையது என உறுதிப்படுத்தப் படும் பட்சத்திலும் அந்த விமான அனர்த்தத்திற்கான காரணம் தொடர்ந்து மர்மமாகவே இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். நன்றி வீரகேசரி
இந்தியாவில் ரயில் விபத்து : 30 பேர் பலி, பலர் காயம்
05/08/2015 இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் ஹர்தா பகுதியில் நேற்றிரவு இரண்டு ரயில்கள் தடம்புரண்டதில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 25 ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த ரயில்கள் மச்சக் ஆற்றின் மேம்பாலத்தை கடக்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த பகுதிளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக குறித்த ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. வெள்ளம் ரயில் தண்டவாளத்தை மூழ்கும் அளவுக்கு இருந்தமையால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
மீட்கப்பட்ட விமானத்தின் பாகம் எம்.எச்.370 உடையதே : மலேசிய பிரதமர்
06/08/2015 இந்தியப் பெருங்கடலில் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் பாகங்கள் காணமல்போன எம்.எச்.370 மலேசிய விமானத்தினுடையது என மலேசியப் பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த வருடம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி 239 பயணிகளுடன் மலேசிய விமானம் புறப்பட்டுச் சென்று 2 மணி நேரத்தில் திடீரென மாயமானது.
அதனைத் தேடும் பணியில் சர்வதேச நாடுகள் தீவிரமாக ஈடுபட்டன. இருப்பினும் விமானத்தின் எந்த ஒரு பாகமும் கிடைக்கவில்லை.
விமானத்திற்கு என்ன நடந்தது. அதில் பயணித்த பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது ஓராண்டு தாண்டிவிட்ட நிலையிலும் புரியாதபுதிராகவே இருந்து வந்தது.
இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள ரீயூனியன் தீவின் கடற்கரையில் (இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில்) சில தினங்களுக்கு முன்பு ஒரு விமானத்தின் பாகம் கரை ஒதுங்கியது.
இது மாயமான மலேசிய விமானத்தின் பாகமாக இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. இவ்வாறு மீட்கப்பட்ட விமானத்தின் பாகம் 2 மீற்றர் நீளமும் ஒரு மீற்றர் அகலமும் உடையது.
விமானத்தின் பாகங்கள் பிரான்ஸ் நாட்லுள்ள தொவ்லொசுவிலுள்ள பாதுகாப்பு துறையின் ஆய்வகம் ஒன்றில் ஒப்படைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
அந்தப் பாகங்களை ஆராய்ந்த சர்வதேச ஆய்வாளர்கள் அவை எம்.எச் .370 யினுடையது என இறுதியாக உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில் இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பாகங்கள் காணமல்போன மலேசிய விமானத்தினுடையது என்று மலேசிய பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
600 குடியேற்றவாசிகளை ஏற்றி வந்த படகு லிபிய கடற்கரைக்கு அப்பால் மூழ்கியது
07/08/2015 லிபிய கடற்கரைக்கு அப்பால் சுமார் 600 குடியேற்றவாசிகளுடன் புதன்கிழமை மூழ்கிய படகொன்றில் பயணித்த பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேற்படி படகு லிபிய கடற்கரையிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவில் மூழ்கியிருந்தது.ஆரம்பத்தில் அந்தப் படகில் பயணித்த நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்பட்டது. எனினும் அவர்களில் சுமார் 400 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிலையம் பின்னர் தெரிவித்தது.
இதுவரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பலர் காணாமல்போயுள்ளதாகவும் இத்தாலிய கரையோர காவல் படையினர் தெரிவித்தனர்.இந்த ஆண்டு மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவிற்கு செல்லும் முயற்சியின் போது 2,000 க்கு மேற்பட்ட குடியேற்றவாசிகள் உயிரிழந்திருந்தனர். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment