உள்ளமதை கோவிலாக்கு.. (கவிதை) வித்யாசாகர்!

கோவிலின் அமைதியைக் கொண்ட இதயங்களுக்கு
சாமியைப் புரியவில்லை,
சாஸ்திரம் சமயம் சகுனமெல்லாம் செய்ததன்
சூழ்சும தெளிவுயில்லை,
சக்கைமேல் சக்கைபோல் பாலினை
மறைத்ததாய் மூலத்தை மறைத்துவிட்டோம்
சின்னதாய் சின்னதாய் தெளிந்திட இடம்தர
மாற்றத்தை மறுத்துவைத்தோம்.,
சிலுவையோ சிவமோ சலீமோ நம்பினால்
யாதுமே தெய்வமன்றோ;
கடவுளும் கற்பிதமும் கற்பனையும்
தந்ததெல்லாம் திறவுகோல் ஒப்ப அன்றோ ?
அறிவது புரிவது அன்றைய வாழ்தலை
அடுக்கடுக்காய்க் கொண்டுபிள்ளாய்,
பிறகது புதியது உலகமே மாறிட
பழங்கதை சோதி பிள்ளாய்.,
புற்றோ மரமோ கல்லோ கைதொழு


உனக்குள் தெய்வமும் தானேயெழும்’
பற்றோ பகிரும்குணமோ ஒற்றை இடமமரும்
உறுதியோ யிருந்தால் வீட்டிலும் சக்தி தெரியும்,
நேர்த்தியாய் நின்றிட நேர்மை புரிந்திட
ஏற்றதே பக்தி ஆயின, பழகப் பாதையாயின;
முன்னவர் மூத்தவர் நேர்வழி வாழ்ந்ததே
பின்னவர் போற்றிடப் பொதுமறை யென்றுமாறின,
உம்மவர் எம்மவர் வேற்றுமை அறுபட
சிந்தனைச் சேர்த்துவைப்பீர், இனி
சன்னதி போவதும் சங்கரன் ஆவதும்
ஒன்றுதான் என்றுணர்வீர்!!
--------------------------------------------------------------------------------------
வித்யாசாகர்

No comments: