மவுண்ட்றூயிட் தமிழ்க் கல்வி நிலையத்தின் 2013 ம் ஆண்டின் பேச்சுப் போட்டி - சோனா பிறின்ஸ் .

.


மவுண்ட்றூயிட் தமிழ்க் கல்வி நிலையத்தின் 2013 ம் ஆண்டின் பேச்சுப் போட்டி 11/5/2013 அன்று கொலிற்றன் பாடசாலையில் இடம்பெற்றது .ஒரு நிமிட மௌன அஞ்சலியை அடுத்து ,தலைவர் பெருமாள் குமார் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் Ed Husic அவர்கள் உரையாற்றிய பின்பு பேச்சுப் போட்டிகள் ஆரம்பமாகின .
யாமறிந்த மொழிகளிலே இனிதான தெங்கும் காணோம் எனும் பாரதியாரின் கூற்றுக்கமைய பூக்கள் போன்ற மழலைகள் பூவிதழ்களை மெல்ல விரித்து பூக்களைப் பற்றி பேசும்போது அக்குழந்தைகளின் முகங்கள் மட்டும் பூக்கள் போல் இல்லை ,குவளை போன்ற கண்களும் சிந்தனைக்கேற்றாற் போல் அங்கும் இங்கும் தாவிக்கொண்டு அழகைச் சொரியும் வேளை ,கறுப்பு வெள்ளை பூக்கள் உண்டா ,உன்கண்ணில் நான்கண்டேன் ,உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்றேன் எனும் கவிஞரின் பாடல் வரிகள் நினைவில் வந்து மணம் வீச பூக்களே பூக்கள் பற்றிப் பேசும் விந்தையில் என் சிந்தை மகிழ்ந்தேன் .குழந்தைகளே தங்கள் அரும் பெரும் செல்வங்கள் என அவையில் பெற்றோர் அகமகிழ்ந்திருக்க , குழந்தைகளோ தமது செல்லப்பிராணி பற்றி பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார்கள் . இரவில் பிரகாசமான பார்வையுடன் உலாவரும் வட்டக் கண்ணனான , பால் பருகும் பூனையைப் பற்றிப, பால்பருகிய பருவம் கடந்து பள்ளிப் பருவத்தில் இருந்த குழந்தைகள் மழலை மொழியில் பேசினார்கள் .

அறிவுப் பசியிற்கு கல்வியின் அவசியம் பற்றி பேசும் போது , அதன்மேன்மை ,அதனால் ஏற்படும் நன்மை என்பதை ஔவைப் பாட்டியையும் துணைக்கழைத்து "எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்பதோடு, நவீன தொழில் நுட்பம் முதல் கலை ,இலக்கியம் , விளையாட்டுத்துறை ,எல்லாவற்றிற்குள்ளும் கல்வி ஊடறுத்து ,மனித மூளையையும் ஊடறுத்துச் சென்று , மண்ணில் மனிதராகவும் , சிறந்த அறிவாளிகளாகவும் , வாழவைக்கின்றது எனக் கூறிய வேளை குழந்தைகளிடம் இருந்தும் நாம் கற்கின்றோம் என எண்ணத் தோன்றியது .

செம்மொழித் தகுதி பெற்று , இரண்டாயிரம் ஆண்டினும் மேலாக பேச்சுமொழியாக , எழுத்து மொழியாக , "தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" எனும் பாரதியாரின் விருப்பாக இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மொழியை மேலும் காப்போம் ,ஓங்கி வளரச் செய்வோம் என்ற சிறுவர்களின் உறுதி மொழி கேட்கையில் ,தாய் மொழிப் பற்று கொண்ட தமிழர்கள் வாழும் வரை தமிழும் வாழும் என்ற நம்பிக்கை நெஞ்சில் துளிர் விட்டது .

பால்கொடுக்கும் கோமாதாக்கள் ,கொலைக் களங்களுக்கு இழுத்து வரப்படுவதால் குழந்தைகளுக்கு சத்துணவுத் தட்டுப்பாடு . பசுமையான மரம், செடிகொடிகள் அழிவினால் பருவ மழைக்கு தட்டுப்பாடு ,என்பதை கூறி , மனிதனின் ஆரோக்கியத்திற்கு இயற்கையும் ,பிற உயிரினங்களும் அவசியம் தேவையானவை என்பதை பக்குவமாக பள்ளிச் சிறுவர்கள் எடுத்துரைத்தார்கள் .

தாயானவள் குழந்தைக்கு எவ்வளவு முக்கியமோ அதுபோல் தாய் மொழியும் எல்லோருக்கும் முக்கியம் என்பதையும் . மூத்த தமிழ் மொழி , மூத்த தமிழ் குடி என நினைக்கையில் , தமிழன் என்று என்னை நானே அடையாளப்படுத்துவதில் பெருமைப்படுகின்றேன்எனதலைநிமிர்ந்துமேடையில்சிறுவர்கள்கூறுகையில் ,தாய்மொழியாம் நம் தமிழ்மொழியால் மனதில் கொஞ்சம் தற்பெருமை தட்டியது .நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என மகாகவி பாரதியாரால் சிறப்பாக கூறப்பட்ட சிலப்பதிகாரத்தை இசைக்காப்பியம் , மூவேந்தர் காப்பியம் , வரலாற்றுக் காப்பியம் , நாடகக் காப்பியம் , என அதன் பெருமைகளைக் கூறி , இன்பம் -துன்பம் , அழுகை - சிரிப்பு , என முரண்பட்ட வடிவங்களால் ஆன காப்பியத்தின் பெருமையால் இளங்கோவடிகளுக்கு புகழாரம் சூட்டினார்கள் வளர்ந்து வரும் சிறார்கள் .

அன்பிலார்க்கு இவ்வுலகம் இல்லை .அன்பில்லாதவர் இந்த உலகத்தில் வாழத் தகுதியற்றவர் . அன்பினால் சாதிக்கவும் முடியும் . போதிக்கவும் முடியும் .என்பதோடு உறவுகள் அன்புக் கயிற்றால் இணைக்கப்பட்டுள்ளன . மேலும் அன்பு வாழ்வை இனிமையாக்குகின்றது . புனித உறவுகளைத் தேடித்தருகின்றது . அன்பு பொழியும் இடமெல்லாம் சொர்க்கமாகவும் , மறையும் இடமெல்லாம் நரகமாகவும் மாறும் . என அன்பின் மகத்துவத்தை அன்போடு மாணவர்கள் எடுத்துரைத்தார்கள் .

ஓடும் இரயிலுக்குள் ஓடி ஒதுங்கிய வண்ணம் பயணிகள் அமர்ந்திருக்க , பச்சைக் கோடி படபடக்க பக்குவமாய் நகர்ந்த யாழ்தேவியுடன் பச்சை வயல்களும் ,ஆடுமாடுகளும் ,வீடு ,நகரங்களும் கூடவே நகர்ந்து சென்று கொண்டிருக்க , ஏறுவோரும் ,இறங்கிச் செல்வோருமாய் ஊர்வலம் போன யாழ்தேவியின் அனுபவப் பேச்சு ,அங்கிருந்தோரை மீண்டும் யாழ்தேவியில் ஏற்றி நகர்ந்த்தது .

இப் பேச்சுப் போட்டிக்கு நடுவர்களாக திரு அனகன் பாபு , திருமதி மேர்ளின் இயேசுரெட்ணம் ,
திரு அ . நிமலேந்திரன் ஆகியோர் செயலாற்றினார்கள் .இது ஒரு பேச்சுப் போட்டியல்ல . ஒரு நிகழ்ச்சி போன்றே எனக்குத் தோன்றியது . ஒரு நிமிட அகவணக்கம் . மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அழைக்கப்பட்டு எமது நிலைப்பாடுகள் தெரிவிக்கப் பட்டது சிறப்பு மிக்கது .
இப்படியான பேச்சுப் போட்டிமூலம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளிகளின் மனனத்தில் கூடிய கவனம் எடுக்கும் போது அவை பற்றிய அறிவு பிள்ளைகளுக்கு ஏற்படும் . போட்டியில் முதலாம் இடம் ,அல்லது இரண்டாம் இடம் வருவதல்ல முக்கியம் . மனத் தைரியம் அவசியம் . இலங்கையில் சிரமப்படும் நம் தமிழ் மொழி இந்த நாட்டில் அல்ல ,எந்த நாட்டிலும் சிரமமின்றி நன்றாக வாழ்கின்றது என தமது கருத்துக்களை திரு அ .நிமலேந்திரன் அவர்கள் கூறினார்கள் .

அதனைத் தொடர்ந்து திருமதி மேர்ளின் இயேசுரெட்ணம் அவர்கள் கூறுகையில் , நடுவராக இருந்து பிள்ளைகளிடம் நானும் கற்றுக் கொண்டேன் . மேடையிலே நிற்கும்போது எப்படி நிற்க வேண்டும் என்பதை ஒவ்வொருபிள்ளைகளும் நன்குதெரிந்துவைத்துள்ளார்கள் .அடுத்த தடவை பிள்ளைகளின் பயண அனுபவங்களை , அவர்களாகவே எழுதி ,மனனம் செய்து பேசினால் இன்னும் நல்லது .மற்றும் வீட்டில் அதிகம் தமிழ் பேசும் பிள்ளைகளின் பேச்சில் நிறைய மாற்றம் ஏற்படும் . எனவே இவற்றில் பெற்றோர்தான் கவனம் எடுக்க வேண்டும் என்றார் .

இறுதியாக திரு அனகன் பாபு அவர்கள் கூறுகையில் , அருமையான நிகழ்ச்சி . சொல்லவேண்டிய கருத்துக்களை அருமையாக சொல்லியுள்ளார்கள் . பெற்றோர்களுக்கும் , எமக்கும் சேர்த்து வழங்கப்பட்டதாக உணர்ந்தேன் . இது ஒரு தமிழ் விழாபோல் தோன்றியது . அருமையாக கோர்த்துக் கொடுத்த ஆசிரியர்களுக்கு நன்றி . நல்ல மேடையமைத்துக் கொடுத்த நிர்வாகத்திற்கு நன்றி . தம் கடமையை அருமையாக ஆற்றிய பெற்றோர் , குழந்தைகளுக்கு நன்றி . நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் பொது"என்பிள்ளை என்னமாதிரி ஆங்கிலம் பேசுறான் பாரு " எனப் பெற்றோர் பெருமைப் பட்டுக்கொள்ளாமல் , பிள்ளை தமிழ் பேசும் போது பெருமைப் பட்டு ,அவர்களுக்கு தமிழ் அறிவை ஊட்டுவதற்கு ஒவ்வொருபெற்றோரும்
முயற்சிக்க வேண்டும் என்றார் .அத்துடன் அதிபர் திரு மா. பாலகுமார் அவர்களும் பெற்றோர்களுக்கும் ,பிள்ளைகளுக்கும் நன்றிகூறினார் . இறுதியாக நிர்வாக சபை உறுப்பினரான திரு த . யோகராஜா அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி நிறைவு செய்தார் .