அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..



வண்ணங்கள் ஏழு!  எண்ணங்கள் ஆயிரம்!
வாழும் வாழ்க்கையில் நாம் காணும் மனிதர்களின் குணநலன்களும் பலவிதம்தான்!  சொந்தங்களாலும்
பந்தங்களாலும் மனிதன் சிறை வைக்கப்பட்டிருக்கிறான்
என்பது கூட மிகையில்லை.

காட்டு மனமிருந்தால் கவலை மறந்துவிடும்
கூட்டைத் திறந்துவிட்டால் குருவி பறந்துவிடும்!
என்பார் மற்றொரு பாடலில் கவியரசர்..
காலில் விலங்குமிட்டோம்..
கடமையென அழைத்தோம்
என்றதும் அவரே!

கூடிவாழ்ந்தால் கோடி நன்மை.. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதெல்லாம் ஏட்டில் மட்டும் எழுதப்பட்ட வாசகங்களாய் மாறிப் போயின!  உடன் பிறந்த சொந்தம்.. உயிர் வழி வளர்ந்த பந்தம் என்பதெல்லாம் பழைய கணக்காய் தெரிகின்றன! ஆயிரம்தான் ஆனாலும் வாயும் வயிறும் வேறு என ஆகிப்போன பூமியில் அட.. என்ன சொல்ல முடிகிறதுபந்தங்கள் தெறிக்கப்பட்டுத் தனித்தனியாய் வாழ்கின்றனர்!!

ஏட்டுக் கல்வியென்றும் தொழில் கல்வியென்றும் ஆயிரமாயிரம் படிப்புகள் புதிது புதிதாய் துவங்கப்படுகின்றன!  இந்த உறவுகளுக்குள் பாலம் அமைக்கும் எந்த முறையும் இதுவரையில்லை.  ஏன்? இந்தக் குழப்பங்கள்எதற்காக இந்தப் பிரச்சினைகள்விட்டுக்கொடுப்பதை விட்டுவிட்டு விலகி நிற்பதை ஏன் தேர்ந்தெடுக்கிறோம்?  பரஸ்பர உறவுகளைப் பாதுகாப்பதைவிட தண்டிப்பதை ஏன் விரும்புகிறோம்

 மன அழுத்தம், மன பாரம் இவைகளால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிக் கவலைப் படாமல், நடைமுறைச் சாத்தியத்தில் வாழ்ந்து பார்க்க ஏன் முயற்சிப்பதில்லை!  பகுத்துப் பார்க்க வேண்டிய ஆயிரமாயிரம் விஷயங்கள் இருக்கும்போது உறவுகளை மட்டும் ஏன் வகுத்துக்கொண்டே போகிறோம்ஈவு என்ன கிடைக்கும்
 மீதியென்ன வரும்??


இரக்கம், கருணை, அன்பு, கொடை, ஈகை என்பவற்றால்
கட்டப்படும் உறவென்னம் மாளிகையில் இரத்த சம்பந்தமும்
உயர்ந்து காணப்படுகிறது. என் அண்ணன், என் தம்பி, என் அக்கா,
என் தங்கை, என் மாமா.. என் அத்தை என்று எல்லா மலர்களும் ஒரே பொய்கையில் பூத்துக்குலுங்கும் அழகு என்னதான் அழகாக
இருந்தாலும் ஒற்றை மலருக்கு வருவதில்லை.

இதிலே இன்னும் கொடுமையாக.. பெற்றவர்களை முதியோர் இல்லங்களில் கொண்டுவிடும் அவலமிருக்கிறதே.. அங்கும் பார்வை நேரங்கள்.. பந்த பாசங்கள் வந்துபோகும் என்பது எத்தனைக் கேவலமான செயல்கண்கள் அழுதால் கண்ணீர் என்போம்! 
இதயம் அழுகிறதே.. இரத்தமல்லவா வழியவேண்டும்!!
இதோ.. கண்ணதாசன் என்கிற பாட்டுடைத்தலைவன் - வாழ்க்கையின் முகமூடிகளை எல்லாம் கிழித்துக் காட்டும் அற்புதப்பாடலிது!

அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே..
பணத்தின்மீதுதான் பக்தி என்றபின்
பந்தபாசமே ஏனடா..
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்
அண்ணன் தம்பிகள் தானடா..

நன்றி கவியரசு