இலங்கைச் செய்திகள்


வங்கியில் அடகு வைத்த நகை மீட்ட போது போலியானது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

எமது வற்புறுத்தலின் பேரிலேயே எனது தந்தை நீராகாரத்தை உட்கொள்கின்றார் : அமீனா அசாத் சாலி

மத்தல விமான நிலையத்திற்கான சேவைகளை எயார் அராபியா இரத்து செய்ய தீர்மானம்

பெடியள் விடாயினம்” என்றவர்கள் இன்று பெடியளை (கை)விட்டு விட்டார்களா?: சவாலாகியுள்ள புனர்வாழ்வு பெற்ற போராளிகளின் மீளொருங்கிணைப்பு

அஸாத் சாலியின் கைதுக்கு எதிராக ஹர்த்தால்

தமிழர் காணியில் தென்பகுதியினர் கட்டிடம் கட்ட நீதிமன்றம் தடை


வடக்கில் அமையும் தமிழ் அரசாங்கம் சர்வதேச பிரசங்கத்துடன் கூடிய பொறுப்புக்கூறும் விடயங்களை பின்னணிக்குத் தள்ளுவதற்கு முயற்சிப்பதன் மூலம்  ஒரு அரசியல் தீர்வுக்கு மீண்டும் வழிவகுக்கலாம்
 - என்.சத்தியமூர்த்தி

அஸாத் சாலி விடுதலை தொடர்பில் தமக்கு தெரியாது: ஹுலுகல்ல, புத்திக சிறிவர்தன, மொஹான் சமரநாயக

வெள்ளவத்தை விபத்து : சுவிஸிலிருந்து வந்த சகோதரியும், சகோதரனும் பலி, இருபிள்ளைகளையும் இழந்து பெற்றோர் பரிதவிப்பு

இலங்கை அணியில் உள்வாங்கப்பட்ட தமிழ் வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் 

 காத்தான்குடியில் பதற்றம்: பொலிஸ்,இராணுவம் குவிப்பு
======================================================================

வங்கியில் அடகு வைத்த நகை மீட்ட போது போலியானது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு


08/05/2013 தேசிய சேமிப்பு வங்கியின் நீர்கொழும்பு கிளையில் அடகு வைக்கப்பட்ட நகையை அடகு வைத்த பெண் மீட்டபோது அதில் ஒரு நகை போலியாக இருப்பதைக் கண்டு நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


நீர்;கொழும்பு கடோல்கலே பிரதேசத்தைச் சேர்ந்த ஐவன் என்ற பெண்னே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தவராவார்.

தனது பிள்ளையின் இரண்டு பவுண் கொண்ட தங்கச் சங்கிலி மற்றும் “பிரேஸ்லட்” என்பவைகளை குறித்த பெண் மீட்டு வீடு வந்த போது அதில் “பிரேஸ்லட்” போலியாக இருப்பதை அவரது கணவர் கண்டுள்ளார். 

பின்னர் இது தொடர்பாக குறித்த வங்கியில் எழுத்து மூலம் முறைப்பாடு செய்ததுடன். நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திலும் அவர்கள் கடந்த திங்கட்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பாக குறித்த பெண்ணின் கணவர் தெரிவிக்கையில்,

தேசிய சேமிப்பு வங்கியின் நீர்கொழும்பு கிளையில் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை எனது மனைவி கடந்த ஒரு வருட காலத்தில் அடகு வைத்திருந்தார். அதில் 5 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை நாங்கள் இது வரை மீட்டுள்ளளோம்.

கடந்த திங்கட்கிழமை எனது மகளின் இரண்டு பவுண் கொண்ட தங்கச் சங்கிலி மற்றும் “பிரேஸ்லட்” என்பவைகளை மீட்டு வீடு வந்த போது, அதில் “பிரேஸ்லட்” போலியாக இருப்பதை நான் கண்டு படித்தேன் இது அந்த நகையை வாங்கிய நகை கடையிலும் உறுதிப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக வங்கியில் எழுத்து மூலமாக முறைப்பாடு செய்தோம். வங்கியின் தலைமையகத்திற்கும் இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினமும் வங்கிக்கு அழைத்து எம்மை விசாரித்தனர் என்றார்.


நன்றி வீரகேசரிஎமது வற்புறுத்தலின் பேரிலேயே எனது தந்தை நீராகாரத்தை உட்கொள்கின்றார் : அமீனா அசாத் சாலி

08/05/2013 எமது வற்புறுத்தலின் அடிப்டையிலேயே எனது தந்தை நேற்று முதல் நீராகாரத்தை மட்டும் உட்கொள்கின்றார். அவரது உடல்நிலையில் ஆரோக்கியமில்லை என அசாத் சாலியின் மகள் அமீனா அசாத் சாலி தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் அவரது தந்தையாரான கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியின் உடல்நிலை குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனது தந்தை எமது வற்புறுத்தலின் அடிப்படையிலேயே நேற்று முதல் நீராகாரத்தை உட்கொள்கின்றாரே தவிர எந்தவிதமான மருந்துகளையும் உட்கொள்ள மறுக்கின்றார். அவரது உடல்நிலை ஆரோக்கியமானதாக இல்லை.
தற்போதும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அறை எண் 45 இல் சிகிச்சை பெற்று வருகின்றார். எனது தந்தையை பார்ப்பதற்கு எனக்கும் அம்மாவுக்கும் தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கு எனது தந்தையை பரிசோதிக்கும் வைத்தியர்களில் எமக்கு நம்பிக்கை இல்லாத நிலையில் நாம் பிரத்தியேகமான வைத்தியரை அங்கு கூட்டிச் செல்வதற்கு எமக்கு அனுமதியளிக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.  
நன்றி வீரகேசரி
 
மத்தல விமான நிலையத்திற்கான சேவைகளை எயார் அராபியா இரத்து செய்ய தீர்மானம்09/05/2013 இலங்கையில் புதிதாக திறக்கப்பட்ட மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் தமது சேவைகளை ஆரம்பித்த எயார் அராபியா விமான நிறுவனம், சேவைகளை இரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

2013 மே மாதம் தொடக்கம் எயார் அராபியா விமான நிறுவனம் தமது மத்தல விமான சேவைகளை இரத்து செய்கிறது. 

மத்தல விமான நிலையம் திறக்கப்பட்டு முதல் சர்வதேச விமான சேவையாக எயார் அராபியா தமது சேவையை தொடங்கியமை குறிப்பிடத்தக்கது. 

6 வார கால சேவையின் பின் இந்த சேவை இரத்து முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. 

எயார் அராபியா மத்தல விமான நிலையத்தில் இருந்து வாராந்தம் இரண்டு விமான சேவைகளை செயற்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.நன்றி வீரகேசரி 


பெடியள் விடாயினம்” என்றவர்கள் இன்று பெடியளை (கை)விட்டு விட்டார்களா?: சவாலாகியுள்ள புனர்வாழ்வு பெற்ற போராளிகளின் மீளொருங்கிணைப்பு
- (கலாநிதி எம். எஸ். அனீஸ், சிரேஷ்ட விFormer-LTTE-male-cadresரிவுரையாளர், கொழும்பு பல்கலைக்கழகம்)
இந்த தலைப்பின் முதல் பகுதியை பார்த்தவுடன் பலருக்கு பழைய ஞாபகங்கள் சில மனதில் ஏற்படலாம். ஆமாம்! 1980கள் தொடக்கம் (ஈழ விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் கை ஓங்கிய காலம்) ஏறத்தாள 2009 மே மாத நடுப்பகுதியில் “முள்ளிவாய்க்கால் முடிவு” ஏற்படும் வரை வடக்கில் அதுவும் குறிப்பாக யாழ் குடாநாட்டில் மூத்த பரம்பரையை சேர்ந்த அதிகமானவர்களால் முணுமுணுக்கப்பட்ட ஒரு நம்பிக்கைக்குரிய ஒரு சொல்லாகவே இது இருந்து வந்தது. இதுதவிர “இருந்து பாருமன் பெடியளின் அடியை”, “உவங்கள் (இராணுவம்) நல்லா வாங்கிக் கட்டப் போகினம்”, போன்றனவும் இம்மக்களினால் அதிகம் பயன்படுத்தப்பட்ட சொற்பிரயோகங்கள் ஆகும். இதுபோன்ற சொற்களும் வசனங்களும் இன்னும் அதிகம் உள்ள போதும் விரிவஞ்சி அவற்றை தவிர்க்க விரும்புகின்றேன். இதில் “பெடியள்” என விழிக்கப்பட்டவர்கள் தமிழீழ விடுதலைப்புலிப் போராளிகள் ஆவர். குறித்த இந்த வார்த்தையானது பல ஆத்மார்த்தமான உணர்வுகளை தன்னகத்தே கொண்டிருந்தது. அன்பு, மரியாதை, கௌரவம், செல்லம், நம்பிக்கை போன்ற பல உணர்வுகளின் ஒட்டுமொத்த வடிவமாகவே இந்த சொல் தமிழ் மக்களால் குறிப்பாக விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் பயன்படுத்தப்பட்டது என்பதை யாவரும் ஏற்றுக்கொள்வர். ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் ஆண் போராளிகளுக்கு (பெடியங்கள் /பொடியங்கள்) இந்த சொல் பயன்படுத்தப்பட்டாலும் பின்னர் பெண் போராளிகளையும் சேர்த்தே இது பயன்பாட்டில் இருந்தது. பெண் போராளிகள் மேற்கூறிய சொல்லின் பெண்பால் பொருள்கொண்டு அழைக்கப்பட்டமையானது மிகவும் அரிதாகவே காணப்பட்டது.
எனவே ஒரு கட்டத்தில் “பெடியள்” என்ற வார்த்தையானது பொதுவில் விடுதலைப்புலி உறுப்பினர்களை அடையாளப்படுத்தவே உபயோகப்படுத்தப்பட்டது. மேலும் “பெடியள் விடாயினம்” என்ற சொல்லானது பல்வேறு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டது. பொதுவாக இலங்கை இராணுவத்துடன் மோதல்கள் இடம்பெறும்போது சிலவேளைகளில் தற்காலிக இராணுவ பின்னடைவுகளை விடுதலைப் புலிகள் சந்திக்கின்றபோது தம்மைத் தாமே ஆறுதல்படுத்திக் கொள்ளவும், விடுதலைப் புலிகள் ஒருபோதும் தமது இறுதி இலக்கான தமிழ் ஈழம் என்ற கோரிக்கையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பதை மறைமுகமாக சொல்லவும் இந்த சொற்றொடர் அதிகமாக வழக்கிலிருந்தது. மேலும் விடுதலைப் புலிகள் போராட்டத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்; அவர்களை தோற்கடிக்க முடியாது என்ற அர்த்தத்திலும் இந்த வசனம் அடிக்கடி பயன்படுத்தப்பட்டது.
எனினும் யாருமே எதிர்பார்த்திராத விதத்தில் “முள்ளிவாய்க்கால் முடிவுகள்” சோகத்தில் முற்றுப்பெற்றபோது, நிலைமை தலைகீழாக மாற்றமுறத் தொடங்கியது. யுத்த முடிவில் பல ஆயிரக்கணக்கான போராளிகள் ஒன்றில் கைது செய்யப்பட்டார்கள் அல்லது இராணுவத்திடம் சரணடைந்தார்கள். இந்த நிகழ்வோடு “பெடியள் விடாயினம்” என்ற சொல்லும் பயன்பாட்டினின்றும் வழக்கொழியத் தொடங்கியது. மாபெரும் அதிர்ச்சியை “தமிழ் ஈழ” ஆதரவாளர்களுக்கு ஏற்படுத்திய “முள்ளிவாய்க்கால் முடிவுகள்” “பெடியள்” தொடர்பான அவர்களின் அபிப்பிராயத்தை மட்டுமின்றி, அவர்களை நோக்கிய செயற்பாடுகளையும் மாற்றியமைத்தமையானது மிகவும் வியப்பிற்குரிய துயர்மிகு நிதர்சனமாகும்.formaer ltte
உலக நாடுகளில் பொதுவாக இவ்வாறான உள்நாட்டு மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இயல்பாக எழுகின்ற பிரதான ஒரு பிரச்சினைதான் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னைநாள் போராளிகளை மீண்டும் அவர்களின் வாழ்விட சமூகங்களுடன் இணைத்து ஓர் இயல்பு நிலை வாழ்க்கை முறையினை மீளக் கட்டியெழுப்புவது ஆகும். அதாவது அவர்களை சமூகத்தில் மீளொருங்கிணைத்துக் கொள்வதாகும். ஒரு உயர்ந்த அல்லது அவர்களது பார்வையில் மகத்தான இலட்சியத்துடன் தமது இலக்கினை நோக்கி ஆயுதம் ஏந்தி போராடிய இவர்களை எப்போதும் இவர்கள் சார்ந்த மற்றும் சாராத சமூகங்கள் உடனடியாகவே தம்முள் உள்வாங்கிக் கொள்வதில்லை. எவ்வளவுதான் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு இவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் இந்த போராளிகள் தொடர்பான அச்சம் அத்துடன், இவர்கள் கடந்த காலங்களில் கொண்டிருந்த ஆயுத அரசியல் மற்றும் இராணுவ வகிபங்குகள் என்பன சமூகத்தில் பலத்த சந்தேகத்தையும் பயத்தையும் கொடுக்கும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. அதுவும் இலங்கை போன்றதொரு நாட்டில் இந்த முன்னைநாள் போராளிகள் அவர்களின் புனர்வாழ்வுக்குப் பிந்திய விடுதலையின் பின்னரும் இலங்கை இராணுவ உளவுப் பிரிவினரால் நிழல் போல தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இது போன்ற விடயங்களும் கூட அவர்கள் சார்ந்த சமூகத்தினர் மத்தியிலான இவர்கள் குறித்த பார்வையை பெரும் அச்சுறுத்தலுடன் கூடிய ஒன்றாகவே விஸ்தரித்துள்ளது.
இராணுவ மற்றும் உளவுப்பிரிவு கண்காணிப்பு நடவடிக்கைகள் தம்மகத்தே பல நியாயப்பாடுகளைக் கொண்டிருந்தாலும் குறித்த சமூகத்தின் இந்த போராளிகள் தொடர்பான எண்ணப்பாட்டினை நேர்நோக்குக் கொண்டதாக அமைக்கவில்லை. இவ்வாறு அரசினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள பல ஆயிரக்கணக்கான முன்னைநாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் வடக்கை சேர்ந்த தமிழ் போராளிகளுக்கும் இந்த நிலையே ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் சமூகத்தின் விடிவெள்ளிகளாக பார்க்கப்பட்டும் போற்றப்பட்டும் இருந்த இந்த போராளிகள் இன்று நம்பிக்கை தளம்பிய ஒரு கையறுநிலையில் அநாதரவாக வீதிகளிலே விடப்பட்டுள்ளனர். “விடுதலைப் போராளிகள்”, “வீரவேங்கைகள்” மற்றும் “இனத்தின் விடுதலை வீரர்கள்” என்றெல்லாம் போற்றிப்புகழப்பட்ட இவர்களை இன்று ஏறெடுத்துப் பார்க்கவும் யாருமில்லாத நிலை தோன்றியுள்ளது.
குடும்ப அங்கத்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அயலவர்கள் என்று எல்லோராலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று இவர்களில் பலருடைய காலம் கழிந்து செல்கிறது. ஒரு காலத்தில் ஊர்ச் சந்திகளிலே ஏ கே 47 ரக ஆயுதங்களை தமது தோள்களிலே மிடுக்காக சுமந்து கொண்டு உலாவரும் இவர்களுடன் நின்று பேசுவதையே ஒரு பாக்கியமாகவும் சமூக கௌரவமாகவும் கருதிய பலர், இன்று இவர்களைக் கண்டாலேயே சொல்லாமல் கொள்ளாமல் நழுவிச் செல்லும் நிலையே காணப்படுகிறது.
former-ltte-cadresகட்டிளம் பருவத்தினரான இந்த இளைஞர், யுவதிகளுக்கு போதிய தகுதிகள் இருந்தும் தொழில் வாய்ப்புகளை வழங்க அநேகர் முன்வருவதில்லை. மறுபுறமாக, இவர்களில் திருமண வயதை எட்டிய நிலையிலுள்ளோரை அந்த பந்தத்தினூடாக தமது குடும்பங்களில் இணைத்துக் கொள்ளவும் அநேகமானோர் விரும்புவதில்லை. எனவே, உரிய வயதில் தொழில் மற்றும் திருமணம் இன்றிய நிலையில் அவர்கள் சார்ந்த சமூகத்தில் இவர்களுக்குரிய அந்தஸ்து அளவீடு என்ன என்பதை ஊகிப்பது கடினமல்ல. ஒருபுறமாக தமது உயிரிலும் மேலாக மதித்த போராட்டம் தோல்வியடைந்த விரக்தி, மறுபுறமாக எந்த சமூகத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடினார்களோ அதே சமூகமே தம்மை ஓரங்கட்டும் நிலை என்ற இரட்டைப் பாதிப்பு அவர்களை விரக்தியின் விளிம்பிற்கே இட்டுச்செல்லும் என்பது இயல்பான யதார்த்தமே. இந்த மன விரக்தியே இன்று வடக்கில் பல ஆயிரக்கணக்கான முன்னைநாள் போராளிகளின் நிலை. தமது இந்த அளவிட முடியாத தாக்கத்தினையும் மன இறுக்கத்தினையும் யாரிடம் முறையிடுவது என்று தெரியாமலும், யாரிடம் இதற்கான தீர்வினைக் கோருவது என்பதை அறியாமலும் நாளாந்தம் இவர்கள் தம்முள் சித்திரவதைப்பட்டவாறு அவதியுறுகின்றனர். வசதி படைத்த பெற்றோர்கள் தமது பிள்ளைகளை ஒன்றில் வெளிநாடுகளுக்கு அனுப்பியோ அல்லது உள்நாட்டிலே தொழில் வசதிகளை செய்து கொடுத்தோ அல்லது அவர்களை தொடர்ந்தும் கல்வி கற்க வைத்தோ அவர்களின் இயல்பு வாழ்வுக்கு உதவிவரும் அதேநேரம், மிகப்பெரும்பாலானவர்கள் மேலே கூறிய அவல நிலையிலேயே வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் ஓமந்தையை அண்டிய பிரதேசமொன்றில் முன்னைநாள் போராளிக் குடும்பமொன்றுடன் நட்புடன் உரையாட சந்தர்ப்பம் கிடைத்த போது “மீண்டுமொருமுறை யுத்தமொன்று வந்தால் நீங்கள் இருவரும் என்ன செய்வீர்கள்” என்று இயல்பாகக் கேட்டேன். எதுவித தயக்கமுமின்றி இருவருமே ஒரே நேரத்தில் “நாம் தற்கொலை (சூசைட்) செய்து கொள்வோம்” என கூறியபோது நான் ஒரு கணம் அதிர்ந்தே விட்டேன். அந்த பதிலை அவர்கள் கூறக் காரணமாய் அமைந்த விடயம் என்னவாக இருக்கும் என எனக்குள் நானே பலமுறை வினாவிக்கொண்டேன். இறுதியாகப் பெற்ற விடை, ஒன்றில் அவர்கள் மீண்டுமொருமுறை போராடத் தயாராக இல்லை (தாம் பிறந்து வளர்ந்த சமூகத்தின் நடவடிக்கைகளினால் அந்தளவு தூரம் அவர்கள் மனம் புண்பட்டிருக்க வேண்டும்) அல்லது இன்னுமொரு முறை  அவர்கள் இராணுவத்தின் பிடியில் சிக்கி சித்திரவதைப்பட தயாராக இல்லை என்பதையே என்னால் பதிலாகப் பெற முடிந்தது. அந்த இருவருமே ஏறத்தாள 6 வருடங்களுக்கு மேலாக ஆயுத போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட போராளிகளில் சிலர்former rebelsதமக்கேற்பட்ட சொல்லொணா மன அழுத்தங்கள் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக சில ஊடக செய்திகளில் வாசித்த ஞாபகம் எனக்கு வருகிறது. இவை வெறுமனே கட்டுக்கதைகளாக பார்க்கப்பட முடியாதவை. ஒரு காலத்தில் தாம் மகத்தானது என நினைத்த ஒரு இலக்கிற்காக தமது இன்னுயிரைக் கூட தியாகம் செய்ய தயாராக இருந்த இவர்கள் இன்று எல்லை கடந்த விரக்தியினால் தற்கொலை செய்யுமளவிற்கு சென்றுள்ளார்கள் என்றால் அது மிகவும் ஆபத்தானது மட்டுமல்ல அதற்கான பொறுப்பை அவர்கள் சார்ந்த முழு சமூகமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வழமையாக கூறுவதுபோல அவர்கள் உருவாக காரணமாக இருந்த “பேரினவாத அரசே” அதற்கான பொறுப்பையும் சொல்லவேண்டும் என கூறி விட்டு யாரும் தப்பிக்க முயல்வதானது தமது சமூக கடமையில் இருந்து தப்பிக்க முனைவதாகவே அமையும். காரணம் அவர்கள் யாருடைய விடிவுக்காக அல்லது விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடச் சென்றார்கள் என்பதை நாம் முதலில் மனதில் நிறுத்திப் பார்க்க வேண்டும். சிலவேளைகளில் அந்தப் போராட்டத்தின் மூலம் இறுதி இலக்கு அடையப் பெற்றிருக்குமாயின் அப்போது அதன் பலனை அடைந்து கொள்வதில் இப்படி பாராமுகமாக இந்த சமூகம் இருந்திருக்குமா? என்பதையும் சற்று சிந்திக்க வேண்டும்.
ஒரு காலத்தில் இந்த சமூகத்தின் விடிவுக்காக மட்டும் தமது உயிரை அர்ப்பணிக்க தயாராக இருந்த இவர்கள் இன்று இந்த சமூகத்தின் மீதும் ஏனையவர்கள் மீதும் ஏற்பட்ட விரக்தியினால் தற்கொலை செய்து கொள்ளுமளவிற்கு சென்றுள்ளார்களா? அப்படியாயின் இரண்டிலுமே முடிவு ஒன்றாக இருந்தாலும் பின்னைய காரணியானது முன்னையதை விட வித்தியாசமானது. இப்போதைய தற்கொலையானது தமது வாழ்வின் மீதும் உயிரின் மீதும் வெறுப்படைந்த நிலையில் செய்யப்படுவதாகும். அதற்கான பாவத்தையும் பழியையும் நாம் யாரிடம் சுமத்துவது என்ற கேள்வி இங்கு இயல்பாகவே எழுகின்றதல்லவா?
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு தென் இந்திய தமிழ் ஊடகமொன்றில் முன்னைநாள் பெண் போராளியொருவரின் செவ்வியொன்று வெளியிடப்பட்டிருந்தது. “தம்பிக்காக போராளியானேன் ஆனால் இன்று பிள்ளைக்காக விபச்சாரியாகியுள்ளேன்” என்ற தலைப்பில் வெளிவந்த அந்த செவ்வியை என்னைப் போன்ற பல ஆயிரக்கணக்கான தமிழ் வாசகர்கள் வாசித்திருப்பார்கள் என நினைக்கின்றேன். பலாத்காரமாக தனது தம்பியை விடுதலைப் புலிகள் தமது அணியில் சேர்த்துக்கொள்ள முயன்ற போது தனது தம்பியையும் குடும்பத்தையும் கருத்தில் கொண்டு தானாக முன்வந்து விடுதலைப் புலிகளில் தன்னை இணைத்துக் கொண்ட ஒரு போராளியான இவர் பின்னர் இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்து (கைதாகி?) புனர்வாழ்வு பெற்ற பின்னர் விடுதலையாகி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் யுத்தத்தில் கணவனை இழந்ததன் காரணமாக இன்று தனது பிள்ளையை வளர்த்துக் கொள்ள முடியாத நிலையில் வறுமையின் காரணமாக தான் விபச்சாரியாக மாறியுள்ளதாகவும் இந்த செவ்வியிலே கூறியிருந்தார். இந்த செய்தியானது ஆழமான சமூகப் பற்றும் உயர்ந்தளவில் இனத்தின் மீதான அக்கறையும் ஒழுக்கவிழுமியங்களை உயிரிலும் மேலாக மதிக்கின்ற ஒவ்வொரு தமிழ் நெஞ்சங்களையும் ஆழமாகப் பாதித்திருக்கும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. இந்த செவ்வி வெளிவந்த பின்னர் புலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் பல தமிழ் அன்பர்கள் இதற்கு எதிராக காரசாரமான தமது கருத்துகளை இணைய தளங்களில் எழுதி இருந்தனர். இது பொய்யானது என சிலரும் வேறு சிலர் அப்படியான ஒரு பெண் நிட்ஷயமாக ஒரு தமிழ் பெண்ணாக இருக்க முடியாது எனவும் தமது ஆத்திரத்தை எழுத்துகள் மூலம் வெளிப்படுத்தி இருந்தனர். அத்துடன், குறிப்பிட்ட அந்த அச்சு ஊடகமும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டிருந்தது. 
former_ltte masonry rainingஇந்த பெண் போராளியின் வாழ்க்கை வரலாறானது எந்த அளவு தூரம் உண்மையானது அல்லது உண்மைக்கு புறம்பானது என்ற வாதப்பிரதிவாதங்களுக்கு அப்பால் நாம் யாவரும் ஒரு உண்மையை விளங்கிக் கொள்வதானது காலத்தின் கட்டாயமாகும். அதாவது அவ்வாறான நிகழ்வுகள் இதுவரை நடைபெறாது இருந்தாலும் கூட தற்போது காணப்படும் அவர்களது சமூக பொருளாதார நிலைமைகள் மாற்றங்களுக்குள்ளாகாமல் தொடருமாக இருந்தால் நிச்சயம் எதிர்காலத்திலாவது அவ்வாறான நிலைமைகள் ஏற்பட நிறையவே சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. அப்படியொரு விடயம் நிகழுமாயின் சம்பந்தப்பட்ட தரப்பில் உள்ள அத்தனை பேரும் அதற்கு பொறுப்புக் கூறும் நிலை ஏற்படுமல்லவா?
பொதுவாக யுத்தத்திற்குப் பிந்திய நிலையை அடையும் நாடுகள் எதிர்கொள்ளும் பிரதான சவால்களில் ஒன்றாகவே “முன்னாள் போராளிகளும் அவர்களுடைய இயல்பு வாழ்க்கை நோக்கிய முன்னெடுப்புகள்”, மற்றும் அதனோடு தொடர்புபட்ட பிரச்சினைகள் அமைகின்றன. மோதல்களுக்குப் பிந்திய பயணத்தை ஆரம்பிக்கும் நாடுகளில் - விசேடமாக அங்கோலா, சியராலியோன், மொசாம்பிக், உகண்டா, எத்தியோப்பியா, நமீபியா, மற்றும் எல் சல்வடோர் போன்றன- சமூகங்களை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பிரதான நோக்கு ஒன்றினைக் கொண்டிருக்கும். அதாவது, தமது குறித்த சமூக உறுப்பினர்களால் தொன்றுதொட்டு செயற்படுத்தப்பட்டுவரும் நியமங்கள், விழுமியங்கள், நம்பிக்கைகள், மற்றும் சமூக இலக்குகளுடன் பொருந்தச் செய்வதற்கான நடைமுறைப்படுத்துகை சார்ந்ததாகவே இருக்கும். இதற்கான செயற்திட்டம் பொதுவில் “டி டி ஆர்” என ஆங்கிலத்தில் வழங்கப்படும். இதன் பொருள், ஆயுத பரிகரணம், படைக்கலைப்பு, மற்றும் மீளொருங்கிணைப்பு என்பதாகும். இதில் இறுதியான “மீளொருங்கிணைப்பு” என்பதற்கான அடிப்படைத் தேவையாக இந்த முன்னாள் போராளிகளுக்கான இயைந்த சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது மட்டுமன்றி, முழுதாக தாம் வாழ்ந்த சமூகத்துடன் தம்மை இணைத்துக்கொள்ளல், இடர்களிலிருந்து தப்பி வாழ்தல் என்பனவும் அடங்கும்.
வெற்றிகரமான மீளொருங்கிணைப்பானது முன்னைநாள் போராளிகளின் வாழ்வை பின்வரும் அடிப்படையில் செழுமைப்படுத்தலாம்:
  • சுய பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்படல்;
  • பொருளாதார மற்றும் அரசியல் அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ளல்;
  • சமூக மற்றும் தனிப்பட்ட உளக் காயங்கள் ஆற்றப்படல்;
அத்துடன், சமூகத்தில் அந்தஸ்திற்குரியவர்களாக நிலைபெறும் தன்மை என்பனவாகும்.
இதேசமயம் இச்செயற்பாட்டில் பொதுவில் இனங்காணப்படும் குறைபாடுகளாக: மீள் ஒருங்கிணைவு உதவிகளில் குறைவுத்தன்மை, பற்றாக்குறை, அல்லது பராமுகம்; சமூக அமைதி குலைவு;  பாதுகாப்பு பிரச்சினை; வேலைவாய்ப்பின்மை; மற்றும், கற்றல் நடவடிக்கைகளைத் தொடர்வதிலான இடர்பாடுகள் என்பன அமைகின்றன.
இதனடிப்படையில், மீளொருங்கிணைப்பு செயல்முறையினை அமுல்படுவதில் “நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல்” என்ற பிரதான ஏற்பாடு மிகவும் வேண்டப்பட்ட முன்நிபந்தனையாகக் கருதப்படுகிறது; இருப்பினும் இதற்காக முன்னிறுத்தப்படும் செயற்பாடுகள் நாட்டிற்கு நாடு வேறுபடலாம். இந்த முன்நிபந்தனைக்கான அடிப்படை அம்சங்களாக பின்வருவன உலக அனுபவங்களினூடாக முன்வைக்கப்படுகின்றன: குறித்த செயற்பாட்டினை நடைமுறைப்படுத்த விளையும் செயல்தருநர்கள் மத்தியில் இதன் அமுல்படுத்துகை தொடர்பில் பலமானதொரு அரசியல் விருப்பு காணப்படுதல்; ஆள் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னேற்றம் காணச் செய்வதும் அதனூடாக முன்னைநாள் போராளிகளின் நிராயுத நிலை ஏற்படுத்தும் அச்ச உணர்வை தவிர்க்க வழிவகுப்பதும்; மற்றும், துரிதப்படுத்தப்பட்ட மீளொருங்கிணைப்பும் அதனூடாக பிரதிபலித்துக்காட்டும்  செயற்பாட்டின் வெளிப்படைத்தன்மை என்பனவாகும்.
மேற்கூறிய அனைத்து விடயங்களும் யுத்தத்திற்குப் பிந்திய காலத்தில் பயணித்துக்கொண்டிருக்கும் இலங்கைக்கும் அச்சொட்டாகப் பொருந்தக்கூடியதும் அவசியம் வேண்டப்படுவதும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. இந்தவகையில், இலங்கையைப் பொறுத்தவரையில், இந்நடவடிக்கை முறைமையில் சம்பந்தப்பட்டவர்களாக முன்னைநாள் போராளிகள், அவர்கள் சம்பந்தப்பட்ட சமூகம், மற்றும் அரசாங்கம் என்பன காணப்படுகின்றன. இதில் பிரதான கருப்பொருளாக அமையும் முன்னைநாள் போராளிகள் தொடர்பில் குறித்த அவர்களின் மீள் வருகை, சுபீட்ஷத்தை நோக்கிய, அச்சுறுத்தலுக்கு இடமில்லாத எதிர்கால நடவடிக்கைகளைக் கட்டியம் கூறி நிற்பதான உறுதியான நம்பிக்கையை அவர்களின் சமூகத்திற்கும் நாட்டின் அரசாங்கத்திற்கும் உத்தரவாதப்படுத்தும் வகையில் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதனை செயற்பாட்டினுள் உள்வாங்கவேண்டிய கடப்பாடும் தார்மீக அக்கறையும் அவர்கள் சார்பான சமூகம் மற்றும் அரசாங்கத்திடம் தாராளமாக எதிர்பார்க்கப்படும் ஒன்று. அதுதான் ஒரு வளமான நாட்டை கட்டியெழுப்ப உதவக்கூடிய உளப்பூர்வமான தூரநோக்குடன்கூடிய முன்னெடுப்பாக இருக்கமுடியும் என்பதுதான் என்னைப் போன்றோரின் வலுவான எதிர்பார்ப்பு.
அதேசமயம், குறித்த இந்த போராளிகள் தாம் அரசாங்க நிகழ்ச்சி நிரலின் கீழ் உள்வாங்கிய புனர்வாழ்வினை அர்த்தபுஷ்டியுடன் தமது பலம்மிக்க எதிர்காலத்தில் பயன்படுத்தி தமது தாய் நாட்டிற்கும், தாம் சார்ந்த சமூகத்திற்கும் நம்பிக்கைக்குரியவர்களாக வாழ்ந்துகாட்ட வேண்டும். அவர்களைக் கண்டு மற்றவர்கள் அச்சப்படும் அல்லது சந்தேகப்படும் நிலை அவர்களாலேயே மாறformer ltte cadrs-2்றத்திற்கு உள்ளாக்கப்படல் வேண்டும். இது இயல்பு வாழ்க்கையை சகஜ நிலையில் எதிர்கொள்ள இந்த போராளிகள் பக்கத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் திடகாத்திரமான முன்னெடுப்பு. இந்த பிரச்சினைக்கான தீர்வு ஏற்கனவே குறிப்பிடப்பட்டது போல் அரசாங்கம், சமூகம், மற்றும் முன்னாள் போராளிகள் என்ற முத்தரப்பினரின் முழுமையான, திருப்திகரமான, ஆத்மார்த்தமான செயற்பாடுகளினூடு எட்டப்பட்டு வெற்றி காணப்படவேண்டும். இதற்கான ஒத்துழைப்புகள் குறித்த சமூகம் சார்ந்த கடல் கடந்து வாழும் புலம்பெயர் சமூகத்திடமிருந்தும் தயக்கமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும்.
விடுதலைப் புலிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது இந்த கடல் கடந்த சமூகம் அந்த போராட்டத்திற்கு காட்டிய அக்கறை மற்றும் ஆதரவு என்பவற்றில் ஒரு சிறிய விகிதமேனும் இந்த புனர்வாழ்வு பெற்ற போராளிகளின் விடயத்தில் காட்டப்படுமாயின் ஒரு பாரிய மாற்றத்தை விரைவிலேயே எட்டமுடியும். இது தொடர்பான பன்முக கருத்துப்பரிமாறல்கள் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு வித்திடலாம். எதையெதைல்லாமோ பேசியும் எழுதியும் வரும் நாம் இந்த விடயத்தையும் நமது கருப்பொருளாக (இனியேனும் கொஞ்சமாவது) காண்போமா?
பொதுவாக “காண்பதிலுள்ள காணாததை காண்போம்” என்பார்கள் ஆனால் இந்த விடயத்தில் சற்று மாற்றமாக “காண்பதிலுள்ள காண்பதையாவது காண்போம்” என்பதுதான் சாலப் பொருத்தமானதாக இருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். நன்றி தேனீ 

அஸாத் சாலியின் கைதுக்கு எதிராக ஹர்த்தால்
hartalகொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலியை விடுதலை செய்யக்கோரி அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் இன்று வியாழக்கிழமை ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது. அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான கல்முனை, சாய்ந்தமருது, நிந்துவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுள்ளது. இதனால் வியாபார ஸ்தளங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன்  போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. எனினும் அரச அலுவலகங்கள், பாடசாலைகள் என்பன வழமை போல் இயங்குகின்ற போதிலும் பாடசாலை மாணவர்களின் வரவு மிகவும் குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் மற்றும் இறக்காமம் ஆகிய முஸ்லிம் பிரதேசங்களில் இன்று ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படவில்லை. அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் பிரதான வீதிகளில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில்; ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை, ஹர்த்தால் அனுஷ்டிக்கவோ இயல்பு நிலைமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படவோ வேண்டாம் என இராணுவத்தினர் நேற்று கோரிக்கை விடுத்திருந்தனர். மட்டக்களப்பு மாவட்ட பள்ளிவாசல்கள் மற்றும் சம்மேளனங்களின் பிரதிநிதிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் சித்தாண்டி இராணுவ முகாமில் நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பின்போதே இந்த கோரிக்கை விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பயங்கவார தடுப்புச் சட்டத்தின் கீழ்  குற்றப்புலனாய் பிரிவினரால் அஸாத் சாலி கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி தேனீ 

தமிழர் காணியில் தென்பகுதியினர் கட்டிடம் கட்ட நீதிமன்றம் தடை
10/05/2013  கிளிநொச்சி தொண்டமான் நகர் உதிரவேங்கை ஞானவைரவர் ஆலயத்தினரின் பயன்பாட்டில் இருந்து வந்த காணி தென்னிலங்கை வர்த்தகர் ஒருவருக்கு வர்த்தக நடவடிக்கைக்காக ஆலய நிர்வாகம் மற்றும் பிரதேச மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வழங்கப்பட்டு அவரினால் குறித்த காணியில் கட்டடப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் கிளிநொச்சி நீதிமன்றம் குறித்த காணியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டடப் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.  இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மேற்படி காணி தொடர்பில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணி சதீஸ்குமார் விஜய ராணியின் உதவியுடன் ஆலய நிர்வாகம் வழக்குத்தாக்கல் செய்தது. வழக்கை விசாரணை செய்த நீதவான் எம்.ஐ.வஹாப்தீன் குறி த்த வழக்கின் பிரதிவாதியான வர்த்தகரை எதிர்வரும் இருபதாம் திகதி மன்றில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தர விட்டார். மேலும் மன்றில் ஆஜராகும் போது குறித்த காணி தொடர்பாக ஆவணங்கள் இருப்பின் எடுத்துவருமாறும் நீதிபதி உத்தர விட்டார்.  அத்தோடு குறித்த வழக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வரை குறித்த காணியில் எவ்வித அபிவிருத்திப்பணிகளையும் மேற்கொள்ள வேண்டாம் எனவும் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு நேற்று குறித்த காணியில் ஒட்டப்பட்டுள்ளது.  நன்றி தேனீ வடக்கில் அமையும் தமிழ் அரசாங்கம் சர்வதேச பிரசங்கத்துடன் கூடிய பொறுப்புக்கூறும் விடயங்களை பின்னணிக்குத் தள்ளுவதற்கு முயற்சிப்பதன் மூலம்  ஒரு அரசியல் தீர்வுக்கு மீண்டும் வழிவகுக்கலாம்
 - என்.சத்தியமூர்த்தி
வடக்கில் புதிய அரசியல் தலைமையை ஏற்கப்போகும் தமிழ் கட்சி எதுவாக இருந்தாலும், அதன் ஆதிக்க மற்றும் அதிகாரத் தலைவர்கள், அதன் அடுத்த தலைமுறையை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் தேசிய மட்டத்தில் அதிகாரத்தை பகிர்ந்துகொள்வதில் வெறுப்புக் கொண்டிருக்கிறார்கள் - ஸ்ரீலங்கா அரசாங்கம் மாகாணங்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என அவர்கள் சொல்லும் அதே வழியிலேயே அவர்களும் செல்கிறார்கள்.
Northern Provincial Council electionஅது செப்டம்பரின் வருகையுடன் இரு தரப்பினரையும் பொறுப்புக்கூற வைக்கும் ஒரு மோசமான வழிக்கு இட்டுச் செல்வதுடன், தான் எந்த வழியில் செல்லவேண்டும் என்பதை ஸ்ரீலங்கா காணக்கூடியதாகவும் இருக்கும். துல்லியமாக எடுத்துச் சொல்வதென்றால், எந்த வழியில் ஒருவர் மற்றவரை முந்திச் செல்லலாம் - அல்லது இருவரில் யார் மற்றவரை எங்கே எப்படி முந்தலாம் என்பதை.
செப்டம்பர் மாதம் வாக்களிக்கப்பட்ட வடமாகாணசபை தேர்தல்கள் வரப்போகிறது. எனவே ஐநா மனித உரிமைச்சபை அமர்வு ஜெனிவாவில் மற்றுமொரு சுற்று வரப்போகிறது. தேர்தல்கள் நடத்தப்பட்டால், அவை சுதந்திரமானதும் நீதியானதுமாக இருந்தால் (ரி.என்.ஏ வெற்றி பெற்றால்? என்பதை வாசிக்கவும்),அப்போது ஜெனிவா பல விடயங்களில் தனது அழகை இழந்துவிடும்.
நவம்பரில் நடக்கவுள்ள பொதுநலவாய உச்சிமாநாட்டுக்கான உலக ஒதுக்கீடும் அதன் திறனில் சற்றுக் குறைந்துவிடும். சுதந்திரமான அரசியல் வண்ணமான ஒரு தமிழ் அரசாங்கம் அமைவது, தற்போதைய சர்வதேச பிரச்சாரமாகவுள்ள ஸ்ரீலங்காவின் தேசிய பிரச்சினையின் அரசியல் விடயங்களில் மீள் கவனம் செலுத்தி அதற்கு இன்னமும் தேவையாகவுள்ள ஒரு அரசியல் தீர்வினை உருவாக்கும். அத்துடன் அது பொறுப்புக்கூறல் விடயங்கள் பின்னணிக்குத் தள்ளிவிடும்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு தேர்தலில் வெற்றிபெற வேண்டும் - ஒவ்வொரு திருப்பத்திலும் வெடிக்கக்கூடும் என அச்சமேற்படுத்திக் கொண்டிருப்பதாக அதன் உள்ளக முரண்பாடுகள் இருந்த போதிலும் அது வெல்வதற்கு வாய்ப்பு உள்ளது - ஒரு சிவில் நிருவாகத்தை நடத்துவதற்கு வெளிப்படையாக அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும். அது 13வது திருத்தத்தின் மிகுதியை, அல்லது அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை  அல்லது யாருக்காக மற்றும் எதற்காக தங்களின் தோல்விகள் ஏற்பட்டது என்று அவர்கள் தங்கள்மீதே பழி சுமத்துவதை தூண்டிவிடும். இத்தகைய உந்துதலை அவர்கள் முன்கூட்டியே விலக்கியிருக்க வேண்டும் மற்றும் அளவுக்குமீறி ஆசைப்படாமல் தங்களால் ஒரேசமயத்தில் செய்யக்கூடியதை மாத்திரம் அவர்கள் கோரியிருக்கவேண்டும்.
அவர்கள் மத்தியில் உள்ள சிவில் நிர்வாகத்தில் கைதேர்ந்தவர்களான மூத்த குடிமக்களை ஒன்று சேர்த்து, ஆட்சிக் கலையில் பயிற்சியோ, சாத்தியமான வசதியோ இல்லாத பதவியில் இருக்கப்போகும் அரசியல் தலைமைகளுக்கான ஒரு செயற்திட்டத்தை விதிவிலக்கு இல்லாமல் அமைத்திருந்தால் அது நன்றாக இருக்கும்.
மிகவும் முக்கியமாக புதிய வகுப்பை சேர்ந்த தமிழ் அரசியல் நிருவாகத்தவர்கள், தங்கள் சொந்த இனத்திலுள்ள அல்லது அதிகாரவர்க்கத்திலுள்ள, பழைய காவலர்களின் குரல்களுக்கு செவி சாய்க்க விருப்பம் கொண்டிருக்கலாம். அதை செய்வதைக் காட்டிலும் சொல்வது எளிது.
வடக்கில் புதிய அரசியல் தலைமையை ஏற்கப்போகும் தமிழ் கட்சி எதுவாக இருந்தாலும், அதன் ஆதிக்க மற்றும் அதிகாரத் தலைவர்கள், அதன் அடுத்த தலைமுறையை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் தேசிய மட்டத்தில் அதிகாரத்தை பகிர்ந்துகொள்வதில் வெறுப்புக் கொண்டிருக்கிறார்கள் - ஸ்ரீலங்கா அரசாங்கம் மாகாணங்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என அவர்கள் சொல்லும் அதே வழியிலேயே அவர்களும் செல்கிறார்கள்.
இதில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது, அவர்களும்கூட விடயங்கள் ஒவ்வொருவருடைய கட்டுப்பாட்டையும் மீறிப் போகாதபடி சமரச முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். சிவில் சமூகத் தலைவர்கள் அரசியல் மற்றும் ஆட்சிக்கலை ஆகிய இரண்டினையும் கணிசமானளவு வெளிப்படைத் தன்மையுடன் தமிழர்கள் மத்தியில் சில நோக்கங்களுக்காக பரிமாற வேண்டும், ஆனால் எந்த ஒரு கடும் போக்காளரும்  பலவந்தமான பழக்கமாக ஒவ்வொருவர்மீதும் மற்றும் ஒவ்வொரு விடயத்தின்மீதும் குற்றம் காணுவதற்கு இடம் தராத முறையில் இதை மேற்கொள்ள வேண்டும் ஆனால் அவர் தானாக எந்தப் பொறுப்பையும் எடுத்துக்கொள்ளக்கூடாது.
பொறுப்புக்கூறல் விடயங்கள் சம்பந்தமாக ஜெனிவாவில், சாதாரண தமிழ் மக்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளத் தக்கதான கணிசமான அளவிற்கு எந்த உணரப்படும்; இயக்கமும் இல்லாத வகையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது அமர்வுகள் நடந்தேறியுள்ளன, வட மகாணத்தின் தேர்தல்களின் நீண்ட கால ஓட்டத்தில் இராணுவத்தை வெளியேற்றும்படி புதிய கோரிக்கைகள் எழக்கூடும். தற்போதுள்ள முன்னாள் இராணுவ ஜெனராலான ஆளுனருக்குப் பதிலாக புதிய சிவில் சமூக ஆளுனரை மாற்றும்படி புதிய தாக்குதல் எழலாம்.
இந்தக் கோரிக்கை மற்றும் மாறுதல் ஆகிய இரண்டுமே தவிர்க்க முடியாதபடி நடைபெறத்தான் வேண்டும். அரசாங்கத்தின் சாதாரண கோரிக்கைகளில் ஏதாவது நம்பகத்தன்மை இருக்குமாயின் அது அவர்களின் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இருக்கும். அது கோழியா அல்லது முட்டையா எது முதல் வந்தது என்பதை ஒத்த ஒரு நிலமை. கிழக்கில் யுத்தத்தின் பின்னான அரசாங்கங்கள் கடந்தகால இராணுவ பின்புலத்தை கொண்ட ஒரு ஆளுனருடன் பணியாற்றியதினால் ஏற்கனவே இருதரப்பினரிடையேயும்; பூசல் உருவாகியுள்ளது.
கிழக்கில் இராணுவ ஆளுனர்கள் தேர்தல் மூலம் தெரிவான நிருவாகத்தில் தலையீடு செய்கிறார்கள், எனவே அதுபோல வடக்கிலும் நடக்கலாம் என்கிற புகார் முற்றிலும் உண்மையாக இருக்கவேண்டும் என்கிற தேவை இல்லை.13 வது திருத்தப்படி சட்டமாக்கப்பட்ட போதிலும் ஸ்ரீலங்காவில் உள்ள ஒரு சட்டப்படி ஆளுனர்கள் அவ்வாறு தொடர்ந்து செய்து வருகிறார்கள். இராணுவ ஆளுனர்கள் என்று அழைக்கப்பட்ட போதிலும், அவர்களும் அதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல ஆனால் இது தொடர்பாக அவர்கள் பிரத்தியேகமானவர்களும் அல்ல.
இந்த மாற்றங்கள் தமிழ் அரசியல்வாதிகளின் பக்கத்தின் அணுகுமுறைகளில் மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் ஒரு மாற்றம் ஏற்படும்வரை நிகழப்போவதில்லை. அது திரும்பவும் கோழியா  மற்றும் முட்டையா பிரச்சினைதான். ஒன்றில் ஒவ்வொருவரும் மற்றவரை நம்புவதற்கு படித்து, மற்றும் நடைமுறைகளில், திட்டங்களில், மற்றும் ஆளணியில் தாக்கம் ஏற்படத்தக்க வகையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் - அல்லது ஒவ்வொருவரும் ஒரு அசௌகரியமான சூழலில் கூட ஒரு வகையான கூடி வாழும் தன்மையை ஏற்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும்.
சிரமமான நிலையிலுள்ள திருமணங்கள் விருப்பத்தின் பேரிலேயே முறிவடையலாம், ஆனால் அப்போது காரணங்கள் மற்றும் சாத்தியமான விளைவுகள் என்பன, அதே நேரம் ஒரு நம்பிக்கையற்ற தன்மையை ஏற்படுத்தலாம். ஜெனிவா நடவடிக்கைகள் மற்றும் புலம் பெயர் சமூகத்தின் பேச்சுகள் என்பனவும் கூட இந்தவிடயத்தில் உதவிக்கு வரப்போவதில்லை. அடிப்படையில் பரஸ்பரம் ஏற்படும் சந்தேகங்களை அதிகரிப்பதற்கான பங்களிப்பையே அவைகளால் செய்யமுடியும், அதாவது ஸ்ரீலங்காவில் சிறிய மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிகளில் இளகுவதற்கு ஆரம்பத்திருக்கும் நிலமைகள்கூட தொடர்ச்சியாக கடினமடைய நேரிடலாம்.
அரசாங்கமோ அல்லது ஆளுனரோ தேர்தல்கள் சுதந்திரமாகவும் மற்றும் நியாயமாகவும் நடப்பதை உறுதி செய்வார்களானால், பின்னர் இருசாராருக்கும் அரசியல் யுத்தத்தில் உள்நாட்டிலும் மற்றும் வெளிநாட்டிலும் பாதி வெற்றி பெற்ற மாதிரி. அதேபோல அரசாங்கமோ அல்லது அரசாங்க கட்சிகளோ தேர்தலில் வெற்றிபெறுவது என்பது, தற்போது ஒரு நீண்ட காலம்வரை காத்திருக்க வேண்டிய ஒன்றாகும்.
நாட்டிலுள்ள தமிழர்கள், சிங்கள தலைவர்களின் ஆதிக்கத்திலுள்ள தேசிய அரசியலில் தங்கள் தெரிவுகளை ஒரு ஓழுங்கான முறையில் மாற்றுவதில்லை, அங்கு அவர்கள் வாக்காளர்கள், (பிளவுபட்ட) குழுக்கள், மற்றும் பிரிவுகள், என்னும் மட்டுப்படுத்தப்பட்ட ஆனால் தீர்க்கமான ஒரு பாத்திரத்தை வகிக்கிறார்கள். அவர்களிடமிருந்து அல்லது எந்த ஜனநாயக சமூகத்தின்; எந்தப் பிரிவினரிடமிருந்தும் வற்புறுத்தி ஒரு தேர்தலை பெறுவதற்கு நல்ல நேரம் என்று ஒரு நேரம் கிடையாது. அது அரசியல் அல்ல. அது ஜனநாயகமும் இல்லை.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார் நன்றி தேனீ 

அஸாத் சாலி விடுதலை தொடர்பில் தமக்கு தெரியாது: ஹுலுகல்ல, புத்திக சிறிவர்தன, மொஹான் சமரநாயக
11/05/2013 பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியின் விடுதலை குறித்து தமக்கு ஒன்றும் தெரியாது என்று தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல, பொலிஸ் பேச்சாளர் புத்திக சிறிவர்தன மற்றும் ஜனாதிபதி பேச்சாளர் மொஹான் சமரநாயக ஆகியோர் தெரிவித்தனர்.
கடந்த 2 ஆம் திகதி வியாழக்கிழமை கொலன்னாவ பகுதியில் வீடொன்றில் வைத்து கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும் தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளருமான அசாத் சாலியை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரித்து வந்த நிலையில் சரியாக 9 நாட்களின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அசாத்சாலி மீதான தடுப்புக் காவல் உத்தரவை விலக்கிக் கொண்டதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.
எனினும் இவ்விடுதலை தொடர்பில் முழுமையானதும் உத்தியோகபூர்வமானதுமான தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக முதலில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அசாத் சாலி விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் இது குறித்து தனக்கு அறிவிக்கப்படவில்லை. ஆகவே தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்துடன் தொடர்பு கொண்டு கேட்குமாறு கூறினார்.
இதனையடுத்து தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷமன் ஹுலுகல்லவுடன் தொடர்பு கொண்டு வினவிய போது அசாத் சாலியின் விடுதலை தொடர்பில் தமக்கு ஒன்றும் தெரியாது. இதனை ஜனாதிபதியின் அலுவலகத்திலேயே கேட்க வேண்டும் எனக் கூறினார்.
அதற்கு பின்னர் ஜனாதிபதி பேச்சாளரான மெஹான் சமரநாயக்கவுடன் தொடர்பு கொண்டு அசாத் சாலிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளாரா அல்லது அசாத் சாலி மன்னிப்பு கோரினாரா? என்று வினவிய போது அசாத்சாலியின் விவகாரம் பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடையது. தனக்கு இது குறித்து அறிவிக்கப்படவில்லை என கூறினார்.  நன்றி வீரகேசரி 
வெள்ளவத்தை விபத்து : சுவிஸிலிருந்து வந்த சகோதரியும், சகோதரனும் பலி, இருபிள்ளைகளையும் இழந்து பெற்றோர் பரிதவிப்பு10/05/2013 வெள்ளவத்தையில் கடந்த 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாதசாரிக்கடவையை கடக்க முற்பட்டபோது கார் மோதி படுகாயமடைந்திருந்த மூவரும் உயிரிழந்துள்ளனர். சுவிற்சர்லாந்து நாட்டிலிருந்து விடுமுறைக்காக இலங்கை வந்திருந்த சகோதரி, சகோதரன் உட்பட மூவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழிந்தவர்களாவர். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளவத்தை விகாரை ஒழுங்கைக்கு அருகில் உள்ள காலி வீதியில் அமைந்திருந்த பாதசாரிக் கடவையினை இவர்கள் இரவு 10.20 மணியளவில் கடக்க முற்பட்டபோது வேகமாக வந்த கார் மோதி இவர்கள் மூவரும் பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டிருந்தனர். படுகாயமடைந்த இவர்கள் உடனடியாக களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளனர்.

சுவிற்சர்லாந்திலிருந்து விடுமுறையை கழிப்பதற்காக ஜவீன் , ஜெயமாலா தம்பதியினர் தமது இரு பிள்ளைகளுடன் இலங்கை வந்துள்ளனர். இவர்களுடன் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்திருந்த மைத்துனியுடன் இவர்களுடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போதே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. விபத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்திருந்த வாரணி பாலசூரியன், விபத்து இடம்பெற்ற ஐந்தாம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேபோல் சுவிற்சர்லாந்திலிருந்து வருகை தந்திருந்த ஜாவீன் ஜனனி (வயது 16), கடந்த 6ஆம் திகதியும், அவரது சகோதரனான ஜாவீன் ஜனன் (வயது 11), நேற்று முன்தினம் 8ஆம் திகதியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த வாரணியின் இறுதிக்கிரியைகள் கடந்த 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தெஹிவளையில் இடம் பெற்றது. சுவிற்சர்லாந்திலிருந்து வருகை தந்திருந்த ஜனனி, ஜனன் ஆகியோரின் பூதவுடல்களை அங்கு கொண்டு செல்வதற்கு பெற்றோரான ஜாவீன், ஜெயந்திமாலா தம்பதியினர் முயன்று வருகின்றனர்.

இவர்கள் இருவரும் சுவிற்சர்லாந்து சூரிச் நகரை பிறப்பிடமாகக் கொண்டவர்களாவர்.

இவர்கள் மூவரையும் மோதிய கார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் காரை செலுத்தியவரான கண்டிப்பகுதியைச் சேர்ந்த பிரியசாந்த டி சில்வா என்பவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதிக குடிபோதையில் காரை செலுத்தியமையினாலேயே இந்த விபத்து சம்பவதித்துள்ளதாக வெள்ளவத்தைப் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சமரக்கோன் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அவர் மேலும் கூறினார்.  நன்றி வீரகேசரி 
இலங்கை அணியில் உள்வாங்கப்பட்ட தமிழ் வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு10/05/2013 இலங்கை கிரிக்கெட் அணியில் இணைத்து கொள்ளப்பட்ட வடக்கு,கிழக்கைச் சேர்ந்த மூன்று வீரர்களுக்கும் கிரிக்கெட் சபையால் உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இலங்கை கிரிக்கெட் சபையின் விளையாட்டு வீரர்கள் தொடர்பான முகாமையாளர் கமல் தர்மசிறியினால் ரிஸான், எஸ். சிலோஜன் மற்றும் சஞ்சீவன் ஆகிய வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

ஐ.சி.சி.யின் சம்பியன்ஸ் கிண்ணத் முன்னிட்டு கண்டி, பல்லேகலேயில் எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள முத்தரப்பு பயிற்சி போட்டிகளில் பங்கேற்றவுள்ள இலங்கை அணியில் குறித்த வீரர்கள் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள்


11/05/2013 வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
கடந்த 1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு மே மாதம் வரையில் வடக்கு வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து கொண்டவர்கள், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்கக் கூடிய வகையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
 இதன் மூலம் வாக்காளராக தங்களை பதிவு செய்து கொள்ளவும், வாக்களிக்கவும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. வேறு மாவட்டங்களில் தங்களை பதிவு செய்து கொள்ளாதவர்களுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
 இந்த உத்தேச தேர்தல் திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.   
நன்றி வீரகேசரி 

காத்தான்குடியில் பதற்றம்: பொலிஸ்,இராணுவம் குவிப்பு


12/05/2013 மட்டக்களப்பு –கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள ஜாமிஉல்ழாபிரீன் ஜூம்மா பள்ளிவாயலுக்கு சொந்தமான மையவாடியின் ஒரு பகுதி காத்தான்குடி நகர சபையால் ஆக்கிரமிக்கப்படுவதாக வெளியாகிய தகவலையடுத்து இன்று இரவு அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.பதற்றத்தை தடுக்க வந்த பொலிசாருக்கு பொது மக்கள் கல் எறிந்ததால் நிலைமை மோசமைந்ததையடுத்து மட்டக்களப்பில் இருந்து பொலிசாரும்,இராணுவத்தினரும் ஸ்தலத்திற்கு விரைந்து நிலமைகளை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.தற்போது குறித்த இடத்தில் பொலிசாரும்,கலகத் தடுப்பு படையினரும்,போக்குவரத்து பொலிசாரும்,இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் மேலும் பொது மக்களை பொலிசார், சிவில் உடை அணிந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தாக்கியதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதேவேளை அப்பகுதி சுமூக நிலைக்கு திரும்பியுள்ளதாக பின்னர் கிடைத்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.

 

நன்றி வீரகேசரி