பறக்கும் கார் 2011 இல் பறக்கும்.



வீதியில் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகின்றது.

ஒரு கோடி ரூபா விலை கொண்ட இந்த கார் 2011 ஆம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த டெராப்யூஜி யாஸ் என்னும் நிறுவனம் பறக்கும் காரைத் தயாரிக்கவுள்ளது.

இறக்கைகளுடன் தயாரிக்கப்படும் இந்தக் கார் வீதியில் செல்லும் போது சக்கரங்களையும் பறக்கும் போது மடிக்கப்பட்ட இறக்கைகளை விரித்துக் கொண்டும் செல்லும். அதிக கனமில்லாமல் எளிதில் இயங்கக் கூடிய விளையாட்டு விமானம் போன்று காணப்படும் இந்த விமானக் காரை பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் ஓட்டலாம். இரண்டு பேர் பயணம் செய்யலாம். புறப்படும் இடத்தில் இருந்து வீதி வழியாக விமான நிலையம் வரை காராகச் செல்லும் இந்த வாகனம் விமான நிலையத்தில் இருந்து விமானம் போன்று விண்ணில் பறந்து செல்லும். விமான நிலைய கட்டுப்பாட்டில் மற்ற விமானங்கள் இயங்குவது போலவே இந்த கார் விமானமும் இயங்கும். இந்த காரில் பலவித நன்மைகள் உள்ளன.
வீட்டில் இருந்து விமான நிலையத்திற்குச் சென்ற பின் அங்கு இந்த வாகனத்தை "பார்க்கிங்'' ஏரியாவில் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. பறந்துசெல்லும் போது மோசமான வானிலை புயல்க் காற்று போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டால் குறைந்த கால இடைவெளியில் வீதியில் இறங்கி விடலாம் வீதியில் கார் சென்று கொண்டிருக்கும் போது தேவைப்பட்டால் 30 வினாடிக்குள் பறக்கும் தன்மைக்கு மாறும். அரசிடம் முறையாக அனுமதி பெற்று விற்பனை செய்ய கார் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. பறக்கும் காரின் மாதிரி தற்போது அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்படும் இந்த நவீன கார் மிக விரைவில் சர்வதேச அளவில் அதிக வரவேற்பை பெறும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. இந்த காரின் விலை 95 லட்சம் ரூபா. வரும் 2011 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.


                                                                                                                    நன்றி உதயன்

No comments: