தமிழ்க் கங்கை செவாலியர் அமரர் புலவர் அமுது நினைவஞ்சலி

.

தமிழ்க் கங்கை செவாலியர் அமரர் புலவர் அமுது நினைவஞ்சலி


தொண்நூற்றிரண்டு வயதிலும் இளமைத் துடிப்புடன் தமிழுக்குத் தொண்டாற்றிய இளவாலை அமுது என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டு வந்த இளவாலை அடைக்கலமுத்து அவர்கள் அண்மையில் இலண்டனில் அமரத்துவம் எய்தியமை எல்லோருக்கும் தெரிந்ததே, புலவர்மணி இளமுருகனார். பண்டிதமணி கணபதிப்பிள்ளை. வித்துவான் வேந்தனார். பேராசிரியர் செல்வநாயகம் போன்றோரிடம் தமிழை ஐயந்திரிபறக் கற்றவர் புலவர் அமுது, "கவிதைச் சிலைக்கு மரபுக் கவிதைகளால் ஆடையணியவேண்டும், மானுடத்தின் மனச்சாட்சியைக்கொண்டு அதன் கண்களைத் திறக்கவேண்டும்" என்ற அவரின் கனவை நனவாக்கி இறையடி சேர்ந்த அன்னாருக்கு ஓர் கவிதை அஞ்சலி -


காமருநல் வடிவம்நீத்துக் கர்த்தரின் சேவடியிற்
கலந்தவுனைக் கரங்குவித்து வணங்கு வோமே,

தேமதுரஞ் சொட்டச்சொட்டக் கவிதை யாலே
செல்வா! எனை வாழ்த்திநின்றாய்! செந்தமிழ்ப் பூந்
தாமரைகள் பூத்திடவே தடாகம் அமைத்துத்
தனித்தமிழை வளர்த்துநின்றாய்! தகைமை பெற்றாய்!
நாமகிழ்ந்து தினம்போற்றச் "செவாலியர்" விருதை
நற்குணத்தோய் பெற்றனையே! பற்ற றுத்துக்
காமருநல் வடிவம்நீத்துக் கர்த்தரின் சேவடியிற்
கலந்தவுனைக் கரங்குவித்து வணங்கு வோமே!

சீலம்மிகு பெருவாழ்விற் றிழைத்துப் பெற்ற
செல்வங்கள் ஐயிரண்டுஞ் சிறக்கச் செய்தாய்!
காலத்தாற் பட்டழியும் தமிழ் மலரக்
கடமையென மரபுதனை ஓம்பிக் காத்தாய்!
கோலச்செங் கதிரோன்போற் கவிக் கிரணம்
குவலயத்திற் பாய்ச்சித்"தமிழ்க் கங்கை" யானாய்!
பாலனவன் இராச்சியத்திற் பணி இயற்றப்
பக்குவம்பெற் றேகினையோட? சாந்தி! சாந்தி!!

நடைக்கெனவே உனக்கென்றோர் பாணி தேர்ந்து
நறுந்தேனும் சர்க்கரையும் கலந்தாற் போலப்
படைத்தளித்த செந்தமிழ்ப்பா மரபுக் கவிகள்
பகர்ந்திடுமே உன்புகழைப் பாரில் அன்றோ?
"கிடைத்திடுமோ அமுதேயுன் தீஞ்சொல் அமுது?
கீற்றுமதி போலெங்கு உற்றாய்"என் றேங்க
அடைக்கலமாய் இயேசுபிரான் பாதார விந்தம்
அணைத்துய்த்த அடைக்கல முத்தே சாந்தி!

ஓம் சாந்தி!

பல்மருத்துவ கலாநிதி இளமுருகனார் பாரதி
சிட்னி – அவுத்திரேலியா,

No comments: